அனைத்துச் சிறுபத்திரிகைகளிலும், அவ்வப்போது பெரும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து இடம்பிடித்து, இன்றைக்கு ஒரு பெரும் இலக்கிய வடிவமாகவே மாறி விட்டது நேர்காணல்.

பத்திரிகையின் எல்லைகளுக்குட்பட்டு, சிறிதாகவோ - பெரிதாகவோ, மேலோட்டமாகவோ - விசாலமாகவோ தொடர்கிறது நேர்காணல்களின் உரையாடல் மொழி.

பின்நவீனத்துவம் பேசப்பட்ட பிறகான தமிழ் அறிவுச்சூழலில், தனிநபர் அபிப்பிராயமாக மட்டுமின்றி இலக்கிய ஆவணமாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது இத்துறை.

இலக்கிய / தத்துவ ஆர்வலன், தொடர் வாசிப்பாளன் என்கிற முறையில் காலச்சுவடில் வெளிவந்த பிரேம் - ரமேஷ் மற்றும் சேரன் நேர்காணல்கள் விசாலமும் நுட்பமுமாக வியப்பில் ஆழ்த்தியதிலிருந்து இன்னும் விடுபடவில்லை நான்.

இந்நிலையில், “காலத்தின் உரையாடல்” என்னும் தலைப்பில் பாவெல் சூரியனின் நேர்காணல் - தொகுப்பு என்னைப் புதிய வெளிச்சங்களுக்கு இட்டுச் செல்கிறது.

‘தமிழியல்’ என்னும் தலைப்பில் ‘சிந்துவெளியில் முந்துதமிழ்’ ஆய்வாளர் பூரணச்சந்திர ஜீவா, இசைத்தட்டு சேகரிப்பாளர் திருநின்றவூர் சந்தான கிருஷ்ணன்.

‘அரசியல்’ என்னும் பிரிவில், ‘மார்க்சியம் நேற்று - இன்று - நாளை’ நூலாசிரியர் இரா.ஜவஹர், நாகை திருவாரூர் மாவட்டங்களின் வெண்மணிக்காலக் களத்தலைவர்கள் ஏ.ஜி.கே,. வை. அறிவொளி.

‘மருத்துவ இயல்’ என்னும் தலைப்பில், தமிழக மாநில சுகாதாரத்துறை இயக்குநராகப் பதவி வகித்த கேப்டன் கு.பாஸ்கரன், சித்த மருத்துவத்தின் யோகக்கலை நிபுணர் அசித்தர், நாகைப் பகுதியின் இடதுசாரிக் களப்பணியாளர் களாகவும், மக்கள் மருத்துவர்களாகவும் வாழும் ஹோமி யோபதியர்கள் ப.ஆறுமுகம், தும்பூர் இல.தனிக்கொடி ஆகியோரின்,

விரிவான நேர்காணல்கள் அடங்கிய அரிய தொகுப்பு இது.

“வண்ணமயமான ஒளிவட்டங்களும் வானுரசும் கரவோசைகளும் பெற்ற மகத்தானவர்கள், மக்களுக்கு மேலாக ஒளிர்கிறார்கள். இவர்களைவிட மகத்துவ மானவர்கள் மக்களோடு மக்களாக வாழ்கிறார்கள்” எனப் பின்னட்டையில் குறிப்பிட்டுள்ள பாவெல் சூரியன் இந்த நூலின் பக்கங்களின் வழியே இக்கருதுகோளை நிறுவுவதில் வெற்றி கண்டுள்ளார்.

ஆழமும், விசாலமும் நுட்பமுமான பன்முகப் பார்வைகளும் அனுபவங்களும் சிதறிக்கிடக்கும் இந்த நூலின் அற்புதமான உரையாடல்களின் வழியே, உயிர்த் தெழுகிறது விளிம்புநிலை வரலாறு.

சிந்துவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகமாகக் காட்ட அரும்பாடுபட்டு அனிமேஷன், கிராஃபிக்ஸ் வேலை களைச் செய்த இந்துத்துவ அறிவு ‘சீவி’களின் சதியை ‘வரலாற்றை நிறுவ ஆதாரங்கள் அல்லாத நிலையில், ஆதாரங்களையே உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்” எனச் சரியாகவே அம்பலப்படுத்துகிறார் ஆய்வாளர் பூரணச்சந்திர ஜீவா.

