ஈழ நாட்டு சங்காணையில் 5ஆம் திகதி சனவரித் திங்கள் 1926இல் பிறந்தவர்தான் ஜே.பி. மற்றும் ஜே.பி.ஜே என்ற சுருக்க பெயர்களால் அழைக்கப்பட்ட, அண்மையில் காலமான ஜோசுவா பெஞ்சமின் ஜெயரெத்தினம். வெளிஉலகத்திற்கு சிங்கப்பூரின் சிற்பி என்று அறிமுகமாகியுள்ள முன்னாள் பிரதமரை கருத்துக் களத்தில் எதிர்த்து நின்ற ஒரே மாவீரன்!

அன்றைய மலாயாவில் (இன்றைய மலேசியா) மூவார் எனும் நகரில், பிரெஞ்சு கான்வென்டில் பள்ளிப் படிப்பைத் துவங்கி, இரண்டாம் உலகப் பெரும் போரின் பின் சிங்கப்பூரில் செயின்ட் ஆண்ரு கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து, இலண்டன் நகரின் பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராக தொழிலாற்றியவர் ஜே.பி.ஜே. திசம்பர் 1963இல் தாம் ஆற்றி வந்த மாவட்ட முதன்மை நீதிபதி பணியைத் துறந்து அரசியலில் ஈடுபட்டவர்.

தீவின் அரசியல் வரலாற்றில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஏறத்தாழ இரு பத்தாண்டுகள் இடைவெளியில் 31.10.1981ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக அன்சன் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் வென்றார். ஆளும் மக்கள் செயல் கட்சி (ம செ க) சார்பில் போட்டியிட்ட பாங் கிம் இம் 47.1% வாக்குளை பெற்ற வேளையில் ஜே.பி.ஜே. பெற்றிருந்த விழுக்காடோ 51.9% ஆக இருந்தது. 1984ஆம் ஆண்டு நடந்தேறிய பொதுத்தேர்தலில் அன்சன் தொகுதியில் மீளப் போட்டியிட்டு தாம் முன்னர் வென்ற நாடாளுமன்ற இருக்கையை கூடிய பெரும்பான்மையில் தக்க வைத்துக்கொண்டதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

வாக்காளப் பெருமக்கள் அவரை வெற்றியாளராக்கிப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தபோதும் எதிர்த்தரப்பு அங்கிருந்து அவரை வெளியேற்றும் முயற்சியில் பின் வாங்காது தொடர்ந்து மூர்க்கத்தோடு ஈடுபட்டது. அதன் விளைவால் தேர்தல் முடிந்த இரு மாதங்களுக்குப்பின் கட்சிக் கணக்கைத் தவறாகக் காட்டியதாகக் குற்றஞ் சுமத்தப்பட்டு வழக்கு மன்றத்தை எதிர்கொண்டவர். 1986 ஆம் ஆண்டு ஒன்றைத் தவிர பிற அனைத்திலிருந்தும் நிரபராதி என்று தீர்ப்பு வர, அவற்றில் திருப்தியுறாத அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் மேல் முறையீடு செய்ய, வழக்கை மீள் விசாரணை செய்ய உத்தரவிட்டார் தலைமை நடுவர்.

மறு விசாரணை முடிவில் ஜே.பி.ஜே குற்றவாளி எனத் தீர்ப்பு அளித்த மாவட்ட வழக்காடு மன்ற நடுவர் மூன்று மாதச் சிறைத்தண்டனையையும் 5,000 தாலர் அபராதத்தையும் விதித்தார். பின்னர் சிறைத்தண்டனை ஒரு மாத காலமாகக் குறைக்கப்பட்டது. சட்டப் பணி மேற்கொள்வதினின்றும் தடுக்கப்பட்டார். இக்காரணங்களால் 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அவரின் இருக்கை காலியானது.

மேற்சொன்ன விசாரணை உயர்நீதிமன்றத்தில் அல்லாது மாவட்ட நீதிமன்றில் நடைபெற்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டி பிரிவி கவுன்சிலுக்கு முறையீடு செய்தார். ஜே.பி.யின் தரப்பில் நியாயம் இருப்பதையும் அவர் தவறாகத் தண்டிக்கப்பட்டு விட்டார் என்பதனையும் ஏற்ற இலண்டனின் பிரிவு கவுன்சில் சிங்கப்பூர் அதிபரின் பொது மன்னிப்பிற்கு மனுச் செய்யும்படி கருத்துரைத்திருந்தது. அப்பரிந்துரையின்படி தம் மீதான குற்றச்சாட்டை நீக்க நீதித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கும்படி நாட்டுத்தலைவருக்கு மனுச் செய்தார். மனு ஏற்கப்படாத நிலையில் 1991ஆம் ஆண்டுவரை சட்டத்தரணி தொழில் புரியத் தகுதியற்றவராகவே விடப்பட்டார்.

