தொல்காப்பியத்தில் குவிமையம் கொண்டுள்ள தமிழர் அறிவுநெறியைச் சிதைத்து, அது வேறு அறிவு மரபுக்குக் கடன்பட்டுள்ளது என்ற கற்பிதத்தைத் தொல்காப்பியத்தின் எடுத்துரைப்பு நெறிக்குப் பொருந்தாமல் துருத்திக்கொண்டிருக்கும்படியான இடைச்செருகல்களைச் செய்து வரலாற்றில் அவரவர் காலத்திய கருத்தியல்களின் ஆதிக்கப் பனுவலாக ஆக்கிக்கொண்டனர். மேலும், அகத்தியத்துக்குக் கடன்பட்ட வழிநூல்தான் இது என்று பொதுப்புத்தியைக் கட்டமைத்து வந்தனர். இவை ஒருபக்கம் நிற்கின்றன. இத்தொல்காப்பியத்துக்கு இளம்பூரணர் தொடங்கி பாவலரேறு ச. பாலசுந்தரம் வரை பலரும் உரை எழுதியுள்ளனர். அவர்களின் பங்களிப்பு மெச்சத்தக்கவை என்பதும் தொல்காப்பியம் மிக நீண்ட வரலாற்றுக் காலத்தைக் கடந்து நம் கைகளுக்குக் கிடைப்பதற்கு வாகனமாக இருந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை. அதேசமயத்தில் இவ்வுரைகள் உரையாசிரியர்களின் காலத்திய சமூக நெறிக்கும் உரையாளர்களின் கருத்தியல் சார்புக்கும் உட்பட்டுத் தொல்காப்பிய மரபைச் சிதைக்கவும் மாற்றவும் வலிந்து பொருள்கொள்ளவும் செய்துள்ளமையைப் புறந்தள்ளிவிட முடியாது.

பொருளதிகார நூற்பாக்களுக்கு உரிய சான்றுப்பாடல்கள் பிற்காலத்திய இலக்கியங்களில்கூடக் கிடைக்காவிட்டால் வந்தவழிக் கண்டுகொள்க என்று எழுதிவிடும் துணிவு கொண்ட உரையாளர்கள், எழுத்து, சொல்லதிகாரங்களில் தொல்காப்பியர் காலத்திய அல்லது சங்க இலக்கியங்களில் இருந்தோ அதற்கு அடுத்த காலங்களில் தோன்றித் தமிழ்மரபில் எழுதப்பட்ட இலக்கியங்களில் இருந்தோ சொற்களைச் சான்று காட்ட இயலாத நிலையில் தங்கள் காலத்திய பொருத்தமான சொற்களைத் தொடர்களைத் தெரிவு செய்யாது, அவ்வக்காலச் சமய மரபுகளை உட்புகுத்தி நூல் இயற்றப்பட்ட காலத்திய உலக வழக்குக்கோ செய்யுள் வழக்குக்கோ பொருந்தாத பிற்கால வழக்குகளைச் சான்றுகளாக வலிந்து ஒட்டவைத்துள்ளமையைக் காணலாம். இத்தகைய செயல்களால் சொற்களுக்குள் புதைபொருளாக இருந்து இயங்கும் சமயக் கருத்தியல்களின் ஆதிக்கத்திற்குள் அத்தகைய கருத்தியல் ஆதிக்கமற்ற அறிவு மரபு ஓங்கி நின்ற காலத்தில் எழுதப்பட்ட பனுவல்களைத் தள்ளிவிடுகின்ற செயல் நடந்துவிடுகிறது. தொல்காப்பியம் அத்தகைய தள்ளிவிடலுக்கு ஆட்பட்டுள்ளது.

தம் காலத்திய ஆதிக்கக் கருத்தியல்களை வலிந்தோ தம்மையறியாமலோ ஒட்டவைக்கும் இத்தகைய செயல்பாடுகள் உரைமரபின் ஒரு நெறியாக வளர்ந்து வந்திருப்பதைக் காணமுடிகிறது. சொல்லதிகாரம் கிளவியாக்கத்தில் புறனடையாக உள்ள ஒரு நூற்பாவை இத்தகைய செயல்பாடுகளுக்குச் சான்றாகக் கொண்டு இக்கட்டுரை ஆராய்கிறது.

