அபிவிருத்திச் சிந்தனை சமூகவியல், பொருளியல், அரசியல், புவியியல் ஆகிய சமூக விஞ்ஞானத் துறைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. இக்கட்டுரை அபிவிருத்தி பற்றிய சமூகவியல் கோட்பாடுகளை அறிமுகம் செய்வதாக அமைகிறது. ஹெர்பட் ஸ்பென்சர், மக்ஸ்வெபர், எமில் தர்க்கிம், ரல்கொட் பார்சன்ஸ் ஆகிய சமூகவியலாளர்களின் அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

அபிவிருத்தி பற்றி முக்கியமான சமூகவியல் கோட்பாடுகள்:

1. சமூக டார்வினிசம் அல்லது பரிணாமவாதம்

டார்வின் உயிர்களின் பரிணாமக் கோட்பாட்டினை எடுத்துக் கூறினார். அவருடைய கோட்பாடு சமூக சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் போன்றதே சமூகம் என்ற உயிரியின் வளர்ச்சியும் என்ற சிந்தனை தோன்றியது. இதனைச் சமூக டார்வினிசம் (Social Dar­vinism) என்று கூறுவர்.

2. வெபரின் சமூகவியல் அல்லது அறிவு வாதம்

யேர்மனியரான மக்ஸ் வெபர் (1864 -1920) மனிதர்களின் செயல்கள்தாம் சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் காரணம் என்று கூறினார். மனிதரின் செயல்களினை இயக்கும் அகநிலைக்கு அவர் முதன்மையளித்தார். அவரிற்கு முன்னர் பிரித்தானியாவில் நீண்டகாலம் வாழ்ந்தவரும் யேர்மன் தேசத்தைச் சேர்ந்தவருமான கார்ல் மார்க்ஸ் (1818-1883) மனிதர்களின் உணர்வு, சித்தம், அறிவு என்பவையல்லாது மனிதரின் வாழ்நிலைதான் சமூகத்தின் இயக்கு சக்தி என்று கூறினார். மார்க்ஸின் நோக்குமுறை வரலாறு பற்றிய பொருள் முதல்வாத நோக்கு ஆகும். மனிதச் செயல்களுக்கு முதன்மை கொடுத்த மக்ஸ் வெபர் கோட்பாடு செயல்வாதம் (Ac­tion theory) என்றும் அறிவுவாதம் (Rationalism) என்றும் அழைக்கப்படும். சமூகவியல் மூலவர்களுள் மக்ஸ் வெபர் ஒருவர் ஆதலால் இக்கட்டுரையில் அவரது அறிவுவாதம் பற்றிய விளக்கம் இடம் பெறுகின்றது.

3. அமைப்பியல் செயல்வாதம் (Structural Functionalism)

அமெரிக்க சமூகவியலாளராள ரல்கொட் பார்சன்ஸ் (Talcott Parsons) அமைப்பியல் செயல்வாதம் என்னும் கோட்பாட்டை முன்வைத்தார். அவர் அமைப்பு, செயல் என்ற இரண்டிற்கும் சமத்துவமான முக்கியத்துவத்தை வழங்கும் வளர்ச்சிக் கருத்தை முன்வைத்தார். இவர் 1920 - 1979 காலப்பகுதியில் வாழ்ந்தவர். முன்னைய சமூகவியல் கோட்பாடுகள் யாவற்றையும் ஒன்றிணைத்த வளர்ச்சிக்கோட்பாடாக இவரின் கோட்பாடு அமைந்தது.

4. மார்க்சிசம்

மார்க்சிசம், செவ்வியல் மார்க்சியம், நவமார்க்சியம் என இரு பிரிவாகப் பிரித்து நோக்கப்பட வேண்டியது. மார்க்சிய சமூகவியலின் அடிப்படைகளை அபிவிருத்தியை முதன்மைப்படுத்தி இங்கு சில கருத்துக்களைக் கூறியுள்ளோம்.

சமூக டார்வினிசம்

சமூக டார்வினிசம் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துக்களைப் பின்வரும் தலைப்புக்களில் தொகுத்துக் கூறலாம்.

