r shanmugavelஒரு பழைய சைக்கிள். அதில் நீளமான ஒரு பை. அது நிறைய புத்தகங்கள். அத்தனையும் இடதுசாரி மற்றும் மனிதநேயச் சிந்தனையைப் பரப்பும் புத்தகங்கள். பள்ளிக்கூடம் தோறும் தன் புத்தகச் சுமையோடு பயணிக்கிறார். பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல, மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் புத்தகங்களைக் கண்காட்சியாக வைத்து விற்பனை செய்கிறார். 78 வயதிலும் தளர்ச்சியின்றி இன்றும் உற்சாகமாகப் புத்தங்களை விற்றுக் கொண்டு இருக்கிறார். யார் இந்த சேர்வு இல்லாப் புத்தக வியாபாரி? கிழக்கலங்கல் இரா.சண்முகவேல் அவர்களேதான்!

தன் சொந்த ஊர் கிழக்கலங்கலில் ஜீவா பதிப்பகம் அமைத்து, அந்த வட்டார மக்களுக்கு வாசிக்க நல்ல நல்ல புத்தகங்கள் வழங்கி வருகிறார் - தோழர் இரா.சண்முகவேல். லட்சுமி வடிவு புக் சென்டர் என்னும் புத்தகக் கடையைக்  கிழக்கலங்கலில் அமைத்துப் புத்தக வியாபாரமும் செய்கிறார்.

விவசாயத்தில் இருந்து புத்தக வியாபாரத்திற்கு வந்தவர் இவர். ஆரம்ப காலத்தில் கடையநல்லூர் தோழர் டாக்டர் எம்.எம்.அப்துல் கனி அவர்கள் தன்னை சோவியத்து நாடு பத்திரிகைக்காகச் சந்தா வசூலிக்க சொன்னதாகச் சொல்லுகிறார். அந்த நேரத்தில் என்.சி.பி.ஹெச். நெல்லை கிளை நிர்வாகியாக இருந்த திரு.சண்முகம் இவருக்குப் புத்தகங்கள் கொடுத்து உதவியிருக்கிறார்.

ஆசிரியப் பெருமக்களும் பொதுஉடைமைத் தோழர்களும் அன்பு காட்டியதால், பள்ளிதோறும் சென்று விற்பனை செய்து வருகிறார் சண்முகவேல். விற்பனையாளர் என்ற வகையில் அவருக்குக் கிடைத்து வரும் மரியாதை அவரை இப்பணியில் ஈடுபடத் தூண்டியது. புத்தகங்களை ஒரு பையில் போட்டு, சைக்கிளில் ஏற்றி, பட்டி தொட்டி எல்லாம் அலைந்து விற்பனை செய்கிறார்.

lenin book 350பல தரப்பட்ட மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு தோழர் சண்முகவேலுக்குக் கிடைக்கிறது. பழகியவர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களைக் கேட்டு வாங்குகிறார்கள். கையில் காசு இல்லாமல் இருந் தாலும் அவர்களிடம் ஆர்வம் இருந்தால் கேட்ட புத்தகத்தைக் கொடுத்து விடுவார். தோழர் பணம் வருமா வராதா என்பது பற்றிக் கவலைப்படமாட்டார். டி.என்.பி.எஸ்.சி, வி.ஏ.ஓ., வங்கித் தேர்வு, ஐ.ஏ.எஸ். தேர்வு - இவற்றிற்கான புத்தகங்களைக் கேட்பவர்கள் காசு இல்லாதவர்களாக இருந்தாலும் கொடுத்து விடுவார். வெற்றி பெற்றவர்களின் பெற்றோர்கள் இவரை வாழ்த்துவார்கள். இவருக்குக் கிடைக்கும் வெகுமதி இதுவே.

இரவு நேரங்களில் தனியாக ஊர் வரும் போது, திருடர்கள் பலர் இவரைச் சந்தித்து இருக்கிறார்கள். அவர்களே இவர் மீது அனுதாபம் கொண்டு, தாத்தா பிந்திப் போறீர்களே? எதாவது ஆபத்து வராத? வேகமாகப் போங்கள் என்பார்கள். என் சிவப்புச் சட்டையும், சமூகச் செல்வாக்கும் என்னைப் பாதுகாக்கும் என்பேன். பல வீடுகளில் சாப்பாடோ, டிபன் வகைகளோ தந்து உபசரிப்பார்கள்.

சராசரியாக ஒருநாளைக்கு இவர் 50 கி.மீ. முதல் 110 கி.மீ. வரை சைக்கிளில் அலைகிறார். அபூர்வமாக எதாவது ஒருநாள் தன் வீட்டில் தங்குவார். அப்படித் தங்கும் நாளில் விவசாயப் பணிகளைப் பார்ப்பார்.

பள்ளி திறக்கும் காலங்களில், பள்ளிகளுக்குத் தேவையான குறிப்பேடுகள், படிவங்கள், பாடப் புத்தகங்கள், பணிப் பதிவேடுகள் எல்லாமே பள்ளிகளுக்கு வாங்கிக் கொடுப்பார். பயிற்சிப் புத்தகங் களையும், பாடப் புத்தகங்களையும், சில நேரங்களில் லாரிகளில் கூடப் பள்ளிகளுக்குக் கொண்டு வந்து சேர்ப்பார். இப்படிச் செய்வதால் பள்ளிகளுக்கும் இவருக்குமான உறவு குடும்ப உறவாக நெருங்கி விடுகிறது. தன்னைச் சுற்றி உள்ள மூன்று மாவட்டங் களில் இந்த உதவியைச் செய்கிறார் இவர். சாதி, சமயம், இனம், குலம் பார்க்காமல் எல்லாருக்கும் உதவுகிறார். எங்காவது நடக்கும் இலக்கிய விழாக்களுக்கும் புத்தகங்களைக் கொண்டு சென்று விற்பனை செய்கிறார். விற்பனையில் ஈவுசாய்வாக நடந்து கொள்ளுகிறார்.

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன என்று கேட்ட போது, வேன் ஒன்று வாங்க வேண்டும்;. அதில் புத்தகங்களை அடுக்கி ஊர் ஊராகப், பள்ளி பள்ளியாக சென்று விற்க வேண்டும் என்கிறார்.

"எந்தப் புத்தகம் என்றாலும் சிவப்புச் சட்டை தாத்தாக் கிட்ட கேட்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையைப் பெற்று இருக்கிறேன். உடலில் வலு இருக்கும் வரை புத்தக வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பது என் ஆசை" என்கிறார் இந்த நடமாடும் புத்தக வியாபாரி.

Pin It