காலம் உலகம் உயிரே உடம்பே

பால்வரை தெய்வம் வினையே பூதம்

ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம்

ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன

ஆவயின் வரூஉம் கிளவி யெல்லாம்

பால்பிரிந் திசையா உயர்திணை மேன.

(சொல். கிளவி. நூற். 57)

முந்தைய நூற்பாவில், குடிமை முதலாகச் சொல்லப்பட்ட பதினெண் சொற்களும் அவைபோன்ற பிறவும் உயர்திணை மருங்கின் நிலையினவாயினும் அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும் (நூற். 56) என்று கூறிய முறைமையை அடியொற்றி, உயர்திணையில் பால்பிரிந்து இசைக்கமாட்டா என்று காட்டிய பத்துச் சொற்களும் அவைபோன்ற பிறவும் அஃறிணை வினை முடிவையே கொள்ளும் என்று எந்தவிதமான கருத்துவெளிப்பாட்டுத் தெளிவின்மைக்கும் இடமளிக்காமல் தொல்காப்பியர் சுட்டிச்சென்றுள்ளார்.

தொல்காப்பிய நெறியும் பண்டைத் தமிழ் மரபும்

இது குறித்து உரையாடுவதற்கு முன்பு, தொல்காப்பியர் திணை, பால் குறித்து எத்தகைய கருத்தியலைக் கொண்டிருந்தார் என்பதை விளங்கிக்கொள்வது ஆய்வுக்குப் பொருத்தமாக இருக்கும். மக்கட் சுட்டே உயர்திணை என்றும் அவரல பிறவே அஃறிணை என்றும் இவ்விரு திணைகளிலும் இசைக்குமன சொல்லே (சொல். கிளவி. நூற். 1) என்றும் திணைக்கு உரிய அடித்தளத்தைத் தெளிவுபடுத்துகிறார். பொருளதிகாரத்தில் முதற்பொருள் இரண்டே என்று உறுதிப்படுத்துவது போன்றதொரு செய்கை இது. இவை இரண்டுக்கும் தொடர்பு உண்டு. இடைக்காலத்தில் வந்த பவணந்தியார், ‘மக்கள் தேவர் நரகர் உயர்திணை’ என்று தமிழரின் காட்சி மரபுக்குப் பொருந்தாத எதைக்கொண்டும் நிறுவ இயலாத கற்பித மரபு சார்ந்த இரண்டு சொற்களை உயர்திணையுள் சேர்த்துக்கொண்டு உரையாடியுள்ளார். அது அவர்காலத்திய கருத்தியல் ஆதிக்கத்தின் விளைவு. இதனோடு தொல்காப்பியர் காலச் சிந்தனையை உரசிப் பார்த்தால், தொல்காப்பியர் காலத்திய உலகத் தோற்றம், அறிவுத் தோற்றம் குறித்த பார்வைக்கும் பவணந்தியார் காலத்திய பார்வைக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

தொல்காப்பியர் அதோடு நின்றுவிடாமல், உலகத்துப் பொருட்களையெல்லாம் இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என்று இரண்டாகப் பகுத்துவிட்டார். இந்த இடத்திலும் அவர் எவராலோ படைக்கப்பட்டதன்று இந்த உலகம் என்ற கருத்தை உறுதிபட நிறுவியுள்ளார். ‘இயற்கைப் பொருளை இற்றெனக் கிளக்க’ (சொல். கிளவி. நூற். 19) வேண்டும் என்றும் ‘செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறவேண்டும்’ (கிளவி. நூற். 20) என்றும் உரைப்பதன் மூலம் மனிதர்களால் தங்கள் தேவைகளுக்காக இயற்கைப் பொருள்களிலிருந்து ஆக்கிக்கொள்பவற்றுக்குச் செயற்கைப் பொருள் என்று பகுத்துக்கொண்ட தமிழ்ச் சிந்தனை மரபு பொதிந்துள்ளதைக் காணலாம். மேலும் ‘ஆக்கம்தானே காரணம் முதற்றே’ (கிளவி. நூற். 21) என்று செயற்கைப் பொருள்கள் ஆக்கத்தால் விளைபவை, அந்த ஆக்கம் காரணத்தை முதலாக உடையது என்றுரைக்கும் சிந்தனையும் இயற்கைப் பொருட்களை அப்படி எவரும் ஆக்குவதில்லை என்ற கருத்தையும் சேர்த்துச் சுட்டுவதாகக் கொள்ளலாம்.

