மண்ணில் துளிர்க்கும் ஒவ்வொரு உயிரியும் தன்னை நிலைநிறுத்தப் போராடுகின்றது. தன்னோடு தான் சார்ந்தக் குழுவையும் காத்தலால் மனிதன் பிற உயிரினின்றும் வேறுபடுகின்றான். சமூக உருவாக்கத்தில் எவ்வளவுப் பங்கோ, அவ்வளவுக்கு சமூகச் சிதைவிலும் மனிதனுக்குப் பங்கிருக்கின்றது. உடைமை சார்ந்தும், உரிமை சார்ந்தும செயற்கையான வக்கிரக் கோடுகளால் சமூகத்தைக் கூறு போட்டவனும் மனிதன்தான். இன்று தன்நலன் மட்டுமே குறியாகப்போனது. பிழைப்பே பெரும்பாடாகிப்போனது.

வாழ்தல் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

ஒட்டுமொத்தச் சமூகமும் தன் கேடுகளைக் களைய அணிதிரளத்தான் வேண்டும். கூட்டுச் சிந்தனை, கூட்டுச் செயல்பாடு என்பதுதான் விடுதலைக்கானச் சாளரம். எனினும் வரலாற்றில் தனிமனித ஆளுமைகளின் பங்களிப்பு கணிசமானது. சமூக இயக்கங்களை முன் செலுத்துவதில் தனிமனிதர்களின் குறுக்கீட்டை மறுக்க முடியாது.

இன்று சமூக இயக்கங்கள், போராட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. பிழைப்புவாதம் மேலோங்கிவிட்டது.

குடும்பம் முதல் அரசு வரை தனிநல நாட்டம் கோலோச்சுகின்றது. ஒன்றுபடுதல், இயக்கமாதல், போராடுதல்... என்பவை ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலைமை. உலகமயத்தின் கொடை முகமற்ற, இதயமற்ற மனிதன் என்றாகிவிட்டது. நம்பிக்கைகள் தகர்ந்துவிட்டச் சமூகத்தில் பின்பற்றத்தக்க முன்மாதிரிகளை முன்னிறுத்திச் செயல்புரிய வேண்டிய அவசியம் இயல்பாகவே எழுகின்றது.

இந்தியத் தன்மைக்கு ஒரு வாழும் உதாரணம் கொடிக்கால் செல்லப்பா அவர்கள். இந்தியாவின் தென்கடைக்கோடியில், இந்திய விடுதலைப்போராட்டத்தின் மையப்பகுதியில் (1933) பிறந்தார்.

விடுதலைக்குப் பின்னான மொழிவழி மாநில உருவாக்கத்தின் போது நிகழ்ந்த கேடுகளை எதிர்த்து எல்லைப்போராட்டத்தில் ஈடுபட்டவர்.

வர்க்க நிலையில் மனிதப் பாகுபாட்டைக் கண்டு, உள்ளம் வெதும்பி இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு குமரி மாவட்டச் செயலாளர் அளவுக்கு அதில் தீவிரமாகச் செயல்பட்டவர். சமூக நிலையில் ஒடுக்கப்பட்ட சாதி அமைப்பின் கோரமுகத்தை அனுபவித்தறிந்து சாதியைத் துரத்தும் வழியாக, இந்துமதத்தினைத் துறந்து இஸ்லாம் சமயத்தை ஏற்று சேக் அப்துல்லாவாக தன் அடையாளத்தை மாற்றிக் கொண்டவர்.

