இலக்கியம், வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்ற உண்மைப் பொருளை உணர்த்தும் வகையில் கவனத்திற்குரிய கட்டுரைத் தொகுதியாக வெளிவந்துள்ள ஏர்முனைக்கு நேரிங்கேஇருபத் தொரு திறனாய்வுக் கட்டுரைகளைக் கொண்டு உள்ளது.

நாட்டுப்புற இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், இசை இலக்கியம், தற்கால இலக்கியம் எனத் தனது தெளிந்த பார்வையில் எழுத்தாளர் சூர்யகாந்தன் இதிலே தரமான திறனாய்வைச் செய்துள்ளார்.  நூலின் தலைப்பைத் தாங்கிய முதல் கட்டுரையே நாட்டுப்புற இலக் கியத்துக்குள் நம்மை அழைத்துக்கொண்டு செல்கிறது.

அறிவு + இயல் = அறிவியல்! உலகில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களோடும், அவர்களின் வாழ்க்கையோடும் தொடர்புடையது தான் இது! விஞ்ஞானத்தை மட்டும் குறிக்கும் சொல் அல்ல என்பதை அறிந்து கொள்கிறோம்.  வேளாண்மைத் தொழிலில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு இருப்போரை, அவர்களின் உழைப்பின் சிறப்பை ஆழமாகக் குறித்துள்ளார்.  உழவின் முறையினையும், ஒரு படிக்காடு, ஒரு வள்ளக்காடு என்று புழங்கி வந்ததைக் காட்டியிருப்பதும், உழவர் பெரு மக்களின் இயற்கை சார்ந்த நம்பிக்கைகளையும், அனுபவத்தில் பெற்ற உண்மைகளையும் மிகச் சரியாக வெளிப் படுத்திச் செல்வதும் நேர்த்தியாக உள்ளன.

அதிர அடித்தால் உதிர விளையும்

எருவிலும் வலியது உழவே

வெண்ணெய் போல் உழவு, குன்றுபோல் விளைவு

என்னும் முதுமொழிகளுக்கு ஏற்ப உழவுத் தொழிலால் கூடுதலாக மகசூல் கிடைக்கும் வழிமுறைகளை உணர்ந்த கிராம மக்கள் அந்தத் தொழிலில் தமது வாழ்க்கையைத் தோய்த்திருந்த பாங்கு வரிக்கு வரி ஊறிக் கிடப்பதை உணர முடிகின்றது!

விதைகளை எந்தத் தருணத்தில் விதைக்க வேண்டும், நாற்றுக்களை எவ்வாறு நட வேண்டும் பயிர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பவற்றைப் பழமொழிகளின் வழி பாங்குறப் பகர்கின்றார்.

நஞ்சை நிலம், புஞ்சை நிலம், வானம் பார்த்த பூமி ஆகியவற்றை வகைப்படுத்தி அவற்றின் தன்மை களை விளக்கியிருப்பது வேளாண் மக்களின் வினை வலிமையை வெளிப்படுத்துகின்றது.

மொத்தத்தில் இக்கட்டுரையில் உழவுத்தொழிலின் சிறப்பையும் நிலத்தை உழுவது முதல் விளைச்சலை வீடு சேர்ப்பது வரை நிரல்படக் கூறியிருப்பது ஒரு வேளாண் குடும்பத்தில் வாழும் உணர்வையே கற்போருக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த கட்டுரையாக அமையும் துளித்துளி மழைத்துளி”-யில் எந்த மாதத்தில் எந்த ராசியில் மழை பெய்தால் நன்மை, தீமை விளையும் என்பதை வானியல், சோதிட நிபுணர்களைப் போலப் பல பழமொழிகளைக் கொண்டு விளக்கியுள்ளார்.

ஆகாயத்தினால் மட்டுமல்ல உயிரினங்களின் செயல்பாடுகள் மூலமாகவும் மழை வரும் என்பதை ஈசல்கள், எறும்புகள், தும்பிகள், கரையான் பூச்சிகள், மாடுகள் முதலியவற்றைக் கொண்டு விளக்கியிருப்பது அவரது உய்த்து உணரும் தன்மையைக் காட்டு கின்றது.

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில் முதுவேனில் என்னும் ஓராண்டின் ஆறு பருவங் களைச் சுட்டி,

கார்த்திகைக்கு மிஞ்சின மழையும் இல்லை

  கர்ணனுக்கு மிஞ்சின கொடையும் இல்லை

மின்னலுக்குப் பின்னாலே பொன்னான

                                               மழை தன்னாலே

என்னும் பழமொழிகளினால் மழை மிகுதியாகப் பொழியும் காலத்தைக் காட்டுகின்றார்.