உரை நெறியும் சமயக் கருத்தாதிக்கமும்

தெளிந்த பார்வையைக் கொண்டதோர் அறிவு மரபிற்குத் தொல்காப்பியரே அம்மரபுக்குச் சான்றாக விளங்கும் நிலையில், மேலே குறிப்பிட்ட நூற்பாவில் இடம்பெற்றுள்ள பத்துச் சொற்களும் மரபுவழியில் உயர்திணைக்குரியனவாகக் கருதப்பட்டாலும் அவை வினைமுடிவு கொள்ளும்போது உயர்திணையில் பால் பிரிந்து இசைக்காது அஃறிணையாகவே வினைமுடிவு கொள்ளும் என்று தெளிவுபடுத்தியுள்ளார் தொல்காப்பியர். குறிப்பாக, கிளவியாக்கத்துள் தொடர்களை ஆக்கிக்கொள்ளும்போது பாலீறுகளால் திணையும் பாலும் அடையாளம் காண முடிகின்ற பெயர்கள் பெறும் வினைமுடிவுகள் மரபுவழிப்பட்டன என்பதைப் பல நூற்பாக்களிலும் தெளிவுபடுத்திச் சென்றுள்ளார். அவற்றில் சுட்டமுடியாது உயர்திணையாக மரபுவழியில் கருதிவரும் சொற்களுக்கு வினைமுடிவுகள் எத்திணையில் அமையும் என்ற குழப்பத்தைத் தீர்ப்பதற்குப் புறநடையாகச் சில சொல்லிச் சென்றுள்ளார்.

ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ள நூற்பாவுக்கு உரையெழுதிய இளம்பூரணர், ‘இச்சூத்திரம் தெய்வஞ் சுட்டிய பொருள் அஃறிணையான் முடிபேற்றல் கூறினார் என்ப ஒரு திறத்தார். அற்றன்று, ஈண்டுத் தெய்வமும் உள, மக்களும் உளர்’ என்று தம் காலத்திய தெய்வப்புகுத்தல் உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால், அவரே தம் காலத்தில் வழக்குக்கு வந்துவிட்ட, அதாவது சிலப்பதிகாரக் காலத்தில் தமிழ்ச்சமூகத்திற்குள் நுழைந்து நிலைபெற்றுவிட்ட பூதக் கருத்தியலுக்கு ஆட்பட்டுப் ‘பூதம்’ என்ற சொல்லுக்குச் சான்றுகாட்டும்போது ‘இவனைப் பூதம் புடைத்தது’ என்றுரைப்பார். (தொல். சொல். பக். 65-66) சேனாவரையர் தம் உரையில், பூதம் என்ற சொல்லுக்குப் ‘பூதம் புடைத்தது’ என்று அதே சான்றைக் காட்டியதோடு, ‘கால மென்பது காலக் கடவுளை’ என்று தொல்காப்பியர் முதற்பொருளுள் ஒன்றாகக் கண்டுள்ள காலத்தையும் தெய்வப்பட்டியலுக்குக் கொண்டு சென்றுள்ளார். ‘உலகமென்றது ஈண்டு மக்கட் டொகுதியை’ என்று உலகத்தை இயல்புநிலையில் விட்டுள்ளார். மேலும், உயர்திணை முடிபுகொள்ளா என விலக்கப்படுகின்ற ‘மக்களுயிரும் உடம்புமே கொள்ளப்படும்’ என்று தெய்வத் தவிர்ப்பையும் செய்துள்ளார். மேலும் அவர், ‘பால்வரை தெய்வமென்பது எல்லார்க்கு மின்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுப்பது. வினை யென்பது அறத்தெய்வம், சொல்லென்பது நாமகளாகிய தெய்வம்’ என்று வினை, சொல் ஆகியவற்றைத் தெய்வப்பட்டியலுக்குக் கொண்டு சென்றுள்ளார். (தொல். சொல். ப. 111). ஆனால் இளம்பூரணரோ ‘சொல்’ என்பதற்குச் ‘சொல் நன்று’ என்று தெய்வத்தன்மை ஏற்றாது கூறியுள்ளார். இளம்பூரணர் எடுத்துரைத்த சான்றின் வழியாகப் பூதத்தையும், இளம்பூரணர் காலத்தில் தெய்வத்தன்மை ஊட்டியதாக அவரால் சுட்டப்பட்ட உரையாளர்களுக்கு ஆட்பட்டும், தம் கருத்தின் வழியாகவும் சான்றுகளின் வழியாகவும் இந்நூற்பாவின் பெரும்பகுதிச் சொற்களின் பொருள்களை கற்பித உலகுக்கு உரியதாக சேனாவரையர் ஆக்கியுள்ளார்.

