வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து அண்மைக்காலம் வரை மதுரையும் அதனைச் சார்ந்த பகுதிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக விளங்கி வந்துள்ளன. மதுரையின் வரலாற்றுக்காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தொடங்குகிறது என்பதைத் திட்ட வட்டமாகக் கூறலாம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அசோக மன்னனின் கல்வெட்டுகளில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்குலம் குறிப்பிடப்படுகிறது. மாங்குளம் அருகிலுள்ள மீனாட்சிபுரம் குன்றிலுள்ள குகைத்தளங்களில் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன. எனவே மதுரை மாநகரம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தோ அதற்குச் சற்று முன்பாகவோ அரசியல், வணிகம், சமயம் முதலிய பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற நகரமாக உருவாகியிருக்க வேண்டும். இத்தகு சிறப்பு வாய்ந்த மதுரை நகரத்திலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் செய்யப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளோடு ஒப்பிடும் போது மிகமிகக் குறைவாகவே உள்ளன.

madurai_340சங்கம் வைத்து தமிழ்வளர்த்ததாகக் கூறப் படும் பண்பாட்டுச் சிறப்பு வாய்ந்த மதுரையின் அகப்பகுதியில் இதுவரை முறையானஅகழாய்வு ஒருமுறைகூடச் செய்யப்படவில்லை. கரூர், உறையூர், பூம்புகார், காஞ்சிபுரம் என்று பல பழமையான நகரங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன. ஆனால் மதுரை மாநகர் இவ்வாய்வுப் பட்டியலில் இதுநாள் வரைஇடம்பெறவில்லை. மதுரை மாநகர் எத்துணையளவு தொன்மையானது என்பதை அறிவியல் பூர்வமான காலக்கணிப்புடன் கூடிய அகழாய்வுகள் தான் உறுதிப்படுத்தும். ஆங்கிலேயர் காலம் தொட்டு அண்மைக்காலம் வரை சில தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்களும் வெளிநாட்டிலிருந்து வந்த ஆய்வாளர்களும் மதுரைப் பகுதியின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தடயங்கள் குறித்தும் வரலாற்றுக் காலத் தடயங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.

வரலாற்றிற்கு முற்பட்ட காலம் 

மதுரையைச் சார்ந்த பகுதிகளிலும் வைகை யாற்றிலும் வெளிப்புறமுள்ள வைகையாற்றங் கரையிலும் கி.மு. 4000 அளவில் நுண்கற்கருவி களைப் பயன்படுத்தி வாழ்க்கை நடத்திய மனிதனின் எச்சங்கள் கிடைத்துள்ளன. ஆனால் பழைய கற்கால மனிதன் புதிய கற்காலமனிதன் வாழ்ந்த வாழ்விடங்கள் இதுவரை கண்டறியப்படாதது. மதுரைப்பகுதி நுண்கற்காலத்திலிருந்து தனது வரலாற்றைத் தொடங்கியிருக்கிறது என்றே கருத வேண்டியுள்ளது. இராபர்ட் புரூஸ் புட் என்ற ஆங்கிலேயர் வைகையின் வடகரையில் பழைய கற்காலக் கருவியைக் கண்டறிந்துள்ளார். மதுரைக்கு அருகிலுள்ள ஆவியூரில் இதேபோன்ற கருவியைக் கண்டறிந்ததாகக் குறிப்பிடுகின்றார். மதுரைக்கு மேற்குப்புறமுள்ள துவரிமான் பகுதியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் அகேட், ஜாஸ்பர், குவார்ட்ஸ் முதலிய கற்களால் செய்யப்பட்ட ஏராள மான நுண்கற் கருவிகளைக் கண்டறிந்துள்ளனர். இவற்றின் காலம் கி.மு. 4000 ஆகும்.

