எஸ்.அர்ஷியாவின் பொய்கைக்கரைப்பட்டி நாவலை முன்வைத்து
I
தமிழ்ச் சமூக வாழ்வியல் மரபில் நிலமும் பொழுதும் அடிப்படை ஆதாரங்களாகும் என இலக்கண - இலக்கிய நூற்கள் கூறுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலப்பகுப்பு முறையில் நெய்தல் தவிர்த்த நிலங்கள் மனிதன் தன் அடியால் நடந்து பழகிய பகுதிகளாகும். ஒவ்வொரு பகுதியிலும் நிலம் மற்றும் பொழுதின் அடிப்படையில் விலங்குகள், பறவைகள், மரம் செடி கொடிகள் எனப் பல்லுயிர்கள் (க்ஷiடி-னுiஎநசளவைல) வளர்ந்து பரந்து கிடப்பதைக் கருப்பொருட்கள் என்று இலக்கண நூலார் வரையறை செய்கின்றனர்.
இயற்கையாகக் கிடைத்த நிலத்தை மனிதனின் வாழ்க்கை முறையும் தேவையுமே அவ்வாறு பிரித்துக் காண வைத்தன. நிலம், உயிர்களின் தோற்றத்திற்குத் தேவையான நீர், உயிர்ச்சத்துக்கள் முதலிய மூலப் பொருட்களைக் கொண்டிருப்பதால் நிலத்தைக் கவர்தலும் மீட்பதும் ஆநிரை கவர்தலைப் போன்றே நிகழ்ந்துள்ளன. அதற்கான போர், புறப்பொருளாகப் பேசப்பட்டது. நிலத்தில் கிடைத்த பொருட்கள் (கிழங்கு முதலியன) விளைந்த பொருட்கள் (காய், கனிகள்) மற்றும் நீர் முதலியவற்றைப் பருண் மையாக உணர்ந்து பயன்படுத்தியதால் பெற்ற அறிவும் பயனும் நிலத்தின் உண்மையும் தேவையுமே வாழ்வின் அடிப்படைகளெனக் கொள்ள வைத்தன.
இப்படியாகத்தான் இங்கு நிலமும் நிலத்திலுள்ள நீரும் பிறவும் மக்கள் முதலிய உயிரினங்கள் அனைத் திற்கும் உயிராதாரமாக இருந்தன; இருந்து வருகின்றன. காலச் சுழற்சியில் ஓர்மையுடைய பண்பாட்டு வாழ்க் கைக்கு மனிதன் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்ட பிறகு, உற்பத்திக்கான அடிப்படையாக இருக்கும் நிலம் மனித மறுஉற்பத்தி தரும் திறனாளுமை உடைய பெண்ணை நிலத்தோடு ஒப்புமை செய்து கொண்டது. ஆறுகளும் மரங்களும் உயிராதாரம் ஆவதால் பெண்கள் நிலைத் தெய்வங்களெனப் போற்றப்பட்டனர். மறுஉற்பத்திச் சக்தியுள்ள பெண்ணும் ஆவும் நிலமும் போரின் வெற்றிப் பொருட்களாகப் பேணப்பட்ட மரபின் தொடர்ச்சி யாகவே இன்றும் ‘பெண்ணும் நிலமும்’ பார்க்கப் படுகின்றன.
வரலாற்றின் வழி ஆணாதிக்கச் செயல்பாட்டு வடிவங்களில் ஒன்றாகப் பெண்கள் அடிமைப்படுத்தப் பட்டனர் என்கிறோம். அதுபோலவே நிலத்தைத் தனக்குக் கீழ் வைத்துக்கொள்ளும் பேராசையின் வெளிப்பாடாக, ஆக்ரமிப்பின் செயல்பாடாக இருபெரும் உலகப் போர்களை மனித சமூகம் சந்தித்தது. உலகப் பெரும் பேரழிவான அந்நிகழ்வுக்குப் பின் மனித சமூகம் சிந்தித்தது. உலகப் பெரும் பேரழிவான அந்நிகழ்வுக்குப்பின் மனித மனம் வாழ்வின் நிச்சயமின்மை, பயம், பேராசை, பயங்கர வாதம், நம்பிக்கையின்மை, துரோகம், கொலை, கொள்ளை, வன்முறை, பாலியல், பலாத்காரம், பிறழ்வு மனநிலை முதலிய பல்வேறு சிக்கல்களிலும் உழன்று உருக்குலைந்து வீழத் தொடங்கியது.