“நல்லிசை மெல்லிசையானது; தற்போது கொல்லிசை யாக மாறியிருக்கிறது” எனப்பகடி செய்யும் இசைத்தட்டு சேகரிப்பாளர் சந்தானகிருஷ்ணன்,

டாக்டர் அம்பேத்கர் பௌத்தப் பிரச்சாரங்களில் ஈடுபட்டபோது பாலிமொழியில் புத்த வழிபாட்டுப் பாடல்களை இசையமைத்து உருவாக்கினார் என்கிற அரிய / புதிய செய்தியைப் பதிவு செய்கிறார் ஆதாரங் களுடன்.

வயல்வெளிகளிலிருந்து எந்தப் பக்கவாத்தியங்களும் இல்லாமல் இயற்கையாய் எழுந்து பரவுகிற மக்களிசைப் பாடல்களின் நாயகனாய் இருந்த தோழர் ஏ.ஜி.கேவின் நேர்காணலும், பி.எஸ்.ஆர், மணலி, சாம்பவான் ஓடை சிவராமன் ஆகியோரோடு நெருக்கமாயிருந்து இயங்கிய தோழர் வை.அறிவொளியின் நேர்காணலும் காலமறிந்து செய்யப்பட்ட ஆவணப்பதிவு என்றே கூறவேண்டும்.

இந்தியச் சூழலில் முதன்முதலாக வர்க்கப்போரையும் வர்ணப் போரையும் ஒருசேர நடத்தி வெற்றிகொண்ட ஒரு முன்னோடி மண்டலமான நாகை, திருவாரூர் பகுதியின் விளிம்புநிலை மக்களின் வாழ்வை, வலியை, பண்பாட்டை, போராட்டத்தை, தியாகத்தை இதைவிடச் சிறப்பாகச் சொல்லமுடியாது என்கிற அளவில் விரிகின்றன இருவரது நேர்காணல்களும்.

பெரியார் மிராசுதார்களுக்கு ஆதரவாகப் பேசினார் என்பதாலேயே அவரை விமர்சித்துவிட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் இணைந்த சம்பவத்தை விளக்கும் பகுதி, ஏ.ஜி.கேயின் வீரத்தை / சாரத்தைப் பேசுகிறது.

‘எனக்கெல்லாம் ஞாயிற்றுக்கிழமை தவிர மத்த எல்லா நாளும் கோர்ட்’ (பக்கம் - 58).

‘பேச்சு வார்த்தை போராட்டத்துல ஜெயிக்கிறது பெரிய விஷயமில்ல. அத நடைமுறைக்குக் கொண்டுவர பெரிய போராட்டம்’ (பக் - 59).

‘நடவாள்கள் நடும் போது, பின்னால நிக்காத, முன்னால போ என்று நிலப்பிரபுக்களையும் கங்காணி களையும் விரட்டவே போராட வேண்டியிருந்திச்சு’

(பக் - 60).

“தொடக்ககாலக் கம்யூனிஸ்ட் கட்சி நிலப்பிரபுவை எதிர்க்கிற போராட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்களிடையே இருந்த சாதியக் கட்டுப்பாட்டை, சாதிப் பஞ்சாயத்து, நாட்டாமை முறையை அப்படியே பயன்படுத்திக் கொண்டது. 60களில் கட்சி உருவாக்கிய எழுச்சி அந்த சாதிக் கட்டுப்பாட்டை, கட்சிக் கட்டுப்பாடாமாத்திச்சு” (பக் - 63-64)

“வெண்மணிச் சம்பவத்தை ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியா பார்ப்பதோ, அத அப்படிக் குறுக்கிவிடுவதோ தவறு” பக் - 67

என நீளும் ஹ.ழு.மு.வின் நேர்காணல்

கோரிக்கைகளுக்குப் பணியாத நிலப்பிரபுக்களின் வீடுகளுக்கு குருத்தோலை, பச்சமட்டை, எளநி எல்லாம் எடுத்துக்கிட்டு, தப்படிச்சுப் பாடையும் எடுத்துக்கொண்டு போய், அவர்கள் வீட்டு வாசலில் ஒப்பாரி வைத்து நடத்திய “எழவுப் போராட்டத்தை” பேசும்போது, விளிம்புநிலை மக்களின் மாற்றுப் போராட்ட உத்தியின் பின் நவீனத் தன்மை வியப்பூட்டுகிறது.

