''வீர சரிதங்கள் பற்றி செய்யுட்கள் பொது மக்களிடையே பரவி, அவர்களால் நன்கு மதித்துப் பாராட்டப் பெற்று வருதலை அறிந்த இவ்வகுப்பினர் (அந்தண வகுப்பினர்), இதிஹாஸத்தையும் தங்கள் கருத்துப்படி திருத்தி அமைக்க முயன்றனர். உண்மையிலே முற்றும் லௌகிகச் சார்பாயுள்ள இதிஹாஸக் கதையைச் சமயச்சார்பான கதைச் செய்யுளாக அமைத்து தங்களுடைய தெய்வம் பற்றி கொள்கைகளையும் இவ்விதிஹாசத்தில் நிரப்பிவிட்டனர். இங்ஙனமாக. தெய்வங்கள் பற்றிய வரலாறுகளும். வேறு பல புராதன வரலாறுகளும். அந்தண மரபினர் போற்றி வந்த தத்துவங்களும் நீதிகளும் மகாபாரதத்தில் காணப்படுகின்றன’. (ச. வையாபுப்பிள்ளை. இலக்கிய உதயம். வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம். தொகுதி: 4: பக்: 168-169. 1991)

தமிழ்ச்சூழலில் மகாபாரதத்தை விரிவாக அறிகைப்படுத்தி எழுதியவர் பேரா. ச. வையாபுப்பிள்ளை. பேரா. தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை மகாபாரதம் குறித்து எதுவும் எழுதவில்லை. இது என்னுள் பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. பல்துறை சார்ந்த விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட தெ.பொ.மீ. அவர்களின் கவனத்தை மகாபாரதம் ஈர்க்காமையும் ச.வையாபுப்பிள்ளை விரிவாக எழுதியிருப்பதும் இவ்விதிகாசம், தமிழ்ச்சூழலில் எதிர்கொள்ளப்பட்ட வரலாற்றைப் புந்துகொள்ள உதவும். ஆம்... இருபதாம் நூற்றாண்டில் மகாபாரதத்தை தமிழ் ஆய்வாளர்கள் அணுகிய முறையைப் புந்துகொள்ளவே, மேற்கண்ட உரையாடலை உங்கள் முன் வைத்தேன். இப்பின்புலத்தில். மகாபாரதம் எவ்விதம் அந்தணர் வகுப்பால் எதிர்கொள்ளப்பட்டது என்று ச. வையாபுப்பிள்ளை அவர்களின் பதிவின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. சைவ மற்றும் வேளாளப் பாராம்பரியத்தில் உருவான தமிழ்ப்புலமையாளர் சூழல், கவிதைக்காகக் கம்பனைப் போற்றியதில் பத்தில் ஒரு பங்கிற்கு கூட பாரத்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இப்பின்புலத்தில் இரா. சீனிவாசன் அவர்களால் பதிப்பிக்கப் பட்டுள்ள இப்பாரதம் தொடர்பான புலமைச் சூழலைப் புந்துகொள்ளலாம்.

பாரதக்கதை, வாய்மொழிப் பாரம்பயத்தில் கி.மு. நான்காம் நூற்றாண்டு முதல் புழக்கத்தில் இருந்து வந்திருக்கலாம். கி.மு. நான்காம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. நான்காம் நூற்றாண்டு என்ற காலப்பகுதியில். இவ்வாய்மொழி மரபு. செய்யுளள் வடிவில், படிப்படியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பர்*. ஏறக்குறைய சங்க இலக்கியப் பிரதிகள் (கலித் தொகை. பரிபாடல். திருமுருகாற்றுப்படை தவிர்த்து) உருவான காலமும் மகாபாரதம் இதிகாசமாக வடிவம் பெற்ற காலமும் ஒன்றாகவே அமைகிறது.

சங்க இலக்கியமும் மகாபாரதமும் சமகாலப் பிரதிகளாகவே கருத இடமுண்டு. மகாபாரதத்தை பெருந்தேவனார் என்பவர் காப்பியமாக வடிவமைத்தார் என்ற செய்திகள் பேசப் படுகின்றன*. ஆனால். அப்பிரதி முழுமையாக நமக்குக் கிடைக்கவில்லை. 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும் முழுமையாகக் கிடைத்த பிரதிகள். (இவை பற்றிய விரிவான விளக்கத்தை இந்நூல் பதிப்புரையில் காண்க.) மேலே கூறியவாறு இவ்விரு பிரதிகளையும் இருபதாம் நூற்றாண்டில் புலமைச் சூழல் எதிர்கொண்ட வரலாற்றைத் தொகுத்துக் கொள்வோம்.