மனித வாழ்வு சமூகம், வரலாறு, அறிவியல், தத்துவம், கலை, இலக்கியம், பண்பாடு முதலிய வாழ்வியல் கூறுகள் பலவற்றையும் தான் பெற்றும், தனது அடுத்தடுத்த தலைமுறைக்கும் வழங்கியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறை தனது அடுத்த தலைமுறைக்கு உலகின் செல்வங்கள் ஒவ்வொன்றையும் அதனதன் இயல்புத் தன்மை கெடாமல் விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். இது உயிர்க் கடமையாகும். ஒவ்வொரு உயிரும் தாம்தம் உயிருக்கு வழிவிடுவது என்பதே உயிர் இயங்கியலின் அடிப்படையாகும். இதில் எங்காவது ஓர் இழை அறுந்து வீழ்ந்தாலும் அக்குறிப்பிட்ட உயிர் அழிந்து படும். இதற்கு, முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படும் டைனோசர் போன்ற மிகப்பெரிய விலங்கினத்தின் அழிவு, இந்தியாவில் விளைந்து இன்று இல்லாமலே போய்விட்ட எத்தனையோ நெல் வகைகள் முதலிய வற்றைச் சான்றாகக் காட்டலாம்.
II
காலஓட்டத்தின் தொடர்ச்சியில் இன்றைய சூழலில் நமக்கும், முற்கூறப்பட்ட எல்லாச் சிக்கல் களும் இருப்பதை நாம் அனுபவிக்கவே செய்கின் றோம். முன்அனுபவங்களிலிருந்து படிப்பினை பெற்று, திருந்தாமல் உலக உருண்டையைப் பாது காப்பதில் எந்தவிதத் தன்னுணர்வும் இல்லாமலிருக் கின்றோம். நிலத்தை அடிப்படையாகக் கொண்ட, விவசாயத் தொழிலைச் செய்யும் எண்பது விழுக் காட்டிற்கும் அதிகமாக விவசாயிகளைக் கொண்டது நமது நாடென்ற சொரணை நமக்கிருப்பது கேள்விக் குறியே! நிலத்தையும் நீரையும் பயன்படுத்துவதில் உள்ள பொது நியாயமற்ற கொள்கைகள் உலகின் திசையெங்கும் படிந்து கிடக்கின்றன. அறிவியலும் தொழில்நுட்பமும் கைகோத்துச் செயல்படத் தொடங்கிய பிறகு, உடல் உழைப்பு மதிப்பிழந்தது; கருவியும் மூளையும் மதிப்புப் பெற்றன.
மனிதனை அவனது நிலத்தோடும் குடியோடும் அடிமைப்படுத்துவதற்குப் பதில் மனநிலை அளவிலே அடிமைப்படுத்தும் போக்கு வளர்ந்தது. இருத்தலிய, பின்னை நவீனத்துவ சிந்தனைகள் இதைப் பேசின. இம்மனநிலையைச் சரிதான் என்று ஒத்துக்கொள்ளும் மனஒப்புதல் எனலாம். இந்நிலைக்கு ஒருவர் ஆளானால், மறுவாழ்வு மிகக்கடினம். உலக நிலையில் இந்தியா (மக்கள்!) அப்படித்தான் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறது(கிறார்கள்). மற்றொருபுறம் நுகர்வுப் பண்பாடும், நுகர்விய வாழ்வியல் முறையும் மேலான (!) தரமான வாழ்வெனப் புதிய அடிமை வாழ்வையே கட்டமைக்கிறது. இதற்கு உலகமெங்கும் கிருமி போல் வேகமாய்ப் பரவி வளர்ந்துள்ள ஊடகங்கள் பெரும்பங்காற்று கின்றன.
இத்தகையதொரு சூழலில் ஒரு சமூகம் தன் சுய அடையாளத்தைத் தன் மண்ணிலிருந்து வேரொடும் வேரடி மண்ணோடும் கண்டு பெயர்த்து எடுக்க வேண்டிய வரலாற்றுத் தேவை எழுகிறது. உலக மயம், தனியார்மயம், தாராளமயம் முதலியவற்றை எல்லாம் கடந்து, சமாதானப் புறா விட்டுக்கொண்டே ஒரு நாட்டைப் பொருளாதாரம், நிறம், பண்பாடு ஆகியவற்றினடிப்படையில் ‘ஒரே மாதிரியாக’ உயர்த்தப் போகிறோம் என்ற ஒற்றைப் பண்பாட்டு வலைக்குள் வீழ்த்துவது பின்னைக் காலனித்துவத்தின் தொழில்நுட்பக் கூறுகளில் ஒன்றாகும். அதாவது, ஒரு நாட்டிற்குள் படையெடுத்துச் செல்லாமலே அதை அடிமை நாடாக மாற்றுவதாகும். நம் சொந்த நிலத்திலேயே நாம் அகதியாக்கப்பட்டவர் களைப் பற்றிய உண்மை வரலாற்றுச் சித்திரத்தைப் பொய்கைக்கரைப்பட்டியில் பார்க்கலாம். நிலங்கள் முதலாளித்துவத்தால் கொள்ளையடிக்கப்படும் நிகழ்வுகள், நிலத்தில் முளைத்து வளர்ந்து வாழும் மனிதர்களின் வாழ்க்கையாகப் பதிவாகியுள்ளது.