1988ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜே.பி. அவர்கள் போட்டியிடத் தகுதி பெறவில்லை என்ற போதும் சோர்ந்துபோய் மூலையில் முடங்கிவிடாமல் பாட்டாளிகள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துக் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இத்தேர்தல் முடிந்த பின்னர்தான் கோ சோக் தோங் தலைமையமைச்சர் ஆனார். அப்போது, தற்கொலை செய்துகொண்டு மாண்ட தேசிய வளர்ச்சித்துறையின் முன்னாள் அமைச்சர் தோ சேங் வான் குறித்து ஐயப்பாடுகள் சிலவற்றை தேர்தல் பரப்புரையின் போது எழுப்பியிருந்தார் ஜே.பி.ஜே. (இலஞ்சக் குற்றச்சாட்டு விசாரணை நடந்துகொண்டிருந்தபோது தற்கொலை செய்துகொண்டவர் அவர்.)

தேர்தல் முடிந்தவுடன் ஜே.பி. தம்மை அவதூறு செய்ததாக முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ வழக்குத் தொடர, அவ்வழக்கை செவிமடுத்த வழக்காடுமன்ற நடுவர் லாய் கியூ சாய் வாதிக்கு இழப்பீட்டுத் தொகையாக 260,000த்தோடு அதற்கான வட்டித் தொகையையும் செலுத்தும்படி தீர்ப்பளித் தார். இவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட போதும் தீர்ப்பு என்னவோ சொல்லிவைத்தாற்போல் ஜே.பி.க்கு எதிரானதாகவே அமைந்தது.

இருள் சூழ்ந்த குட்டி இந்தியா!

இவற்றுக்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ''சிராங்கூன் ரோடு (குட்டி இந்தியா) இருளாய் இருக்கிறது” எனும் பொருளில் பேசியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொதுவிடுமுறை நாட்களில் சிலிகி, சிராங்கூன், சந்தர் சாலைகள் மற்றும் ஜாலான் பெசார் ஆகிய பகுதிகளிலும் அவ்வட்டாரத் திறந்த வெளிகளிலும் தெற்காசிய நாடுகளின் குடிமக்கள் நிரம்பி வழிவர். ஜாலான் பெசார் குழுத் தொகுதி (எதஇ) பாராளுமன்ற உறுப்பினர் ச்சூ வீ கியாங்கின் இந்தியர்கள் பற்றிய கருத்து குறித்து சீன வமிசாவளி வாசகர் ஒருவரின் கடிதத்தையும் பாட்டாளிகள் கட்சிப் பொதுச்செயலாளரின் விடையிலிருந்தும் இன்றைக்கும் ஆண்டுகொண்டிருப்போரின் உளப்பாங்கினை ஒருவாறு தெளியலாம்.

ஆசிரியர் ''சுத்தியல்”

அன்புள்ள ஐயா,

ச்சூ வீ கியாங் அவர்கள் சம்பந்தப்பட்ட கருத்திற்கு திரு கோ சோக் தோங் (அன்றைய பிரதமர்) தந்திருக்கும் விளக் கத்தைத் தாங்கள் படித்தீர்களா? இது ஒரு எடுத்துக்காட்டு. (எனவே தாங்கள் நீண்ட நாட்கள் ஒருவர் நாடாளுமன்றத்தில் இருப்பதே இனவாதத்திற்கான காரணம் என்று கூறலாம்). இது போன்ற மனநிலையுடையோர் மக்கள் செயல் கட்சியில் அதிகம் உள்ளனர் என நாம் கருதலாமா? மேலும் இதைவிட அதிகமான ச்சூ வீ கியாங்கள் ம செ களில் உள்ளனர்.

சிங்கப்பூர் செய்தித்துறை இதுபற்றி எழுதுவதற்கு வழியே இல்லை. சுத்தியல் இது பற்றி முழுமையாக எழுதும் என நம்புகிறோம். இனவெறி ஒரு அபாயகரமான விளைவு. ச்சூ வீ கியாங் போன்ற சில ம செ க நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இவர்கள் பொதுச்சேமிப்புகளை விரயம் செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். இவர்களைப் போன்ற புல்லுருவிகளின் பின்னணி பற்றி தெரிந்துகொள்ள பொதுமக்கள் விரும்பு கின்றனர். நாம் இவர்களைப் பற்றி மக்களுக்கு விளக்கம் தர வேண்டும். ம செ கட்சிக்கு அளிக்கப்படும் வாக்கு இதுபோன்ற இனவெறிக்கு வாக்களிப்பதாகும். இவர்களின் அடிமட்ட ஈடுபாடுகளை நாம் அறிய முடியுமா? ம செ கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?