“எந்தச் செயலுக்குமான எதிர்வினையை எதிர் கொள்ளவும், படிப்பினைகள் அடிப்படையில் எதிர்வினை செய்யவுமான தேவை” நாகை மாவட்டக் கட்சிக்கு இருந்த நிலையில், அதை செக்டேரியன் பார்வை எனக் கணித்த கட்சியின் மாநிலத் தலைமை, வெண்மணிச் சம்பவத்துக் கான எதிர் நடவடிக்கைக்குத் தீவிரமாய் ஆயத்தமான தோழர்களைக் கட்சியிலிருந்து நீக்கிய சம்பவத்தை ஹ.ழு.மு. பதிவு செய்கிறார். மீள்ஆய்வுக்கும் சுயவிமர்சனத்துக்கும் உட்பட வேண்டியதன் அவசியத்தைப் பேசுகிற / உணர்த்துகிற பத்தி.

வை. அறிவொளியின் நேர்காணல் அரிய ஆவணம். கட்சியின் தலைமறைவுக் காலகட்டத்தில், அய்யனார் கோவில்களில் நள்ளிரவுக் கூட்டம் நடத்துவதை,

“அய்யனார் நமக்கும் காவல் தெய்வங்கிறது மட்டுமில்ல, பல நேரங்களில் அவர்தான் நமக்கு நிதி உதவியும் செய்தாரு” பெரியாரிய / மார்க்சியப் பகடியோடு விரிகிறது அவரது எளிய மொழி.

பக்கம் 106ல் மணலி - கந்தசாமியைச் சுற்றி வளைத்த போலீஸ்காரர்களிடமிருந்து காப்பாற்ற, ஜாக்கெட் அணியாத கிராமத்து தலித் விவசாயக் கூலிப் பெண்கள், தங்கள் மாராப்பு விலகும்படி குனிந்து நிமிர்ந்து போலீசாரின் கவனத்தைத் திசை திருப்பி, மணலியை மாட்டுக் கொட்டகைக் கவணையில் வைக்கோல் போட்டு மூடித் தப்புவித்த நிகழ்ச்சியை, ஈரம் கசியாத கண்களோடு எவரும் படிக்க முடியாது.

“அவரச் சுத்தியிருந்த எல்லோருக்கும் அவர் தோழர் மட்டுமில்ல. நல்ல ஆசானாகவும் இருந்தவர்” எனத் தோழர் பி.எஸ்.ஆரைக் குறிப்பிடும் அறிவொளி, பி.எஸ்.ஆரின் மரணம், கடைசி ஊர்வலம் பற்றி விளக்கும் காட்சி வரலாற்றின் பக்கங்களில் ஒரு அற்புதக் காவியமாய் மிளிரும்.

“உண்மையான அறிவியல் என்பது மக்கள்கிட்ட சென்றடையணும். அதச் செய்யாதது அறிவியல் கிடையாது. மக்கள் கிட்டச் சேரும்போதுதான் அது முழுமையான வடிவத்துக்கு வரும். அப்படியில்லாம அது எங்கெங்கயோ, யார் யாரோடயோ ஆளுகைக்குள்ள / மேலாண்மைக்குள்ள இருக்குமானா அது அறிவியலே இல்ல” என முழங்கும் சித்தர் மரபு பேசும் அசித்தரின் குரல் புயலின் வலிமையும் எரிமலையின் ஆவேசமுமாய்க் கனல்கிறது.