III
மதுரையை அடுத்து வடக்கே பதினைந்து மைல் தூரத்தில் அழகர்மலை சார்ந்த முல்லை - மருதம் கலந்த நிலப்பகுதியில் பெரியார் ஆற்றுப் பாசனத்தையும் மழையையும் நம்பிக் கிடக்கும் ஊர்களில் ஒன்று பொய்கைக்கரைப்பட்டி. அங்கு விவசாய நிலங்கள் திட்டமிட்டுத் தரிசாக்கப்படு கின்றன. நெல்லும் வாழையும் முளைத்த இடங்களில் வீட்டடிமனைகள் முளைத்துக் கிடக்கின்றன. “மரகதப் போர்வை போர்த்திய பரந்த பசும்பூமி கான்கிரீட் வெளிகளாகவும் அடுக்கு மாடிகளாகவும் அத்துக்கற்கள் ஊன்றப்பட்டும், மீதியிடம் பொட்டல் காடுகளாகவும் ஆகிப்போயுள்ளன. இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி, மண்ணோடு மண்ணாகக் கலந்து உயிர் மூச்சைக் கொடுத்த விவசாயிகளை இந்த அரசியல், சுவாசித்த பூமியைவிட்டு விரட்டி விட்டது; விரட்டிக் கொண்டும் இருக்கிறது. காசுக்கு நிலத்தை விற்றிருந்தாலும் கண்ணீரும் கம்பலையுமாக அவர்கள் வெளியேறுகிறார்கள். இதை அருகிருந்து பார்த்த அர்ஷியா துயரமும் வலியும் மிகுந்த எழுத்துக் களாகப் பதிவு செய்துள்ளார். காலம் பதிப்பகத்தின் வெளியீடாக நூறு ரூபாய் விலையில் 152 பக்கங்களில் டிசம்பர் 2010-இல் வெளிவந்துள்ளது.
செழுமையாக வளர்ந்து பரந்து விரிந்து கிடக்கும் விவசாய நிலமும் உயிர்களும் பயிர்களுமாய்ப் பசுமை பூத்திருக்கும் எழிலும் வயதான தாயின் வறண்ட மார்பென வளம் குன்றிப் போய்விடும் சூழல் உருவாகிறது; உருவாகப் போகிறது. வீட்டுக்கொரு மரமென வளர்ந்திருந்த வேம்பின் இருப்பும் இம்மர நிழலும் அதில் தங்கும் பறவைகளும் மண்ணையும் அதை நம்பிக் கிடக்கும் மக்களையும் நினைவுபடுத்துகிறது. வீட்டுவாசலுக்கு நேரெதிரே மலைப்பாம்பாய் நெளிந்து கிடக்கும் சாக்கடையை அடுத்து காவல்காரனைப்போல நின்றிருந்தது அந்த வேப்பமரம். ஊர் உருவான போது அங்கே குடிசை போட்டு ஒண்டிக்கொண்ட சவடையன் நட்டுவைத்த மரம் அது; என்று பேடண்ட் உரிமை யென்னும் உலக அதிகார அரசியலால் நாம் இழந்துவிட இருந்த வேப்பமரம் ஒரு பாத்திரமாக அறிமுகமாவதில் கதை தொடங்குகிறது. நிலத்தைச் சிறிது சிறிதாக வாங்கிக் குவிக்கும் கஜேந்திரகுமார், அவருக்கு உதவும் உள்ளூர்வாசிகள், நிலத்தைத் தரமறுப்பவர்களிடம் ஏமாற்றி எழுதி வாங்கும் தந்திரம்; ஆட்சியதிகாரத்திற்கு இடையிலும் மெல்லி தாய் மலரும் காதல்; நிலத்தைக் கடைசி வரை பிடிவாதமாய்த் தரமறுக்கும் மலைநாட்டான் போன்றவர்கள் என்றிந்த கதை சுற்றிச் சுழல்கிறது.