சாதி ஒழிப்பு இயக்கங்களில் முன்னின்றவர். பல போராட்டக்களங்கள் கண்டவர். பலமுறை சிறை பட்டவர். சிறைகளில் கற்றவர். தமிழகத் தலித் அரசியல் எழுச்சியில் பங்காற்றியவர். சமய நல்லிணக்க அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டவர். மத்திய, மாநில அரசுகளின் பல குழுக்களிலே பணியாற்றியவர். மனித நடத்தை உருவாக்கத்தில் இலக்கியத்தின் செல்வாக்கை உணர்ந்தவர். இலக்கியத்தோடும், எழுத்தாளர்களோடும் இனிய உறவினைப் பேணுபவர். இதழ்கள் பலவற்றை நடத்தியவர். நூல்களைப் படைத்தவர். மனித உறவு களைப் பேணி மனிதநேயம் போற்றும் பண்பாளர். இவை அனைத்துமான அற்புத ஆளுமை திரு. கொடிக்கால்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு கொடிக்கால் போன்றவர்களின் வாழ்வும் பணியும் பற்றி எடுத்துச் சொல்வது அவசியக் கடமை. தமிழ்ப்படைப்பாளிகள் பலரின் பார்வையில் கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் பற்றிய நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. ஒரு தலித்தாக, இஸ்லாமியராக, கம்யூனிஸ்டாக அடையாளப் படும் கொடிக்கால், மனிதராக வாழ்ந்து சிறப்பதை இந்நூலின் கருத்துக்கள் உணர்த்துகின்றன.

கொடிக்கால் எனும் குணக்குன்றை கீழப்பாவூர் ஆ.சண்முகையா இப்படி அறிமுகப்படுத்துகிறார்:

“முகத்தில் எப்பொழுதும் புன்னகை. எளிமையான தோற்றம். எப்பொழுதும் சுறுசுறுப்பு; கடல் மடை திறந்த வெள்ளமென சொற்பெருக்கு; எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அன்பு; குழந்தை மனம்; பன்மொழி அறிவு; கூர்மையான ஞாபகசக்தி; பணிவுடன் கூடிய இன்சொல்; இப்படி ‘குணமென்னும் குன்றேறி நிற்பவர்’ தான் ‘கொடிக்கால்’ சேக் அப்துல்லாஹ் ஐயா அவர்கள்.”

கொடிக்காலின் பன்முக ஆற்றலை விளக்கும் எழுத்தாளர் பொன்னீலன் ஒரு நிகழ்வைத் தன் பதிவில் கூறுகின்றார். “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராகக் கொடிக்கால் இருந்த நேரம். நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் காச நோய் மருத்துவமனை அன்று தென் தமிழ்நாட்டில் ஆக முக்கியமான காசநோய் மருத்துவமனை. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தோழர்கள் கட்சி அலுவலகத்துக்கு அழைத்துவந்து, மருத்துவமனையில் சேர்க்க மாவட்டச் செயலாளரின் உதவியை ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து காசநோய் முற்றிய ஒரு பெண்ணை ஒரு நாள் மாலையில் ஒருவர் அழைத்து வந்தார்.

நேரமாகிவிட்டதால் மறுநாள் அப்பெண்ணை ஆசாரிப்பள்ளம் அழைத்துச் செல்லலாம் என்ற முடிவில், உடனே நாகர்கோவில் அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்த்தார் கொடிக்கால். பணம் புரட்டிவிட்டு வருவதாகச் சொல்லி, அந்தப் பெண்ணை அழைத்து வந்த நபர் இரவே ஸ்ரீவில்லிப்புத்தூருக்குப் புறப்பட்டு விட்டார்.

மறுநாள் காலையில் அந்தப் பெண்ணைத் தேடிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு கொடிக்கால் சென்றபோது, அந்தப் பெண் ஏற்கனவே மரணமடைந்து, பிண அறையில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ராஜ பாளையத்தோடு தொடர்பு கொண்டபோது, பதில் சொல்ல ஆளில்லை என்பதை அறிய முடிந்தது. பிணத்தைப் புதைக்க வேண்டும். அன்று கட்சியின் மலிவான சவப்பெட்டி ஒன்றை வாங்கிவந்து, அதில் பிணத்தை வைத்து நீலகண்டனும் செல்லப்பாவும் முன்னும் பின்னுமாக தோள்போட்டுப் பழையாற்றின் கரைக்கு எடுத்துச் சென்றார்கள்.

மாவட்டக்குழுவில் இருந்த நீலகண்டன் என்ற ஒரு தோழரை அழைத்தார் கொடிக்கால். இருவரிடமும் அந்த நேரம் பணம் பெரிதாக ஒன்றும் இல்லை. பணம் புரட்டுகின்ற சூழலும் அவர்களுக்கு அப்போது இல்லை. மலிவான சவப்பெட்டி ஒன்றை வாங்கிவந்து, அதில் பிணத்தை வைத்து நீலகண்டனும் செல்லப்பாவும் முன்னும் பின்னுமாக தோள்போட்டுப் பழையாற்றின் கரைக்கு எடுத்துச் சென்றார்கள்.