மேலும் உயிர் காக்கும் பயிர்களின் தன்மையைத் தெய்வப் புலவர் திருவள்ளுவர், பாவேந்தர் பாரதி தாசன் ஆகியோரின் பாக்களால் வடிக்கின்றார்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

  பொல்லார்க்கும் பெய்யும் மழை

என்னும் ஒப்பற்ற பாவோடு இக்கட்டுரையை நிறைவு செய்வது மழையின் அருமையை மனதிலிருத்து கின்றார் ஆசிரியர் சூர்யகாந்தன் அவர்கள்.

நீரின்றி அமையாது உலகு

என்கிற கட்டுரையில் மழைத்துளியில் தொடங்கி கடல் அலையில் முடிவு அடையும் நீரின் தன்மையை சுனை, அருவி, பொய்கை, ஊற்று, பூம்புனல், நீர் வீழ்ச்சி, ஓடை, சிற்றாறு, பெரிய ஆறு, கால்வாய், ஏரி, நதி, மகாநதி என்னும் சொற்சித்திரங்களினால் காட்டியிருப்பது அவரின் புலமைக்குச் சான்றளிக் கின்றது.  பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா உயிரினங்களும் நீரின்றி வாழ இயலாது என்பதை இக்கட்டுரை தெளிவுபடுத்துகின்றது.

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே

என்னும் பொன்மொழி கொண்டு நீரின்றி அமையாது உலகு என உணர்த்துகின்றார்.

இயற்கை அன்னை கொடுக்கும் வரங்கள்என்னும் கட்டுரையில் ஒரு நாட்டின் செல்வ வளங்களுள் முதன்மை யாகக் கொள்ளத்தக்கது இயற்கை வளம்.  குறிப்பாக காடுகள் என்னும் கானக வளம் மிகுதியாக இருந்தால் தான் மழைவளத்தைக் காக்க முடியும்.

மரங்களை வளர்ப்பதிலும், நீர் பாய்ச்சுவதிலும் அனைவருக்கும் அக்கறை வேண்டும்.

தழைத்த மரத்திற்கு நிழல் உண்டு

  பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு

என்ற பழமொழி நினைவிற்கொள்ள வேண்டிய ஒன்று என்றும்,

இயற்கை அன்னை கொடுக்கும் வரங்கள்.....

  இந்த மண்ணின் மேலே செழிக்கும் மரங்கள்,

  மழையைக் கீழே இழுக்கும் கரங்கள்

  இந்த மண்ணின் மேலே செழிக்கும் மரங்கள்

என்று கூறியிருப்பது மரம் வளர்ப்பதும் மழை வளம் காப்பதும் நமது தலையாய கடமை என உணர வைக்கின்றது.

வள்ளுவரை வாசித்த இளங்கோவடிகள்என்னும் தீர்க்க தரிசனத் தலைப்புக் கட்டுரையில், உலகப் பொதுமறையாம் ஒப்பிலா திருக்குறட் கருத்துக் களை இளங்கோவடிகள் தம் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் ஆங்காங்கே எடுத்தாண்டு உள்ள மையை நூலாசிரியர் சூர்யகாந்தன் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளமை அவரது இரு நூற் புலமையைத் தெளிவுபடுத்துகிறது.

கண்ணகியின் வாழ்க்கை, குணநலன்கள், சிலப்பதிகாரத்தின் மூன்று கொள்கைகள், துறவியின் சாபம் ஆகியவற்றில் இழையோடிய குறட்பாக்களின் சாரம் காப்பியத்தின் நிறைவுப் பகுதியில் நந்தா விளக்காக ஒளிர்கின்றது.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல்

என்னும் குறளின் கருத்தானது,  இளங்கோவடி களின்

இளமையும் செல்வமும் யாக்கையும் நில்லா

 உளநாள் வரையாது; ஒல்லுவது ஒழியாது

 செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்!

 மல்லன்மா ஞாலத்து வாழ்வீர்! ஈங்கு; என்

என்கின்ற இந்த வரிகளிலே அது மெய்யாகிறது என மெய்ப்பிக்கின்றார்.

ஒரு தடாகம் இரு தாமரைஎன்னும் கட்டுரைத் தலைப்பே கவிதை மணம் கொண்டது.  இதில் இரட்டைக் காப்பியங்கள் எனப் போற்றப்படுகின்ற சிலப்பதிகாரம் - மணி மேகலை இரண்டிற்குமுள்ள ஒற்றுமை, வேற்றுமை களைக் காட்டி ஒரு தடாகத்தில் இரு தாமரை என இயம்புகின்றார்.

ஒற்றுமையைக் காட்டுகின்ற பொழுது பல ஒற்றுமைக் கருத்துக்களைக் கூறுவதோடு இரு ஆசிரியர்களும் கையாளும் அரிய உவமைகளையும் எடுத்துக் காட்டுகின்றார்.

