ஒரு தமிழ் சுற்றுச்சூழல் இதழ் இயற்கை பற்றி, சூழலியலின் பல்வேறு அம்சங்கள் பற்றி சிறப்பிதழ் வெளியிடுவது இயல் பான ஒன்றுதான். ஆனால் சூழலை சீர்கெடுத்து வரும் ஓர் இந்திய பன்னாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி சிறப்பிதழ் வெளியிடும் துரதிருஷ்டவசமான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த இதழ் தூத்துக்குடி ஸ்டெர்லைட் செம்பு உருக்குஆலை, ஒரிசா நியமகிரி மலையைத் தகர்க்கும் அதன் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனங்களைப் பற்றி அமைந்திருக்கிறது.

அரசியல்வாதிகள் "வளர்ச்சி வளர்ச்சி" என்று கூப்பாடு போட்டுக் கொண்டு, இயற்கை அழிப்பதும், பல்வேறு நிறுவனங்களை இந்தியாவுக்கு வரவழைப்பதும், மக்கள் வரிப்பணத்தில் அவர் களுக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகைகளை வாரி வழங்குவதும் சாதாரண நடைமுறைகளாகிவிட்டன. மக்களின் வளர்ச்சியைப் புறக்கணித்து ஏதோ ஒரு முதலாளியை வளர்ப்பதன் மூலம், அரசியல்வாதிகள் தங்களுக்குத் தேவையானதை பெற்றுச் சென்று விடுகிறார்கள்.

தமிழகத்தில் எல்லா விஷயத்திலும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுப்பது வாடிக்கை. ஆனால் மகாராஷ்டிரத்தில் இருந்து துரத்தப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்துக்கு வரவேற்றது, அப்போதிருந்த அ.தி.மு.க ஆட்சிதான். அந்த நிறுவனத்தைத் தொடங்கி வைத்த புண்ணியத்தை தி.மு.க தேடிக் கொண்டது! எடுத்ததற்கெல்லாம் முட்டிக்கொண்டு நிற்கும் தமிழக கட்சிகள், இதுபோன்று முதலாளிகளை வளர்ப்பதில் மட்டும் மிகுந்த ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன. ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியதாக தங்களைத் தாங்களே முன்னிறுத்திக் கொள்ளும் சில கட்சிகளும்கூட, மக்கள் போராட்டங்களை தங்களுடையதாக அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் கிடைக்கும் மலிவான அரசியல் லாபத்தையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன. எளிய மக்களின் 14 ஆண்டு தொடர் போராட்டத்துக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. ஆனால், அந்தத் தீர்ப்புக்கு இரண்டே நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் விலக்கு பெற்றுவிட்டது ஸ்டெர்லைட்.

