இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு இரண்டு பேரை தமிழுலகம் மறந்து விட்டது; ஒருவர் தமிழ் ஒளி; மற்றொருவர் கம்பதாசன்.  பன்முகப் பேராற்றல் படைத்த கம்பதாசனை தமிழ்கூறு நல்லுலகம் மறந்து விட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“நண்பர் கம்பதாசனை யாவரும் அறிவர்.  அவர் கவின்.  கவிராயனுக்குரிய கவலையற்ற தன்மையும், மிடுக்கும், திமிரும், காம்பீர்யமும் அவரிடம் காண்பது போல் மற்றவரிடம் காண முடியாது வாழ்வையும், கவிதையையும், காவியக் கனவையும் ஒன்றாக்கிய கவின் அவரது உள்ளத்தின் கனிவு.  வறுமையூடும், செல்வத்தூடும் மனங்கலங்காது குலுங்காது அநாயாசமாகப் பறந்து செல்லும் வானம்பாடி அவர்...” என்று ச.து.சு. யோகியார் கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட கவிஞரின் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் பத்தாண்டுகள் வறுமையில் வாடி துயரங்களை அனுபவித்தார்.  அதனை அவரே இப்படிக் கூறுகிறார்:

“இன்று என்னை வறுமையில் ஆழ்த்தி, என் வாழ்வைக் குலைத்த சிறுபகை, நரிகளின் கூட்டம்.  நான் இவ்வுலகை விட்டு இறந்த பிறகாவது உண்மைக் கவிஞன், உலக மனிதன் என்று ஏற்குமாகில் இயேசு கிறிஸ்து கூறியது போல், அவர்கள் அறியாமல் செய்து விட்டார்கள், அவர்களை மன்னியுங்கள் என்று எனது ஆத்மா சாந்தியடையும்.”

“நித்தம் வறுமையில் நெஞ்சழிந்து - தன்னை

நேசனெனச் சொல்ல யாருமின்றி

பித்தன் இவனெனக் காட்சிதந்து - உயிர்

பிரிந்தபின் புகழைப் பெறுபவர் யார்?”

என்னும் இவர் கவிதை சிந்திக்கத்தக்கது.

வாழும் காலத்தில் வறுமையும், அன்பு பாராட்ட ஆட்கள் இல்லாத வெறுமையுமாய் வாழ்ந்தவனுக்கு மரணத்துக்குப் பின் கிடைக்கும் புகழால் பயன் என்ன என்று கவிஞர் கேட்கும் கேள்வி பொருள் பொதிந்தது.

கவிஞரின் வறுமைக்குக் காரணம் அவரது திட்டமிடப்படாத வாழ்க்கை முறையேயாகும்.  அன்றைய தினம் தமிழ்க் கவிஞர்களில் திரைப்படப் பாடல் எழுதுவதற்கு அதிகத் தொகை வாங்கிய முதல் கவிஞர் கம்பதாசனே!

1934 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சீனிவாச கல்யாணம்’ என்னும் திரைப்படத்திற்கு முதல் பாடல் எழுதியதாக சிலோன் விஜயேந்திரன் குறிப்பிடுகிறார்.  1940இல் வெளிவந்த ‘வாமன அவதாரம்’ திரைப்படத்திற்கு இவர் எழுதிய பாடல்களே சான்றுகளாகக் கிடைக்கின்றன.

இதனைத் தொடர்ந்து வேணுகானம், ஆராய்ச்சி மணி, பூம்பாவை, உதயனின் ஞானசௌந்தரி, மங்கையர்க்கரசி, இதயகீதம், வனசுந்தரி ஆன அவன், தந்தை, வானரதம், அக்பர் ஆகிய ஏராளமான படங்களுக்கு கம்பதாசன் பாடல்களை இயற்றினார்.

1940ஆம் ஆண்டு தொடங்கிய அவரது பாடல் இயற்றும் பணி 1971 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது.  31 ஆண்டுகள் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார்.  அவர் சமதருமக் கொள்கையை வாழ்க்கையில் கடைபிடித்தவர்.  பணத்தைச் சேர்த்து வைக்கக் கூடாது என்று நினைத்தார்.  கிடைத்த பெரும் பணத்தைக் குடித்தும், வேறு வழிகளிலும் வீண் செலவு செய்தார்.  இறுதிக் காலத்தில் வறுமையில் வாடியதற்கு அதுவே காரணமாகும்.

கவிஞரின் கடைசிக் காலம் வேதனை மிகுந்தது.  வறுமை, காதல் தோல்வி, காசநோய் மூன்றும் வாட்டி வதைக்க சமூகத்தின் புறக்கணிப்பால் தனித்து விடப்பட்ட கம்பதாசன் இராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் 1973 மே 23இல் ஓர் அநாதையைப் போல மரணத்தைத் தழுவினார்.

கம்பதாசன் மரணத்திற்குப் பிறகு அவரது புகழைப் பரப்பிய பெருமைக்குரியவர் சிலோன் விஜயேந்திரன்.  கம்பதாசனின் கவிதை மீது கொண்ட ஈடுபாட்டால் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அவரது படைப்புகளைத் திரட்டி, வாழ்க்கைக் குறிப்புகளோடு பல தொகுதிகளாக வெளியிட்டார்.

கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும், கம்ப தாசன் கவிதைத் திரட்டு, கம்பதாசன் திரையிசைப் பாடல்கள், கம்பதாசன் காவியங்கள், கம்பதாசன் சிறுகதைகள், கம்பதாசன் நாடகங்கள் எனப் பல தொகுதிகள் வெளிவந்துள்ளன.  அவை அவரது பன்முக இலக்கிய வன்மையைப் பறைசாற்றிக் கொண்டேயிருக்கும்.

கம்பதாசனின் பிற இலக்கிய வடிவங்களை விட கவிதைத் துறையிலேயே அவரது முழு வீச்சை அறிய முடியும்.  அவரது கவிதைகளில் சொல்லழகும், பொருளழகும் தனித்தன்மையோடு விளங்கும்.

“உலகமே ஒரு சிறைச்சாலை - இங்கே

உற்ற உயிருக்கே உடல்சிறைச் சாலை (உலகமே)

ஐயிரண்டு திங்கள் அன்னை வயிரே சிறைச்சாலை

அணிபருவம் ஏழுக்கும் ஆசையே சிறைச்சாலை

வெய்யில் தரும் பகலுக்கு இரவே சிறைச்சாலை

விதிமுடிந்தால் இங்கே பிடிமண் சிறைச்சாலை”

                                                     (உலகமே)

என்று இவர் கவிதைகளில் அறச் செய்திகளையும் காண முடியும்.

கவிதைகள், திரைப்பாடல்கள் மட்டுமின்றி, காவியங்கள் பதின்மூன்று இயற்றியுள்ளார்.  கனவு, காணிக்கை, காதலும் கண்ணீரும், புத்தன் புனர் ஜென்மம், சாவுக்கு விருந்து, வேளை வந்தது, இரத்த ஓவியம், கல்லாத கலை, சொல்லாத சொல், கறிகனி, மொழி முத்தம், கம்பக் குயில் என்னும் இந்தக் காப்பியங்கள் அவரது கவித்துவத்தை வெளிப்படுத்தும்.

இவரது நூல்கள் பற்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாராட்டியுள்ளார்: “கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக் கின்றன.  அவை அவராலேயே இயற்றப்பட்டவை.  அவரின் நெஞ்சினின்று தங்கு தடையின்றி எழும் ஊற்று.  உண்மையில் கம்பதாசன் எண்ணம் நன்று.  கவிதை உள்ளம் நன்று.  நல்ல கற்பனையே புதுமையை வரவேற்கும் தன்மையே அதைப் போற்றும் ஆற்றலைக் காணுகின்றேன்” என்று கூறியுள்ளார்.

அறிஞர் வ.ரா. ‘புத்தர் புனர் ஜென்மம்’ காவியம் பற்றி பாராட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது “இது கம்பதாசன் கவிதையில் வரைந் திருக்கும் அற்புதச் சித்திரமாகும்.  தமது கவி தர்க்க சாஸ்திரத் திறமையினால் மறுபிறப்பில் நம்பிக்கை யில்லாத புத்தனைக்கூட புனர்ஜென்மம் எடுக்கும் படியாகக் கம்பதாசன் செய்திருப்பது விசித்திர மான வேலைப்பாடாகும்.”

நாடக நடிகராகத் தம் கலைப் பயணத்தைத் தொடங்கிய கம்பதாசன் தொடர்ந்து தமது இனிமை யான குரல் வளத்தால் பின்பாட்டுக்காரராகவும் ஆர்மோனியம் வாசிக்கும் பக்கவாத்தியக்காரராகவும், நாடகங்களுக்குப் பாட்டெழுதும் கவிஞராகவும் வளர்ந்தார்.  இறுதியில் திரையுலகம் அவரை இரு கரம் கூப்பி வரவேற்றது.  அகில இந்திய அளவில் புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர் ஆனார்.

1956ஆம் ஆண்டு வெளிவந்த ‘நன்னம்பிக்கை’ என்னும் திரைப்படத்திற்குத் தொழிலாளியைக் கடவுளுக்கு ஒப்பிட்டு ஒரு பாடல்:

“சூரியனும் ஒரு தொழிலாளி - தினம்

சுற்றும் உலகும் தொழிலாளி

வாரி அலையும் தொழிலாளி - எதிர்

வந்திடும் காற்றும் தொழிலாளி

மாரி நதியும் தொழிலாளி - இருள்

மலரும் உடுவும் தொழிலாளி

பாரை நடத்தும் தொழிலாளி - இன்

பரமனடா கலை பிரமனடா”

“1961 ஆம் ஆண்டு ‘அக்பர்’ திரைப்படத்திற்கு இவர் இயற்றிய பாடல் புகழ் பெற்றது.  ‘கனவு கண்ட காதல்’ பாட்டிற்கு அவை ஒப்பாக முடியாது” என்று சிலோன் விஜயேந்திரன் கூறுகிறார்.

‘கனவு கண்ட காதல் கண்ணீராச்சே!

நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே!