அ) நேர்க்காட்சி வாதம்

ஆ) இயற்கையும் மனிதனும்

இ) சமூக உயிரி

ஈ) பரிணாமம்

அ) நேர்க்காட்சி வாதம்

இயற்கை விஞ்ஞானங்களைப் போன்று விஞ்ஞான முறையின்படி சமூகத்தைப் பற்றியும் ஆராயலாம் என்ற கருத்தை அகஸ்ட் கொமட் (Auguste Comte) (1798 -1857) என்ற பிரான்ஸ் தேசத்து அறிஞர் கூறினார். சமூகவியலின் தந்தை எனக் கூறப்படும் கொம்ட் தோற்றுவித்த கொள்கை நேர்க்காட்சி வாதம் (Positiv­ism) எனப்படும். அவரது சமூகவியல் நேர்க்காட்சிச் சமூகவியல் என்றும் கூறப்படும். விஞ்ஞான முறையில் சமூகத்தை ஆராயலாம் என்ற கருத்தினை உள்வாங்கிக் கொண்ட சமூக டார்வினிசம் நேர்க்காட்சிவாத முறையியலை சமூகவியல் ஆய்வில் புகுத்தியது.

ஆ) இயற்கையும் மனிதனும்

மனித சமூகத்தின் வளர்ச்சி இயற்கை உலகின் வளர்ச்சியைப் போன்றே சில பொதுவிதிகளால் விளக்கப்படக்கூடியது என இக்கோட்பாட்டினர் கருதினர். கம்ட் உயிரிக் கொள்கை (Organicism) என்ற கருத்தைச் சமூகவியலுக்குப் பிரயோகித்தார். அவர் இயற்கையில் உள்ள உயிர்கள் போன்றே சமூக உயிரியும் செயற்படுகிறது. அதன் செயற்பாட்டு விதிகளைக் கண்டறியலாம் எனக்கருதினார். இயற்கைத் தாவரம், தரைத் தோற்றவமைப்பு, மண்வளம், நீர்வளம் ஆகிய இயற்கைக் காரணிகள் சமூக வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன என்று கருதும் புவியியலாளர்கள் சூழலாதிக்கவாதம் என்ற கருத்திற்கு அழுத்தம் கொடுத்தனர். சமூகத்தின் பரிணாமம் இயற்கையுடனான இடைவினை மூலம் வளர்ச்சி பெறுகிறது என சமூக டார்வினிசம் கூறியது.

இ) சமூக உயிரி

சமூகத்தை உயிரியாக உருவகப்படுத்திய சமூக டார்வினிசம் உயிரியல் கொள்கையான உயிர்களின் பரிணாமம் (Organismic evolution) என்ற கருத்தை சமூகம் பற்றிய ஆய்வில் புகுத்திச் சமூகப் பரிணாமம் என்ற வாதத்தை முன்வைத்தது. ஹெர்பட்ஸ்பென்சர் (1820-1903) என்ற பிரித்தானிய சமூகவியலாளர் இதற்கு முழுமையான வடிவத்தைக் கொடுத்தார். உயிர்கள் எவ்வாறு கலங்கள், இழையங்கள், அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் என்பனவற்றால் கட்டமைக்கப் பட்டிருக்கின்றனவோ அவ்விதமே மனித சமூகமும் பல பகுதிகளின் கூட்டாக அமைவது என்று கூறினார். இனப்பெருக்கம், போசணை, இடப்பெயர்வு போன்ற பல்வேறு செயல்கள் உயிரி ஒன்றின் இயக்கத்தில் காணப்படுகின்றன. இவ்வாறே சமூகம் என்ற உயிரியும் பல செயல்களைச் செய்கின்றது. அச்செயல்களைச் செய்யும் சிறப்பு அங்கங் களால் ஆன அங்கியே சமூகம் என்ற உயிரி.