நச்சினார்க்கினியர், ‘இச்சூத்திரத்துக் கூறியவற்றுள் உலகமும் உயிரும் உடம்பும் ஒழிந்தன எல்லாம் தெய்வத்தையே உணர்த்தின. ’ என்று முதற்கூற்றிலேயே தெய்வத்தன்மை அற்ற பொருள்களைப் பட்டியலிட்டுவிடுகிறார். தெய்வச் சொற்களுக்குச் சேனாவரையரைப் போன்றே, காலத்தைக் காலக் கடவுள் என்றும் தெய்வம் செய்தது, வினை விளைந்தது, பூதம் புடைத்தது, ஞாயிறு பட்டது, திங்கள் எழுந்தது, சொல் நன்று என்றும் கூறியவர் ‘சொல் நன்று’ என்ற சான்றுக்கு ‘இது நாமகளாகிய தெய்வம்’ என்று கூடுதல் விளக்கம் கொடுத்துச் சேனாவரையரின் வழியில் தெய்வக் கருத்தியலுக்குள் கொண்டுவந்துவிட்டார். (தொல். சொல். பக். 105-106)

தெய்வச்சிலையார் முந்தைய உரை மரபை உடைத்து எழுதியுள்ளார். ‘காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும் ஆகி என்றும் உள்ளதோர் பொருள்’ என்று காலத்தை தெய்வத்தன்மையிலிருந்து விடுவித்துவிட்டார். ஆனால், ‘உலகம் என்பது மேலும் கீழும் நடுவும் ஆகி எல்லாவுயிரும் தோற்றுதற்கு இடமாகிய பொருள்’ என்று உலகத்தை மூவுலகப் புராணக் கட்டமைப்புக்குள் தள்ளிவிட்டார். மேலும், வினை என்பது ஊழ் என்றும் பூதம் என்பது நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம் என்று கற்பிதப் பொருண்மையிலிருந்து விடுவித்துத் தொல்காப்பியர் நெறியைப் பின்பற்றியுள்ளார். அதேசமயம், ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகு விளக்குவது என்றும் திங்களென்பது நீர்த்திரளாய் உலகிற்கு அருள் செய்வது என்றும் இயற்கை வழிபாட்டு மரபுக்கு உட்பட்டு ஞாயிறு, திங்களைத் தெய்வத்தன்மைக்கு உயர்த்தியுள்ளார் . ‘சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது – அச்சொல்லினான் இயன்ற மந்திரம், விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று’ என்று சொல்லை மறைபொருள் உரைக்கும் மந்திர தந்திரக் கருத்தியலுக்குள் ஏற்றியுள்ளார். அதோடு நில்லாமல், ‘இந்நூல் செய்தான் வைதிக/வைதிரு முனிவன் ஆதலின் சொல்லென்பது வேதம் என்று கொள்ளப்படும்’ என்று சொல்லுக்கு ஆரிய வேதத்தைச் சுட்டிவிட்டார். இதற்காகத்தான் பெயரியல், ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற நூற்பாவுக்கு ‘எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளும் குறித்தன’ என்று உரை எழுதினாரோ என்று ஐயுறத் தோன்றுகின்றது. மேலும், தம் காலத்தில் தொல்காப்பியர் வைதீக முனிவராகக் கருதப்பட்டு வந்ததையும் நமக்குச் சொல்லிவிட்டார். இவரும் ‘பூதம் செறிந்தது’ என்று தனது உரைக்குப் பொருந்தச் சான்று காட்டிவிட்டுத் தம் காலத்தில் பெருவழக்காகிவிட்ட பூதக் கருத்தியலில் இருந்து விடுபட முடியாமல் ‘பூதம் புடைத்தது’ என்றும் சான்றுகாட்டியுள்ளார். (தொல். சொல். ப. 44)