தமிழகத்தில் கடலூர், ராணிப்பேட்டைக்கு இணையாக மிகவும் மாசுபடுத்தப்பட்ட நகரமாக தூத்துக்குடி இருக்கிறது. எந்த இயற்கை வளமும் இல்லை என்று முத்திரை குத்தப்பட்டு, துறைமுகங்களைச் சார்ந்து செயல்படும் பெருநிறுவனங்கள் எல்லாம் தூத்துக்குடியின் தலையில் கட்டப்படுகின்றன. இந்தத் தொழிற்சாலைகள் அந்த நகரை வாழ்வதற்கு தகுதியற்றதாக்கி வருகின்றன. ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு எதிராக தூத்துக்குடி - தென்னக மக்கள் தொடர்ச்சியாக கூட்டுப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த தீவிரமான போராட்டங்கள் எதைப் பற்றியும் மாநில அரசோ, மத்திய அரசோ கணக்கில் கொள்ளவில்லை. மக்கள் நலனைப் பற்றிய அக்கறை அவர்கள் மனதில் கொஞ்சமும் இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விதி மீறல்கள் தொடர்பாக அந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்திய தமிழ்மாந்தன், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பின் சட்டரீதியான முக்கியத்துவம் பற்றி வழக்குரைஞர் சுந்தரராஜன், மார்க்சியப் பார்வையில் கஜேந்திரன், வேதாந்தா-ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்டோர் பல்வேறு கோணங்களில் ஸ்டெர்லைட்டின் அத்துமீறல்கள், சட்டமீறல்கள் பற்றி இந்த இதழில் விரிவாக எழுதியுள்ளனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம், அனில் அகர்வால் என்ற இந்தியரால் நடத்தப்படும் வேதாந்தா பன்னாட்டு நிறுவனத்தின் ஓர் அங்கம். ஒரிசாவில் மாநில அரசுடன் சேர்ந்துகொண்டு, நியமகிரி மலையைத் தகர்த்து பாக்சைட் எடுக்கும் முயற்சியில் வேதாந்தா ஈடுபட்டு வந்தது. இதற்கு எதிராக போராடி வரும் பழங்குடிகளின் கோரிக்கைகளைப் பற்றி கவலைப்படாமல் இருந்த மத்திய அரசு, திடீரென அந்த நிறுவனத்தின் பணிகளை முடக்கியுள்ளது. நினைவுதெரியாத காலம்தொட்டு அந்த மலைகளைக் காத்துவரும் பழங்குடிகளின் உண்மையான போராட்டத்துக்கான எதிர்விளைவாக இது தெரியவில்லை. வேதாந்தாவை முடக்கியதன் மூலம் பல்வேறு ரகசிய கணக்குகளை சரிகட்ட மத்திய அரசு முயற்சிப்பதாகத் தெரிகிறது. அரசியல் லாபங்களே இந்த நடவடிக்கைக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. அது தொடர்பாக இந்த இதழில் இரண்டு விரிவான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நியமகிரி மலைப் பகுதியில் வாழும் டோங்க்ரியா கோந்த் பழங்குடிகளைப் பற்றி ஒளிப்படக் கலைஞர் வினோத் எடுத்த படங்கள் கடந்த இதழில் வெளியானது நினைவிருக்கலாம்.

இப்படியாக இயற்கை வளம் செரிந்த மலைகளைத் தகர்ப்பதும், ஊரை மாசுபடுத்துவதும்தான் இந்தியாவில் மக்கள் சார்ந்த வளர்ச்சியாக முன்னிறுத்தப்படுகின்றன. இந்த இடத்தில் தற்சார்பு பொருளாதார நிபுணர் ஜே.சி.குமரப்பா, ஒரு நாட்டின் வளர்ச்சி விகிதத்தை எப்படிக் கணக்கிட வேண்டுமென்று கூறியிருப்பதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். "ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வளர்ச்சியடைவதற்கு தேவையான திட்டங்களைச் செயல்படுத்தும் முன், அந்த ஊரைச் சேர்ந்த ஒரு விவசாயியை வரவழைத்து கைகளைத் தூக்கச் சொல்வேன். உழைப்பை மட்டுமே அறிந்த அவனது விலா எலும்புகள் அப்பொழுது நன்கு வெளிப்படையாகத் தெரியும். வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்திய பிறகு, ஓராண்டு கழித்துச் சென்று அதே விவசாயியை அழைப்பேன். அப்பொழுது அவனது விலா எலும்புகள் தெரிகிறதா என்று பார்ப்பேன். அப்பொழுது சில எலும்புகளாவது மறைந்திருந்தால் அதுதான் வளர்ச்சி. இதுதான் வளர்ச்சியை சரியாகக் கணக்கிடும் விகிதம்" என்று கூறியுள்ளார். வெறுமனே 9 சதவீத வளர்ச்சி, 10 சதவீத வளர்ச்சி என்றெல்லாம் கூப்பாடு போடும் அரசியல்வாதிகள் மேற்கண்ட எளிய உண்மையை உணர மாட்டார்கள், தெரிந்தாலும் நடைமுறைப்படுத்த மாட்டார்கள். "நான் ஏன் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும்" என்று அந்த அரசியல்வாதிகள் பிடிவாதமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு இந்த உண்மையை உணர்த்த நாம் என்ன செய்யப் போகிறோம்?

-ஆசிரியர் குழு

குறிப்பு: சென்னை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அடுத்த இதழ் கூடுதல் பக்கங்களுடன் பல்வேறு சிறப்புக் கட்டுரைகளுடன் வெளியாகிறது. சென்னை புத்தகத் திரு விழாவில் சந்திப்போம்.

Pin It