சங்ககாலப் போர் மரபில் நிலத்தைக் கையகப் படுத்துவதும் தன் ஆட்சி எல்லையை விரிவுபடுத்துவதும் அரசனின் வீரத்திற்குச் சான்றெனப் பேரரசுகள் உருவானதும் போர்களால் நிலங்களைக் கொள்ளையடித்துத்தான். மேற்கத்திய நாடுகள் உருவான போது அவர்களின் பொருளாதாரம் கடற்கொள்ளையினால் வளர்ந்தது என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அதிகாரமும் போர் வெறியும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் (!) முகமூடிக்குள் ஒளிந்துகொண்டிருப்பதை ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நிகழ்வுகளின் மூலம் நேரிடையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதுபோன்ற நாடுகள் முன்வைக்கும் தனியார்மய - தாராளமய - உலகமயக் கருத்துக்களினால் முதலாளித்துவப் பண்பினால் மனிதமனம் நுகர்வுப் பண்பை நோக்கி நகர்ந்து அழிந்துகொண்டிருக்கிறது. முதலாளித் துவத்திற்கு எந்திர நாகரிகம் உண்டு; மனித நாகரிகம் கிடையாது. இதற்கு கஜேந்திரகுமார் பாத்திரம் சான்றாகிறது.
ஒரு நாட்டின்மீது படையெடுத்துச் செல்லாமலே உள்நாட்டுக் கருங்காலிகளின் உதவியோடு, பண் பாட்டு நடைமுறைகளில் மறுஉற்பத்திக் குணமற்ற மலட்டுத் தன்மையை உருவாக்கி, பொருளாதாரம் மற்றும் அரசியல் அடிமைகளாக மாற்றும் உத்தி பின்னைக் காலனித்துவத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகும். கஜேந்திரகுமாருக்காக சமுத்திரக்கனி உதவுவதும் பலியாகிப் போவதும் இதனால் தான் நடந்தேறுகிறது. ஊரும் பெயரும் தெரியாத ஒரு தனி ஆள், ஓர் ஊரையே தன் கைக்குள் கொண்டு வருவதைத்தான் தரகு முதலாளித்துவம் செய்து முடிக்கிறது. கதை தொடங்கி முதல் இயல் முடியும் போது, தாய் மண்ணை விற்பவனுக்கும் கொடுப்ப வனுக்கும் மரணம் தான் தண்டனை என்பதைக் குறிப்பாலே சமுத்திரக்கனியின் முடிவு மூலம் ஆசிரியர் உணர்த்திவிடுகிறார்.
தரகு முதலாளித்துவத்தின் மிகக் கொடூரமான பண்புகளில் மற்றொன்று, உற்பத்தி (பண்பு)க் குணத்தையும் உற்பத்திக்கான அடிப்படை ஆதார மாக இருக்கும் நிலத்தை (பொருள்)யும் உற்பத்திச் சக்திகளாக இருக்கும் மனிதனின் கரங்களிலிருந்தும் ஏன் நினைப்பிலிருந்தும்கூட அப்புறப்படுத்தி விடுவது தான். உலகத் தரகு முதலாளித்துவம், சமுத்திரக்கனி போன்றவர்கள் ‘அண்ணன்களின் முன்னிலையில் பலியாவதும்’ மண்ணின் மைந்தர்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாய் மாற்றப்படுவதும் இப்படித்தான் நடந்து முடிகிறது. நாகரிகம் என்ற பேரில் மண்ணும் மண்ணுயிர்களும் அழிந்து போகும் படி பொக்லின்கள்கொண்டு சுத்தம் செய்வதும் விளை நிலங்களுக்குள் அத்துக்கற்கள் ஊன்றி அந்நியப்படுத்துவதும் தொடக்க நிலை வேலை களாகும். தொடங்கிவிட்ட பிறகு பெண்ணைச் சிங்காரிப்பதுபோல நிலத்தைப் ‘பிரித்துப் பிரித்துப் பிரித்து’ எடுத்துவிடுவார்கள். பெண் குறித்த ஆணிய அதிகார வெறியாளுமையின் வெளிப்பாடாக இதைப் புரிந்துகொள்ள வேண்டும். பாம்பு முதலிய உயிர்களின் வாழிடம் அழிக்கப்படுவதால் உயிர்ச் சுழற்சி சமநிலை அழிகிறது என்னும் மனிதனின் இயல்பான விவசாய அறிவு திட்டமிட்டே அழிக்கப் படுகிறது. “அதுகளோட இடம் இது. நாம வந்து ஆக்கிரமிக்கிறப்ப இப்படித்தான் தட்டுப்படும். ஆள் நடமாட்டம் இருந்துச்சுன்னா அப்டியப்டியே நகர்ந்து போயிரும். ஜேசிபி ஓடுறப்ப வர்ற அதிர்வுல பூச்சி பொட்டு எல்லாமே இடம் மாத்திக்கிட்டு கண்ணுக்காணாம ஓடிப்போயிடும்” (ப - 36) என்று முதலாளியின் பேச்சாக அமைத்திருப்பது தற் செயலானதல்ல; அப்படித்தான் முதலாளிகளின் நாக்கு பேசும்.