ஈ) பரிணாமம்

உயிர்கள் இயற்கைக்கு எதிரான போராட்டத்தை நடத்துகின்றன. அவற்றிடையே உயிர் வாழ்வதற்கான போராட்டம் நடை பெறுகின்றது. பரிணாமவாதம் இதனை வாழ்வதற்கான போராட்டம் என்று கூறும். இவ்வாழ்க்கைப் போராட்டத்தில் தக்கன வாழும். பிற அழியும். இவ்வாறே மனித சமூகமும் வாழ்வதற்கான போராட்டத்தில் ஈடுபடுகின்றது. இயற்கையோடு தக அமைத்தல் மூலம் சமூக உயிரி நிலைத்திருப்பதற்கான உபாயங்களைக் கண்டுபிடிக்கின்றது. தக்கன வாழும் என்ற உயிரியல் பரிணாம விதியை சமூக டார்வினிசம் சமூகத்திற்கும் பொருத்தி விளக்கம் கூறியது.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டிலும் சமூகப்பரிணாமவாதம் மிகுந்த செல்வாக்குடைய கொள்கையாக விளங்கியது. தக்கன வாழும் என்ற டார்வினிய கருத்தைச் சமூகத்திற்குப் பிரயோகிக்கும் பொழுது தலையிடாக் கொள்கை, சந்தைப் பொருளாதாரம், உற்பத்திச் சாதனங்களினதும் சொத்துக்களினதும் தனியுடமை ஆகிய முதலாளித்துவப் பொருளாதார அம்சங்கள் நியாயப்படுத்தப்பட்டன. குறிப்பாக சமூக சமத்துவமின்மை, வறுமை, நோய் முதலியன இயல்பானவை என்றும் வாழ்க்கைப் போராட்டத்தில் தம்மை தக அமைத்துக்கொள்ள முடியாதவர்கள் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. முயற்சி, ஊக்கம், அறிவு ஆகிய பண்புகள் மனித வாழ்க்கையை மேம்படுத்தும் என்ற விவாதம் முன்வைக்கப்பட்டது. சுருங்கக் கூறின் பரிணாமவாதம் முதலாளித்துவ அமைப்பை நியாயப்படுத்தும் கருத்தியல் ஆகும் எனலாம்.

வெபரின் சமூகவியல் அல்லது அறிவுவாதம்

மனிதரின் செயல்கள் தாம் சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைகின்றன என மக்ஸ்வெபர் கூறினார், என்பதை மேலே குறிப்பிட்டோம். செயல்களை முக்கியத்துவப்படுத்தும் வெபர் செயல்களை செய்யும் மனிதர்களை ஊக்குவிக்கும் எண்ணங்கள் எவை என்ற கேள்வியைத் தொடுப்பதன் மூலம் மனிதரின் அகநிலை உணர்வுகளை முதன்மைப்படுத்துகிறார். இதனால் வெபரின் கோட்பாடுகள் கருத்து முதல்வாதம் என்ற வகையில் சேர்க்கப்பட வேண்டியதாக உள்ளது. புறநிலைக்கும் பொருண்மிய நிலைக்கும் (Material Conditions) முதன்மை கொடுக்கும் பொருள் முதல்வாத நோக்கு முறைக்கு வெபரின் கருத்துக்கள் நேர் எதிரானவை எனக் கருதலாம்.

இக்கட்டுரையின் முற்பகுதியில் நாம் ஆராய்ந்த சமூக டார்வினிசம் பொருள் முதல்வாத அடிப்படையைக் கொண்டது. இயற்கைச் சக்திகளோடு மனிதன் கொள்ளும் உறவுகளினாலும், இடைவினை களாலும் வளர்ச்சி ஏற்படுகின்றது என்று அக்கோட்பாடு கூறுகின்றது. மக்ஸ் வெபர் ‘புரட்டஸ்தாந்திய அறமும் முதலாளித்துவத்தின் ஆன்மாவும்’ (Protestant Ethic and The Sprit of Capitalism) என்ற நூலை எழுதினார். இந்நூலில் அவர் ஐரோப்பாவில் முதலாளித்துவம் தோன்றுவதற்கு 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய கல்வினிய சமய ஒழுக்கமும் அறக் கருத்துக்களும் காரணமாக அமைந்தன என்று கூறினார். இது அபிவிருத்தி சிந்தனை வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூலாகும். வெபர் கோட்பாட்டின் தாக்கத்திற்கு 20ஆம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்ற நவீனமாதல் (Modern Station) கோட்பாடு சிறந்த ஒரு உதாரணமாகும்.