எ.டு.                   1. அருமணி இழந்த நாகம் - சிலப்பதிகாரம்

                                 நன்மணி இழந்த நாகம் - மணிமேகலை

                              2.   ஓங்கிய நன்மணி உருகடல் வீழ்ந்தோர் -

                                                         சிலப்பதிகாரம்

                                  அரும்பெறல் மாமணி ஓங்கு திரைப்

                       பெருங்கடல் வீழ்ந்தோர் - மணிமேகலை

வேற்றுமையைச் சுட்டும் போது,

சிலப்பதிகாரத்தில் சிவன், திருமால், இந்திரன், அருகதேவன், முருகன், கொற்றவை ஆகிய தெய்வங் களைச் சுட்டுவதோடு பத்தினி வழிபாடு, வைதீக வழிபாடு போன்ற பல்வேறு வழிபாடுகளுக்குச் சிறப்பிடம் தருகிறார் ஆசிரியர் இளங்கோவடிகள்.

மணிமேகலையில் புத்த தேவனைப் போற்றி பௌத்த சமயக் கோட்பாடுகளை உணர்த்தி தம் காப்பியத்தை பௌத்த இலக்கியமாகப் படைத்து உள்ளார் சீத்தலைச் சாத்தனார் என்று உணர வைக்கின்றார்.

மூன்று கனவுகள்என்னும் கட்டுரையானது,

மனிதர்களோடு மிகவும் தொடர்புடைய கனவுகள் பற்றிய கருத்துகளை வகைப்படுத்தி இலக்கியங்களில் வரும் கனவுகளை வரையறை செய்து சிக்மண்ட் பிராய்டு, யங் ஆகிய உளவியல் வல்லுநர்களின் கோட்பாடுகளின் அடிப்படையில் தற்காலத்துப் படைப்பிலக்கியங்களின் கனவுகள் உள்ளன என்பதை ஆய்ந்தறிந்துள்ளார்.

பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியன் கூறிய கருத்தைச் சுட்டிக்காட்டி கனாத்திறமுரைத்த காதையை நினைவுகூரச் செய்கிறார்.

கண்ணகி, கோவலன், பாண்டி மாதேவி ஆகிய மூவரும் கண்ட கனவினை முறையே முழுக்கனவு, தனிக்கனவு, பொதுக்கனவு எனக் கூறியிருப்பது அவரது ஆய்வின் திறத்தைப் புலப்படுத்துகின்றது.

திருவிளையாடற் புராணத்தில் மெய்ம்மைஎன்கிற கட்டுரையில் மதுரையை ஆட்கொண்டருளும் சோம சுந்தரக் கடவுள் தம் அடியார்களை ஆட்கொள்ள நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல் களையும் பரஞ்சோதி முனிவர் தம் திருவிளை யாடற் புராண நூலில் வடித்திருப்பதை ஆய்வு செய்த பேராசிரியர் சூர்யகாந்தன் அவர்கள் முதலில் திருவிளையாடற் புராண நூல் தோன்றிய வரலாற்றையும், பெரிய புராணத்திற்கு இணை யானதே திருவிளையாடற் புராணம் என்னும் கருத்தையும் ஒப்பிட்டுக் கூறுகின்றார்.  இந்த நூலிலுள்ள மெய்ம்மைத் தன்மையை

1. வரலாற்று நோக்கில் மெய்ம்மை

2. இல்வாழ்க்கையில் மெய்ம்மை

3. பொது வாழ்க்கையில் மெய்ம்மை

4. அவதார நெறியில் மெய்ம்மை

5.பக்தி நெறியில் மெய்ம்மை

எனப் பகுத்து விளக்கம் கொடுத்திருப்பது படிப் போரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவதாயுள்ளது.  மெய்ம்மை நெறியில் பயணிக்கச் செய்கிறது.

இராமனின் நட்பு நெஞ்சம்மூலமாக கவிச்சக்கர வர்த்தி கம்பனின் காவிய நாயகனான இராமபிரானின் நட்பு நெஞ்சம் உலக சகோதரத்துவத்துக்கு அடித் தளமாக அமைந்துள்ள பாங்கை இக்கட்டுரையில் எடுத்தியம்புகின்றார் இந்நூலாசிரியர்.

வேடர் குலக் குகனையும் குரங்கின சுக்ரீவனையும் அரக்கர் குல வீடணனையும் சகோதரர்களாக ஏற்றுக் கொண்ட மனப்பான்மையையும் பக்தியிற் சிறந்த சொல்லின் செல்வனாம் அனுமனிடம் கொண்ட அளவு கடந்த நட்புணர்வினையும் நெற்றிப் பொட்டெனத் தெற்றென விளக்கும் தன்மையதாக அமைந்துள்ளது.

யோகம் என்ற சொல்லுக்கு அதிர்ஷ்டம் என்ற மேலோட்டமான பொருள் இருந்தாலும் ஆழ்ந்து நோக்கும் பொழுது நெறி, நெறியினால் அடையும் பயன் என்ற உண்மையை உணர முடியும் என்பதை சுவாமி விவேகானந்தரின் ஞானயோகத்துள் மூழ்கி உணர்ந்த நுண்ணுணர்வால் புலப்படுத்துகின்றார்.