இலாபத்தை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு வியாபாரத்தைப் பெருக்குவதும் பல்வேறு புதுப்புது உத்திகளைக் கையாள்வதும் முதலாளித் துவத்தின் அடிப்படைக் குணங்களாகும். அப்படித் தான் கஜேந்திரகுமார் ‘அவுட்லாண்ட் பிராப்பர்டி புரோமோட்டர்ஸ்’ என்ற கம்பெனியை சமுத்திரக் கனியின் கொலை மரணத்தை அடிப்படையாக வைத்து ‘புது கான்செப்ட்’ என்று உருவாக்குகிறான். எதிராளியை மூளைச்சலவை செய்து வியாபார வலைக்குள் விழவைக்கும் MLM மார்க்கெட்டிங் உத்தியைப் பயன்படுத்தி அமெரிக்க ஸ்டைலில் ‘லெவின்ஸ்கி கார்டன்’ என்று பெயர் வைக்கப் படுகிறது. “வெளிநாட்டு மோகம் பிடிச்சுத் திரியிறவன் நம்ம நாட்டுல ஜாஸ்தி. அவனவன் ஓடிவந்து விழுவான். நம்மக்கிட்ட குடுக்க இடமில்லாம போற நிலைமைகூட வரலாம். நாம கட்டப்போற கிளப்ல ட்வெண்ட்டி போர் அவர்ஸ் ரெஸ்ட்டாரண்ட், ஷாப்பிங் மால், ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், இன்டர்நேசனல் ஸ்டாண்டர்டு ஸ்கூல், போட் கிளப், கோல்ப்கிளப், லேக், சில்ரன்ஸ் பார்க், லேடிஸ் அயிட்டம்னு எதுமே இல்லைன்னு சொல்ல முடியாத அவளவுக்கு நாம தந்துர்றோம்” (ப-4) எனத் திட்ட மிடுகிறார்கள்.
அதாவது நிலமும் பொழுதும் அமைந்துள்ளமைக்கேற்ப உழைப்பும் வாழ்க்கையும் சிந்தனையும் மாறுபடும்; இந்த அடிப்படையில் தான் அயல்நாட்டினரின் வாழ்க்கையும் பண்பாடும் நம்மிலிருந்து வேறுபடுகிறது. வெப்பமண்டலப் பகுதிகளில் வாழும் நாம், குளிர் பிரதேசத்து சூழல் சார்ந்த உடைகளான கோட், சூட், காலணி முதலிய அணியும் பழக்கத்தை, இயற்கைப் புரிதலின்றி, தன்னுணர்வற்று அப்படியே நாமும் பின்பற்று வதை ‘மோகம்’ எனலாம். நம் புவிச்சூழலுக்கு ஒத்துவராத இந்தச் செயல்முறை வாழ்வியலுடனான சிந்தனைப் பிறழ்வை உண்டாக்குகிறது. மனிதனின் உழைப்பு மறுதலிக்கப்பட்டு எல்லாவற்றையும் இருந்த இடத்திலேயே பெற்று, அனுபவிக்கத் துடிக்கும் நுகர்வுப் பண்பை வளர்க்கும் அவசர மனநிலைக்கு ஏற்ற இடமாக லெவின்ஸ்கி கார்டன்கள் உருவாக்கப்படுகின்றன. இவை இந்தத் தலை முறைக்குக் கிடைக்கலாம்; அடுத்த தலைமுறைக்கு?