பாதி வழியில் சவப்பெட்டியின் பலகைகள் நீங்கிக் கொள்ள, பிணம் கீழே விழும் நிலையிலானது.

பெட்டியைக் கீழே வைத்து, கொச்சக்கயிறு வாங்கி அதைச் சுற்றிக்கட்டி, இருவரும் மீண்டும் தோள் போட்டு இடுகாட்டுக்குக் கொண்டுபோனார்கள். யாரும், யாரும்? ஒரு கட்சியின் மாவட்டச் செயலாளரும், நாகர்கோவில் முனிசிபல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு மூத்த பணியாளரும். இதை நினைக்கும்போது என் மனம் அவர்கள் இருவரின் காலிலும் விழுந்து வணங்குகிறது. எத்தகைய மிகப்பெரிய தொண்டு?

எத்தனை பேர் இதை செய்யத் துணிவார்கள்?

சுடுகாட்டுக்குப் போனால், அங்கே உள்ளவர்கள் ஒவ்வொருவரும் “இது எங்கள் சாதிகளுக்கு உள்ள இடம், நீங்கள் இங்கே புதைக்கக்கூடாது” என்று சொல்லித் துரத்தினார்கள். வேறு வழியின்றி, ஆற்றின் கரைச் சாய்வுப் பகுதியை ஒரு மண்வெட்டியால் குடைந்து பிணத்தை உள்ளே தள்ளி மண்ணால் மூடி நல்லடக்கம் செய்தார்கள் தோழர்கள். கொடிக்காலின் உயர்வைப் புரிந்துகொள்ள இந்த ஒரு சம்பவமே போதும்.

இப்படி கொடிக்கால் வாழ்வில் பற்பல நிகழ்வுகள். அவரோடு பழகிய ஒவ்வொருவருக்கும் அவரைப்பற்றிச் சொல்ல ஏராளம் செய்திகள்.

கொடிக்கால் ஒரு சமூகப் போராளியாக உருவானதன் பின்புலத்தை எழுத்தாளர் சுந்தரராமசாமி விரிவாக எழுதுகின்றார். அதில் கொடிக்காலின் தனித் தன்மைகளை அவர் சுட்டுகின்றார்.

“கொடிக்காலுக்குச் சில ஆற்றல்கள் அவருடைய வளர்ச்சிக்குச் சாதகமாக இருந்திருக்கின்றன. யாரைச் சந்தித்துப் பேசினாலும் தன்மீது அவர்களது நம்பிக்கையை அவரால் சம்பாதிக்கமுடியும். ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால் அதனை அவரால் வெற்றிகரமாக முடிக்கமுடியும். எந்த வழியாகச் சென்றால் காரியத்தை முடிக்கமுடியும் என்ற நடைமுறைச் சாமர்த்தியம் சார்ந்த யோசனைகள் கொண்டவர்தான் அவர். தனக்காகவும் தனது குடும்ப முன்னேற்றத்திற்காகவும் இத்திறன்களைப் பயன்படுத்தும் சுயநலம் அவரிடம் இருந்திருந்தால் அவர் தன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு வெற்றி கரமாக வாழ்ந்திருக்கமுடியும். ஆனால் அவர் அவ்வாறு எந்தக் காலத்திலும் சிந்திக்கவில்லை.”

மக்கள் இயக்கங்களில் அனைத்துப் பகுதி மக்களுக்காகவும் கொடிக்கால் செயல்பட்ட விதத்தை தோழர் ஆர்.நல்லகண்ணு பதிவு செய்துள்ளார். மலையாளக்கவிஞர் சங்கம்புழாவின் புகழ்பெற்ற‘வாழைக்குலை’ கவிதையை கொடிக்கால் கருத்தும், காட்சியுமாக விளக்குவதை இதில் கூறுகின்றார்.

