படித்துப் பாருங்களேன்...

சோழ மண்டலக் கடற்கரை முஸ்லிம்களின் கடல்சார் வரலாறு

(Dr. J. Raja Mohamed : (2004) : Maritime History of the Coromandal Muslims: Government Museum, Chennai).

தமிழ்ச் சமூக வரலாற்று வரைவில் உரிய இடத்தைப் பெறாத ஒரு சமூகம் இஸ்லாமிய சமூக மாகும். இச்சமூகம் குறித்து நமது கல்விப்புலம் சார்ந்த வரலாற்றுக் கல்வியில் முறையான பதிவு இல்லை. இஸ்லாமியர்களும் இது குறித்துக் கவலைப் படுவதில்லை. செத்தும் கொடுத்த சீதக்காதி, உமறுப் புலவர், காயிதே மில்லத், அப்துல்கலாம் என ஒரு சில பெயர்களுக்குள் தமிழக இஸ்லாமியர் குறித்த வரலாற்றை நாம் அடக்கி விட்டோம்.

raja_mohamad_450ஆனால் தமிழக முஸ்லிம்களுக்கு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் பிற்காலச் சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் இஸ்லாமியர் குறித்த பதிவுகள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. சோனகர் என்ற பெயரில் இவர்கள் அழைக்கப் பட்டுள்ளனர்.

தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் திரு விளக்கேற்ற சோனகன் சாவுந் பரஞ்சோதி என்பவன் காசு வழங்கியுள்ளதாக சோழர்காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அரேபியர்களைச் சோனகர் என்றழைத்ததால் அவர்களிடம் வாங்கப்பட்ட வரியை ‘சோனகவரி’ என்று முதல் இராசராசனின் கல்வெட்டு குறிப்பிடுகிறது.

பதினொன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இராசேந்திர சோழனின் ஆனைமங்கலச் செப் பேட்டில் ‘இவ்வூர் கரணத்தான் மத்தியஸ்தன் துருக்கன் அகமுதனேன் இவையென்னெழுத்து’ என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. அரசு அதி காரியாக இஸ்லாமியர் ஒருவர் விளங்கியுள்ளதை இத்தொடர் உணர்த்துகிறது.

இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனது (1238 - 1251) திருப்புல்லாணிக் கல்வெட்டொன்று வரி விலக்குடன் கூடிய நிலத்தைப் பள்ளி வாசலுக்கு வழங்கியதை ‘சோனப் பள்ளிச் சந்தி இறையிலி’ என்று குறிப்பிடுகிறது. குலசேகரப் பாண்டிய மன்னனின் அமைச்சர்களுள் ஒருவரது பெயர் ‘ஜமாலுதின்’ என்பதாகும். அப்துல் ரஹ்மான் என்ற அரேபியர் சுங்க அமைச்சராகப் பாண்டிய மன்னனிடம் பணி புரிந்ததாகவும், முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்துக் கல்வெட்டில் ‘துலுக்கராயங் குடி’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் கே.கே. பிள்ளை குறிப்பிடுகிறார்.

சோழ மண்டலக் கடற்கரையில் இஸ்லாமியர் களின் கடல்சார் வரலாற்றை எழுதியுள்ள நூலாசிரியர் ராஜா முகம்மது புதுக்கோட்டை அரசு அருங்காட்சி யகத்தின் காப்பாளராகவும், சென்னை அரசு அருங் காட்சியகத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையில் அவர் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வே, மேற்கூறிய தலைப்பில் நூல் வடிவம் பெற்றுள்ளது.

சமயத்தை மையமாகக் கொண்டே இஸ்லாமியர் குறித்த ஆய்வுகள் பெரும்பாலும் நிகழ்ந்துள்ள தாகவும், அவர்களின் சமூக பொருளாதார நட வடிக்கைகளை ஒரு சில ஆய்வாளர்கள் மட்டுமே நிகழ்த்தியுள்ளதாகவும் நூலாசிரியர் நூலின் அறிமுக உரையில் குறிப்பிட்டுள்ளார். இது உண்மைதான்.