இன்றைய நவீன தரகு முதலாளித்துவம் தன் இலாப வேட்டைக்குக் கண்டுபிடித்த மற்றொரு உத்தி தரகர்கள்; புரோக்கர்கள் என்றால் எளிதில் விளங்கும். ‘கமிஷன்’ என்னும் ஆதார சுருதியில் இயங்குபவர்கள். இதனை ‘லஞ்சம்’ என்று நீங்கள் மொழிபெயர்க்கலாம். இப்படித்தான் பல லட்சம் கோடிகளை இழந்துவிட்டுப் பதறி, அலறியடித்துக் கொண்டு கிடக்கிறோம். இதுபோலத்தான் மலைக் கள்ளனால் செவலையம்மாள், வழிவிட்டான் போன்றவர்கள் சுரண்டிச் சாகடிக்கப்படுகிறார்கள். படைப்புத் திறனும் உழைப்புத் திறனும் நிறைந்த மண்ணில், முளைத்து விளைந்த மனுசர்கள் மரமாகி, பூத்து, காய்த்து, கனிந்து அடுத்த தலைமுறையைத் தொடங்கி வைப்பதற்கான விதை தரும் முன்னமே கிள்ளி எறியப்படுகிறார்கள். பொய்கைக்கரைப் பட்டியின் நிலம் முழுவதும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், அண்ணன்கள், தம்பிகள், தானைத் தலைவர்கள், உடன்பிறப்புகள், இரத்தத்தின் இரத்தங்கள், தன்மானச் சிங்கங்கள், மனிதக் கடவுள்கள், மனிதத் தெய்வங்கள் முதலியோரின் கூட்டுக் கொள்ளையால் கைப்பற்றப்படுகிறது.
நிலம் மட்டுமில்லை, நிலத்தைக் கட்டிக்கொண்டு கிடப்பவர்களின் விவசாயத்திற்கு வரும் தண்ணீரைத் தடுத்து வழியையும் அடைத்துவிடுகிறார்கள். சாகு படிக்குப் பெரியாற்றுக் கால்வாயில் வரும் தண்ணீரை அணைகட்டித் தடுத்து, விவசாயியின் விலாவை ஒடிக்கிறது தரகுத்தனத்தின் கொடுங்கரம். உலகம் முழுக்கவும் ஒப்புக்கொண்டுள்ள கடைமடைப் பாசனக்காரனுக்கு முதலில் தண்ணீர் விட வேண்டும் என்னும் பொது நீர்ப்பாசன நீதி கொல்லப்படுகிறது. ஆனால் இங்கு நீர்ப் பங்கீட்டில் தமிழகம், கர் நாடகம் எதிரும் புதிருமாகச் செயல்படுவதையும் நடுவணரசு கையாலாகாத்தனமாய்ப் பார்த்துக் கொண்டு இருப்பதையும் நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆம்! வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் என்று பாடிய பாரதி காற்றின் திசையெங்கும் புலம்பியடி திரிகிறான்.
IV
நிலத்தைப் பெண்ணாகப் பார்த்து மரியாதைப் படுத்திக் கொண்டாடும் மரபு நமக்குண்டு. இன்று நிலத்தின் மீதான மதிப்பு என்பது பணமாக மாற்றப் படுவதுபோல, நிலம் போல் மறுஉற்பத்திதரும் பெண்ணுடலும் பணமாகப் பார்க்கப்படுவது முதலாளித்துவ வியாபார மனநிலையாகும். ‘விளம்பரங்களில் பெண்கள் பயன்படுத்தப்படுவது இதற்குச் சான்றாகும். இதனால் காலங்காலமாகப் பெண்ணினம் தன்மீது ஆணினம் சுமத்திவரும் கட்டுப்பாடுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் அவதூறுகளுக்கும் பழிவாங்க வேண்டுமென்ற உணர் வினை மனதில் பதுக்கி வைத்துக்கொண்டே வருகிறது. எவ்வளவு முழுமையான ஆண்பிள்ளை யாக இருந்தாலும் அவனை அவமானப்படுத்தி நிலைகுலைய வைக்க, பாலியல் மாற்று உறவினை ஒரு பழிவாங்கும் வழிமுறையாகக் கைக்கொள் வதைக் காணலாம். இதற்குச் சங்கரம்மா போன்ற வர்கள் சான்று. இதனைச் சமன் செய்வதான ஆணிய எதிர்வினையாகத்தான், செயல்பாடாகத் தான், வேப்பமரத்தை விடிய விடியத் தனியாளாய் நின்று நெஞ்சால் முட்டி முட்டிச் சாய்க்கும் நிகழ்வு அமைகின்றது. நாவலில் வரும் காதல் செய்யும் பெண்களின் உணர்வுகளும் ஒடுக்கப்பட்டவை யாகவே உள்ளன. பிற பாத்திரங்களால் நகைப்பிற் குள்ளாக்கப்படும் பொழுது, இயல்பான காதலுணர்வு கள்ள உறவாகக் கருதப்படும் அவலம் நிகழ்வதை அப்பாத்திரங்கள் காட்டுகின்றன.