‘நவீனமாதல் கோட்பாடு ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பின்னடைவிற்குப் பின்னோக்கிப் பார்க்கும் மரபுவாதம் (Backward looking traditionalism) தான் காரணம் என்று கூறியது. சமூக பொருளியல் மாற்றங்களை கருத்துக்கள் விழுமியங்கள் (Ideas and Values) மூலம் விளக்கும் இந்தப் போக்கினை வெபரிய சிந்தனையின் தொடர்ச்சியாகவே கொள்ளவேண்டும்.

கல்வினியம்

முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு உந்து விசையாக இருந்த கல்வினிசத்தின் அடிப்படைத் தத்துவங்கள் இரண்டு உள்ளன.

i) கடவுள் உலகுக்கு வெளியே

மனிதருக்கு அப்பால் கடவுள் இருக்கிறார், தொலைவில் உள்ளார் என்று கல்வினியம் கூறியது.

கல்வினியத்தின் இக்கருத்தை ஆங்கிலத்தில் ‘Transcendence of God’  என்பர். ‘ட்றான்சென்டன்ஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு ‘எல்லை கடந்துசெல்’, ‘எல்லை கடந்து மேம்படு’, ‘அனுபவ வரம்புமீறு, அறிவின் பிடிக்கு அப்பாற் செல்’ போன்ற அர்த்தங்கள் உள்ளன. உலகையும் மனிதரையும் படைத்தவர் கடவுளே ஆயினும் அவர் அதனைக் கைவிட்டு வெளியே நிற்கிறார். அதன் விருத்தியில் அல்லது முன்னேற்றத்தில் கடவுள் கரிசனை கொண்டவரல்லர் என்று இத்தத்துவத்தை வியாக்கியானம் செய்யலாம்.

ii) முன்வகுத்தமைவு (Predestination)

தனிநபர்கள் மோட்சம் அடைவார்களா இல்லையா, அவர்களின் விதி யாது, நற்கதி பெற்றுச் சுவர்க்கம் அடைவார்களா இல்லையா என்பதைக் கடவுள் முன்னமே முடிவு செய்து விட்டார் என்று முன்வகுத்தமைவு என்ற தத்துவம் கூறுகின்றது. தனிநபர்கள் இறக்கும் வரை அவர்களுக்கு இறைவன் வகுத்தமைந்த விதி என்ன என்பது தெரியாது என்றும் கல்வினியம் கூறும். இக்காரணத்தால் விசுவாசிகள் மனதில் மோட்சம் பற்றிய கலக்கம் (Salvation Panic) உண்டாகும். கடவுளின் கடாட்சம் தனக்கு உள்ளதா என்பதற்கான சான்றுகளை தனி நபர்கள் தேடுகின்றனர். கடவுளின் கடாட்சம் உள்ளவன் பலவீனம் உடையவனாக உலக இன்பங்களில் மூழ்கிச் சோம்பேறியாக வாழ்வதில்லை. நெறி பிறழாத ஒழுக்கம் மூலம் வாழ்க்கையில் முன்னேறுதல் இவ்வுலக வாழ்க்கையில் வெற்றியடைதலின் அடையாளம். கல்வினிய ஒழுக்கநெறி, இவ்வுலகத்தில் வாழ்ந்து கொண்டே, தன்னுடைய தொழிலைச் சிறப்புறச் செய்து துறவி போன்று எளிமையாக வாழ்தலை இலட்சியமான வாழ்வு எனப் போற்றியது.

கடவுள் உலகுக்கு அப்பால் உள்ளார். தனிநபர்களின் விதியை அவர் முன்வகுத்தமைத்துவிட்டார் என்ற இரு தத்துவங்களும் ஒன்றோடொன்று தொடர்புபட்டவை. சடங்கு முறையான வழிபாடுகள் மூலம் அப்பால் உள்ள கடவுளின் கருணையைப் பெறுதல் என்ற கருத்து மூடத்தனமானது. அது மட்டுமல்லாமல் மனிதனோடு கடவுள் நெருக்கமாக உறவு கொண்டிருக்கிறார் என்று சிந்திப்பது தெய்வநிந்தனையும் ஆகும் என்று கல்வினியம் கருதுகிறது. இவ்வுலகில் ஒழுக்க நெறியுடன் வாழ்வது என்பதன் பொருள் கடவுளின் சித்தப்படி அவரின் கருவியாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பனவற்றுடன் வாழ்தல் ஆகும்.