நுண்கற்காலத்தினைத் தொடர்ந்து கி.மு. 1000க்குப் பிறகு பெருங்கற்களைக் கொண்டும் தாழிகளைக் கொண்டும் உருவாக்கிய ஈமச்சின்னங்கள் ஏராளமாக மதுரைப்பகுதியில் காணப்படுகின்றன. அனுப்பானடி, தத்தனேரி, பழங்காநத்தம், பரவை, துவரிமான் முதலிய இடங்களில் ஏராளமான முது மக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. கி.பி. 1887-இல் அலெக்சாண்டர் ரீ என்பவர் அனுப்பானடியில் சங்ககாலத்தினைச் சார்ந்த முதுமக்கள் தாழிகள் பலவற்றை அகழ்ந்தெடுத்தார். இவற்றில் சங்க காலக் கருப்புசிவப்பு மட்கலன்களும் இறந்தவர் களின் எலும்புகளும் இருந்தன. பரவையிலும் இதே போன்ற ஆய்வை மேற்கொண்ட அலெக்சாண்டர் ரீ பல தாழிகளைத் தோண்டியெடுத்துள்ளார். பார்டீல் என்ற ஆங்கில அதிகாரி 1887-இல் துவரி மானில் இதேபோன்று பல முதுமக்கள் தாழிகளை அகழ்ந்தெடுட்தார்.

இன்று மதுரையின் இடுகாடாகவும் சுடு காடாகவும் விளங்குகிற தத்தனேரி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இடுகாடாக விளங்கி யுள்ளது. தத்தனேரிப் பகுதியில் பல முதுமக்கள் தாழிகள் தற்செயலாகத் தோண்டும்போது கிடைத் துள்ளன. இவற்றில் சில மதுரை அரசு அருங்காட்சி யகத்தில் உள்ளன.

கோவலன் பொட்டல் அகழாய்வு:

மதுரையில் பழங்காநத்தம் பகுதிகளில் டி.வி.எஸ் நகருக்கு வடபுறம் புகைவண்டிப் பாதைக்குக் கீழ்ப் புறம் ஏராளமான முதுமக்கள் தாழிகள் புதைக்கப் பட்ட இடுகாடு இருந்துள்ளது. இதனைக் கோவலன் பொட்டல் என்று மக்கள் அழைக்கின்றனர். சிலப்பதிகார காலத்திற்கு முன்பே வழக்கில் இருந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழிக்காடு இதுவாகும். இப்பகுதியில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு செய்தபோது பலகாலகட்டங்களைச் சார்ந்த சங்ககாலத் தாழிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இத்தாழியினைச் சுற்றியும் தாழிகள் உட்புறத்திலும் கருப்பு, கருப்புசிவப்பு மட்கலன்களில் தானியங்கள், திரவப் பொருட்கள் இருந்தன. இவை இறந்தவர் களுக்காகப் படைக்கப்பட்ட படையல் பொருட் களாகும். ஒரு மட்கலயத்தில் நெல்மணிகள் இருந் தமைக்கான தடயங்கள் இருந்தன. தாழியின் உட்புறம் இறந்தவரின் அனைத்து எலும்புகளும் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இறந்தவர்களைத் தாழிக்குள் வைத்துப் புதைக்கும் சடங்கை விரிவாக அக்காலத்து மக்கள் செய்துள்ளனர்.

கோவலன்பொட்டல் அகழாய்வில் சங்க காலப் பாண்டியர் வெளியிட்ட சதுரவடிவச் செப்புக் காசு ஒன்றும் வெண்மையான இதய வடிவ மணி ஒன்றும் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புள்ள மட்கலன்கள் இரண்டும் கிடைத்தன. ஒரு கையில் மூட்டுப்பகுதியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் சிறிதுகாலம் உயிர் வாழ்ந்த மனிதனின் எலும்புக் கூடும் இவ்வகழாய்வில் கண்டறியப்பட்டது.