வரலாற்றுத் தகவல்களை வாசிப்பின் வழியாக நிகழ்காலத்திய சொல் முறைக்குள் கொண்டு வந்து பேசும் செய்முறை, வெள்ளுர் முளைப்பாரி திருவிழா போன்ற பண்பாட்டு நடவடிக்கைகளைக் கிராமத்து மக்களின் நம்பிக்கை சார்ந்த வாழ்வும் உழைப்பு மாய் மறுபதிவு செய்துள்ள பாங்கு போன்றவை நாவல் போக்கின் மைய நீரோட்டத்தின் கிளைப் பாய்ச்சல்களாகும். கதை சொல்லலுக்கான நடை, உவமை, சூழலைப் பின்னிக் காட்டும் முறை எனப் புனைவின் வெளிக்குள் பயணம் செய்து தன் மனதை உடைத்த விசயங்களாகப் பதிவு செய்திருக் கிறார். ஒவ்வொரு இயலிலும் காட்சிப் பதிவும் விவரணையும் விவரங்களும் கதையை நகர்த்திச் செல்கின்றன. வாசிக்கும் நாம் ‘அரசியல் பிழைத் தோர்’ உலகில் பயணிக்க முடிகிறது.
‘எல்லாக் கதையும் முடியப் போகுது’ என்ற உணர்வு நமக்கு வரும்பொழுது பொய்கைக்கரைப் பட்டி நிலம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டு விடுகிறது. உழைப்பைப் பொருளாக, பணமாக மாற்றாமல், பணத்தைக் கொண்டு பணத்தை உற்பத்தி செய்யும் தொழில் தரகு முதலாளித் துவத்தின் உடன் விளைபொருளாகும். இவர்களை ‘வானாபார்ட்டி’ என்பர். நடுத்தர வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம், வறுமைக் கோட்டில் உள்ளவர்கள், சிறுதொழில் செய்வோர், அன்றாடங்காய்ச்சிகள், கூலிகள் எனச் சொல்லப்படும் அனைவரின் குரல் வளையையும் பிடித்து இறுக்கிக் கொல்லுவதற்கு “வட்டி, பைசாவட்டி, மூணு பைசா வட்டி, அஞ்சு பைசா வட்டி, பத்து பைசா வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி, சுருள் வட்டி, டிஜிட்டல் வட்டி, டிஸ்கோ வட்டி, ராக்கெட் வட்டி, சாட்டிலைட் வட்டி உள்ளிட்ட இன்னபிற வட்டிப் பெயர்களைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்குத் தந்ததில் அப்பனுக்கும் மகனுக்கும் பங்கிருக்கிறது” (ப.23). இந்தக் கூற்றின் நிகழ்கால உண்மைகளும் உட்பொருளும் அடி வயிற்றைத் தாக்கி அழிப்பவை. இப்படியாகச் செத்தவர்கள், தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர் களின் எண்ணிக்கைக்குச் சமமாகும். சமூக நிகழ்வு களை இலக்கியமாகப் படம் பிடிக்கும் படைப் பாளியின் கவனிப்பிற்கும் அவதானிப்பிற்கும் சமூக அக்கறைக்கும் இது சான்றாகும்.
மண்ணில்தான் ‘எல்லா உயிரும் இன்புற்றிருக்க’ எல்லாம் இருக்கிறது. மனிதனுக்கு உயிர்வாழ உடலில் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானவை. ஒருவன் தன் கை, கால், காது, மூக்கு என ஒவ் வொன்றாகத் தானே வெட்டி வெட்டிப் பலியிட்டுக் கொள்வதைப் போன்றதுதான் ‘ரியல் எஸ்டேட்’ விற்பனைமுறை. உடலில் ஓர் உறுப்பு பழுதென் றாலும் ஒட்டுமொத்த உடலுக்கே பாதிப்பென்று ஆராய்ந்து மருந்து கொடுப்பது நமது மரபு. ஆனால் தலை, கண், மூளை, காது, நுரையீரல், இதயம், குடல், சிறுநீரகம் என்று உடலை வெறும் உறுப்புகளின் தொகுப்பாகப் பார்த்து, ஒவ் வொன்றிற்கும் ஒவ்வொரு வகை பணச்செலவை நிர்ணயிக்கும் வியாபார மனநிலைதான் நிலத்தைக் கூறுபோட்டு விற்பதிலும் இருக்கிறது.