ஆதிசங்கரர் தம்முடைய விவேக சூடா மணியில் குறித்த ஞான யோகத்தின் அடிப்படைத் தன்மையையும் ஈண்டு எடுத்துக்காட்டியுள்ளார்.  மேலும், ‘......... விவேகி தனது அறிவின் துணை கொண்டு துணிந்து அறிவின் எல்லையை உணர் கிறான்! மறுக்கத்தக்கவற்றை மறுக்கிறான்.  தானல்லாத யாவற்றையும் தானென எண்ணிய மயக்கம் தீர்கின்றது.  ஆராயும் தன்னை மறுக்கவியலாது என்ற முடிவுக்கும் வருகின்றான்என்ற சுவாமி விவேகானந்தரின் எண்ணத்தையும் எடுத்துரைக்கின்றார்.

உன்னதமும் உட்பொருளும் - என்னும் உள் தலைப்பில் ஒருமையுணர்வு ஏற்பட்டால் அங்கே தனித்த சமயங்களுக்கு இடமில்லை எனவும்,

கயிறைக் காணும் போது பாம்பைக் காண்பதில்லை

பாம்பைக் காணும் போது கயிறைக் காண்பதில்லை

இவ்விரு காட்சிகளும் ஒரே சமயத்தில் நிகழ்வது.  ஆதலால் உலகை நாம் காணும் போது நமது உண்மை நிலையை உணர்வதில்லை.  பிரம்ம உணர்வில் நான்நீங்குகிறது.  உலக உணர்வும் நீங்குகிறது.  ஒளி, இருளை உணராது ஒளி தோன்றும்போது இருள் அழிகின்றதுஎனவும் தெளிவான மன நிலையைக் கண்ணாடி போலக் காட்டும் சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக ஒளியை நம் மனக்கண் முன்னே கொண்டு வந்து நம் இதயங்களில் ஞான தீபம் ஏற்றுகின்றார் பேராசிரியர் சூர்யகாந்தன் அவர்கள்.

தித்திக்கும் தேனமுதம்சுவை சொட்ட அமைந்த தலைப்போடு உள்ளது.  இல்லற வாழ்க்கை இன்ப மயமாக இருக்கவேண்டுமென்றால் கணவனும் மனைவியும் உடலும் உயிரும் போல, கண்ணும் ஒளியும் போல இருக்கவேண்டுமென்பதை விளக்கும் இக்கட்டுரையில் பல பாடல்களை எடுத்துக்காட்டி, ஏழேழு பிறவி களிலும் இன்பம் தொடர வேண்டும் எனக் கூறி,

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்

நீ என்னை ஆளும் தெய்வம் - இனி

என்ன சொல்ல வேண்டும்

என்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் அற்புதப் பாடலை எடுத்தியம்புகின்றார்.

இயற்கையின் பேரழகை உய்த்துணரும்போது அது பாடலாக உருவெடுப்பதைப் பல பாடல்கள் வழி புலப்படுத்துகின்றார் இந்நூலாசிரியர்.  அதுவும் காதல் பாடல்களை எழுதும் போது தாய்நாட்டின் நினைவோடு அதன் சிறப்பைக் கூறும் தன்மையை,

கால்வண்ணம் சதிராட கைவண்ணம் விளையாடும்...

  தென்னாட்டுப் பொன் வண்ணமே

என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வழி மகிழ் விக்கின்றார்.

செல்வம் என்பது சிந்தையின் நிறைவு என்பதை,

உலகம் பிறந்தது எனக்காக

  ஓடும் நதிகளும் எனக்காக

  மலர்கள் மலர்வதும் எனக்காக - அன்னை

  மடியை விரித்தாள் எனக்காக

என்ற பாடலின் வழி தெளிவுபடுத்துகின்றார்.

துன்பமும் துயரமும் மனிதனைத் துரத்திக் கொண்டே வந்தாலும் அவற்றால் சோர்ந்து துவண்டு விடாமல் மனதைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்கும்படி

“.......... மயக்கம் எனது தாயகம்

  மௌனம் எனது தாய்மொழி

  கலக்கம் எனது காவியம் - நான்

  கண்ணீர் வரைந்த ஓவியம்

என்ற பாடலைக் கவிஞர் கண்ணதாசன் எழுதி யுள்ளதையும் இங்கே குறிப்பிடுகின்றார் ஆசிரியர்.

பனியில் நனையும் கனிகள்என்னும் கட்டுரை அலாதியானது.

தேனின் இனிமையையும் அருமையையும் கூறும் இந்நூலாசிரியர் திரைப்பாடல்களில் கனிகள் இடம்பெற்ற பாங்கினைக் கனிவுடன் கூறுவது முக்கனிகளைத் தேனில் குழைத்து உண்டதைப் போன்ற மகிழ்வினைத் தருகின்றது.