வில்லிபாரதத்தை உ.வே.வை.மு. சடகோப ராமாநுஜாசார்யர். உ.வே.சே. கிருஷ்ணமாசார்யர் மற்றும் வை.மு. கோபால கிருஷ்ணமாசாயர் ஆகியோர் உரை எழுதிப் பதிப்பித்தனர். இப்பதிப்புகள் 1954 இல் வெளிவந்தன. இப்பதிப்புகள் குறித்து வை.மு.கோ. பின்வருமாறு குறிக்கின்றார். ''இப்பதிப்பில். அரும்பதவகராதி முதலியன. அபிதான சூசிகையகராதி, சில அருந்தொடர்கள், செய்யுள் முதற்குறிப்பகராதி என்பனவும் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன’ (ஆதி பருவம்: முகவுரை: ஐந்தாம் பதிப்பு: 1970) பின்னர் 1959 இல் மர்ரே.எஸ். இராஜம் குழுமம் வில்லிபாரதத்தை பதிப்பித்தது. அந்நூலின் பதிப்புரை பின்வருமாறு அமைகிறது. (பார்க்க: வில்லிபாரதம். முதற்பாகம். பதிப்புரை: மர்ரே பதிப்பு: மற்றும் இப்பதிப்பின் பதிப்புரை.)

''முந்திய பதிப்புக்களில் அரங்கசாமி நாயக்கர் பதிப்பில் மட்டும் நூல் முழுவதும் பாடல்கள் சீர்பித்துப் பதிப்பிக்கப்பட்டுக் கிடைக்கின்றன. வை.மு. கோபாலகிருஷ்ணமாசாயர் பதிப்பில் ஒரு சில பருவங்கள் சீர்பித்து அச்சிடப் பெற்றிருக்கின்றன. ஏனைய பதிப்புகளில் அடிவரையறைப்படி பாடல்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளனவே அன்றி, அடிகளினூடே இடைவெளி சிறிதும் விடப்பெறவில்லை. இம்முறைகளினால் பாரதப் பாடல்களைப் பொருளுணர்ச்சியோடு வாசிப்பது கற்றார்க்கே பெரிதும் இடர்ப்பாடு தருவது ஒன்றாம். இந்தப் பதிப்பில் பாடல்கள் சந்தி பிரித்து, ஏற்ற நிறுத்தற் குறியீடுகளுடன் தரப்பெற்றுள்ளன. கதைப்போக்கை விளக்கும் வகையில் தக்க தலைப்புகளும் இடையிடையே தொகுக்கப் பட்டுள்ளன. இவற்றால் பாடல்களின் பொருள் முதலிய வற்றை எளிதில் உணர்ந்து கொள்ளலாகும். நூல் முகப்பில் காணும் உள்ளுரைப் பகுதியில் தலைப்புகள் எல்லாம் ஒரு சேரத் தரப்பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து வாசித்தால் வில்லியின் கதைப்போக்கு நன்கு தெளிவாம்’’. (வில்லிபாரதம். மர்ரே பதிப்பு. பதிப்புரை: 1959)