கல்லாடர் தம் உரையில், ‘காலம் என்றது காலனை; உலகமென்றது உலகத்தாரை; உயிர் என்றது உயிர்க்கிழவன்; உடம்பு என்றது அஃது உடையானை; பால் என்பது இன்பதுன்பங்களை வகுப்பதோர் தெய்வம்; வினையென்பது வினைத்தெய்வம்; பூதம் என்றது தெய்வப்பகுதி; ஞாயிறு, திங்கள் என்பன தெய்வம்; சொல் என்றது சொன்மடந்தையை’ (ப. 52) என்று முந்தையோர் மரபுவழி நின்று உலகம், உயிர், உடம்பு தவிர்த்த அனைத்துச் சொற்களுக்கும் தெய்வத்தன்மை ஊட்டியுள்ளார். பால் என்று தெய்வத்தைச் சுட்டியதோடு நாமகளைச் சொன்மடந்தை என்று வேறு பெயரால் சுட்டியுள்ளார். (தொல். சொல். ப. 52)

இவ்வுரையாசிரியர்களில் இளம்பூரணார் சான்றுகாட்டலோடு நிற்க, சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் தெய்வச்சிலையாரும் சிலவற்றைத் தெய்வநிலைக்கு உயர்த்திச் சிலவற்றை விடுவித்துள்ளனர். கல்லாடர் பெரும்பகுதியையும் தெய்வநிலைக்கு உயர்த்திவிட்டார். உரையாசிரியர்களின் உரைத்திறன்களை ஆராய்ந்து ஆராய்ச்சிக் காண்டிகை உரை எழுதித் தொல்காப்பியரின் பல சிந்தனைகளுக்கு ஒளியூட்டியவரான சா. பாலசுந்தரம் இந்நூற்பாவுக்கான உரைப்பொருளை முழுமையும் தெய்வத்தன்மைக்கு ஏற்றியுள்ளார்.

‘உயர்திணை மருங்கின் பால் பிரிந்திசைக்கும் எனக் கூறிய தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவிகள் பற்றிய ஐயமகற்றுகின்றது’ என்று உரையாசிரியர்கள் எவரும் சொல்லாத ஒரு கருத்தை வலிந்து நூற்பா கூறவரும் கருத்தாக ச. பாலசுந்தரம் புகுத்தியுள்ளார். அதனடிப்படையில் பொருளுரைக்கையில், ‘காலம் முதலாச் சொல் ஈறாகக் கூறப்பெற்ற அப்பத்துச் சொற்களொடு அத்தன்மையவாகிய பிறவுமாய்த் தெய்வஞ்சுட்டிய பெயராக அவ்விடத்து வரும் சொற்கள் எல்லாம் உயர்திணை மருங்கினவாய்ப் பால் பிரிந்திசைக்க மாட்டா. அஃறிணையாயே முடியும்’ (தொல். சொல். ப. 51) என்று நூற்பாவுக்குப் பொருந்தாத ஒரு பொருளை வலிந்து எழுதியுள்ளார். பால்புதுமையர் குறித்த சொற்களும் தெய்வச் சொற்களும் உயர்திணை மருங்கின் இசைக்கும் என்று சொன்ன நூற்பாவுக்கு அமைந்த புறனடையாகக் கொண்டமை அவரை இத்தகைய பொருள்கோடலுக்கு இழுத்துச் சென்றுள்ளது.