கவியரசு கண்ணதாசன் அவர்களின் திரைப் படப் பாடல்களில் காதல், சிற்றின்பச்சுகம், வினாக் களும் விடைகளும், புதிய கோணங்கள் இனிய கானங்கள், கவிஞரின் கன்னங்கள், கனிகளின் அணி வகுப்பு என ஆய்ந்து ஆய்ந்து எழுதிக் கற்றோர் களிப்புறும் வண்ணம் அற்புதமாய்த் தந்துள்ளார்.

மேலும் கவிஞர் வாலி, புலவர் புலமைப் பித்தன் ஆகியோரது பாடல்களிலும் கனிச்சுவையை எடுத்துக்காட்டி, நிறைவாக கண்ணதாசனைக் கனிந்த தாசன் என வருணித்திருப்பது கனிகளைப் பற்றி மிகுதியான பாடல்களைப் பாடிய அக்கவிஞருக்குச் சாலப் பொருந்துவதாய் அமைந்துள்ளது.

திரையில் மலர்ந்த தங்க மலர்கள்என்று பளிச்சிடும் கட்டுரை பள்ளியில் ஆசிரியை சிறுவர் களோடு கூடி மகிழ்ந்து பாடுவதாக எழுதப்பட்ட வினாவும் விடையுமான

பூப்பூவாப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம்பூ!

  பூவிலே சிறந்த பூ என்ன பூ

என்னும் பாடலின் நிறைவுப் பகுதியில்

பூமியிலே ஆயிரம் பூ, பூவிலே சிறந்த பூ

                                         என்ன பூ - அன்பு

என முடிக்கும் பாங்கில் கவிஞர் கண்ணதாசன் உலகம் அன்புமயமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதை இந்நூலாசிரியர் இயல்பாகக் காட்டுகின்றார்.

மேலும் ஒரு இல்லத் தலைவியின் நிலை களைக் கூறும்போது தான் ஒரு மனைவி மட்டு மல்ல! உனக்கு அன்னை, சேவை செய்யும் தாதி உன்னோடு இணையும் துணைவிஎனத் தலை வனிடம் விளம்புவதாக அமைத்த கவிஞர் வாலி அவர்களின் பாடலையும் இங்கே எடுத்தாண்டு உள்ளார் ஆசிரியர்.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் கூறும் நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்னும் கோட்பாட்டையும் விளக்குகின்றார்.

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா

  அண்ணன் தங்கை உறவு முறை மலர்ந்ததம்மா

என்று பாச மலர்களைக் காட்டுகின்ற கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் பாடலைக் காட்டி ஆனந்தக் கண்ணீரில் மிதக்கச் செய்கிறார்.  மேலும் ஒரு தாய் தன் அருமைக் குழந்தையை எப்படி யெல்லாம் தாலாட்டுப்பாடி வளர்க்கிறாள் என் பதையும் அழகாகச் சுட்டிக்காட்டி இக்கட்டுரையை நிறைவு செய்கிறார் இந்நூலாசிரியர்.

ஒரு காயத்தின் கதைவழியே - உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கியின் தாய்என்னும் நாவல் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றது.  அதைப் போலவே அவருடைய அந்தப் பையன்என்னும் சிறுகதையும் தனித்துவம் வாய்ந்தது என்பதை நிரூபிக்கின்றார்.

துள்ளி விளையாடிச் சிறுவர்களோடு மகிழ்ச்சி யாக உலவ வேண்டிய சிறு வயதில் குடும்பச் சுமை களைத் தோள் மீது சுமந்து கொண்டு முதுகிலே காயமேற்பட்ட போதும் தன் தந்தையைக் காப் பாற்றும் பொருட்டு வலியையும் பொருட்படுத்தாது சர்க்கஸ்காட்டி பணம் சம்பாதிக்க முயன்ற யூதச் சிறுவனின் தைரியம் நம் கண்களில் நீரை வர வழைக்கின்றது.

நாட்டு நடப்பை நம் கண்முன் கொணர்ந்த இந்தக் கதையை உயிரோட்டமாக மொழிபெயர்த்த ஆசிரியர் புதுமைப் பித்தனையும் இக்கட்டுரையை நமக்கு வழங்கிய ஆசிரியர் சூர்யகாந்தனையும் பாராட்டாமல் இருக்க முடியாது.