கொடிக்காலின் ஆளுமை குறித்துப்பேசும் எழுத்தாளர் ஜெயமோகன், “கொடிக்கால் அன்றும் இன்றும் குமரி மாவட்டத்தின் பண்பாட்டில், அதன் ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தி. சில மனிதர்கள் தங்கள் குடும்பத்தைவிட்டு மேலெழுந்து ஒரு சமூகத்திற்கே தந்தையாகிறார்கள். அத்தகைய மூதாதையரால் வழிநடத்தப்படும் சமூகமே வாழும்.

குமரி மாவட்டத்தின் மூதாதையர் வரிசையில் இன்றிருக்கும் மாமனிதர் கொடிக்கால்,” என்று மதிப்பிடுவது மிகவும் பொருத்தமானது.

 கொடிக்காலுடனான தன் அனுபவங்களைச் சுவைபடச் சொல்லும் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவரை இப்படி அடையாளப்படுத்துகிறார்.

“1990களுக்குப் பிறகு, சுந்தரராமசாமி வீட்டில் கொடிக்கால் செல்லப்பாவைச் சந்தித்தபோது, சுந்தர ராமசாமி சொன்னார், “அவரிப்போ கொடிக்கால் செல்லப்பா இல்லே... கொடிக்கால் சேக் அப்துல்லா வாக்கும்” என்று. தனது வழக்கமான புன்னகை மாறாத முகத்துடன் தலையசைத்தார். மைனா என்றாலும் நாகணவாய்ப்புள் என்றாலும் பறவை ஒன்றுதானே? இன்றென் ஆழ்மனத்தில் கொடிக்கால் என்றாலும் கொடிக்கால் சேக்அப்துல்லா என்றாலும் அன்பு எவ்விதத்திலும் பங்கப்பட்டதில்லை. ஏனெனில் அவரது பண்பு நலன்கள் அவ்விதம். எந்த அன்பையும் அது பங்கப்பட அனுமதிக்காது.”

முனைவர் அ. கா. பெருமாள், கொடிக்கால் நடத்திய ‘புதுமைத்தாய்’, ‘உங்கள் தூதுவன்’ ஆகிய இதழ்கள் பற்றியும், அவற்றின் இதழியல், வரலாற்றியல் முக்கியத்துவம் பற்றியும் எழுதி உள்ளார்.

பத்திரிகையாளர் சமஸ், ‘ஒரு கதை சொல்லி ஒரு கதை கேட்டி’ என கொடிக்காலுடனான தனது சந்திப்புகளை அழகாக எழுதி உள்ளார்.

பத்திரிகையாளர் ‘காலச்சுவடு’ கண்ணன், கொடிக்கால் குறித்த தன் மதிப்பீட்டில், “அவரது கரிசனம் ஒட்டுமொத்தச் சமூகம் பற்றியது. அதில் தலித்துகள் முஸ்லிம்கள் படும் அல்லல்களைப் பற்றிய கூடுதல் கவனம் உண்டு. ஆனால் சமூக விடுதலை என்பது பிரிக்க முடியாதது என்பது அனுபவத்தின் வழி அவர் அடைந்துள்ள விவேகம். எனவே தான் சமூக மாற்றத்திற்கான அவர் செயல்பாட்டில் சமூக வெறுப்புக்கு இடமில்லை.”

“புதியனவற்றை அறிவதில் தீராத ஆர்வம் அவரிடம் தினமும் வெளிப்படுகிறது. வாழ்க்கையைக் காண பல கோணங்கள் உண்டு என்பதில் வலுவான நம்பிக்கை கொண்டவர். அதில் தனக்கும் புலப்படாத கோணங்களை பிறர் வழி அறிவதில் ஆர்வமுடையவர்.

துடிப்பான இளைஞர்களைக் காண்கையில் அவர்களின் உற்சாகம் அவரையும் தொற்றிக்கொள்கிறது. தலைமுறைகளின் இடைவெளிகளைக் கடக்கும் உற்சாகம் அது,” என எழுதியிருப்பது கொடிக்கால் குறித்த யதார்த்தப்பதிவு.