ச. பாலசுந்தரம் உரைக்கு ஆய்வு முன்னுரை எழுதிய தி. வே. கோபாலையர், “தெய்வம்சுட்டிய பெயர் பால்காட்டும் ஈற்றிடைச் சொல் பெற்றாலன்றி உயர்திணை மருங்கின் இசையா என்று விளக்கம் கூற நூற்பாவில் இடமில்லை. ” (ப. XXXIV) என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இக்கருத்துக்கு விளக்கமளித்த ச. பாலசுந்தரம், “56, 57, 59 இவற்றின் உரை முன்னையோர் கருத்துக்களினின்று வேறுபட்டவை– விளக்கம் சாலாது போலும். சிலமுறை நோக்கின் தெளிவாகலாம்” (ப. xliii) என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார்.

மேலும், சான்று காட்டும்பொழுது, தொல்காப்பியர் காலத்திய எவ்வழக்குக்கும் பொருந்தாத பல சான்றுகளைத் தனது உரையை மெய்ப்பிப்பதற்காகச் சுட்டிச்செல்கின்றார். ‘காலம் என்றது காலக்கடவுளை (இமயன், கூற்றுவன், காலன்)’ என்று சேனாவரையரைப் பின்பற்றியுள்ளார். உலகம் என்றது நிலத்தெய்வத்தை (புவிமகள், நிலமகள், மண்மகள்), உயிர் என்றது உயிர்க்கிழவனை (சீவன், ஆன்மா, மன்உயிர்) என்று கல்லாடரைப் பின்பற்றிக் கூறியுள்ளார். இருப்பினும் அவர் ‘உயிர் போயிற்று’ என்று சான்றுகாட்ட இவர் வைதீக நெறி சார்ந்து ஆன்மாவைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார். ஆன்மா தூய வடிவானது அது வினைப்பயன் உள்ள உடம்பில் ஒட்டாது இருக்கும் என்று கூறும் நிலையில் அதை உயிர் என்ற சொல்லுக்குள் கொண்டுவந்து ஏன் அடைத்தார் என்பது கேள்வி. உடம்பு என்றது தெய்வப்படிமத்தை, ‘மூர்த்தி, கல்நின்ற வீரர், அருச்சனை மூர்த்தி’ என்று புதிதாக உலகம், உயிர், உடம்பு ஆகிய இடைக்காலத்தில் வந்து புகுந்த மரபை ஒட்டித் தெய்வப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதோடு, ‘உயிரும் உடம்பும் மக்களுடையவை எனச் சேனாவரையர் வலிந்து விளக்கம் கூறுவார்’ என்று நூல்நெறிக்குப் புறம்பான தனது செய்கையை உயர்த்திப் பிடித்துள்ளார். உயர்திணைக்குரியவை என்று சுட்டியமையால் சேனாவரையர் மக்களுக்கு உரியவை என்று கூறியுள்ளார் என்று எளிதாக விளங்கிக்கொள்ளக்கூடியதைச் சமயக் கருத்தியல் சார்பு காரணமாகப் பிழை என்று வாதிடுவதைக் காண்கிறோம். வினை என்றது நல்லூழும் அல்லூழுமாகிய ஊழினை (விதி- ஊழ்)’ என்று தெய்வச்சிலையாரைப் பின்பற்றியுள்ளார். பூதம் என்றது தெய்வப் படையினை (பூத கணங்கள்) என்று தெய்வப்படுத்திப் பிற்காலக் கருத்தியலுக்கு ஆதரவாகப் புதிய பொருளும் சான்றும் கொடுத்துள்ளார். ‘ஞாயிறு – கதிரவன், திங்கள்– நிலா மண்டிலம்’ என்று ஞாயிறு, திங்களை மட்டும் தெய்வமாக்காது விட்டுவிட்டார். சொல்– நாமகளாகிய தெய்வம் என்று சேனாவரையரைப் பின்பற்றியுள்ளார். (தொல். சொல். பக். 51-52)