தீராநதியின் இலக்கியப் பங்களிப்புகுறித்து திறனாய்கிற பொழுது தமிழகத்தில் நிறைய வாசகர் களைக் கொண்டுள்ள குமுதம்வார இதழின் நிறுவனத்திலிருந்து வரும் இதழ்களில் ஒன்றான தீராநதியை ஆய்வு செய்த பெருமைக்குரிய சந்திரகலா அவர்களின் ஆய்வியல் கூறுகள் இக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

2005ஆம் ஆண்டு வெளியான இதழ்கள் முழுமையும் தொகுத்து 7 சிறுகதைகள், 40 கவிஞர் களின் 60 கவிதைகள் 30 கட்டுரைகள் என வகுத்து ஆய்வு செய்ததோடு மட்டுமின்றிப் புதிய நூல்களின் அறிமுகம், வெளியீட்டு விழாக்கள், கருத்தரங்குகள் புதிய பத்திரிகைகளின் குறிப்புகள், விருது வழங்கும் அமைப்புகள், அவற்றின் நிகழ்வுகள் போன்ற வற்றை விளக்கியிருப்பதோடு ஓவியங்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருப்பதையும் எடுத்துக் காட்டிச் சிறப்பானதொரு இலக்கியப் பங்களிப்பு என முத்திரையிடுகின்றார் இந்நூலாசிரியர் சூர்ய காந்தன் அவர்கள்.

இலக்கியப் பூக்களின் இதயம்வழியாகத் தற்கால இலக்கியத் துறையில் சிறப்பிடம் பெற்றுத் திகழும் பேராசிரியரும், இலக்கியத் திறனாய்வாளருமான இந்திரஜித் அவர்களின் கட்டுரை நூல்களில் ஒன்றான இலக்கியப் பூக்களின் இதயம்என்னும் நூல் பற்றிய சிந்தனைகளைத் தருகிறார் இந்நூலாசிரியர்.

சங்க இலக்கியம் முதல் தற்காலத் திறனாய்வு, பகுத்தறிவு வரை அனைத்து நிலைகளிலும் திரு.இந்திர ஜித் அவர்களின் இலக்கியப் பணி பயணித்திருப் பதை வெளிப்படுத்துகின்றார் இந்நூலாசிரியர்.

புறநானூற்று வரலாற்றுச் செய்திகள், கம்பரின் சுந்தர காண்டத்துச் சிறப்பியல்புகள், யுத்த காண்டத்து அதிகாயன்பாத்திரத் தன்மை, கம்பனைக் குறித்த சுகி.சிவம் அவர்களின் நாகரிகமான விமர்சனம், கி.பி.9 ஆம் நூற்றாண்டில் ஓடி ஓமரால் எழுதப்பட்ட இலியட்டின் காவியத் தலைவியாம் ஹெலனையும், கி.பி.12 ஆம் நூற்றாண்டில் கம்பரால் படைக்கப் பட்ட சீதையையும் ஒப்பு நோக்கும் தன்மை, பௌத்த கிறித்துவ சமயங்களின் திறனாய்வு, வரதட்சணை வில்லொடிக்க இராமர்கள் வராத போது பெண்களே தான் அதை ஒடிக்க முன்வர வேண்டுமென்னும் வைரமுத்து அவர்களின் தீர்வு, மகாகவி பாரதியைப் பற்றிய ஆய்வாளர்களின் கண்ணோட்டங்கள், உடு மலை நாராயண கவியின் திரையிசைப் பாடல் களில் பெண்கள் பற்றிய சித்திரிப்பு, பட்டுக் கோட்டையாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள், பெண்ணிய எழுத்துக்களின் இப்போதைய தேவை, ரசிகமணி டி.கே.சி.யின் கலைக் கோட்பாடு, பேராசிரியர் நா.வானமாமலை அவர்களது ஆய்வுப் பணி, கொங்கு நாட்டில் காணப்படும் பச்சை குத்தும் கலை ஆகியவற்றை நுணுகி அலசி ஆய்ந்து உள்ளமை புலனாகின்றது.

மேலும் தமிழரின் வரலாற்று நாடகங்கள் பற்றிய கட்டுரை, ‘பென்கர்திரைப்படக் கதை, அமெரிக்க எழுத்தாளர் லியூவாலசுவின் கை வண்ணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ள அருள் ஐயாப் பிள்ளையின் மொழித் திறன், “தஸ்தேவஸ்கியும், டால்ஸ்டாயும்என்னும் கட்டுரையில் அவ்விரு எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் வழி திறனாய்ந்த தன்மை ஆகியன தெளிவுபடுத்தப்படுகின்றன.

க.ப.அறவாணனின் பொன்மொழியைச் சுட்டிக் காட்டி, வரலாறு எவ்வாறு எழுத வேண்டுமென்னும் அ.கருணானந்தனின் வரலாறு என்றால் என்ன?” என்பதைக் கற்றுணரச் செய்கிறார்.

தேடல் மனங்கொண்டோருக்கு சுபாசிதம்நூலினை அறிமுகப்படுத்தியதோடு தாமரை இதழில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஒரு சேர ஈர்த்த பூர்விக பூமிஎன்னும் சூர்யகாந்தனின் நாவலைச் சிறந்த முறையில் ஆய்வு செய்து சரியான படைப்பு என முத்திரை குத்திய பாங்கு, “விருட்சமும் விழுதுகளும்நூலைப் பற்றிய ஆய்வுத் திறன் ஆகியன சிறந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன என்று இலக்கியப் பூக்களின் இதயத்தை நேசிக்கிறார்.