இப்படிக்கு, தே மோங் சூன்.

விடை: “நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பேச்சுக்காக சிங்கப்பூரர்களும் குறிப்பாக கறுப்பு நிற மேனியரும் குழப்பமடைய வேண்டாம் என்பது பாட்டாளிக் கட்சி பொதுச் செயலாளர் அவர்களின் வேண்டுகோள்.

“பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் இருள் நீக்கி வெளிச்சத்திற்கு வந்துவிட்ட பின் திரு ச்சூ அவர்கள் நிறவேறுபாடு எனும் அவரது சொந்த இருளுலகில் வாழ்கிறார்.

“ஒருவருடைய நிறத்தோற்றம் எதற்கும் காரணமல்ல என்று பெரும்பாலான சிங்கப்பூரர்கள் கருதும் போது ச்சூ அவர்கள் மட்டும் இன்று வரை நிறபேதம் காண்கிறார். சிங்கப்பூரர்கள் அவருக்காக வருந்தி அவரை இருளிலிருந்து வெளிக் கொணற முயற்சிக்க வேண்டும்.” நாட்டு நலன், அமைதி மற்றும் நிலைத்தன்மையை முதன்மை யாகக் கொண்ட அரசியல்வாதி ஒருவரின் நிலைப்பாட்டினை இப்பதிலின் வழி நன்குணரலாம்.

நிர்வாக அதிகாரம் கொண்ட அதிபர் தேர்தல்:

நிர்வாக அதிகாரங்களைக் கொண்ட அதிபர் முறைக்கான திட்டத்தை ம செ க அரசாங்கர் முதன்முதலாக அறிவித்த போது பாட்டாளிகள் கட்சி அத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தது. சனநாயக முறையில், நாடாளுமன்ற அரசாங்கம் மிகச்சிறந்தது என்பதாலும் அவை நாடாளுமன்றத்திற்கும் வாக்காளர் களுக்கும் பதில் சொல்லக்கூடிய பொறுப்பை ஏற்றிருப்பதால் அம்முறையே சிறந்தது என்பதோடு, 1959ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்து அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு இலண்டனுக்குச் சென்று ஏற்றுக்கொள்ளப் பட்ட நாடாளுமன்ற அரசாங்க முறையிலிருந்து சிங்கப்பூர் மாறக்கூடாது என்றும், அப்படியும் மாற்றம் தேவைப்பட்டால் செயற்படுத்துவதற்கு முன்னம் பொது விவாதங்களும் வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆனால், 1993ஆம் ஆண்டு நிர்வாக அதிகாரம் கொண்ட முதலாம் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அவற்றில் போட்டியிட முன் வந்த ஜே. பி. முந்தைய எதிர்ப்பிற்கு மாறுபட்ட தம் நிலை, கட்சியின் கொள்கைக்கு எவ்வகையிலும் முரண்பாடானதல்ல என்பதனைத் தெளிவுபடுத்தியிருந்தார். "சுத்தியலில்” வெளிவந்த விளக்கத்தைப் பார்ப்போம்:

நாடாளுமன்ற அரசாங்க முறையிலிருந்து மாறுபட்ட நிர்வாக அதிகாரங்களைக் கொண்ட அதிபர் முறை சிங்கப்பூருக்குத் தேவையில்லை என்ற கொள்கையில் பாட்டாளிகள் கட்சி இன்னமும் வலுவாக இருக்கிறது. எனில், நான் ஏன் போட்டியிட வேண்டும் என்பது வினா! நிர்வாக அதிபர் முறை மாற்றத்திற்கு ம செ க கூறிய முக்கிய காரணம் சிங்கப்பூர் நிதி இருப்பு (கையிருப்பு) வரவு, செலவுத் திட்டத்தினால் குறைவதாகக் கருதினால் அதிபர் தமது ரத்து அதிகாரத்தினால் அவற்றைத் தடுக்கலாம் என்பதே.

அத்தகைய நிலை ஏற்படும் வாய்ப்பிருப்பதாக நான் கருதவில்லை. ம செ க கட்சியில் இருக்கும் வரை, அவ்வதிகாரத்தை அதிபர் பயன்படுத்தும் நிலை ஏற்படும் என்பதை எம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஜே.பி.யின் தூர நோக்குடன் இயைந்த இக்கூற்று முதல் அதிபராக ஓங் தேங் சியோங் பதவியேற்றிருந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்கூறில் மெய்ப்பட்டது வரலாறு.

நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அண்மைய எதிர்காலத்தில் அத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்தும் நிலை எனக்கு ஏற்படாது. நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டுமே தவிர, அதிபர் தமது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எமது கொள்கை. இது தவிர அதிபருக்கு வேறு கடமைகள் இருக்கின்றன என்பது எமது கருத்தாகும். அரசமைப்புச் சட்ட வரம்புக்குள் மக்களின் தேவைகளையும் விருப்பு மற்றும் நம்பிக்கைகளையும் பாதுகாப்பதோடு அவற்றை மேம்படுத்தவும் முடியும் எனத் திடமாக நம்புகிறேன். எனவே, அதிபருக்குப் பயனுள்ள பங்கு இருப்பதை உணர்கிறேன். ம செ கவின் திட்டப்படி அமையும் பணி அல்ல அது. மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஆற்ற வேண்டிய பங்கு அதுவே என்பதால் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளேன்.

அதிபராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு வழங்கப்பட்டால் நான் ஆற்றக்கூடிய மூன்று இலக்குகளை முன்வைக்கிறேன்.

1. குமுகாயத்தில் சனநாயகமும், நீதியும் வாழ்க்கை முறையாக வலுப்பெறுவதற்கு நாட்டிலுள்ள மக்கள்நாயக அமைப்புகளை மேம்படுத்தி வலுப்படுத்துதல். 2. நம் நாட்டின் பல்வேறு சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து ஒரே சிங்கப்பூர் சமுதாயமாக்குதல்.
3. நமது அமைப்பில் புறக்கணிக்கப்பட்ட வர்கள் மீது கவனங்குவித்தல்.

மேற்சொன்னவற்றை நிறைவேற்றுவதற்கு 1971ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தது முதல் நேசித்து வரும் இந்நாட்டு மக்களின் திசை நோக்கி தொடங்குகிறேன். தேர்தல் எவ்வாறு நடந்தேறியது என்பதற்கு முன்னம் தமது அபிலாசைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஜே. பி.க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதனை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அ*தாவது தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் பெற்றிருக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட நீதி மன்றத் தலைமை நடுவரைத் தலைவராகக் கொண்டிருக்கும் ஆணையத்திடமிருந்து தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாகும். அத்தகு சான்றிதழ் வேண்டி செய்த விண்ணப்பம் அக்குழுவினரால் நிராகரிகப்பட்டது என்பது கருத்தில் எடுக்க வேண்டியதாகும். முதலாளிய முட்டுத்தாங்கிகள் ஆட்சிக் கதிரைகளை அலங்கரிக்கும் போது வறுமை ஒழிப்பு, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றல், சமநிலை வாழ்வு, சனநாயக அமலாக்கம் என்பதெல்லாம் உதட்டுச் சேவையாகத்தான் விளங்கும் என்பதை இவ்வாறான சம்பவங்கள் நன்கு தெளிவுபடுத்துகின்றன.

மக்களின் வாழ்விலிருந்து அச்சத்தை அகற்றல்:

1997ஆம் ஆண்டு சியாங் சான் எனும் குழுத் தொகுதியில் போட்டியிட்டு 45.2 விழுக்காடு வாக்குகள் பெற்றதனால், கூடுதலான வாக்குகள் பெற்றுத் தோற்றவர் எனும் அடிப் படையில் தொகுதியில்லா உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்டார்.

31.6.98ஆம் நாள் மக்களின் வாழ்விலிருந்து அச்சத்தை அகற்றல் எனும் தலைப்பில் பாராளுமன்றத்தில் ஆற்றிய நீண்ட உரையில் சிறிதைப் பார்ப்போம்:

துணை சபாநாயகர் அவர்களே.... அச்சம் எப்படி காணக் கிடைக்கின்றது, எங்கே வெளிப்படுகின்றது? அனைத்திற்கும் முதன்மையாக வழக்கறிஞர் தோழர்கள், அவை அரசை எதிர்ப்பதாக அமையும் வர்த்தக வழக்காக இருப்பினும் கூட எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வழக்குகளை ஏற்று நடத்தக் காட்டும் தயக்கம். இ*து ஏதோ கட்டுக்கதை அல்ல. மாறாய் உண்மை. திரு தேங் லியாங் ஹோங் அவர்கள் தமக்காக வாதாட வழக்கறிஞரை நியமிக்க எதிர்க்கொண்ட இடையூறுகளை வழக்குமன்றம் சொன்னது.