இந்நூற்பாவுள், ‘பால்வரை தெய்வம்’ என்று தெய்வத்தைத் தனித்துச் சுட்டியுள்ளார் தொல்காப்பியர். ‘ஈண்டுத் தெய்வமும் உள மக்களும் உளர்’ என்று தெளிவுபடுத்தியுள்ள இளம்பூரணர், பால்வரை தெய்வத்துக்கு, ‘இவர்க்குத் தெய்வம் ஆயிற்று’ என்று சான்றுகாட்டி நகர்ந்துள்ளார். சேனாவரையர், ‘பால்வரை தெய்வமென்பது எல்லார்க்கு மின்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுப்பது’ என்று இறந்தோர் வழிபாட்டைத் தவிர்த்துப் பண்டைத் தமிழ் மரபில் இல்லாத நல்வினை, தீவினைகளை வகுத்து உலகத்தை இயக்குவதாகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட தெய்வங்களுக்கு முதன்மையளித்துள்ளார். நச்சர், ‘தெய்வம் செய்தது – இதனைப் பால்வரை தெய்வம் என்றார்’ என்று தெய்வத்தன்மையைச் சுட்டிவிட்டார். தெய்வச்சிலையார், ‘பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியும் ஆகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம்பொருள்’ என்று பால் கடந்த நிலையைச் சுட்டிப் பொருளுரைத்துள்ளார். இறந்தோர் வழிபாடே பெருவழக்கானமையாலும், உயர்திணையில் ஆண், பெண் என இரு பால்கள் இருப்பினும் பால் புதுமையரை உயர்திணையில் சுட்டுவதாலும் அவர்களையும் சேர்த்துக்கொண்டு பொருத்தமான உரையை எழுதியுள்ளார். ச. பாலசுந்தரம், ‘பால்வரை தெய்வம் என்றது கந்தழியை (இலிங்கம், நடுதறி)’ என்று பொருளுரைத்துத் தொல்காப்பியர் காலச் சமூகத்தில் இல்லாத தெய்வங்களைக் கொண்டுவந்து சமயக் கருத்தியல் சார்ந்து புகுத்தியுள்ளார். குறிப்பாக இடைக்காலத்தில் தோன்றி வளர்ந்த சமயக் கருத்தியல்களுக்கு இவரது பார்வை ஆட்பட்டுள்ளமையை இவரது சான்றுகள் வழி தெரிந்துகொள்ள முடியும்.

‘காலம்’ என்பது காலக்கடவுள்; ‘பால்வரை தெய்வம்’ என்பது இருவினையையும் வகுக்கும் தெய்வம்; ‘வினை’ என்பது அறத்தெய்வம், ஊழ், வினைத்தெய்வம்; ‘உலகம்’ என்பது மூவுலகம், உலகிற்கு அருள் செய்யும் ஞாயிறு திங்கள் ஆகியவை, நிலத்தெய்வம்; ‘சொல்’ என்பது நாமகள், மந்திரம், வேதம்; ‘உயிர்’ என்பது உயிர்க்கிழவன், ஆத்மா என்று உரையாளர்கள் தம் காலத்தில் பெருவழக்காகிவிட்ட தெய்வக் கருத்தாக்கங்களை முன்வைத்துள்ளனர். இவற்றுள் மூவுலகம், ஊழ்வினை ஆகியவை தெய்வப்பட்டியலுள் சேராமல் அது சார்ந்த பிற்காலப் புராண மரபுகளை உள்ளடக்கியவை என்று கொள்ளலாம். ஊழ் கருத்தியலைச் சங்க காலம் தொட்டுத் தமிழ்ச்சமூகம் தீவிரமான உரையாடலுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது. மூவுலகம் குறித்த உரையாடல் அறிவார்ந்த நிலையில் செய்யப்படவில்லை. அறிவியல் வளர்ச்சியால் பூமி உருண்டை என்பது தெளிவுபட்ட பிறகு தற்காலத்தில் புராணக் கட்டமைப்பான மூவுலகக் கருத்தியல் உடைந்து இம்மை மறுமை என்ற இரண்டு உலகக் கருத்தியல் மட்டும் விடுபடாது மனித மனங்களை ஆட்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