காலங்காலமாய் உழைத்து நிலத்தைப் பண் படுத்திச் செழிக்க வைத்த பூமியை ‘வலியாம’ வாங்கிக் காசு பார்க்கும் அறிவற்ற அயோக்கியத் தனம் நடக்கிறது. இவ்வளவு இருந்தும் “இந்த மண்ணு என் தாத்தனுடையதாச்சே, இங்கே வீசுற காத்து எங்க அப்பனுடையதாச்சே, நான் இங்கே நிற்கிறது வாழ்க்கையாச்சே... நீ வேற எடம் வாங்கித் தர்ரேன்று சொல்றியே... என் தாத்தனோட மண்ணு... எங்கப்பாரோட மூச்சு... என் வாழ்க்கையை வாங்கித் தருவியா? சொல்லு?” என்று கேட்கும் மலை நாட்டானைப் போன்றவர்கள் இன்னும் இருக் கிறார்கள். இந்தத் தீயைக் காப்பாற்றி வைப்பதை - வைக்க வேண்டுமென்ற உணர்வினை நாவல் உண்டாக்குகிறது.
V
நாவலின் காட்சிகள், புனைவுகளின்றிப் புனைவுத் தளத்திற்குச் செல்ல முற்படுவதை அவதானிக்கலாம். இது எழுத்து நடையைக் காவியம், கவிதைத் தன்மைக்கு உயர்த்துவதற்கு எடுக்கும் முயற்சியால் விளைகிறது. நாவலில் ஓரிடத்தில், சாணி வைத்துப் பூசணிப்பூ வைக்கும் ஆச்சாரத்திற்குள் நுழைந்து விட்டார்கள் என்று எழுதுகிறபோது, நீண்ட காலமாகப் பண்பாட்டு அடையாளமாய் வருகிற இப்பழக்கத்திற்கு வந்துவிட்டார்கள் என்று சொல்கிற பொழுது காலக்குழப்பம் வருகிறது. அவ்வப் பொழுது கதையோட்டத்திற்கிடையில் தொங்கு சதையாக, விமர்சனமாக இருந்தாலும்கூட ஆசிரியர் நேரிடையாகப் பேசுவதாக வரும் (ப.39) இடங் களைத் தவிர்த்திருக்கலாம். அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’வில் பதிவாகியிருந்த உணர்வு வெளிப்பாடு சற்றே தவறி, அநீதி கண்ட கோபமும் கொந்தளிப்பும் மிகுதியாகி ஆவணப்படுத்தலாக அழகியலோடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நாவலைப் படித்து முடித்த ஒருநாள், நண்பர் அர்ஷியாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “பொய்கைக்கரைப்பட்டி போகலாமா?” என்றேன். உடனே வந்து விட்டார். இரு சக்கர வாகனத்தில் அழகர்மலை நோக்கிச் செல்லும் வழியெங்கும், தான் நடந்து நடந்து இடம் பார்த்ததைக் கதை கதையாய்ச் சொல்லிக்கொண்டே வந்தார். எனக்குச் சமுத்திரக்கனி கொலை செய்யப்பட்ட இடத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் பொய்கைக் கரைப்பட்டியின் ஊருணி, மரம், ஊருணிக்குள் நிற்கும் மைய மண்டபம் எனக் காட்டிவிட்டு, பெரி யாற்றுக் கரைவழி போனபோது, ஒரு கட்டடம்கூட இல்லை. லெவின்ஸ்கி கார்டனுக்காக வளைக்கப் பட்ட நிலம் நீளம் சென்று திரும்பி, ஊருக்குள் வந்தபோது, ஒரு பெண் எதிர்ப்பட்டு, “வாங்க சார்... நல்லாயிருக்கீங்களா?” என்றார். சிறிது நேரம் நலம் விசாரித்த பிறகு... “என்னாச்சு?” என்பது போல நான் பார்க்க, புரிந்துகொண்ட அந்தப் பெண், “இன்னும் எந்தக் கார்டனும் வீடும் கட்டல சார்...” என்ற போது, அழுதுவிடும் அந்த முகத்தில் வழிந்த ஏமாற்றத்தில், எனக்கு அவமானமாக இருந்தது.
திரும்புறப்ப, “அப்படியே நான்... ஒரு மாதிரியா ஆயிட்டேன். சார்...” என்றேன்.
“இல்ல அழகு... அது வந்து கொடூரம். கடம்பவனம், ஹவாவேலின்னு நெறையா வருது... எல்லாரு பொழப்பும் போயிருச்சு....!” என்று திரும்பத் திரும்ப அர்ஷியா சொல்லிக்கொண்டே வந்தார்.
பொய்கைக்கரைப்பட்டி
ஆசிரியர் : எஸ்.அர்ஷியா
வெளியீடு : காலம் வெளியீடு
விலை : ரூ.100.00