மேற்குறித்த அளவில், இருபதாம் நூற்றாண்டில் வில்லிபாரதம் புலமைச்சூழலால் எதிர்கொள்ளப்பட்டதை அறிகிறோம். வில்லிப்புத்தூரார் அந்தண வகுப்பில் தோன்றியவர். வில்லி பாரதத்தைப் பதிப்பித்தவர்கள் வைணவச் சார்பினர். இதனைக் கூறுவதின் மூலம். இப்பெருமக்களது புலமைச் செயல்பாட்டைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கருத வேண்டாம். குறிப்பாக, மர்ரே.எஸ். இராஜம் அவர்களின் புலமைச் செயல்பாட்டை தமிழுலகம் நன்கறியும். இருபதாம் நூற்றாண்டில் தமிழுக்குத் தொண்டாற்றிய புரவலர்களில் முதன்மை நிலையில் வைத்துப் பேசவேண்டியவர் அவரே. தமிழ் நூல்கள் புதிய வடிவில். ஆழங்கால்பட்ட புலமையாளர்களை ஒருங்கிணைத்து அவரால் பதிப்பிக்கப்பட்டன. அத்தகைய முயற்சி முன்னும் பின்னும் தமிழ்ச்சூழலில் இருந்ததாகவே, இருப்பதாகவே அறியமுடியவில்லை. இருந்தாலும் அவரது வைணவச் சார்பை மறுப்பதற்கில்லை. அவர் வெளியிட்ட நூல்களில் வைணவச் சார்பு நூல்களே மிகுதி. இந்தப் பின்புலத்தில். வில்லிபாரதம் வைணவம் சாராத புலமையாளர்களின் கவனத்தில் இடம்பெறவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கி 1930 வரை மகாபாரதத்தை மொழிபெயர்த்து தமிழில் வெளியிட்டு வெற்றிபெற்ற கும்பகோணம் கல்லூரி தமிழ்ப் பண்டிதர் ம.வீ. இராமானுஜாசாரியர் அவர்கள், தமிழ்ப் பதிப்புலகிலும். தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றிலும் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய பெருமகன். இவரது முப்பது ஆண்டுகள் தொடர்ந்த உழைப்பு வியப்பில் ஆழ்த்தும் தன்மைமிக்கது. அவரது உழைப்பை. அவர் பதிப்பித்த மகா பாரத மொழிபெயர்ப்புத் தொகுதிகளின் (14) முன்னுரைகளில் வாசித்தறியலாம். தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் தமிழ்ப் பதிப்பு குறித்து அறிய விரும்பும் மாணவர்களுக்கு அவரது முன்னுரை அரிய ஆவணம். சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு முன்னுரைகள். (தாமோதரம் எனத் தொகுக்கப் பட்டுள்ளது) உ.வே.சா. 'என் சத்திரம்’. 'ச. வையாபுப் பிள்ளைஃயின் பதிப்பு முன்னுரைகள் ஆகியவை தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் பெறும் இடத்தைப் போலவே ம.வீ. இராமாநுஜாசாயார் 'முன்னுரைகளுக்கும் இடமுண்டு. அவர் மகாபாரதம். பிஷ்ம பருவம் முதல் பதிப்பின் முகவுரையில் பின்வருமாறு எழுதுகிறார்.

''ஸ்ரீ பகவத் கீதையை மதத்ரய பாஷ்யங்களுடன் மொழிபெயர்த்து வெளியிடுவதாக நிச்சியத்திருந்தேன். பகவத்கீதைக்கு அந்த அந்த மதச்சார்பாக அநேக மொழிபெயர்ப்புக்களிருந்ததாலும் வேறு சில காரணங்களாலும் அதனை இப்பொழுது செய்யாமல் நிறுத்திக் கொண்டேன். கீதையின் மொழிபெயர்ப்பு. மஹா பாரதத்தின் மற்றப் பகுதிகளைப் போலவே. ஒரு மதச் சார்பாக இராமல் பொதுவாக இருக்கவேண்டுமென்பதே எனது விருப்பம். ஆயினும். வேதாந்த பாகங்கள் வரும் பொழுது அங்ஙனம் செய்தல் சாத்தியப்படவில்லை. மொழிபெயர்ப்பவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களோ அந்த மதத்தின் சார்பாகத்தான் மொழிபெயர்ப்பு அமைகிறது. இதனை, பகவத்கீதையுள் மாத்திரமேயன்றி மற்றப் பருவங்களிலும் வேதாந்தப் பகுதிகள் வருமிடந்தோறும் காணலாம். இந்த மாதியான இடங்களில் தங்கள் மதக்கொள்கைக்கு முரணாயிருப்பதாக நினைப்பவர்கள். தங்கள், தங்கள், சமயநூல்களில் வல்ல பண்டிதர்களிடம் கேட்டுத் தெந்துகொள்க’. (ம.வீ. இராமானுஜாசாரியன். பீஷ்மபருவம். முதல்பதிப்பு - முகவுரை: 1919)

பெரியவர் ம.வீ. இராமானுஜாசாயரின் கூற்று. பிரதிகளைப் பதிப்பித்தல். மொழிபெயர்த்தல் மற்றும் உரை எழுதுதல் ஆகிய பிற பணிகளில் ஈடுபடுவோர். தம் சமயச் சார்பை எவ்வகையில் பதிவு செய்வர் என்பதை அறியமுடிகிறது. மகாபாரதம் அவ்வகையில், மிக அதிகமாகவே, பலரால் அவரவர்க்கு வேண்டிய வகையில் எடுத்துக்கொள்ளும் தன்மை பெற்றிருப்பதைக் காண்கிறோம். இவை பேராசியர் ச. வையாபுப்பிள்ளை குறிப்பிட்டுள்ளதைப் போல் (பார்க்க: கட்டுரையின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்) லௌகிக சார்பாக அமையும் தருணத்தில் மகிழலாம். ஆனால். அவை சமயச் சார்பாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது.