எட்டிற்கும் குறைவில்லாத வழக்கறிஞர்களை அணுகியும் சில பல காரணங்களால் சம்பவங்களின் சுருக்கத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்துவிட்டபடியால் தம் வழக்கை நடத்த இங்கிலாந்திலிருந்து சட்டத்தரணியை வரவழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட அவரின் நிலையை வழக்கு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அச்ச்ண்க்ஹஸ்ண்ற் வழி அறிய முடிந்தது.

அவரின் மனைவி திருவாட்டி தியோ சியூ ஹர் க்காக நான் இரண்டு மூத்த சிங்கப்பூர் வழக்கறிஞர்களை அணுகி வழக்கை ஏற்று நடத்தும்படி வேண்டினேன். அதற்கு அவர்கள் ''திரு செயரெத்னம், தாங்கள் அறியாததல்ல! வேறு வழக்காக இருப்பின் நாங்கள் முற்படுவோம். ஆனால், இத்தகைய வழக்கில் நாங்கள் முற்படுவதை எங்கள் பங்குதாரர்கள் ஒருவேளை விரும்பாமல் போகலாம். ஆகையால், நீங்கள் தவறாக நினைக்கா விட்டால் எம்மால் இயலாது,” என்று கைவிரித்தபடியால் அவருக்குச் சார்பாக வாதிட வழி கிடைக்காமல் போனது.

அரசாங்கத்திற்கு எதிரானதாக இருப்பினும் இழப்பீடு பெறுவதற்குத் தகுதியற்ற, ஆனால், நீதியற்ற செயல் சம்பந்தமான சாதாரண வழக்குகளின் சம்பவங்களைக்கூட வழக்கறிஞர்கள் செவிமடுப்பதில்லை. எமது சொந்த அனுபவத்திலிருந்து ஒன்றை உங்களுக்கு மீண்டும் சொல்கின்றேன். ''திரு. செயரெத்தினம், நாங்கள் வேறு வழக்கறிஞர்களிடம் சென்றோம். அவர்கள் எங்களுக்காக வாதாடத் தயாராயில்லை,” என்று மக்கள் எம்மிடம் வந்து சொல்கின்றார்கள்.

சென்ற பொதுத் தேல்தலுக்குப் பின்னர் ஆங் மோ கியோவுக்குச் சென்று ஒவ்வொரு கிழமையும் குடியிருப் பாளர்களைச் சந்திக்க முடிவு செய்தேன். முதன்முறை அங்குச் சென்றபோது கடைக்காரர் ஒருவர், நான் அமர்ந்து மக்கள் குறைகளைக் கேட்டறிவதற்கு வசதியாக ஒரு சிறிய இடத்தை ஒதுக்கித் தந்தார். வாரத்தில் ஒரு முறை மட்டும் எம்மைச் சந்திக்க வருபவர்களோடு உரையாடி பிரச்சினை களைக் கண்டறிவதற்காக ஏறத்தாழ இரண்டு மணித் தியாலங்கள் மட்டுமே...

ஆனால், இரண்டு வார இடைவெளியில், ''திரு ஜெயா, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார். “ஏன்?” என வினவினேன்! “கடைத்தொகுதியைச் சேர்ந்த இடத்தை ஒதுக்கித் தருவதற்கு என்ன துணிவு எனக்கேட்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர். எனவே, இனி தங்களுக்கு இடம் ஒதுக்க இயலாது,” என்றவர் ''திரு ஜெயா, தயவு செய்து வேறு இடத்தை தேடிக் கொள்ளுங்கள்,” என்று கூறிவிட்டார். நான்அவரோடு விவாதம் செய்வதில் ஏதும் பயனுண்டா! சிங்கப்பூரின் உண்மை நிலை இதுதான்.

“சிங்கப்பூரியர்கள் எதிர்க்கட்சி வேட்பாளர்களாகப் போட்டியிட முன் வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். நான் இவற்றை மீண்டும் குறிப்பிடுகிறேன். முடிந்த பொதுத் தேர்தலில் நாங்கள் சிறந்த தகுதி கொண்டிருந்த மூன்று வேட்பாளர்களைப் பெற்றிருந்தோம். அவர்களின் பெயர்களை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், இறுதிக் கட்டத்தில் என்னிடம் வந்து 'எனது மனைவி, குழந்தைகள் மற்றும் சகோதரர்கள் உட்பட அனைவரும் பெரிதும் கவலை கொண்டுள்ளார்கள். மேலும், எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட முன்வந்திருப்பதானது பித்துப் பிடித்து போனதினாலோ அல்லது வேறு எதனாலோதான் என்று அவர்கள் அனைவரும் கூறுகிறார்கள். எனவே, என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது,” என்று முடித்தார். "இதுதான் நிலை என்றால் போட்டியிலிருந்து விலகிவிடுங்கள்,” என்று சொன்னேன். ஆகவே, குடிமக்கள் அச்சத்தில் வாழ்கின்ற நிலையில் எங்களால் சிங்கப்பூரில் எப்படி எதிர்க்கட்சிகளை பலமுடையதாகக் கட்டியெழுப்ப இயலும்?”

