கோயில் நகராகிய மதுரை, கொலைக்கள நகராகவும் அவ்வப்போது தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது உண்டு. திருஞானசம்பந்தர் காலத்தில் சைவத்துடன் மோதி, சமாதி நிலை அடைந்த சமண மதம் இன்றளவும் மதுரையில் மறுமலர்ச்சி பெறவில்லை. பல்லாயிரம் சமணர்கள் கழு வேற்றப்பட்டு, கொல்லப்பட்டு, எரியூட்டப்பட்டதாகத் தெரிகிறது. இவர்களுக்கான இறுதிச் சடங்குகள் மதுரையை அடுத்த ‘திருப்பூவனம்’ எனப்படும் திருப்பூவனத்திலும், இராமேசுவரத்திலும் நடைபெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது. ‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி’ என்று வரலாற்றில் போற்றப்படும் வையை ஆற்றில் சமணர்களின் சாம்பல் திருப்புவனம் வையை ஆற்றில் வைத்து கரைக்கப் பட்டதற்குப் பின்னர்... திருஞானசம்பந்தர் இன்றைய மடப்புரம் வையை ஆற்றைக் கடந்து திருப்புவனம் செல்ல நினைத்த போது, ஆற்று மணல் பரப்பு முழுவதும் குமிழ் குமிழாகச் சிவலிங்கங்களாய்த்; தோன்றியதாம். இவற்றை மிதித்து திருப்புவனம் செல்வதா எனச் சிந்தித்து ஆற்றைக்கடக்காமல் வடகரையில் இருந்தவாறே வையை ஆற்றைப் பார்த்து வணங்கி வடகரை வழியே வாழும் மதுரை சென்றதாக வரலாற்று தகவல்.

madurai_600_copy

சமணர்களின் சாம்பலுடன் கரையாத எலும்புகள் இருந்து காலைத் தைக்குமோ என உள்@ற அஞ்சியே இறைவன் மீது பாரத்தைச் சுமத்தி திருஞானசம்பந்தர் ஆற்றைக் கடக்க மனமின்றி, வடகரை வழியே மதுரை சென்றார் எனச் சிந்தனையாளர் கூறிக்கொள்வதும் காதில் விழுகிறது. இங்கே நாம் குறிப்பிட எண்ணுவது வையை பற்றிய சிந்தனையே. ஆற்றங்கரை நாகரிகத்திற்கு அடித் தளமாக அமைந்த வையைநதி 19-ஆம் நூற்றாண்டு வரை தொட்டனைத்தூறும் மணற்கேணியாய் நிதியாய் நெடுங்காலமாய் மக்களுக்குக் கைகொடுத்து வந்துள்ளது.

சமீபத்திய திரைப்படம் ஒன்றில் கதாநாயகன், “நான் மதுரைக்காரன்டா” என்பார். அடிதடி அரிவாள் அரிச்சுவட்;டில் இந்த உரையாடல் ஒலி கைபேசியில் அழைப்பு ஒலியாக சிலரால் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் கேட்கநேர்ந்த சூழலில் தமிழகத்தின் வரலாற்றோடு கற்பு, பண்பாடு, மரபுகள் என விரியும் தளத்தில் கலித்தொகை கூறுவதையும் காது கொடுத்துக் கேட்போமே!.

“கார்முற்றி இணர்ஊழ்த்த கமழ்தோட்டமலர் வேய்ந்து

சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறம்எய்தி இழுநிலம்

தார்முற்றியதுபோல தகைபூத்த வையை தன்

நீர்முற்றி மதில்பொரூஉம் பகை அல்லால் நேராதார்”

(மருதக்கலி-2)

கார்காலத்தின் உச்சநிலை. வையை ஆற்று இரு பக்கக்கரை நெடுகிலும் பூமரங்கள். எவளோ பூச்சூடி பொலிந் திருப்பது போன்றதொரு காட்சி. மதுரை நகர் தனக்கு மாலை சூட்டிக்கொண்டது போலொரு மாட்சி. ‘வையை ஆற்றினால் வளைக்கப்பெற்றிருந்த மதுரைநகரக் கோட்டை மதிலுடன் வையை ஆற்று வெள்ளம் போரிடுவது போன்றும் அல்லாமல், அதனைப் பகைவர் போரில் வென்று வளைத்ததே இல்லை.