தமிழ்நாட்டு இஸ்லாமியர்களின் வாணிபச் செயல்பாடுகளையும் சமூகப் பழக்கவழக்கங்களையும் குறித்து ஒரு சில ஆய்வேடுகள் மேலோட்டமாகப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடும் ஆசிரியர் அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவின்படி, அப்துல்ரகிமின் நாகப்பட்டினம் குறித்த எம்.லிட். பட்ட ஆய்வேடு, அவரது முனைவர் பட்ட ஆய்வேடான ‘தமிழ்நாட்டு முஸ்லிம்கள்’ 1800-1900, ஜெயராஜனது ‘அதிராம்பட்டினத்தின் மரைக்காயர்கள்’ என்ற தலைப்பிலான எம்.ஃபில். பட்ட ஆய்வேடு ஆகியன தமிழக முஸ்லிம்கள் குறித்த வரலாற்றாய்வுகளாகும்.

எட்டாவது நூற்றாண்டிலிருந்து அரேபிய முஸ்லிம்கள் சோழமண்டலக் கடற்கரையிலுள்ள பரங்கிப்பேட்டை, நாகப்பட்டினம், நாகூர், காரைக் கால் அதிராம்பட்டினம், மண்டபம், வேதாளை, கீழக்கரை, காயல்பட்டினம் ஆகிய கடற்கரை ஊர் களில் குடியேறி இலங்கை, மலாக்கா, மற்றும் இதர தென்கிழக்காசிய நாடுகளின் வாணிபத்திற்கான பாதைகளாக அவ்வூர்களைப் பயன்படுத்தி வந்து உள்ளனர். இவ்வாறு குடியேறிய அரேபிய முஸ்லிம்கள் இப்பகுதிப் பெண்களை மணந்து கொண்டு ஓர் இஸ்லாமியப் பரம்பரையை உருவாக்கினர். இவர்களின் வழித்தோன்றல்கள் கடலோடிகளாகவும், கப்பல் உரிமையாளராகவும், வணிகர்களாகவும் திகழ்ந்தனர். இவர்களது முயற்சி யாலும், சுஃபி மார்க்கத்தாரின் தாக்கத்தாலும், தமிழர்கள் பலர் முஸ்லிம்களாக மதம் மாறினர். இவ்வாறு ஓர் இஸ்லாமிய சமூகம் தமிழ்நாட்டில் உருப்பெற்றது.

இம்மக்கள் உள்நாட்டு ஆட்சியாளர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்ததோடு கடலோடிகளாகவும், நிர்வாகிகளாகவும், கடற்கரையின் பாதுகாவலர் களாகவும் விளங்கினர். பல தென்கிழக்காசிய நாடுகளில் பண்டக சாலைகளை நிறுவியிருந்தனர்.

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் கால் கொண்ட போர்ச்சுக்கீஸ் காலனியமும், அதன் தொடர்ச்சியாக வந்த டச்சுக்காலனியம், பிரிட்டிஷ் காலனியம் ஆகியனவும் இவர்களின் கடல் வாணி பத்தைக் கட்டுப்படுத்தி இவர்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளின. தங்களின் வாணிபச் செல் வாக்கை ஆங்கிலேயர்களிடம் இழந்த இவர்கள், இலங்கை மற்றும் சில தென்கிழக்காசிய நாடுகளுக்கு வணிகர்களாகவும் தொழிலாளிகளாகவும் இடம் பெயர்ந்தனர். அத்துடன் தமிழ்நாட்டின் உள்நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று மொத்த வியாபாரிகளாகவும், சில்லறை வியாபாரிகளாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர்.

இச்சமூகம் குறித்த தமது ஆய்வின் நோக்க மாக (1) சோழ மண்டலக் கடற்கரை முஸ்லிம்களின் தொன்மை, (2) கடல்சார் நடவடிக்கைகளில் அவர் களது முக்கிய பங்களிப்பு மற்றும் அவர்களது பொருளியல் வாழ்க்கை, (3) அவர்களது சமூக அமைப்பு, விழாக்கள், பழக்க வழக்கங்கள் ஆகியன வற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரை ஊர்களில் வாழ்ந்த மரைக்காயர், லப்பை என்ற இரு முஸ்லிம் பிரிவினரின் வாணிபச் செயல்பாடு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்கள் ஆகியன குறித்தும் இந்நூல் ஆராய்கிறது.

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காலத்திலும் (1750 - 1900), அதற்கு முன்பும் நிலவிய அரசியல் சூழ்நிலையை ஆசிரியர் ஆய்வு செய்துள்ளார்.