நாணயங்கள்

மதுரையைக் கடந்து செல்லும் வைகை யாற்றுப் பகுதியில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் அண்மைக்காலம் வரையிலான ஏராளமான நாணயங்கள் கண்டறியப்பட்டன. மதுரையின் வணிகச் சிறப்பையும் அரசியல், பொருளாதர வரலாற்றை உணர்த்தும் அரிய சான்றுகள் இவை யாகும். மௌரியர் காலத்தில் வெளியிட்ட வெள்ளி யால் ஆன முத்திரை குத்தப்பட்ட காசுகள் பல கிடைத்துள்ளன. கி.மு.மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த இக்காசுகளைப் பின்பற்றி இக்காசுகளின் பின்புறம் பாண்டியர்கள் மீன் சின்னத்தைப் பொறித்துக் காசுகளை வெளியிட்டுள்ளனர். இவ் வகைக் காசுகளும் வைகையாற்றில் கிடைத்துள்ளன. சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட சதுரவடிவ செப்புக்காசுகள் பல வைகையாற்றில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் ஒருபுறம் மங்கலச் சின்னங்களுடன் நிற்கும் யானையின் உருவமும் மறுபுறம் கோட்டுருவமாக உள்ள மீன்உருவமும் காணப்படுகிறது. இவ்வகைக் காசு கோவலன் பொட்டல் அகழாய்விலும் கிடைத்துள்ளது.

மதுரையில் கிடைத்த காசுகளில் தலை சிறந்த வரலாற்றுச் சிறப்புவாய்ந்த சங்ககாலக் காசு “பெருவழுதி” என்று பெயர் பொறிக்கப்பட்ட காசாகும். இதன் ஒருபுறத்தில் கடல் ஆமைகள் உள்ள நீர்த்தொட்டியின் முன்நிற்கும் குதிரையின் உருவம் உள்ளது. இதன் மேல்புறம் தமிழ்பிராமி எழுத்துக்களில் “பெருவழுதி” என்று எழுதப் பட்டுள்ளது. இக்காசினை இக்காசில் காணப்படும் எழுத்துக்களின் வடிவ அமைப்பினைக் கொண்டு கி.மு இரண்டாம் நூற்றாண்டு எனக் கணித்துள்ளனர். பாண்டியர் அசுவமேதயாகம் செய்துள்ளனர் என் பதற்கு இக்காசு சான்றாக உள்ளது.

பாண்டியர் ரோமானியர்களோடு உறவு கொண்டிருந்தனர் என்பதற்குப் புறநானூறு, நெடு நல்வாடை, முல்லைப்பாட்டு முதலிய சங்க இலக் கியங்கள் சான்று பகர்கின்றன. புறநானூறு, பாண்டியன் ஒருவன் யவனரின் மதுவை மகளிர் பொற்கிண்ணங்ளில் தர அருந்தி மகிழ்ந்தனர் என்று கூறுகிறது. நெடுநல்வாடையில் யவனரின் பாவைவிளக்கு பாண்டியர் அரண்மனையில் எரிந்தது பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. முல்லைப் பாட்டில் யவன வீரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். பாண்டியன் ஒருவன் ரோமானிய அகஸ்டஸ் மன்னனுக்குத் தூது அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பாண்டியருக்கும் ரோமானியர்க்கும் அதிகத் தொடர்புகள் இருந்துள்ளதைக் காட்டும் இலக்கியம் கூறும் செய்திகளைத் தொல்லியல் ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. மதுரையில் பழமையான ரோமானிய மன்னர்கள் வெளியிட்ட காசுகள் கண்டறியப்பட்டுள்ளன, மதுரையில் 1917இல் ஹார்விமில் கட்டுவதற்காகத் தோண்டும்போது பழமையான பதினொரு ரோமானியர் தங்கக் காசுகள் கண்டறியப்பட்டன. கிளாடியஸ், நீரோ, டோமிட்டன் முதலியோரது காசுகள் இதில் இருந்தன. இவை தவிர, மதுரையில் 1888இல் ரோமானியரது தங்கக்காசு கிடைத்துள்ளது. கி.பி.400ஐ சார்ந்த ரோமானியரது செப்புக்காசுகள் பல வைகையாற்றில் கிடைத்துள்ளன. இவற்றில் ஹோனோரியஸ், ஆர்கேடியஸ் ஆகியோரது காசுகள் இருந்துள்ளன.