கல்வினியச் சிந்தனை புரட்டஸ்தாந்திய நாடுகளில் பரவியபோது அந்நாடுகளில் முதலாளித்துவத்தின் தோற்றத்திற்கு அவசியமான முயற்சியாளர் வகுப்பு பெற்றது. இவர்கள்

  • கடின உழைப்பு
  • தம்மையே வருத்திக்கொள்ளும் சிக்கனமும் சேமிப்பும்
  • ஆராய்ந்து கணக்குப் பார்த்து கவனத்தோடு முதலீடு செய்தல்

ஆகிய குணஇயல்புகளைக் கொண்டவர்களாக இருந்தனர். இப்பண்புகளின் அடிநாதமாக இருப்பது அறிவு ஆகும். முதலாளித்துவ உற்பத்தி முறை, பகுத்தறிவு செயற்பாடுகளின் உச்சநிலை.

சமூக டார்வினிசம் சூழல் தீர்மானவாதக் கருத்தையுடையது. இயற்கை மனித சமூகத்தின் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறுவது. வெபரின் சமூகவியல் அறிவு மூலம் மனிதர் இயற்கையை வெல்வதைக் கூறுகிறது. அறிவு என்பதை மூன்றாகப் பகுத்து நோக்கலாம்.

1) சிந்தனை, தர்க்கம், துல்லியமான அளவும் கணிப்பீடும் என்பனவற்றின் மூலம் மனிதர் பெற்றுக்கொள்ளும் விஞ்ஞானத் தொழில் நுட்ப அறிவு.

2) உலகு, மனிதர் சமூக வாழ்க்கை என்பன குறித்து மனிதர் வகுத்துக்கொள்ளும் ஒன்றித்த உலகநோக்கு. இதனை பௌதீக உலகு கடந்த அறம் சார்ந்த அறிவுவாதம் எனலாம். (MetaPhysical and Ethical Rationalism).

3) வாழ்க்கையை அனுபவ அறிவு மூலம் திட்டமிட்டு வகுத்துக் கொள்ளும் நடைமுறை அறிவு (Practical Reason). நவீன சமூகத்தின் சாதனைகள் யாவும் அறிவின் சாதனைகளேயாகும் என்பதே வெபரின் வாதத்தின் சாராம்சம். முதலாளித்துவ உற்பத்தி ஒழுங்கமைப்பு அலுவலர் ஆட்சிமுறை மூலம் அறிவுசார் அமைப்பாக இயங்குகிறது. விஞ்ஞான தொழில்நுட்ப அறிவின் அடிப்படையில் அமைந்த உற்பத்தி நிறுவனங்களின் முகாமைத்துவம் மனித அறிவின் உச்ச அளவான பிரயோகமாகும்.

வெபரின் நோக்குமுறை எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறது. அலுவலர் ஆட்சிமுறை மனிதரைச் சிறை வைக்கும் இரும்புக் கூண்டு என்று அவர் குறிப்பிட்டார். மனிதர் சமய உணர்வும், விழுமியங்களும் அற்றவர் களாய், அரசினாலும் தாம் பணிபுரியும் நிறுவனங்களினாலும் கண்காணிக்கப் படும் நிலையினையே வெபரது இரும்புக் கூண்டு என்னும் உருவகம் குறித்து நிற்கிறது. முதலாளித்துவம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த புரட்டத்தாந்திய அறம் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக ஊக்கத்தோடு உழைக்கும் தனிநபர்களை உருவாக்கியது.

4. அமைப்பியல் செயல்வாதம்

அமைப்பு, செயல் என்னும் இரு கருத்துக்கள் அமைப்பியல் செயல் வாதத்தின் அடிப்படையாக அமைகின்றன.