அடுத்து தென்னிந்தியாவுடனான அரபியர் களின் தொடர்பு, இஸ்லாத்தின் பரவல், இஸ்லாமிய சமூகம் கடற்கரைப் பகுதிகளில் உருவானமை ஆகியன குறித்த செய்திகள் கூறப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து சோழ மண்டலக் கடற் கரைப் பகுதியில் செயல்பட்ட ஐரோப்பிய நிறுவனங்கள், இஸ்லாமிய வணிகச் சமூகத்தில் அவை ஏற்படுத்திய தாக்கம் ஆகியன குறித்த ஆய்வை ஆசிரியர் நிகழ்த்தியுள்ளார். கடல் வாணிபம் மேற்கொண்டு வளம் பெற்றிருந்த ஒரு சமூகத்தை, போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் என ஒவ்வொரு ஐரோப்பியக் காலனியவாதிகளும் தம்தம் பங்குக்கு எவ்வாறு சிதைத்தனர் என்பதை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

கப்பல் உரிமையாளர்கள், கடலோடிகள், ஏற்றுமதி இறக்குமதி வணிகர்கள், முத்து வணிகர்கள், முத்து, சங்கு குளிப்போர், படகு கட்டுபவர்கள், மீன் பிடிப்பவர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், கடல்சார் பொருள்களை விற்கும் வணிகர்கள் என முஸ்லிம்கள் பொருளாதார நிலையில் உயர்வுற்றிருந்தனர். அரேபிய முஸ்லிம்களை ஐரோப்பியர்கள் ‘மூர்’ என்று அழைத்துவந்தனர். இதனடிப்படையில் முஸ்லிம்கள் செல்வாக்குப் பெற்றிருந்த சோழ மண்டலக் கடற்கரைத் துறைமுகங்களை ‘மூர் துறைமுகங்கள்’ என்றே குறிப்பிட்டனர். சூசான் பெய்லி என்ற நம் காலத்து ஆய்வாளர் மரைக்காயர் துறைமுகம் என்று குறிப்பிடுகிறார்.

அரேபியாவிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்வது இவர்களது முக்கிய வியாபார நடவடிக் கையாக இருந்தது.

உப்பு உற்பத்தியிலும், முத்துக் குளித்தலிலும், ஆங்கில ஆட்சியில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப் பட்டனர். இதனால் கப்பல் பணியாளர்களாக இருந்தவர்களும், முத்து மற்றும் சங்கு குளித்தலில் ஈடுபட்டிருந்தவர்களும் மீன் பிடி தொழிலுக்கு வர நேரிட்டது.

இவ்வாறு கடற்கரைப் பகுதி முஸ்லிம்களின் பொருளியல் வாழ்வையும், காலனியவாதிகளால் அவர்களின் பொருளியல் வாழ்க்கை பாதிப்பிற் குள்ளானதையும் விரிவாக எழுதியுள்ளார்.

இச்செய்திகள் மட்டுமின்றி இஸ்லாமியரின் சமூக வாழ்க்கை குறித்த பல நுட்பமான செய்தி களும் நூலில் இடம்பெற்றுள்ளன. சோனகர், துலுக்கர், மரைக்காயர், ராவுத்தர், லப்பை என இஸ்லாமிய சமூகத்தின் உட்பிரிவுகளை விளக்கியுள்ளார். மேலும் தமிழ் நாட்டிலிருந்து சென்ற முஸ்லிம்கள் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சோழியர் என்றழைக்கப் பட்டதைக் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரிலும், பர்மாவிலும், சோழியர் தெரு என்ற பெயரால் தெருக்கள் இருப்பதையும், சோழியர் முஸ்லிம் சங்கம் என்ற அமைப்பு பர்மா, மலேயா, சிங்கப்பூர் நாடுகளில் இருப்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டி யுள்ளார். கீழக்கரையைச் சேர்ந்த முஸ்லிம் வணிகர்கள் கல்கத்தாவில் கட்டியுள்ள பள்ளிவாசல், சோழிய மசூதி என்றழைக்கப்படுவதாகவும் ஆசிரியர் குறிப் பிட்டுள்ளார்.