இப்படியான அழுத்தமான ஆணித்தரமான ஜே. பி. ஜே.யின் நாடாளுமன்ற முழக்கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். முற்போக்கான சிங்கப்பூர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் அர்ப்பணித்த ஒரு போராளியின் பங்களிப்பையும், சந்து முனை சிந்துபாடிகளால் ஆகா, ஓகோ என்று புகழப்படும் சிங்கைத் தீவில் நடப்பு உண்மை நிலையினையும் சிறிதளவாவது வாசகர்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்கண்டவற்றைக் குறிப்பிட வேண்டியதாகிறது.

மன்னிப்பு கேட்பது எப்போதும் நடப்பது:

சரி, யார் அந்த தேங் லியோங் ஹேங்? அவர் என்ன கொம்பரா! அவருக்காக வழக்காட வழக்கறிஞர்கள் முன் வராதது ஏன்! என்ற வாசகர்களின் எதிர்பார்ப்புகள் எமக்குப் புரியவே செய்கின்றது. 1997ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சியங் சான் எனும் நாடாளுமன்ற குழுத் தொகுதியில் ஜே.பி. மற்றும் வேறு இருவரும் இணைந்த குழுவில் பாட்டாளிகள் கட்சி சார்பில் களம் கண்ட சட்டத்தரணி அவர்.

ஒவ்வொரு முறை தேர்தலிலும் குறிப்பிட்ட ஒருவரை பலிகடாவாக்கி, தீவின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் கவனத்தையும் திசை திருப்பவது ஆளவந்தாரின் வழமை. 1991 தேர்தலில் யூனோஸ் குழுத் தொகுதியில் பாட்டாளிகள் கட்சி வேட்பாளர்களாக போட்டியிட்ட டாக்டர் லீ சியூ சோ (தனிக் கட்டுரை எழுதுமளவிற்கு வரலாறாய் வாழ்ந்தவர்), வீ ஹன் கிம், நீயோ சூன் அய்க், மற்றும் முகமது ஜீப்ரி மாமுட் ஆகிய நால்வரில் திரு ஜீப்ரி அவர்களை மத அடிப்படைவாதியாகச் சித்தரித்துப் பாட்டாளிகள் கட்சிக்கான வாக்காளர்களின் ஆதரவைச் சிதறடித்தனர்.

இருப்பினும் ம செ க வால் 52.4% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதனாற்றான் அன்றைய பிரதமர் கோ சோக் தோங், ''நாம் வெற்றி பெற்ற போதும் யூனோஸ் முடிவை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்கால சிங்கப்பூருக்கான முன்னெச்சரிக்கை இதுவா? என்று அஞ்சுகிறேன்,” என்று தேர்தல் முடிவுகள் வெளி வந்த பின் பேசியிருந்தார். அதேபோல் 97ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேங்கை, விவிலிய மத எதிர்பாளராகவும், சீன இனவாதியாகவும் சித்தரித்ததோடு அவரைப் பொய்யர், ஏமாற்றுப் பேர்வழி, அரசியல் அரம்பர் மற்றும் கோழை ஆகிய வெவ்வேறு அடைமொழிகளைச் சூட்டி அழைத்தனர்.

தொடர்ந்த குற்றச்சாட்டுகளால் சூழல் விபரீதமாகும் என்று எண்ணிய தேங், காவல்துறையில் புகார் செய்தார். சிங்கையின் நதியோரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ஜே.பி. திரண்டிருந்த பாரிய எண்ணிக்கையிலான வாக்காளர்களை நோக்கி ''உங்களுக்குத் தெரியுமா! திரு கோ மற்றும் அவர்தம் ஆட்கள் மீது செய்த இரண்டு போலீஸ் புகார்களை திரு தேங் என் முன்னே வைத்துள்ளார்,” என்று பேசியிருந்தார்.