வில்லிபுத்தூராரின் பிரதிகளை எதிர்கொண்டவர்கள் மேல்விவத்த கண்ணோட்டத்தில்தான் எதிர்கொண்டார்கள். ஆனால் நல்லாப்பிள்ளையின் பாரதத்தை எதிர் கொண்டவர்கள் அவ்வகையில் அமைந்தவர்களா? என்ற கேள்வி எழுப்பிய போதுதான். மேல் விவரித்த வரலாற்றுக்குள் நாம் பயணம் செய்ய நேட்டது. நல்லாப்பிள்ளைப் பிரதியை வில்லிபுத்தூரார் பிரதி எதிர்கொண்ட அளவிற்குத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் ஒரு பதிப்பும், இருபதாம் நூற்றாண்டில் (1911) இன்னொரு மறுஅச்சும் செய்யப்பட்டிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் (2007) இரா. சீனிவாசன் பதிப்பித்துள்ளார். இதன்மூலம் இரா. சீனிவாசன் அவர்களின் புலமைச் செயல்பாட்டைப் புந்துகொள்ளவே மேற்குறித்த வில்லிபாரதம் மற்றும் நல்லாப்பிள்ளை பாரதம் ஆகிய பிரதிகள் எதிர்கொள்ளப்பட்ட 'புராணத்தை’ உங்கள் முன் வைத்தேன்.

நல்லாப்பிள்ளை வில்லிபுத்தூரார் போல வைணவம் சார்ந்த அந்தணர் குலத்தில் பிறக்கவில்லை. உழைக்கும் சாதியில் பிறந்தவர். கருணீகர்குலம், உழைப்போடு புலமைமிக்க சமூகமாகவும் இருந்ததை அறிகிறோம். வடலூர் சி. இராமலிங்கன் எனப்படும் வள்ளலார் அதற்கு நற்சான்றாக அமைகிறார். வைணவத்திற்காக, பாரதக்கதையை நல்லாப்பிள்ளை அணுகவில்லை என்றே கூறமுடியும். முருகனைப் பற்றியும் எழுதியவராக உள்ளார். (விரிவுக்கு பார்க்க: இந்நூல் பதிப்புரை) இங்கு சமயம் கடந்த புலமை சார்ந்தே நல்லாப் பிள்ளை பாரதம் உருப்பெற்றிருக்கிறது. இதனால்தான் அந்தண வகுப்பைச் சார்ந்தவர்கள் வில்லிபுத்தூரார் மீது கொண்ட ஈடுபாடு அளவிற்கு, நல்லாப்பிள்ளையிடம் ஈடுபாடு கொள்ளவில்லை என்பதை அறியமுடிகிறது. நல்லாப்பிள்ளை பற்றிய விரிவான தகவலும் அறியமுடியவில்லை. முதன்முதல் இந்நூல் பதிப்பாளர்தான். விரிவான கள ஆய்வு மூலம். நல்லாப்பிள்ளை குறித்து கூடுதலான தகவல்களை ஆவணப் படுத்தியுள்ளார். இப்பின்புலத்தில் 'வாராது வந்த மாமணி’ என்று கூறுவதைப் போல. சுமார் 96 ஆண்டுகளுக்குப் பிறகு நல்லாப் பிள்ளை பாரதம் இரா. சீனிவாசன் அவர்களால் பதிப்பிக்கப்படுகிறது. இதன் புலமைத் தளத்தைப் பின்கண்டவாறு தொகுத்துக் கொள்ளமுடியும்:

- நல்லாப்பிள்ளை பாரதம். சாதாரண மக்களின் புழக்கத்தில் இருந்ததைக் காணமுடிகிறது. குறிப்பாக. திரௌபதை அம்மன் விதிபாட்டின் ஒரு பகுதியான, பிரசங்கிகளின், பாரதப் பிரசங்கத்திற்கும், இப்பிரதிக்கும் நெருக்கமான தொடர்புண்டு. (விரிவுக்குப் பார்க்க: இந்நூலைப் பதிப்பித்தலில் ஒரு பிரசங்கியிடம் இருந்து தான் மூலநூல் பெறப்பட்டு. இப்பதிப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால். வில்லிக்கு அந்நிலை இல்லை என்பதை இங்கு இணைத்துப் பார்க்கவேண்டும்.)

- சென்ற நூற்றாண்டில். இதனைப் பதிப்பித்தவர் போலவே. சமயச் சார்போ. சாதிச் சார்போ இன்றி. புலமைத் தளத்தில் இருந்துதான் இவர் செயல்பட்டிருக்கிறார். இதன்மூலம் நல்லாப்பிள்ளை பாரதப் பிரதியின் புழங்கு தன்மையின் அரசியல் குறித்து புந்து கொள்ள முடிகிறது.