பிற்காலச் சோழர் காலத்தில் வணிகர்கள் குழுக்களாக இயங்கியுள்ளனர். இக்குழுக்கள் நானாதேசிகள், மணிக்கிராமத்தார், நகரத்தார் எனப் பல்வேறு பெயர்களைக் கொண்டிருந்தன. இப்பெயர்களில் ஒன்று ‘அஞ்சுவண்ணம்’ என்ப தாகும். பர்னால் என்ற அறிஞர் ‘அஞ்சுவண்ணம்’ என்ற சொல் யூதர்கள் அல்லது கிறித்தவர்களைக் கொண்ட குழு என்கிறார். இந்நூலாசிரியர் இக் கூற்றை மறுத்துள்ளார். பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பல்சந்த மாலை’ என்ற சிற்றிலக்கியம், அஞ்சுவண்ணம் என்று முஸ்லிம் வணிகக் குழுவைக் குறிப்பதைத் தம் மறுப்புக்குச் சான்றாகக் காட்டு கிறார். அத்துடன் தென்காசியிலுள்ள பள்ளிவாசல் ஒன்று அஞ்சுவண்ணம் பள்ளிவாசல் என்றழைக்கப் படுவதையும் குறிப்பிட்டுள்ளார்.

நூலாசிரியரின் இக்கருத்து ஏற்புடைத்தே. இஸ்லாமியர் வாழும் ஊர்களில் அஞ்சுவண்ணம் என்ற அடைமொழியுடன் கூடிய தெருக்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன் பட்டினம் என்ற கடற்கரையூரில் முஸ்லிம்கள் வாழும் ஒரு தெருவின் பெயர் அஞ்சு வண்ணத் தெருவாகும். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் முஸ்லிம்கள் வாழும் பகுதியிலுள்ள ஒரு தெருவின் பெயர் அஞ்சுவண்ணத் தெரு என்று அவ்வூரைச் சேர்ந்த ஆய்வாளர் ஹமிம் முஸ்தாபா உரை யாடலின் போது குறிப்பிட்டார்.

இந்நூலின் ஆறாவது இயல் ‘சோழ மண்டல முஸ்லிம்களின் கடல்சார் செயல்பாடுகள் (Martime Activities of the Coromandel Muslims) என்பதாகும். இது இந்நூலின் சிறப்பான பகுதியாகும். முஸ்லிம்கள் மேற்கொண்டிருந்த தொழில்கள், அதில் அவர்கள் பெற்றிருந்த தேர்ச்சி, அவர்களின் வீழ்ச்சி என்பன விரிவாக இவ்வியலில் இடம்பெற்றுள்ளன.

தம் காலத்திய அரசியல் நடவடிக்கைகளில் இருந்து இஸ்லாமியர்கள் விலகி நின்றதையும், ஆட்சி அதிகாரத்தின் மீது நாட்டமில்லாதிருந்த தையும் ஆசிரியர் குறிப்பிடுள்ளார் (பக் 235). தமிழ் முஸ்லிம் வணிகர்களின் வீழ்ச்சிக்கு இது ஓரளவு காரணமாயிருக்கலாம். ஆனால் இக்கூற்றையடுத்து தமிழக முஸ்லிம்கள், யுத்த முறை தொடர்பான நுணுக்கங்களை அறியாதவர்கள் என்றும் தம் கடல்சார்பான நடவடிக்கைகளைப் பாதுகாக்க கடலிலோ நிலத்திலோ எதிர்த்தாக்குதல் நிகழ்த்தாது மோதல்களைத் தவிர்த்தனர் என்றும் குறிப்பிடுவது ஆய்வுக்குரியது. கீழக்கரையைச் சேர்ந்த பெரிய தம்பி மரைக்காயர் என்பவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னனின் ஆதரவுடன் டச்சுக்காரர் களை எதிர்த்து ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்தியுள்ளார். அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த கடற்கரைப் பகுதிகளைச் சூறையாடி யுள்ளார். இது குறித்து ‘A Note on Periatham by Marikkayar 17th Century Commerical Magnate’ என்ற கட்டுரையில் இலங்கைப் பேராசிரியர் சின்னப்பன் அரசரத்தினம் விரிவாக எழுதியுள்ளார்.