இத்தகைய மதுரைக்காரன் (தான்) என் கணவன் என்று தன்னை ஓர் தலைவி அடையாளப்படுத்திக் கொள்ளும்போது காணாமல் போகடிக்கப்பட்ட கோட்டை மதிலும் அகழியும் அதில் நிரம்பி வழியும் வையை வெள்ளமும் கால ஓட்டங் களைக் கடந்து நம் கண்கள் முன் தோன்றி வரலாற்றைப் பதிவு செய்கின்றன. இன்னொரு தலைவி வையை ஆற்றின் எழிலை எப்படி தரிசித்திருக்கிறாள் என்பதைக் காண்போம்.

“புனர்வளர் பூங்கொடி அன்னாய்...”

எனத் தொடங்கும் பாடலில்...

“கலிகெழு கூடல் வரைஉறழ்

நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக்

கரை அணிகாவின் அகத்து...” (மருதக்கலி-27)

எனத் தொடரும் வரிகளில்

“மதுரையின் மலைபோன்ற நெடுமதிலை”

(மருதக்கலி-5)

கடந்து வையை ஆற்றங்கரை ஓரப்பூங்காவினுள் நனவில் சென்றது போன்றே கனவில் சென்றேனடீ என்று மற்றொரு காட்சியைக் காட்டும் கலித்தொகை, வையை ஆற்று மணலில் மாலைநேரம் மகளிர் அமர்ந்து உரையாடிக் களிக்கும்போது பனி இமயத்தையொத்த அன்னப்பறவை இனங்கள் அவர்கள் அருகே வந்து நிற்குமாம்.

இன்னொரு தலைவி சொல்கிறாள், ஆற்றாமை காரணமாக, அடே! காணாமல் போன கணவனே? மதுரை நகர் காமன்விழா போலும் ஆற்றின் புனலாட்டு விழா இன்று நிகழ்கிறதே! அதில் பரத்தையர் புனலாடி மணற்பரப்பில் மகிழ்ந்திருப்பதைப் பார்க்கும் ஆவலிலாவது மதுரை நகருக்கு வந்து சேர் என்கிறாள்.

ஆறுகுளங்களை அன்னையின் கருணைப்பாலாகக் கருதிய காலங்களில் மதுரை நகரமக்கள் வைகை நதியை வையை என்னும் பொய்யாக் குலக்கொடியாகப் போற்றி வந்துள்ளனர். ஆற்றுநீர் அவர்தம் ஆட்டமாகத் திகழ்ந்த போதிலும் குறுமணலைத் தம் குல தெய்வம் போலும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பரத்தமை கொண்டவனோ எனத் தம் தலைவனைச் சந்தேகிக்கும் தலைவி சூடத்தில் அடித்து சத்தியம் கேட்பது போல் ஆற்றுமணலில் அடித்து சத்தியம் பெற்றதாக சரித்திரம் சொல்கிறது. திருநீற்றுக்குச் சமமாகக் குறுமணலைக் குனிந்து வணங்கி எழுந்து தம் நேர்மையை நிலைநிறுத்த நெற்றியிலும் பூசி, பூஜித்த புண்ணிய நதியின் இன்றைய போக்கைக் காணாத கண்கள் புண்ணியம் புரிந்தவை.

“ஆற்றைச் சுருட்டி விட்டோம்

ஆடிமடியை வருடி விட்டோம்

சேற்றைப் பெருக்கிவிட்டோம்

சேருங்காலம் வந்துவிட்டோம்”

என்று சேர்ந்திசை பாடிக்கொண்டு குப்பை கூளங்களைக் கொட்டி மகிழ்ந்து வருகிறார்கள். இதில் எத்தனை பேருக்கு வருத்தம் என்பதும் தெரியவில்லை.