“களவாடின ஒவ்வொரு துறைக்கும் ஒரு வல்லுநர் பெயரை நிறுவி, மொழிபெயர்த்து, தனது என்று காட்டிக் கொள்வது ஆரியத்தின் வேலை” (பக் - 180)

“மனம் தொடர்பாக உங்களிடம் பேச வருகிறவர்கள் எல்லோருமே உங்களை ஏமாற்ற வருகிறார்கள்” பக் - 182

‘எது ஒன்றையும் திரும்பத்திரும்ப நினைப்பது, ஒலிப்பது நம் இளைஞர்களைப் பேடிகளாக்கக், காயடிக்கச் செய்கிற வேலை” (பக் - 185)

“இயற்கையைப் புரிந்துகொள்வதைத்தான் இயற் கையை வெல்வது என்று சொன்னார்கள். அதைச் சீர்கெட வைத்து, அழித்து, முரணாகப் பயன்படுத்துவது வெல்வது அல்ல. அப்படி எந்த வகையிலும் இயற்கையை வெல்ல முடியாது. அதன் எதிர்வினைகளை நாம் சந்திக்க வேண்டி யிருக்கும்” (பக் - 188)

“வழிவழியாய்ப் பலதலைமுறைகளாய் நடை முறையில் உள்ளவை வழக்கம். நம் வாழ் நாளுக்குள் பழகும் நடைமுறைகள் பழக்கம். வழக்கங்கள் பண்பாடு. பழக்கங்கள் நாகரிகம்” என அசித்தர் ஆழ்ந்த தத்துவத்தை எளிய சொற்களில் விளக்கிவிடும்போது பண்பாட்டு மானுடவியலின் ஒளி கசிகிறது.

“மக்கள் இலக்கியத்தின் முன்னோடிகள் சித்தர்கள் தான்” என உரத்துக் கூறும் அசித்தரின் நேர்காணல் யோகக் கலை, சித்தர் மரபு, சித்தர் பாடல்கள், தமிழர் தத்துவம், ஆரியச்சதி என விரிந்து பரவுகிற அதிசய மொழிப்புலம்.

ஹோமியோபதியர்கள் ப.ஆறுமுகம், இல.தனிக் கொடியின் விரிந்த நேர்காணல்கள் வணிகமய, நிறுவனமய, மக்கள் விரோத அலோபதிக்கு எதிரான தத்துவார்த்த ஆயுதங்கள்.

“அரசியல்ல சமூகத்துல எப்படி நல்ல சக்திகள் சிறுபான்மையா இருக்குதோ, அப்படி வைத்தியத்திலயும் ஹோமியோபதியர்கள் குடும்பத்துலயே சிறுபான்மையா இருக்கிற நிலை” (பக் - 219)

“உடல், மனம் மட்டுமல்ல. அதத் தாண்டியும் செல்ல வேண்டிய முழுமை ஒன்றிருக்கிறது” - எனச் சூழலையும் சேர்த்துப் பார்க்கச் சொல்கிற இல.தனிக்கொடியின் பார்வை அபூர்வமானது.

“எதயும் எதுக்குள்ளயும் குறுக்கிவிடக்கூடாது” என்னும் அவரது விசாலப் பார்வை வியப்பை விதைக்கிறது.

“பரிபூரணம்னு எதயும் சொல்ல முடியாது. எல்லா முறைகளும் ஒரு எல்லைக்கு உட்பட்டவைதான்”

(பக் - 228) இத்தெளிவு மகத்தானது.

“குறுக்கு வழிகளுக்கும், சோம்பேறிகளுக்கும் ஹோமியோபதியில் இடமே இல்லை” - என ஹானிமனை மேற்கோள் காட்டி தனிக்கொடி பேசும்போது மாற்று மருத்துவம் மீது மரியாதை பிறக்கிறது.

இவ்வாறு...

அறிவுப்பரவல், அனுபவசாரம், பன்முகப் பார்வை என விரியும் இக் “காலத்தின் உரையாடலைத்’ தொகுத்த நேர்காணலாளர் பாவெல் - சூரியன் பாராட்டுக்குரியவர்.

அழகிய வடிவத்தில், தரமான அச்சில் சிறப்பாக வெளியிட்டுள்ள ‘அ’ தமிழ்க்கூடம் பதிப்பாசிரியர் எஸ்.இராஜகுமாரன் ஒரு விளிம்புநிலை வரலாற்று ஆவணத்தைப் பதிப்பித்துப் புதிய வரலாறு படைத்துள்ளார்.

வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

காலத்தின் உரையாடல் (நேர்காணல் தொகுப்பு)

பாவெல் சூரியன்

தி.நகர், சென்னை - 600 017

விலை : ரூ. 110.00

Pin It