ஆற்காடு நவாப் ஆட்சியைக் குறித்து எழுதும் போது, ஒரு நூற்றாண்டு முஸ்லிம் ஆட்சி முஸ்லிம் சமூகத்துக்குக் குறிப்பிட்டுச் சொல்லுமளவில் வளம் சேர்க்கவில்லை என்ற ஆசிரியரின் கணிப்பு பொருத்தமானதுதான்.

நூலின் மற்றொரு முக்கியமான பகுதியாக இஸ்லாமிய சமூகம் குறித்த இயல் அமைகிறது. இப்பகுதியில் இஸ்லாமியர்களின் உட்பிரிவுகளைக் குறித்து அறிமுகம் செய்யும் ஆசிரியர் சோழ மண்டல இஸ்லாமிய சமூகத்தில் சாதி அமைப்பு இருந்ததா? என்ற வினாவையெழுப்பி விடையளித்துள்ளார்.

முஸ்லிம்களிடம் நிலவும் சில உட்பிரிவுகளின் அடிப்படையில் வேறுபாடுகள் நிலவுகின்றன என்று கூறும் ஆசிரியர் இவற்றை சாதி வேறுபாடாகக் கொள்ள முடியாது என்கிறார். தெக்கானி முஸ்லிம்கள் மரைக்காயர்களையும், இதர தமிழ் பேசும் முஸ்லிம்களையும் தாழ்வாகக் கருதுகின்றனர். தம்மை முகலாய மற்றும் துருக்கி மரபினராகக் கூறிக் கொள்ளும் இப்பிரிவினர் மரைக்காயரை விட உயர்ந்தவர்களாகத் தம்மைக் கருதுகின்றனர். பொருளாதார அந்தஸ்தின் அடிப்படையில் வேறு பாடுகள் நிலவுகின்றன. தனித்தெருக்களில் வாழ் வதும், தனியான பள்ளி வாசல்களில் தொழுவதும் கூட உள்ளன என்று கூறும் ஆசிரியர் இவ்வேறு பாடுகளைச் சாதிய வேறுபாடாகக் கொள்ளக் கூடாதென்றும், முஸ்லிம்களிடம் தீண்டாமை யில்லையென்றும் இஸ்லாமிய சமூகம் சமத்துவச் சமூகம் என்றும் உறுதிபடக் கூறுகிறார் (பக் 264-265).

கவிஞர் இன்குலாப்பின் சில எழுத்துக்களும் கீரனூர் ஜாகீர்ராஜாவின் ‘மீன்காரத்தெரு’, ‘கருத்த லெப்பை’ ஆகிய நாவல்களும் அன்வர் பால சிங்கத்தின் ‘கருப்பாயி என்ற நூர்ஜான்’ என்ற நாவலும் சற்று வேறுபாடான சித்திரத்தை வழங்கு வதை இங்குக் குறிப்பிட வேண்டியுள்ளது.

தமிழ் இஸ்லாமியர்களின் சமூகப் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை வட்டச் சடங்குகள் குறித்து ஆசிரியர் கூறும் செய்திகள் இறுக்கமான பிற சமூகத் தினரால் கருதப்படும் இஸ்லாமிய சமூகத்தினை, அயற்பண்பாட்டினர் உணரச் செய் கின்றன.

தர்கா வழிபாடு குறித்து ஆசிரியர் விரிவாக எழுதியுள்ளார். தர்க்காக்கள் குறித்து அவருக்கு அடிப்படையில் ஈடுபாடில்லை என்பது புலப்படுகிறது. என்றாலும் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துவதில் தர்க்காக் களின் பங்களிப்பை அவர் ஏற்றுக் கொள்கிறார். தர்க்கா வழிபாட்டில் இடம்பெறும் சில நிகழ்வுகள் இந்துப் பண்பாட்டின் தாக்கத்திற்குட்பட்டவை என்று அவர் கருதுகிறார். இஸ்லாமியராக மதம் மாறும் முன்னர் தாம் கடைப்பிடித்து வந்த சில பழக்க வழக்கங்களை மாறுதலுடன் தமிழ் முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள் என்று கருதவும் இடமுள்ளது. சான்றாக, நாட்டார் தெய்வக் கோவில்களில் பயன்படுத்தப்படும் வேப்பிலைக்கு மாற்றாக மயிற்பீலி பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிடலாம். இதை நூலாசிரியரும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சூசான் பெய்லி என்ற ஐரோப்பியர், மயிற் பீலி பயன்படுத்தப்படுவதை சுப்பிரமணியரின் வாகனமான மயிலுடன் தொடர்புபடுத்திக் கூறுவது பொருத்தமாகப்படவில்லை. மயில் தோகையால் ஆசீர்வாதம் செய்யும் நடைமுறை சுப்பிரமணியர் கோவிலில் கிடையாது. சூசான் பெய்லியின் ஆய்வில் காணப்படும் செய்திகளை அப்படியே நம்பமுடியாது.