மழை சூழலாச்சே!’              (கனவு)

காதலரின் பிரிவுத் துயரத்தை இதைவிடச் சிறப்பாக யாரால் கூற இயலும்? திரைப்படத்துக்கு மட்டுமல்ல, அவரது காதல் தோல்விக்கும் பொருத்த மானது.  இந்தப் பாடல் அடிகள் திரும்பத் திரும்ப வந்து இதயத்தின் துயரத்தை மிகுதிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

அகப்பாடல்கள் மட்டுமல்லாமல், சமுதாயப் பாடல்கள், இறையுணர்வுப் பாடல்கள் என எல்லாவற்றிலும் அவர் முத்திரை பதித்தார்.  1948ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஞானசௌந்தரி’ படத்தில் இவர் எழுதிய மேரி மாதாப் பாடல் கேட்டவர் செவிகளில் இன்னும் ஒலித்துக் கொண்டே யிருக்கிறது.

“அருள்தாரும் தேவமாதாவே!

ஆதியே! இன்ப ஜோதியே!”

என்னும் இந்தப் பாடலை இப்போது கேட்டாலும் ஆனந்தக் கண்ணீர் சொரிவர்.

“கம்பதாசன் இக்கால யுவ எழுத்தாளர், கலை வல்லார், ஆவேசத் துடிப்புடன் புதுவாக்குத்

தேடி, புதிய சாதனை வேண்டி நிற்கிறார்.  காவிய தெய்வத்தின் ஆபூர்வ வார்ப்படத்திலே பழைய ரத்தம் பாய்ந்திருந்தாலும் புதுக்குரலின் தெளிந்த தொனிப்பு கேட்கிறது” என்று கம்பதாசனின் பாட்டுத் திறனைப் பற்றிய கவிஞர் ஹரிந்திரநாத் சட்டோபாத்தியாயா குறிப்பிட்டுள்ளார். இவர் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரர்.  இவரே இந்தித் திரைப்பட இசையமைப்பாளர் நௌஷாத்திடம் கம்பதாசனை அறிமுகம் செய்து வைத்தவர்.

இவரது தந்தை சுப்பராயர் புதுச்சேரியில் உள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர்.  இவரது தாயார் பாலாம்பாள் திண்டிவனம் அருகேயுள்ள உலகாபுரம் என்னும் ஊரினர்.  அதன் காரணமாக கம்பதாசன் தம் தாயாரின் ஊரில் பிறந்தார்.  இளமையிலேயே சென்னைக்குக் குடியேறினார்.

இவரது இயற்பெயர் அப்பாவு, பள்ளிப் படிப்பில் நாட்டம் கொள்ளாமல் நாடகக் குழுக் களுக்குச் சென்று விடுவார்.  இனிமையான குரல் வளத்தினால் பாடகராகவும், நடிகராகவும் நாடகங் களில் புகழ்பெறத் தொடங்கினார்.  நடிப்புத் துறையில் இவர் பெயர் சி.எஸ்.இராஜப்பா.  இறுதியில் ‘கம்ப தாசன்” என்னும் மாபெரும் மக்கள் கவிஞராக மாறினார்.

கம்பதாசன் அந்த நாட்களில் அகில இந்தி யாவும் அறியப்பட்ட தமிழ்க் கவிஞராக, பாடலாசிரி யராகத் திகழ்ந்தார்.  கவியரசர் கண்ணதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய வர்களுக்கு இவரே முன்னோடியாக விளங்கினார்.  சிறந்த கவிஞரான அவரை தமிழர்கள் நன்கு அறிந்து பாராட்டவில்லை என்பது மிகப் பெரிய சோகம்.

இவர் சமதருமக் கவிஞராக விளங்கியதால் திரைப்பாடல்கள் எழுதிக் குவித்த பணத்தைச் சேர்த்து வைக்காமல் செலவழித்தார்.  அதனால் இறுதியில் வறுமையில் வாடினார்.  காசநோயால் பீடிக்கப்பட்டுக் காலமானார்.

“மகாகவி பாரதிக்குப் பின் தமிழகத்தில் தோன்றி கவிதையை வளம் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள் கம்பதாசன் குறிப்பிடத் தகுந்தவர்.  எனினும் அவர் வறுமையின் கோரப் பிடியில் சிக்கிச் சிரமப்பட்டு மரணம் எய்தியது வாழ்க்கையின் விசித்திர முரண்பாடுகளில் ஒன்றாகும்” என்று ஆய்வாளர் சிலோன் விஜயேந்திரன் கூறி யிருப்பது தமிழுலகின் சிந்தனைக்கு உரியது.  செயலுக்கு வருவது எப்போது?

கம்பதாசனின் படைப்புகள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.  அப்போது தெரியும் இவன் கம்பதாசனா, தமிழ்நாட்டின் காளிதாசனா என்பது.

கம்பதாசன் படைப்பாளுமை

இரா.சம்பத்

வெளியீடு : சாகித்திய அகாதெமி,

குணா பில்டிங்ஸ்

443, அண்ணாசாலை

தேனாம்பேட்டை

சென்னை - 600 018

விலை : ` 335/-

Pin It