சுதேசமித்திரன் 13.08.1895

இராமநாதபுரம் சேதுபதியவர்களுக்கோர் விண்ணப்பம்

இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா அவர்களால் நாளது மீ உ தினம் இராமநாதபுரத்தில் ஓர் மீட்டிங் கூட்டப்பட்டதென்றும், பறையர்களின் கல்வி அபிவிர்த்தி பேசப்பட்டதென்றும், அக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு சேதுபதியவர்கள் மாதம் க-க்கு ரூபா ருக-வீதம் தம் சமஸ்தான ஐவேஜிலிருந்து கொடுத்து வருவதாகவும், அதற்கு பழய தாலுகா கச்சேரியை இடமாக அளித்ததாகவும், கூடிய சீக்கிரத்தில் அதற்கு மூலதனமாக ரூபா பதினையாயிரம் வைக்க ஏற்பாடு செய்யப்படுமென்றும், தஞ்சையிற் பிரசுரமாகும் “ஜநாநுலின்” என்னும் பத்திரிக்கையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அப்பால் அப்பள்ளிக்கூடத்தின் மானேஜ்மெண்டை மிஷனரிகள் வசம் ஒப்புவிக்கப்பட்டதென்றும் கண்டிருந்தது. ஆனால் அவ்விராஜ்யம் முழுவதிலுமுள்ள பறையர்கள் கிறிஸ்தவர்களாகத்தானிருப்பார்களோவென்றும், மறுபடியும் அப்படி இருக்க மாட்டார்களென்றும் சந்தேகமுண்டாயிற்று.

ஆனாலிது விஷயத்தில் சேதுபதியவர்கள் அப்பாடசாலையின் மானேஜ்மெண்டை மிஷனரிகள் வசம் ஒப்புவித்த விஷயத்தைப் பற்றி நாமடங்காத விசனமடையலானோம். ஏனெனில் பறையர்களின் கல்வி யபிவிர்த்தியை நாடினவரா, அல்லது கிறிஸ்து மதம் பரவ முயற்சித்தவரா? கல்வியபிவிர்த்தியை நாடினவராயிருக்கும் பட்சத்தில் வேறு இந்து மடாதிபதிகளில்லையா? அவர்கள் பறையர்களோடு பேசாத பரமசாதுக்களாயிருந்தால், லோகல் போர்டில்லையா? அல்லது ரு- பேர்களடங்கிய டிரஸ்டுபோர்டு ஏற்படுத்தி அவர்கள் வசம் கொடுக்கக்கூடாதா அல்லது தகுதியுள்ள இந்துக்கள் வசம் ஒப்புவிக்கப்படாது கிளியை வளர்த்து பூனை வசம் மொப்பித்ததுபோல் அவர் ராஜ்யத்து கற்றறிய வேண்டிய பறையர்களை கிறிஸ்தவ மிஷனரி வசம் ஒப்புவித்தாரே. அது தர்மமா? தர்மம் செய்வதுபோல அதர்மம் செய்ய ஆரம்பிக்கலாமா? ஆனாலது மிஷனரி தூண்டுதலாகயிருக்கலாமோ? என்று நினைக்கின்றோம். தொகையை மிஷனுக்கு இலவசமாக கொடுத்துவிடலாமே. இப்படி செய்ய வேண்டியதில்லையே.

அதிலும் காலம் சென்ற தமது தாயாரின் ஞாபகார்த்தமாகவென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதை யோஜித்தால் காலஞ்சென்ற தாயாரின் ஞாபகார்த்தமாக ஓர் வித்தியாசாலை யேற்படுத்த வேணுமானால் இந்து சிறுவர்களைப் பிடித்து கிறிஸ்தவ மிஷனரிகள் வசம் ஒப்பிப்பதும், அம்மானேஜ்மெண்டை தாம் அல்லது தம் வர்க்கத்தார் மானேஜ் பண்ணாமல் கொடும்பாவியான மிஷனரி வசம் ஒப்பிப்பதுந்தானா தாயாரின் ஞாபகம். ஒருக்கால் மகா உத்தம சிரோன்மணியான இச்சேதுபதியவர்களை பெற்ற உலக மாதாவாகிய நம் அன்னை அவர்கள் அவ்வாறு கிறிஸ்தவன் வசம் ஒப்புவிக்கச் சொன்னார்களா? இப்படி சேதுபதியவர்கள் நடந்தது மிகவும் தப்பு. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு கொடுக்க வேண்டாமென்று நாம் சொல்ல வரவில்லை. ஓர் இந்துவானவர் தன் தாயார் பேரால் தர்மம் செய்தால் அதை கிறிஸ்தவன் வசம் விடலாமா என்பதும், இதனால் கிறிஸ்து மதம் பரவத்தானே முயற்சி செய்வதையொக்கும் என்பதும்தான்.