வைகையாற்றில் சாதவாகனர், சோழர், பிற்காலப் பாண்டியர், மதுரை சுல்தான், வாணாதி ராயர் விஜயநகரவேந்தர், மதுரைநாயக்கர், பிற்கால இசுலாமியர், ஆங்கிலேயர் காசுகளும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. மதுரையின் தொடர்ச்சியான அரசியல் வரலாற்றை இக்காசுகள் உணர்த்துகின்றன.

கல்வெட்டுக்கள்

மதுரையின் அகப்பகுதிகளில் இதுவரை சங்க காலக் கல்வெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் புறப்பகுதிகளில் உள்ள குன்றங்களில் உள்ள குகைத்தளங்களில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. முதலாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை சமண முனிவர்களுக்கு உறைவிடம் அமைத்துக் கொடுத்தது குறித்துத் தெரிவிக்கின்றன. மதுரையி லிருந்து ஆட்சிபுரிந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பெயர் மாங்குளம் (மீனாட்சிபுரம்) கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றது. மதுரையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் வணிகம் நடத்திய வணிகர்கள் பலரது பெயர்கள் அழகர்மலை தமிழ்பிராமி கல்வெட்டுகளில் வருகின்றன. இவற்றில் உப்பு வணிகன், பொன்வணிகன், பணிதவணிகன், அறுவை வணிகன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

மதுரை நகரில் சங்ககாலத்திலேயே சமண முனிவர்கள் வாழ்ந்தது குறித்து மதுரைக்காஞ்சி தெரிவிக்கின்றது. குன்றைக் குடைந்து செய்விக்கப் பட்டது போன்ற சமணப்பள்ளிகளில் முக்காலத் தையும் உணர்ந்த முனிவர்கள் வாழ்ந்தனர். இவர் களைப் பூவும் புகையும் கொண்டு சென்று சமண சமயத்து இல்லறத்தார் வழிபட்டனர் என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது. மதுரையில் சமண முனிவர்கள் வாழ்ந்தார்கள் என்ற இலக்கியச் செய்தியை அணைப்பட்டி அருகிலுள்ள குன்றத்தி லுள்ள குகைத்தளப்பள்ளி கி.மு. இரண்டாம் நூற்றாண்டு தமிழ்பிராமி கல்வெட்டும் உறுதிப் படுத்துகிறது. இக்கல்வெட்டில் மதிரை அமணன் அதினன் என்பவனது பெயர் காணப்படுகின்றது. மதுரையில் சமணர் குறித்த கல்வெட்டுகள் கிடைக்கா விட்டாலும் பூலாங்குறிச்சி, சித்தன்னவாசல், சமணர் மலை, சித்தர்கள் நத்தம் முதலிய இடங்களிலுள்ள கல்வெட்டுகளில் மதுரையில் சமண முனிவர்கள் தொடர்ந்து வளர்ந்தமைக்கான சான்றுகள் உள்ளன. கி.மு.மூன்றாம் நுhற்றாண்டு தொடங்கி இன்றும் சமணர்கள் வாழ்கின்ற நகரமாக மதுரை விளங்கி வருகிறது.

மதுரை நகரில் கிடைத்த கல்வெட்டுக்களில் தொன்மையானது வைகைக்கரையில் கிடைத்த ஏழாம் நுhற்றாண்டைச் சார்ந்த பாண்டியன் நெடுமாறனின் வட்டெழுத்துக் கல்வெட்டாகும். தற்போது இது மதுரைக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ளது. நெடுமாறன் வைகையாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டி அரிகேசரி என்ற தனது பெயரில் நீர்மதகு அமைத்ததை இக்கல்வெட்டு எடுத்துக் கூறுகிறது. மேலும் நெடுமாறன் செய்த கோசகஸ்ரம், துலாபாரம், இரண்யகர்பம் முதலிய மகாதானங்கள் பற்றியும் மங்கலபுரம் என்ற நகர் அமைத்து ஐம்பது ஆண்டுகள் ஆட்சிபுரிந்ததையும் இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் இதுவரை அறுபத்தாறு கல்வெட்டுக்கள் தொல்லியல் துறையால் படியெடுக்கப்பட்டுள்ளன. இவை கோயிலுக்குக் கொடுத்த தானங்கள், கட்டுமானங்கள் பற்றிக் கூறுகின்றன.