அமைப்பு

சமூகத்தில் வாழும் தனிமனிதர்களுக்கு அப்பால் தனிமனித அனுபவத்திற்கு வெளியே உள்ள அமைப்பு சமூகம் எனப்படும். தனிநபர்கள் பிறக்கும் முன்னரே சமூகம் தோன்றியது. மனிதர், சமூகம் என்ற கட்டமைப்புக்குள்ளேயே பிறக்கிறார்கள். தனிநபர் மறைவுக்குப் பின்னரும் சமூகம் தொடர்ந்து இருக்கும். மனிதரின் நடத்தைப் பாங்குகள் அமைப்பாக, மனிதர்க்குப் புறத்தே உள்ள யதார்த்தமாக உள்ளது. இவற்றை சமூகத் தரவுகள் என்பர். பண்பாடு, நியமங்கள், மதிப்பீடுகள், சமய நம்பிக்கைகள் என்பன மனிதருக்குப் புறத்தேயுள்ள சமூகத் தரவுகள் ஆகும்.

மனிதரால் உருவாக்கப்படும் சமூகம் மனிதருக்குப் புறத்தே நின்று அவர்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக இயங்குகிறது.

சமூகத்தை ஒரு உயிரியாக உருவகிக்கும் சமூக டார்வினிசம் பற்றி முன்னர் குறிப்பிட்டோம். உயிரியின் நிலைபேறிற்குப் பல செயல்கள் அவசியம். இரத்தச் சுற்றோட்டம் என்பது ஒரு செயல். இச்செயலைச் செய்வதற்கான உயிரியின் சிறப்பு அங்கங்கள் உள்ளன. அவற்றை ஒன்றாகச் சேர்த்துச் சுற்றோட்டத் தொகுதி என்கிறோம். அது போன்றே சமூக உயிரியின் நிலைபேறுக்குத் தேவையான செயல்கள் வெவ்வேறு அங்கங்கள் மூலம் ஆற்றப்படுகின்றன.

உயிரியின் உடல் எலும்புகளால் ஆன வன்கூடு, தசைநார்கள், உள்ளே அமைந்திருக்கும் உடற்கூறுகள் ஆகிய பகுதிகளைக் கொண்டது. இதுபோன்றே சமூகமும் பல பகுதிகளால் ஆனது. பகுதிகள் ஒன்றோ டொன்று தொடர்புபட்டவை, ஒன்றில் ஒன்று தங்கி­யிருப்பவை. உயிரின் பகுதிகள் ஒவ்வொன்றும் உயிரியின் நிலைபேறுக்கு `உதவு வது போன்று சமூக உயிரியின் பகுதிகள் ஒவ்வொன்றும் சமூகத்தின் நிலைபேற்றுக்கு வேண்டிய சமூகச் செயல்களைச் செய்கின்றன.

அமைப்பியல் செயல்வாதம் - வரலாறு

அமைப்பியல் செயல்வாதத்தை முழுமையான ஒரு கோட்பாடாக வடிவமைத்தவர் ரல்கொட்பார்சன்ஸ் (Tal­cott Parsons) (1902-1979) என்னும் சமூகவியலாளராவர். அவர் தமக்கு முன்னைய சமூகவியலாளர்களின் கருத்துக்களை ஒன்றிணைத்த கோட்பாடாக அமைப்பியல் செயல்வாதம் கோட்பாட்டைக் கட்டமைத்துள்ளார்.

அகஸ்ட்கம்ட் இக் கோட்பாட்டின் தொடக்கத்தை குறித்து நிற்கிறார். அவர் கொந்தளிப்பான சமூகச் சூழ்நிலையில் வாழ்ந்தவர். கம்ட் சமூக ஒருங்கிணைப்பு (Social Integration) சமூக நிலைபேறுக்கு அவசியம் எனக் கருதினார். சமூக ஒருங்கிணைவு என்ற கருத்து செயல்வாதத்தின் அடிப்படைகளில் ஒன்று. கம்ட் பிரான்ஸ் தேசத்தவர், ஆங்கிலேயரான ஹெர்பர்ட் ஸ்பென்சர் (1820 1903) சமூகத்தை உயிரிக்கு ஒப்பிட்டார். மனித உடல், சமூகம் இரண்டிற்குமிடையே பல ஒற்றுமைகளையும் கண்டார். உயிரியல் உயிரின் இயக்கத்தை விளக்குவது போன்று சமூகத்தை விஞ்ஞான முறையில் விளக்கலாம் எனக் கருதினார். சமூகத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும். பகுதிகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலம் சமூக இயக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஸ்பென்சர் கருதினார். ஸ்பென்சரின் கருத்துக்கள் பல அமைப்பியல் செயல்வாதத்தில் உள்வாங்கப்பட்டன.