இலங்கையில் பிறந்து வளர்ந்து 55 ஆண்டுகள் வரை அங்கேயே வாழ்ந்து 1983ஆம் ஆண்டில் மூண்ட இனக்கலவரம் காரணமாகத் தமிழகம் வந்து இன்று வரை தமிழ் எழுத்துலகில் பல பரிமாணங்களில் தனது படைப்புகளை வழங்கிவரும் திரு.செ.கணேச லிங்கன் அவர்களின் படைப்புகளை ஆய்ந்த வா.சித்ரா அவர்களின் படைப்பே செ.கணேசலிங்கனின் நாவல்களில் பெண்ணுரிமைஎன்னும் நூலாகும்.

இந்நூலைத் திறனாய்வு செய்த பேராசிரியர் சூர்யகாந்தன் அவர்கள் குறிப்பிடுவது, 1965 ஆம் ஆண்டில் நீண்ட பயணம்என்னும் நாவலில் தொடங்கி அண்மைக் காலம் வரை 20 நாவல்கள் வரையிலும் கூறப்பட்டுள்ள செய்திகளில்,

ஒரு பெண்ணின் கதை, ஒரு குடும்பத்தின் கதைஆகிய இரண்டிலும் அவரது பெண்ணுரிமை குறித்த பார்வை எவ்வாறு இருந்தது என்பதைக் காட்டும் தன்மை குறிப்பிடத்தக்கது என்று வா.சித்ரா அவர்கள் கூறுவதை எடுத்துக்காட்டும் பாங்கு உடையதாயமைகிறது.

பெண்ணுரிமை இயக்கங்கள் வளர்ந்து வர இவை பெரிதும் பயன்படும் என்று குறிப்பிடு வதையும் 81 வயதிலும் ஆர்வமோடு செயல்படும் அவரது அருந்தமிழ்ப் பணியையும் நூலாசிரியர் பாராட்டுவதாகக் குறிப்பிடுகின்றார்.  பெண்ணுரிமை குறித்து இன்று பலரும் சிந்தித்து வரும் வேளையில் இது குறித்த நூலாசிரியரின் எண்ணங்களை அனை வரும் போற்றி வரவேற்பர் என்பது திறனாய்வாளர் சூர்யகாந்தன் அவர்களின் கருத்து.

கோவை மாவட்டம் உடுமலைப் பேட்டையில் உள்ள வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களின் 7 கட்டுரைகளின் தொகுப்பே மகிழம்பூஎன்பதாகும்.  அவற்றின் சிறப்புக்களை நயம்பட உரைக்கிறார் இந்நூலாசிரியர்.

கிராமத்துப் பெண்கள் தம் வீடுகளில் அமர்ந்து கொண்டு பல்லாங்குழியில் ஆடும் ஆட்டமான பாண்டியாட்டம் அல்லது பல்லாங்குழி ஆட்டம் பற்றி கன்னிமுத்து அவர்கள் தம் ஆய்வில் கண்ட உண்மைகளாக உரைப்பவைகளைக் கூறி விளை யாட்டிலும் வாழ்வியலைக் கற்றுக்கொள்கிறார்கள் பெண்கள் என்று கூறி நம் சிந்தைக்கு விருந்தளிக் கின்றார் இந்நூலாசிரியர்.

மேலும் எம்.ஜி.சுரேஷ் அவர்களின் சிலந்திநாவலையும் பொருண்மையும் அதன் உயிர்ப்பும்என்ற மோகன் அவர்களின் கட்டுரையையும், சிவசாமி அவர்களின் திருமந்திரத்தில் இல்வாழ் வான்என்னும் கட்டுரையையும், குணசேகரன் அவர்களின் தமிழரும் புலப்பாட்டு நெறியும்என்னும் கட்டுரையையும் இரவிக்குமார் அவர் களின் சித்தனும் கூத்தனும் என்னும் கட்டுரையையும் தங்கமணி கண்டன் அவர்களின் இயற்கையும் தமிழரும்என்னும் கட்டுரையையும் ஓதி உணர்ந்து அவற்றின் நறுமண இதழ்களைக் காட்டும் தன்மை குறித்து உண்மையிலேயே மகிழம்பூ மணம் வீசும் தன்மைத்தது என்றும் தலைப்பிற்கேற்ற நூல் என்றும் குறிப்பிடுகின்றார் பேராசிரியர்.  சூர்யகாந்தன் அவர்கள்.

உலக இலக்கியங்களுள் நம் தமிழ் இலக்கியத்திற் கென்ற தனிஇடம் உண்டு.  அதிலும் குழந்தை இலக்கியம் சிறப்பிடம் வகித்து வருவதை அனை வரும் அறிவர்.

ப.கீதா அவர்களின் குழந்தை இலக்கியச் செல்வம்என்னும் நூல் பற்றிய ஆய்வினை இங்கு வழங்குகின்றார் இந்நூலாசிரியர் சூர்யகாந்தன் அவர்கள்.