காதல் திருவிழாக்களைக் காட்சியாக்கிக் காட்டும் கலித் தொகை, மருதக்கலி வாயிலாக மருதநிலம் சூழ்ந்த மதுரை வளத்தை வரிக்குவரி குறிப்பிடுகிறது. மருத நிலப்பகுதிகளில் குளங்கள் நிறைந்திருக்குமாம். மதுரையில் இருந்த மருத நிலங்கள் யாவும் மாயமாகி மாடமாளிகை கூட கோபுரங் களாகிவிட்டன. ஐயர் பங்களா பகுதியில் தொடங்கி மானகிரி மேலமடை பகுதி என மேன்மை பெற்று இருந்த விளை நிலங்கள் முழுவதும் வீட்டு மனையாகியதின் விளைவு பல்லாயிரப் பல்லாயிரத்தாண்டு குன்றுகளாய்க் குவிந்து கிடந்த மணற் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டு வைகை ஆறு இன்று கூவம் நதியாக்கப்பட்டுவிட்டது.

ஆற்றுநீரால் அழகு பெற்ற சாத்தமங்கலம் கண்மாய், தல்லாகுளம் கண்மாய், பீபிகுளம் கண்மாய், வில்லாபுரம் கண்மாய், அனுப்பானடி கண்மாய், சின்னக்கண்மாய் எனப் பல நீர்நிலைகள் அழிக்கப்பட்டு இன்று நிலத்தடி நீராதாரம் கேள்விக்குறியாகி விட்டது. இந்நிலையில் இருக்கி;ன்ற கண்மாய்கள் ஏப்பமிடப்பட கற்கள் நடப்பட்டு வருகின்றன.

திருப்பரங்குன்றம் வரும் பக்தர்களுக்குத் தேனினும் இனிய நீர்ச் சுரங்கமாக இருந்த தென்கால் கண்மாய், தென் பகுதியில் தேய்ந்து வீடுகளாய் விரிவடைந்துகொண்டு இருக்க, கிழக்கு மேற்குக் கரையோரங்களும் கேள்விக் குறியாகி நிற்கின்றன. கூத்தியார்குண்டு கண்மாயோ என்னைக் கூப்பிட மறுக்கிறீர்கள் என்பது போல் ஆக்கிரமிப்புகளால் அலங்கோல நிலையில் இருக்கிறது.

குளங்கோர்வை என்ற கூரிய பதங்கொண்டு கொத்திக் கொத்தி இந்த ரசி அழிந்துவா நிலப்பத்திரப்பட்டா முறையும் ஒருகாரணம் எனக் கணக்கியல் கூறுகிறது. கண்மாய்களை அழித்தே தீருவது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு அரசியல் வாதிகளும் இதையே அரவணைத்துச் சென்றுகொண்டு இருக்கின்றனர். செல்லூர் கண்மாயும் செல்லரித்துச் செத்து வருகிறது. மாடக்குளம் மரண அவஸ்தையில் கிடக்கிறது.

கால் நூற்றாண்டுக்கு முன் கண்களுக்குப் புலப்பட்ட குடிநீர் இலவசமாகக் கிடைத்தது. இப்போது காசு கொடுத்தாலும் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் கோளாறுகள் தொடங்கி விட்டன.

“சீரைத்தேடின் ஏரைத்தேடு” என்றார் நம் ஒளவை அன்று. நீரைத் தேடினால் நெடுங்கடல் செல்லும்நிலை இன்று. “சனி நீராடு” என்றும் அதே மூதாட்டி கூறினார். பனிநீரைக்கூட இன்று பார்க்கமுடியவில்லை. நீருக்கே “சனி” பிடித்தாட்டு கிறது. “தொன்மை மறவேல்” என்பதைப் பன்மயமாக்கல் பாழடித்துக் கொண்டு இருக்கிறது.

“கோன் நிலை மாற கோள் நிலை மாறும்” என்பதற் கொப்ப ஊழல் ஜனநாயகத்தில் ஊற்று நீருக்கே ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்க மானாட மயிலாட பார்த்து மயங்கிக் கிடக்கின்றது காலம்?

Pin It