செப்பேடுகள்

மதுரைநகரில் இதுவரை தொன்மையான செப்பேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் விஜயநகரவேந்தர், மதுரைநாயக்கர் காலத்தினைச் சார்ந்த பிற்காலச் செப்பேடுகள் மட்டும் கிடைத்துள்ளன.

மதுரைநகரம் பிற தமிழ்நாட்டுத் தொன்மை யான நகரங்களோடு ஒப்பிடும்போது ஆழமான தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத நகர மாகவே இன்றுவரை இருந்துவருகிறது. வைகை யாற்றங்கரைப் பகுதியிலும் புறப்பகுதிகளிலும் தீவிரமான தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டால் மேலும் பல தொல்லியல் சான்றுகள் கிடைக்கும். மதுரைக்கோயில் வெளிப்பிரகாரங்களிலும் மத்திய காய்கறி மார்கெட் இருந்த இடத்திலும் அகழாய்வுகள் செய்வதற்கான இடங்கள் உள்ளன. இவ்விடங்களில் அகழாய்வு செய்தால் மதுரை எப் போது தோன்றியது எப்படியெல்லாம் அது பல்வேறு காலகட்டங்களில் வளர்ந்தது என்பதை முடிவு செய்ய வாய்ப்புள்ளது.

வைகையாற்றங்கரையிலும் உட்பகுதியிலும் கி.பி.7,8 ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த தொன் மையான சிற்பங்கள் மற்றும் பழமையான கல் வெட்டுகள் கிடைத்துள்ளன. தற்போது மதுரை அரசு அருங்காட்சியகத்தில் அவை உள்ளன. எனவே மதுரை ஆற்றங்கரைப் பகுதியிலும் உட்பகுதியிலும் மேற்பரப்பு ஆய்வும் அகழாய்வும் செய்தால் மதுரையின் ஆணிவேரைக் கண்டறிய வாய்ப்பு உள்ளது. மேலும் மதுரையும் மதுரை சார்ந்த பகுதிகளும் நகரமயமாவதால் தொல்லியல் தடயங்கள் அழிந்து வருகின்றன. மேலூர்க்குச் செல்லும் வழியில் அரிட்டாபட்டிக்கு முன்பாக உள்ள பெருமாள் மலையின் கீழ்ப்பகுதியில் நூற்றுக்கணக்கான கல்லறைகள் உள்ளன. இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இவை போன்ற பல பழங்கால இரும்புக்கால மக்களின் ஈமச்சின்னங்கள் பல மதுரைப்பகுதியினைச் சுற்றியுள்ளன. இவற்றையும் அழிவுக்கு முன் பாதுகாத்து அகழாய்வு செய்தால் மதுரையின் தொன்மைச்சிறப்பை உலகமறியச் செய்ய முடியும்.

துணைநூற்பட்டியல்

1.     கே.வி.இராமன், பாண்டியர் வரலாறு, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

2.     மதுரை மாவட்டத் தொல்லியல் கையேடு, தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை, சென்னை.

3. இரா.கிருஷ்ணமூர்த்தி, பாண்டியர் பெருவழுதி நாணயங்கள், சென்னை 1987.

4.     ஆறுமுகசீதாராமன், தமிழகக் காசுகள், தனலட்சுமிப்பதிப்பகம், தஞ்சாவூர், 2005

5. வெ. வேதாச்சலம், எண் பெருங்குன்றம், சாஸ்தா பப்ளிகேஷன்ஸ், மதுரை, 2000.

6.     Studies in South Indian Coins, South Indian Numinismatics Society. Vol. II Chennai, 1992.

7.     Excavations of Archaeological sites in Tamil Nadu (1969 -1995) State Department of Archaeology, Chennai 2004

8.     D.Devakunjari, Madurai through the ages, SAHER, Chennai, 1979.

Pin It