நிசதம் என்றொரு வடசொல் சோழர் காலக் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல்லுக்கு 'நாள் ஒன்றுக்கு' என்றும் 'தவறாமல் ஒவ்வொரு நாளும்' என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

இதற்கு நிசதி, நிசதிப்படி என்று வேறு வடிவங்களும் அதே பொருளில் கையாளப்படுகின்றன. கோயில் பணியாளர்களுக்கு ஊதியம் கொடுத்த விவரங்களைப் கல்வெட்டுகளில் பதிவு செய்கையில் இச்சொல் திரும்பத் திரும்ப வருவதைக் காணமுடிகிறது.சில எடுத்துக்காட்டாக:

1)           விறகிடுவான் ஒருவனுக்கு நிசதம் நெல்லு குறுணி, புடவை முதல் ஒரு காசு.

2)           சாலை துகுத்து, மெழுகி பண்டி அட்டுவான் : நிசதம் நெல்லு இரு நாழி.

3)           திருப்பதியம் விண்ணப்பம் செய்வார் இருவர்: புடவை முதல் உட்பட நிசதம் நெல்லு பதக்கு நாநாழி.( நடனகாசிநாதன், 2009; பக் -49)

4)            ‘சாவாமூவா பெராடு இருநூற்றி எழுபது இவ்வாட்டால் நிசதி மூழக்கு நெய்கொண்டு' (முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு)

இச்சொல் ‘நியத(ம்)' என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் நியத என்ற சொல்லுக்கு ‘ஒவ்வொரு நாளும் தவறாமல்' என்றோ 'நாள் ஒன்றுக்கு' என்றோ பொருள் இல்லை. நியதம் என்ற சொல்லுக்கு ‘அடக்கம்' என்றும்'எப்பொழுதும்'என்றும் தமிழ் அகராதியில் பொருள் தரப்பட்டுள்ளது. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இப்படி ஒரு வரி வருகிறது. "நியதமும் அத்தாணிச் சேவகமும்" (நாலா.திருப்பல்-8) இங்கு ‘நியதம்' (வைணவ) விரதம் போன்ற அனுஷ்டானங்களையே குறிக்கிறது. எப்பொழுதும் என்ற பொருளை உணர்த்தவில்லை. பாடல் முழுவதையும் கவனித்தால் இது புரியும்.நியதமும் என்பது ஒரு பெயர்த்தொடர். அத்தாணி சேவகமும் என்பது வேறொரு பெயர்த்தொடர். நியதம், அத்தாணி சேவகம் என்ற தொடருக்குப் அடையாக (adverb of time) வரவில்லை. சமஸ்கிருத அகராதியில் நியத என்ற சொல்லுக்குப் பல்வேறு பொருள்கள் தரப்பட்டுள்ளன.

குறித்த அளவு, நிரந்தரமாக, ஒழுக்கம், கட்டுப்பாடு, போன்று பல பொருண்மைகள். ‘நாள் ஒன்றுக்கு' என்ற நேரப் பொருண்மை அவற்றுள் இருப்பதாகத் தெரியவில்லை.

வடமொழி, தமிழ்ச் சொற்களில் சகரம் யகரமாவதை பழங்காலத்திலும் இடைக்காலத்திலும் காணமுடிகிறது.

தேசம். > தேயம்

நேசம்> நேயம்

வசனம்> வயனம்

பசலை> பயலை

வசப்படு> வயப்படு

வசந்த மாலை> வயந்தமாலை

அரசன்> அரையன்

‘புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் (புள்+அரையன்) கோயில்' என்பது திருப்பாவை வரிகள். குறிப்பாக வடசொற்களில் இம்மாற்றத்தை அதிகம் காணமுடிகிறது.

இந்த ஒலி மாற்ற விதிப்படி நியதமானது நிசதமாக மாற்றம் அடைந்திருக்காது.

மேலும் கல்வெட்டுக்களில் நேரப் பொருண்மையைக் குறிக்கும் 'திங்கள் ஒன்றுக்கு', 'ஆட்டாண்டு தோறும்' போன்ற தொடர்கள் வருகின்றன. நாள் என்ற நேரக் கிளவிக்கு நிசதம் வந்தது. எனவே நிசதம் என்ற சொல்லுக்கு நியதம் என்ற சமஸ்கிருதச் சொல்லை மூலமாகக் கொள்ள முடியாது. மாறாக 'அனுதிவச' (anudivasa) என்ற சமஸ்கிருதச் சொல் நிசதத்திற்கு மூலமாகலாம். அனுதிவசம் மொழிமுதல் அகரம் கெட்டு, னுதிவசம் என்றாகி பின்னர் 'நிசதம்' என்று பயன்பாட்டுக்கு வந்திருக்கலாம். இது ஒரு தற்செயலான வளர்ச்சி ஆகலாம்.

மொழிமுதல் உயிர் கெடுதல் எப்போதாவது நடை பெறுதல் உண்டு. ஆகாயம் என்ற வடசொல் தமிழில் காயம் என்று பதிவாகியுள்ளது. அரிஷ்டநேமி என்ற சொல் ரிட்டநேமி என்று மொழிமுதல் அகரம் கெட்டு பிராகிருதத்தில் வருகிறது. ஆரண்ய (காடு) என்ற சமஸ்கிருதச் சொல் பிராகிருத மொழியில் 'ரண்ண' என்று மாறுகிறது. அவ்வாறே அனுதிவசம் என்பது ‘னுதிவசம்' என்றும் பின்னர் நிசதம் என்றும் மாறியது என்று கொள்ளலாம். நியதம் என்பது மூலம் இல்லை. அனுதிவசம் என்பதே நிசதத்திற்கு மூலம்.

Pin It