சான்றாக, திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகிலுள்ள ருக்மணியம்மாள்புரம் கிராமத்தில் உள்ள கான்சாகிப் தர்கா குறித்து அவர் எழுதியுள்ள செய்தியைக் குறிப்பிடலாம். மதுரையை ஆண்ட கம்மந்தான் கான்சாகிப் ஆங்கிலேயர்களால் கொலை செய்யப்பட்ட பின்னர் அவன் உடலைக் கூறு படுத்தி வெவ்வேறு இடங்களில் புதைத்தார்கள் என்பது வரலாறு. அவ்வாறு அவனது உடலின் ஒரு பகுதி புதைக்கப்பட்ட இடமே இத்தர்க்கா என்று அவர் எழுதியுள்ளார். ஆனால் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் வணிகர் ஒருவரை அடக்கம் செய்த இடமே தர்காவாக மாறியுள்ளது. கான்சாகிப் என்ற பெயர் ஒற்றுமையை வைத்தே மேற்கூறிய முடிவுக்கு சூசான் பெய்லி வந்துள்ளார்.

தமிழக முஸ்லிம்களிடையே வழங்கும் உறவுச் சொற்களில் காணப்படும் வேறுபாடுகளை அவர் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். சான்றாக, அப்பா என்ற உறவுச்சொல்லை மரைக்காயர்கள் ‘வாப்பா’ என்றும், லப்பை ராவுத்தர் பிரிவினர் ‘அத்தா’ என்றும் குறிப்பிடுகின்றனர். அம்மா என்ற உறவுச்சொல்லை மரைக்காயர்கள் ‘உம்மா’ என்று கூற லப்பை, ராவுத்தர் பிரிவினர் ‘அம்மா’ என்றே கூறுகின்றனர். அப்பாவின் அப்பாவை ‘முத்து வாப்பா’ என்று மரைக்காயர் களும் ‘அப்பா’ என்று லப்பை, ராவுத்தர்களும் குறிப் பிடுகின்றனர். போர்ச்சுக்கீசிய மொழிச் சொற்கள் தமிழ் இஸ்லாமியர்களின் பேச்சுமொழியில் இடம் பெற்றுள்ளதையும் ஆசிரியர் எடுத்துக் காட்டி யுள்ளார்.

தம்மதச் சார்பை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு சமயத்தினரும் தம் குழந்தைகளுக்குப் பெயரிடுவது பொதுவான மரபு. இதற்குத் தமிழ் நாட்டு இஸ்லாமியர்களும் விதிவிலக்கல்ல. ஆயினும் தம் சமய எல்லையைத் தாண்டி சின்னத்தம்பி, பெரியதம்பி, நல்லதம்பி என்ற பெயர்களையும், சமய எல்லைக்கு வெளியிலுள்ள பெயர்களையும் தம் சமயப் பெயர்களையும் இணைத்து அல்லா பிச்சை, குப்பைமுகமது, பக்கீர்வாப்பா, சீனியப்பா, என்ற பெயர்களையும் இடுவதை ஆசிரியர் குறிப் பிட்டு, சமய நல்லிணக்கத்தை இது வெளிப்படுத்துகிறது என்கிறார்.

இவ்வாறு கடல் வாணிபத்தை மேற்கொண்டு கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த ஒரு சமூகத்தின் வரலாற்றையும், வாழ்வியலையும் எளிய நடையில் இந்நூல் வெளிப்படுத்தியுள்ளது.

இலக்கியம், கல்வெட்டு, எழுத்தாவணங்கள், களஆய்வு ஆகியனவற்றின் துணையுடன் விரிவாக இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். இதுவரை அதிக அளவில் அறிமுகமாகாத ஓர் ஆய்வுக்களத்தைத் தேர்ந்தெடுத்துப் பல புதிய உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளார்.

Pin It