ஜே.பி. ஜெயரெத்தினம் கூட்டங்களில் பேசும்போது அவரின் உதட்டிலேயே பலநூறு பேர் தொங்கிக் கொண்டிருப்பார்கள். அவரின் மொழியாளுமை அப்படி. அறச்சினம் கொண்ட சீற்றத்தில் கூட ஆங்கிலம் நாவில் நர்த்தனமிடும். தேர்தல் முடிவுற்றதும் இவ்வுரை தொடர்பாக ஜே.பி. மீது வழக்குத் தொடர்ந்தனர். ஒன்றின் மீது ஒன்றென வழக்குத் தொடுத்து அவரை உழுத நிலமாக்கினார்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் தேங் மீதும் அப்போதைய மூத்த அமைச்சர் லீ குவான் இயூ அவதூறு வழக்கு தொடர்ந் திருந்தார். அவர் சார்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில் “சிங்கப்பூரில் தமக்குப் பாதுகாப்பு இல்லை என்னும் தேங், திருட்டு, கார்-களவு, சுடுதல் ஆகியவை களினால் கெட்ட பெயர் எடுத்துள்ள ஜொகூர் பாருவில்தான் தற்போது தங்கியுள்ளார்,” என்ற வரிகள் காணக் கிடைத்தன. தீபகற்ப மலேசியாவின் தென் மாநிலமான சொகூரில் இருந்த திரு தேங், சட்டத்தரணியும் தமது நண்பருமான தோழர் இராசாக் அமாட் அவர்களோடு இணைந்து முன் சொன்ன AFFIDAVIT விவகாரத்தை செய்தியாளர் கூட்டத்தில் அம்பலப்படுத்தினர்.

மலேசிய நாளேடுகள் ஹாரி குவான் இயூவை எதிர்த்து தலையங்கங்கள் எழுதின. மலேசிய அரசியல் வாதிகள் பொங்கி எழுந்தார்கள். குறிப்பாக ஆளும் அம்னோவின் இளைஞர் பகுதியினர் கொடும்பாவி எரித்தார்கள். நிலைமை முறுகலாக, வழமைபோல் குவான் இயூ AFFIDAVITஇல் இடம் பெற்ற வரிகளை நீக்கத் தம் வழக்கறிஞர்களைக் கேட்டுக்கொண்டதோடு மலேசிய அரசாங்கத்திடம் மன்னிப்பும் கோர, படமெடுத்தாடும் பாம்பு பட்டென்று பெட்டிக்குள் ஒடுங்குவதைப் போல மலையக அரசியல்வாதிகள் குளிர்ந்து போனார்கள். சிக்கல் தீர்ந்தது. பிள்ளையைக் கிள்ளிவிட்டுப் பின் தொட்டிலை ஆட்டி விடுவது என்பதைப்போல், தேவையில்லாமல் முந்திரிக் கொட்டைபோல கருத்துச் சொல்வதும் நிலைமை கட்டுக் கடங்காமல் போகும் போது மன்னிப்புக் கேட்பதும் குவான் இயூவின் அரசியல் அகராதியில் ஒன்றும் புதியது அல்ல.

2001ஆம் ஆண்டு ஜே.பி. திவாலானவர் என்று அறிவிக்கப் பட்டதால் வாக்களிக்கும் உரிமை அற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கதிரையை இழந்தார். கூடவே தமது அரசியல் வாழ்வைத் துவங்கிய பாட்டாளிகள் கட்சியின் உறுப்பினர் தகுதியிலிருந்தும் விலகினார். இந்தக் காலகட்டத்தில் தமது 1997-”99 ஆண்டுகளின் நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பான Make it right for Singapore. The Hachet man of Singapore மற்றும் “GOH CHOK TONG’s Democracy in spore” ஆகிய புத்தகங்களை சிங்கப்பூர் தீவுத் தெருக்களில் விற்பனை செய்தார்.

''எனது சுயசரிதையை நான் எழுதுவேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனது அரசியல் வாழ்க்கையைப் பற்றி புத்தகம் எழுதியுள்ளேன்,” என்று பேட்டி ஒன்றில் ஒரு முறை கூறியிருந்தார். அவரின் தன்வரலாறு வெளிவந் திருந்தால் அ*து எத்தகைய மதிப்புடைய கருவூலமாகத் திகழும்! 2001ஆம் ஆண்டுத் தேர்தல் களை கட்டியிருந்த நேரம். பரப்புரைகளில் அனல் பறந்தன. இம்முறை நாட்டு அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் மிரட்டலானவராக உருவகப்படுத்தப்பட்டவர் சிங்கப்பூர் சனநாயக கட்சியின் (நஈட) செயலாளர் நாயகம் கலாநிதி சீ சூன் ஜீவானும் அவரின் தங்கையுமாவார்கள். ஜே.பி. இத்தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்குத் திவாலாகியிருந்தார்.