குழந்தை இலக்கியத்தின் தோற்றம் முதல் வாழும் குழந்தை இலக்கியக் கவிஞர்களான பூவண்ணன், செல்வகணபதி மற்றும் பெண் கவிஞர் களின் குழந்தைப் பாடல்கள் வரை ப.கீதா அவர் களின் ஆய்வு குறித்துக் கூறும் இந்நூலாசிரியர்.

குழந்தை உளவியல்என்னும் பகுதி இந்த நூலின் நிறைவுப் பகுதியாக உச்சமாகவும்.... மலர்க் கிரீடம் போலவும் மெச்சத் தகுந்த விதத்தில் சூட்டப் பட்டுப் பரிமளிக்கிறது எனப் புகழ்க் கிரீடம் வைக் கின்றார்.

உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டு அவர் களின் உளவியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய கனவுகளின் அடிப்படை விளக்கம் என்னும் நூலைப் படைத்து மன இயல்புகளை ஆய்வு செய்கின்றார்.

இவர் இலக்கிய கர்த்தாக்கள் மிகையுணர்ச்சி உடையவர்களாகவோ, நரம்பு எழுச்சி கொண்டவர் களாகவோ இருக்கக்கூடும்என்று குறிப்பிடுவதை இந்நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார்.

ருமேனிய நாட்டு அறிஞரான எல்ரூசா கவிஞர் களை வகைப்படுத்தும் தன்மையையும் எடுத்து உரைக்கிறார்.

மனிதருடைய தொன்மைப் படைப்பாற்றல், படிமப் படைப்பாற்றலைப் போன்ற கற்பனை களுடன் தொடர்புடையதே இலக்கிய உளவியல்! இந்தக் கற்பனைகளை வெளியிடுவதற்கு உரிய மொழியையும் வடிவத்தையும் இடையறாது தேடிக் காண்பது தான் அவனது முயற்சி என்ற முறையில் நாம் இவற்றை ஆராய வேண்டும்என்ற லியான் எடல் அவர்களின் கருத்தைக் கூறிப் பல எடுத்துக் காட்டுகளின் வழி விளக்கம் அளிக்கிறார்.  மேலும் இலக்கிய ஆய்வுகளை உளவியல் நோக்கில் அறிந்து கொள்ள உளவியல் கூறுகளை உணர்தல் இன்றி யமையாதது என்றும் இந்நூலாசிரியர் இக் கட்டுரையில் விளக்குகின்றார்.

மௌனியின் அழியாச் சுடருக்குள்ளே ஒரு பயணம் என்னும் கட்டுரையிலே தமிழ்ச் சிறு கதையின் திருமூலர்எனப் புதுமைப்பித்தன் அவர்களால் பாராட்டப்படும் மௌனியின் சிறு கதைகளுள் ஒன்றான அழியாச்சுடர்பற்றி ஆய்வு செய்கிறார் இந்நூலாசிரியர்.  இந்தச் சிறுகதை பல திறனாய்வாளர்களின் சிந்தனைகளையும் ஒரு சேரத் தீண்டிய கதை என்று கூறுவதிலிருந்து கதையின் சிறப்பு அம்சம் புலப்படுகின்றது.

“.... வெகுகாலமாக ஜோதி கொண்டு ஜொலிப் பதைப் போன்று நிசப்தத்தில் தனிமையாக ஒரு பெரிய சுடர் விளக்கு மட்டும் லிங்கத்தருகில் எரிந்துகொண்டிருக்கும்.  அது திடீரென்று சிறிது மறைந்து பிறகு பழையபடியே அமைதியில் தெரிந்தது.  யாரோ ஒரு பக்தன் கடவுளை வழிபட உள் சென்றான் போலும்! நான் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தேன்.  உலகில் கடைசி மனிதன் கடவுள் வழிபாட்டை முடித்துக்கொண்டு, அநந்தத்திலும் அவியாத ஒளியை உலகில் விட்டுச் சென்றது போலத் தோன்றியது அந்த மறைவும் தோற்றமும்! தூண்டப்படாது அணையவிருந்த என்னுள் எரிந்த ஒளி, நிமிர்ந்து ஜொலிக்கத்தான் நேற்று இது நிகழ்ந்தது...என்று மௌனி அவர்கள் தம் அனுபவங் களைப் பகிர்ந்து கொள்வதை ஆசிரியர் சுட்டிக் காட்டி இருள், சுடரை அழிக்க முடியாது என்ற உண்மையை உணர்த்துகின்றார்.

அனைவருக்கும் ஏற்ற வகையில் சீரிய சிந்தனை களைச் சுமந்து கொண்டிருக்கும் சிறப்பார்ந்த நூல் இது!

ஏர்முனைக்கு நேரிங்கே

ஆசிரியர் : சூர்யகாந்தன்

வெளியீடு : அறிவுப் பதிப்பகம்

விலை : ரூ.60.00

 

Pin It