ஸ்பென்சருக்கு அடுத்ததாக எமில் டர்க்கீம் என்பவர் (1858 - 1917) கருத்துக்கள் அமைப்பியல் செயல்வாதத்தின் அடிப்படைகளை நிறுவின. இப்பகுதியின் தொடக்கத்தில் கூறிய அமைப்பு, செயல் ஆகிய கருத்துக்களை எடுத்துக் கூறியவர் டர்க்கீம் ஆவர். பின்னர் ரல்கொட் பார்சன்ஸ் செயல்வாதத்தை முழுமையான கோட்பாடாக வளர்த்தார். பார்சன்ஸின் சமகாலத்தவரான றொபர்ட்.கே.மேர்டன் (1910 -2003) சமூகச் செயல் (Social Function) என்னும் கருத்தை மேலும் மெருகுபடுத்தும் முறையில் பல எண்ணக் கருக்களை முன்வைத்தார். சமூக மானிடவியலாளர் கருத்துக்களும் செயல் வாதத்தின் வளர்ச்சிக்கு உதவின.

செயல்வாதம் சமூக இயக்கத்தின் போது சமூகம் சமநிலை அல்லது இறுதிநிலை அடைவதை முதன்மைப்படுத்தும் நோக்கு முறையாகும். இதனால் முரண்பாடு மாற்றம் ஆகியன இக்கோட்பாட்டில் அழுத்தம் பெறுவதில்லை. பொருளாதார அபிவிருத்தி மாற்றம் பற்றியது. மாற்றம் முரண்பட்ட சக்திகளின் மோதலால் விளைவது எனக் கூறும் முரண்பாட்டு நோக்குமுறை (Conflict Perspective), செயல்வாத நோக்குமுறைக்கு நேர்எதிரான நோக்குடையது.

5. மார்க்சியம்

நவீனமாதல் என்ற கோட்பாடு 1960 காலத்தில் தோன்றியது. இவ்வாறு தோன்றிய நவீனமாதல் கோட்பாடுகள் செயல்வாதம் (Functionalism) என்னும் நோக்குமுறையில் அமைந்தன. நாம் மேலே விபரித்தவாறு அகஸ்ட்கம்ட், ஸ்பென்சர் டர்க்கீம், வெபர் முதலிய சமூகவியலாளர்களின் சிந்தனை மரபில் இருந்து முகிழ்த்ததே செயல்வாதம் என்னும் நோக்குமுறையாகும். மூன்றாம் உலக நாடுகள் மேற்கு நாடுகள் போன்று கைத்தொழில் வளர்ச்ப் பாதையில் விரைந்து முன்னேறினால் அபிவிருத்தி அந்நாடுகளில் ஏற்படும் என இந்நோக்கு முறையினர் வாதிட்டனர்.

மூன்றாம் உலகம் முதலாளித்துவப் பாதையூடாக கைத்தொழில் வளர்ச்சியை அடைய முடியாது, அப்பாதையில் முன்னேற்றத்திற்கான தடைக்கற்கள் உள்ளன என்ற கருத்தை 1970 களில் மார்க்சிய ஆய்வுகள் எடுத்துக் காட்டின. மார்க்சியமும், செயல் வாதமும் ஒன்றையொன்று எதிர்க்கும் நோக்கு முறைகளாக இருந்தன. இந்நிலையில் மூன்றாம் உலகின் அபிவிருத்தியின் சமூகவியல் சாராம்சத்தில்

i. செயல்வாத நோக்குமுறை

ii. மார்க்சீய நோக்குமுறை

என்னும் இரு கிளைகளாகப் பிரிந்துள்ளதைக் காணலாம்.