முந்தைய உரையாளர்கள் அவர்கள் காலத்திய கருத்தியல் ஆதிக்கத்துக்குள் ஆங்காங்கே தடுமாறி விழுந்துள்ள நிலையில், அவர்களிடத்தில் தொல்காப்பியர் கால அறிவு மரபு சார்ந்த பார்வைகளும் இருப்பதைக் காண்கிறோம். ஆனால், ச. பாலசுந்தரம் முழுமையும் சமயச் சார்பான கருத்தியல் தளத்துக்குள் கொண்டுவந்து அந்நூற்பாவுக்கான பொருளைச் சிதைத்து வலிந்து பொருள் கூறியதோடு, முந்தைய உரையாளர்களைச் சாடவும் செய்துள்ளார். இவர் எடுத்துரைக்கும் சான்றுகளாக அமைந்த சொற்கள் பலவும் தொல்காப்பியர் காலத்தில் வழக்கில் இல்லாதவை என்பதைக் கருத்தில் கொள்ளாமலும் அக்காலத்தில் சமயக் கருத்தியல்கள் தோன்றவில்லை என்பதை ஓராமலும் சமயச்சார்புக்கு முதன்மை அளித்து, தொல்காப்பியர் மிகத்தெளிவாகப் பொருட்குழப்பமின்றிச் செய்துள்ள நூற்பாவுக்குத் தனது விருப்ப உரையை எழுதியுள்ளார். அந்நூற்பாவுள் ‘பால்வரை தெய்வம்’ இல்லாது இருந்திருந்தால்கூட உரையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்பப் பொருள்கொண்டிருக்கலாம். அதோடு அவர்கள் காட்டிய சான்றுச் சொற்கள் பழந்தமிழ்ச் சொற்கள் இல்லையென்பது தெரிந்தும் வலிந்து தினித்துள்ளமை தொல்காப்பியத்தை அதன் அறிவுத்தளத்திலிருந்தும் அது எழுதப்பட்ட காலத்திய தமிழ்ச்சமூகத்தின் அறிவுத்தளத்திலிருந்தும் விடுவித்து மீவியல்புத் தளத்துக்குக் கொண்டு சென்று அத்தளத்தைக் கட்டமைத்தவர்களின் கருத்தியல் ஆதிக்கத்துக்குள் தள்ளிவிடும் செயலாகவே இதனைக் கருத வேண்டும்.

முடிவுரை

தொல்காப்பியத்தை அது தோன்றிய காலத்துச் சிந்தனை மரபின், மொழியின், சமூக பண்பாட்டு மரபின் அடையாளமாகக் கொள்ளவேண்டும் என்பதை விடுத்துத் தங்கள் காலத்திய கருத்ததிகாரங்களை விளக்குவதற்கான ஒரு பிரதியாகக் கொண்டு உரையெழுதி வந்துள்ளனர். தொல்காப்பியம் வெளிப்படுத்தும் அறிவு மரபை வெளிக்கொணரும்படியான கருத்தியல் சார்பற்ற புத்துரைகளை அந்நூல் இன்னும் வேண்டி நிற்பதை மேற்கண்ட நூற்பாவுக்குள் பிற்காலக் கருத்துக்கள் வலிந்து புகுத்தப்பட்டு அதன் பொருண்மை சிதைக்கப்பட்டுள்ளமையிலிருந்து கண்டு கொள்ள முடியும்.

துணைநூற் பட்டியல்

1.      அடிகளாசிரியர் (பதி. ஆ. ,). (2019). தொல்காப்பியம் சொல்லதிகாரம் – இளம்பூரணர் உரை. தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.

2.      கோபாலையர். தி. வே. , அரணமுறுவல். ந. (பதி. ஆ. ,). (2003). தொல்காப்பியம் சொல்லதிகாரம் – சேனாவரையம். சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

3.      ……………… (பதி. ஆ. ,). (2003). தொல்காப்பியம் சொல்லதிகாரம் – நச்சினார்க்கினியம். சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

4.      சுந்தரமூர்த்தி. கு. (வி. உ. ஆ. ). (1964). தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும். சென்னை: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

5.      பாலசுந்தரம். ச. (2012). தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை (பெ. மாதையன். , பதி. ஆ. ,). சேலம்: பெரியார் பல்கலைக்கழகம்.

6.      தெய்வச்சிலையார். (2015). தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை. தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.

- மோ. செந்தில்குமார், இணைப்பேராசிரியர்

&

சி. லுபுனா லிலானி, உதவிப் பேராசிரியர் (PTA), தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டுப்பாளையம் 641 104