அக்காலை, செய்தியாளர்களைச் சந்தித்த குவான் இயூ, ''சீயும், ஜெயாவும் வெளிநாடுகளில் சிங்கப்பூரை மட்டம் தட்டுபவர்கள்,” என்று பேட்டி தந்திருந்தார். “ஓம், லீ குவான் இயூ! சிங்கப்பூரைப் பற்றிய உண்மைகளை உலகுக்குச் சொல்ல ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டுள்ளேன். சிங்கப்பூர் மக்களின் உரிமைகளைத் தொடர்ந்து மறுத்து வரும் செயலுக்கான எமது விமர்சனத் திற்காக நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. இனியும் தொடர்ந்து பேசுவேன்,” என்று சூடாக பதிலடி தந்தார் ஜேபி. 25.10.2004ஆம் நாள் மூன்று நடுவர்களைக் கொண்டிருந்த முறையீட்டு வழக்கு மன்றத்தில் தோன்றி நொடித்துப் போனவர் பட்டியலிலிருந்து தம் பெயரை நீக்கும்படி வாதாடி நின்றார். புதல்வர்களின் உதவியினால் முந்தைய நிலுவைகளை அவரால் செலுத்த முடிந்திருந்தது என்பது அவதானிக்கத்தக்கதாகும். எதிர்த்தரப்பிலிருந்து கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஜே.பி. அவர்கள் திவாலானவர் பட்டியலிலிருந்து மீள்வதற்கு உரிய நேர்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதோடு அதற்குத் தகுதியானவர் அல்ல என்றும் கூறப்பட்டிருந்தது.

கடும் போராட்டத்தின் பயனாக ஏறத்தாழ நான்கு வருடங்களுக்குப் பின் அவரின் பெயர் திவாலானவர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, மீண்டும் கருப்பங்கி அணிந்து வழக்கு மன்றம் சென்றதோடு, அடுக்குமாடி கைதிகளாக வாழும் பாரிய எண்ணிக்கை சிங்கப்பூரர்களுக்கான தமது பணியைத் தொடரும் முகத்தான் புதியதொரு அரசியல் கட்சிக்கான அடித்தள வேலைகளைத் தொடங்கி கடந்த 18.06.08ஆம் நாள் சீர்திருத்தக் கட்சியின் (தஉஊஞதங) தொடக்க விழாவை நடாத்தி, அக்கட்சியை வலுப்படுத்தும் பெரும் பணிகளை மேற்கொண்டிருந்த பொழுதுதான் சென்ற செப்தம்பர் மாதம் 30ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் தமது 82ஆம் அகவையில் மறைந்தார்.

தொட்டதற்கெல்லாம் "நான் முடிவெடுத்தேன், நான் நாட்டை உருவாக்கினேன், நான் கட்டியெழுப்பினேன்” என்று தம்பட்ட மடித்துக்கொள்ளும் குவான் இயூவால் அரசியலிலிருந்தே அழித்தொழிக்கப்பட வேண்டியவர் என்று குறிப்பிடப் பட்டவர் ஜே. பி. ஜே. கீழ்த்திசை நாடுகளின் கருணையற்ற மிகமோசமான சர்வாதிகாரி என்று சொல்லப்படும் அசகாய சூரராலேயே அரசியலிலிருந்து அகற்ற முடியாத போராளியை இயற்கை பறித்துக்கொண்டுவிட்டது.

குறைபாடுகள் அற்றவர் ஜே.பி. என்று புகழாரம் சூட்டுவது எமது நோக்கமல்ல. மாறாக, அவர் விரும்பியிருந்தால் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். “எந்தக் கொடுங்கோலர்களும் அதிகாரத்திலிருந்து விலக மாட்டார்கள். அவர்களிடமிருந்து அவை எடுக்கப்படவேண்டும். அவற்றைச் செய்வதற்கு, வாக்குப் பெட்டிகள் நமக்கு வாய்ப்பாகின்றன,” என்று அறிவுறுத்திப் பம்பரமாய்ச் சுழன்றவர். ''அவர் எவரிடமும் மன்றாடவில்லை, கருணைக்காகக் கெஞ்சவில்லை. செயரெத்தினம் அரசியல் அரங்கிலிருந்து தலைநிமிர்ந்து விடைபெறுவார்,” என்று சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் காலஞ்சென்ற சி.வி. தேவன் அவரைப் பற்றிக் கூறியவை காலத்தை வென்ற கவிதை வரிகளாகத் திகழ்கின்றன. ஜே.பி. யின் நூல்கள் அனைத்தையும் தமிழில் பெயர்ப்பதோடு அவர் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் எழுதுவதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதையாக அமையும். தீவின் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இடதுசாரித் தோழர்களாவது இவற்றை நிறைவேற்றித் தர வேண்டும். செயலாக்குவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Pin It