மார்க்சிய நோக்குமுறை உற்பத்திமுறைமை (Mode of Production) என்ற கருத்தைச் சமூகம் பற்றிய ஆய்வில் முன்வைத்துள்ளது. அ) உற்பத்தி உறவுகள் ஆ) உற்பத்திச்சக்திகள் என்ற இருவகைமைகளின் சேர்க்கையாக அமைவதே ஒரு உற்பத்தி முறைமையாகும். நிலமானிய உற்பத்தி முறைமை, முதலாளித்துவ உற்பத்தி முறைமை, ஆசிய உற்பத்தி முறைமை, சோஷலிச உற்பத்தி முறைமை அடிமை உற்பத்தி முறைமை உற்பத்தி எனப் பல முறைமைகள் பற்றி மார்க்சிய ஆய்வுகளில் பேசப்பட்டுள்ளன.

நிலமானிய உற்பத்தை முறையில் நிலம், விவசாயக்கருவிகள், உற்பத்தியில் கையாளப்படும் தொழில்நுட்பம் ஆகிய உற்பத்திச் சக்திகளின் உடமையும், அவற்றின் மீதான கட்டுப்பாடும் உழைப்பாளர்களான விவசாயக் குடியான்கள் கையிலேயே இருந்தன. ஆயினும் உற்பத்தியின் விளைவான உற்பத்திப் பொருட்கள் நிலமானியப் பிரபுக்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தன. முதலாளித்துவ உற்பத்தி முறையில் உற்பத்திச் சக்திகள், உற்பத்தியின் விளைவான உற்பத்திப் பொருட்கள் என்ற இரண்டும் முதலாளியின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப உற்பத்தி உறவுகள் அமைகின்றன. நிலமானியம் குறிப்பிட்ட வகை உறவுகளை உருவாக்கும். முதலாளித்துவம் வளரும்போது நிலமானிய உற்பத்தி உறவுகள் அழிந்து முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் வளர்ச்சியடையும்.

உற்பத்தி முறைமைகள் பற்றிய ஆய்வுகளின் பயனாக முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி முறைமைகள் (Pre-Capitalist Modes of Production) என்ற கருத்து மேற்கிளம்பியது. பொருளாதாரத் துறையில் மாற்றங்கள் ஏற்படும் பொழுது ஒரு சமூகத்தில் பல உற்பத்தி முறைமைகள் முதலாளித்துவ முறைமையுடன் ஒருங்கே அருகருகே இருப்பதைக் காணமுடியும் என ஆய்வாளர்கள் கூறினர்.

1970களில் மார்க்சீயர்களிடையே மூன்றாம் உலகின் கிராமப் புறங்களில் காணப்படும் உற்பத்தி முறைமை யாது? நிலப்பிரபுத்துவமா அல்லது முதலாளித்துவமா மேலாண்மை பெற்றுள்ள முறைமை? வேறு எவ்வகையான முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி முறைமைகள் ஒருங்கே நிலைத்து நிற்கின்றன? அவை முன்னைய அமைப்பின் எச்சங்களா? அல்லது முதலாளித்துவம் பழைய உற்பத்தி முறைமைகளை மீள் உயிர்ப்பித்துத் தன்னோடு இணைத்துக் கொள்கிறதா? போன்ற கேள்விகள் ஆய்வுப் பிரச்சினைகளாக மேலெழுந்தன.

உற்பத்தி முறைமைகள் என்னும் கருத்து அருவமான எண்ணக்கரு. பொதுப்பட்ட நிலையில் அல்லாமல் ஒரு நாட்டின் ஸ்தூலமான நிலையில் வைத்து இது ஆராயப் படுதல் வேண்டும். நியுடன் குணசிங்க, எஸ்.பி.டி. சில்வா, குமார் ரூபசிங்க, குமாரி ஜயவர்த்தன, ரியுடர் சில்வா ஆகியோரின் நூல்களிலும், ஆய்வுக் கட்டுரைகளிலும் இலங்கையின் உற்பத்தி முறைமைகள் பற்றிய விடயம் விரிவாக அலசப்பட்டுள்ளது.

- கந்தையா சண்முகலிங்கம், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்

Pin It