- புதியதாக. உருப்பெற்றுள்ள பதிப்பு நுட்பங்கள் மற்றும் நெறிகளை உள்வாங்கி சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக. இப்பணியில் சீனிவாசன் ஈடுபட்டு. பதிப்பைக் கொண்டு வருகிறார். இவருக்குக் கிடைத்த கணிப்பொறி பயிற்சி இதனை எளிதாக்கியுள்ளது. கீழ்த்திசை - சுவடிகள் நூலகத்தில் ஓலையிலிருந்து பிரதி செய்யப்பட்ட வடிவம். 1911இல் அச்சிடப்பட்ட வடிவம். நவீன வளர்ச்சி ஆகிய வற்றின் ஒருங்கிணைப்பாகவே இப்பணி நிகழ்ந்துள்ளது.

- சீனிவாசன் அவர்களுக்கு வயது 40. இந்த வயதில் 131 சருக்கங்கள். 14.728 செய்யுட்கள் அடங்கிய 1608 பக்கங்களைக் கொண்ட இவ்வகையான பதிப்பை நிகழ்த்தி குறைந்த வயதில். வயதுக்கு மீறிய பணியைச் செய்தவர் சீனிவாசன் என்று நினைக்கிறேன். இது அளவு கடந்த மகிழ்வையும் புளகாங்கிதத்தையும் என்னுள் தருகிறது.

இப்பதிப்பைக் கொண்டு வருவதில் சீனிவாசனுக்கு உற்ற துணையாக செயல்படும் இந்நூல் வெளியீட்டாளரான வே. கருணாநிதியும் (பார்க்கர் நிறுவனம்) எனது தோழமை வட்டத்தில் பல ஆண்டுகள் இருப்பவர். மட்டக்களப்பில் பிறந்து தமிழ்நாட்டை வத்துக்கொண்ட கருணாநிதியின் செயல்பாடும் என்னுள் கிளர்த்தும் உணர்வுகளை வெறும் சொற்களால் பதிவு செய்ய இயலாது. அவரது உழைப்பு குறித்து. பல நேரங்களிலும் வியந்து போயிருக்கிறேன்.* என்னோடு தொடர்புடைய இவ்விருவர் முயற்சியில் இப்பணி முழுமை பெறுவதில். பெற்றதாயினும் மேலான மகிழ்வைக் கொள்கிறேன். இவர்களை மனமுவந்து பாôட்டுகிறேன். இம்மேலான பேற்றை எனக்குத் தந்த இவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.

நல்லாப்பிள்ளைக்கு வீரராகவ ரெட்டியார். ம.வீ. இராமனுஜாசாயார் அவர்களுக்கு திருவாடுதுறை ஆதினம் மற்றும் பல மிராசுதாரர்கள் புரவலராக இருந்து நூலை உருவாக்கவும் மொழிபெயர்த்து அச்சிடவும் உதவியி ருக்கிறார்கள். இந்த வசையில் இந்நூலை வெளியிட உதவிய பேரா. இராமசாமி (துணை இயக்குனர். நடுவண் அரசு மொழிகள் நிறுவனம். மைசூர்) அவர்கள் அமைகிறார்கள். அவருக்கும் அந்நிறுவன இயக்குநருக்கும் நன்றி பாராட்டுகிறேன்.

மனிதர்கள் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள். இருந்ததற்கான இருப்பைப் பதிவு செய்யாமலேயே போய் விடுகிறார்கள். ஆனால். இந்நூல் உருவாக்கத்தில் இரா. சீனிவாசன் மற்றும் இதற்கு உதவிய பலன் 'இருப்பு அறியப்படும்... எல்லாக் காலங்களிலும்.

(நல்லாப்பிள்ளை பாரதம் பதிப்புக்கு பேரா. வீ.அரசு எழுதிய முன்னுரை)

நூல் கிடைக்குமிடம்: இரா. சீனிவாசன். 12. புதுத்தெரு. விநாயகபுரம். அம்பத்தூர். சென்னை - 600 053. தொ.பே.: 044-2658 0858. செல்: 9841838878

*கடந்த இருபது ஆண்டுகள் என்னோடு தொடர்பு கொண்ட மாணவர்களாக. சக ஆய்வாளர்களாக. நண்பர்களாக இவ்விருவரையும் நான் நேசிக்கிறேன். நானே இந்தப் பணியைச் செய்ததைப் போன்ற புளகாங்கிதம் கொள்கிறேன்.

அஞ்சலி - கவிஞர் சு.வில்வரத்தினம் (07.08.1950 - 09.12.2006)

Pin It