பண்டித ரத்னா என்.ஏ.வேலாயுதம், பி.டி.ஐ பத்திரிகையாளர் டி.ரெங்கநாதன் ஆகியோர் கொடிக் காலின் பன்முகத்தன்மையைத் தங்கள் கட்டுரைகளில் சுட்டியுள்ளனர்.

பேராசிரியர் அன்புச் செல்வம், எழுதியுள்ள ஷெட்யூல்டு இனவிடுதலை இயக்கப்போராளி எனும் கட்டுரையில், தமிழ்நாட்டு தலித் தலைவர்கள், இயக்கங்கள், அரசியல் முன்னெடுப்புகள், மாற்று சக்தியாக உருவாதல், தேர்தல் அரசியல், நிறைகுறைகள், இவற்றில் கொடிக்காலின் தன்னலமற்றப் பங்களிப்பு ஆகியன பற்றி எழுதி உள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் விடுதலைக்குப்பின் உருவான தலித்திய அரசியல் குறித்த மிக அடிப்படையானத் தகவல்களை இக்கட்டுரை வழங்குகிறது. மதம் மாறினாலும் கூட கொடிக்கால் தலித் அமைப்பு சார்ந்தே அரசியலில் பயணித்ததையும் கவனப்படுத்துகிறது.

டாக்டர் எம்.சி.ராஜன், பொறியாளர் ப.சிவதாணு ஆகியோரின் எழுத்துரைகளும் கொடிக்காலின் சமூகச் செயற்பாட்டை விளங்கிக்கொள்ள உதவுகின்றன.

இந்து தமிழ் நாளிதழில் பத்திரிகையாளர் சமஸ் மேற்கொண்ட நேர்காணல் கொடிக்காலை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறது. டாக்டர் வெ. ஜீவானந்தத்தின் நேர்காணலில் கொடிக்காலின் இன்றைய அரசியல் குறித்த விமரிசனம் தெரிகிறது. கவிஞர் அமீர் அப்பாஸ் கொடிக்காலை “ஆயிரம் சிறகுகளின் ஒற்றை வானம்” என்பது அற்புதமாக அவருக்குப் பொருந்துகிறது.

“அறுபதாண்டு காலம் பொதுவாழ்வு, எவரிடமும் பகையின்றி, காழ்ப்பின்றி, வஞ்சனையின்றி, சூதின்றி, ஒருவேளை கன்னியாகுமரி மாவட்டம் அல்லாத பிற வட மாவட்டங்களில் அவரது பொதுவாழ்வுச் செயல்பாடுகள் இருந்திருந்தால், தமிழக அரசியலில், சமூகத் தளங்களில் அவர் இடம் வேறாக இருந்திருக்கக் கூடும்,” என்ற தமிழின் மூத்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் ஆதங்கமும் -“சராசரி மதிப்பீடுகள் வாழ்க்கையைப் பரிகசித்து என் ஓட்டத்தை அழுத்தும் போதெல்லாம் கொடிக் காலைப் போன்ற பெரியவர்களின் வாழ்க்கையும் வார்த்தைகளுமே எனக்கான உந்துசக்தி.

என் வாழ்வில் எனக்குக்கிடைத்த மிக அற்புதமான பரிசுகளில், உறவுகளில், மனிதர்களில் ஒருவர் கொடிக்கால்” என்ற பத்திரிகையாளர், இளைய நம்பிக்கை சமஸின் வாக்கு மூலமும் கொடிக்காலின் உயரத்தையும், ஆழத்தையும் உணர்த்தவல்லவை.

சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகச் சமரச மின்றிப் போராட, சிதைவுபடும் மனிதத்தை மீட்டிட, ஜனநாயகப் பண்பு கொண்ட சமூகத்தை உருவாக்கிட கொடிக்காலைக் கற்பதும், பின்பற்றுவதும் அவசியம். ஒரு தலித்தாக, ஒரு இஸ்லாமியராக, ஒரு கம்யூனிஸ்டாக வாழ்வதின் வலி அறியவும் கொடிக்கால் எனும் மனிதர் என்றென்றும் பயன் தருவார்!

கொடிக்கால் சேக் அப்துல்லாஹ் / தமிழ்ப் படைப்பாளிகளின் பார்வையில் / உங்கள் தூதுவன் / கன்னியாகுமரி.

Pin It