கிறிஸ்தவ மிஷனரிகள் மத வேற்றுமையின்றி நடந்துகொள்ளத் தகுந்தவர்களா என்று யோஜித்தார்களா. அந்த மகாபாவிகள் நேற்று அதாவது சமீப காலத்திற்கு முந்தி கோயம்புத்தூர் ஜில்லாவில் கல்வி கற்ற சிறுவனையும், இன்னும் பற்பல இடங்களிலும் தம் மதம் பரவவும், பெற்ற தாய் தந்தைகளின் வயிறு எரியவும் செய்து தம் மதத்தில் சேர்க்கவெண்ணுகிறார்களே.

இன்னும் திருச்சியில் நடக்கும் சிவில் வியாஜ்யம் முடிவடையவில்லையே. சென்ற வாரத்தில் சென்னையிலுள்ள இரண்டு பெண்களைக் கிறிஸ்தவ மதத்தில் சேர்க்க முயன்றார்களே. இதுகளெல்லாம் சேதுபதியவர்களுக்குத் தெரியாதா. இன்னும் எவ்வளவோ சூட்சிகளையெல்லாம் கற்று எவ்விதத்திலிந்துக்களை ஏமாற்றலாமென்று மிஷனரிகள் திரிந்து கொண்டிருக்கிறார்களே. தாங்களோ, சிவதர்மநெறி வழுவாத சிவபக்தரும், ஸ்ரீராம சேதுவுக்கு அதிபதியும், ஸ்ரீராமேஸ்வரம் தேவஸ்தானத்திற்கு தர்ம கர்த்தாவாகவும் இருக்கின்றீர்கள். இது விஷயங்களை தீர்க்க யோஜித்து மானேஜிங் பவரைத் தாங்களுக்காவேயாவது, அதுவும் சரிபடாத பட்சத்தில் தங்கள் வர்க்கத்தாருக்குள்ளாவது, அதுவும் சரிபடாத பட்சத்தில் லோகல்போர்டு அல்லது இந்து மதஸ்தவர்களிடமாவது ஒப்புவிக்கும்படி மன்றாடி கேட்டுக் கொள்கிறோம்.

இது விஷயம் பறையர்களைப் பொறுத்தபடியாலும், பிரம்மஸ்ரீ கு.சீனிவாசசாஸ்திரிகள் பிராமணரானபடியாலும் பேச மாட்டார். கண்ணபிரான் முதலியவர்களும் சூ.சோமசுந்தர நாயக்கரவர்களும் ஆசிரியர் தாமோதரம் பிள்ளை அவர்களும் பறையன்தானே என்று அலட்சியமாக மௌனம் சாதிக்கிறார்கள் போலிருக்கிறது. இப்படி நாம் அலட்சியமாயிருந்து வந்ததினால்தான் இஞ்சி தின்றதைப் போலிருக்கின்றோம். சேதுபதியிடத்தில் யாசகம் வாங்க அனேக பத்திராசிரியர்களும் வித்துவான்களும் போவார்கள். இது விஷயத்தில் யோஜனை சொல்ல முன்வரமாட்டார்கள். நாம் சீக்கிரத்தில் நல்ல வார்த்தை வருமாறு எதிர்பார்க்கின்றோம்.

- இந்து மதாபிமானி

(குறிப்பு: புதுடெல்லி, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் 1893, 1894, 1895 ஆண்டுகளில் (ஐந்து மாதங்கள்) வெளிவந்த சுதேசமித்திரன் இதழ்களின் நுண்ணிழை (ஙண்ஸ்ரீழ்ர்ச்ண்ப்ம்) உள்ளது. வாரம் இருமுறை இவ்விதழ் வெளிவந்திருக்கிறது. இவ்விதழைப்பற்றியும் இதன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யர் பற்றியும் மிகவும் சிலாகித்து எழுதுகிறார்கள். அவ்விதழில் வெளிவந்துள்ள இக்கடிதத்தின் மூலம் இந்துமத வெறி பிடித்தவர்களாக சுதேசமித்திரன் குழுவினர் இருந்ததைக் காண முடிகிறது. அதாவது இன்றைய “இந்துத்துவா”வின் வேராக அவர்கள் இருந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

-தொகுப்பும் குறிப்பும்: வீ.அரசு.)

மேலும் ஒரு சான்று:

“ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்” என்றொரு நூல். “அயோத்திதாசரின் சொல்லாடல்” பற்றி ப.மருதநாயகம் வெகு அழகாகத் தொகுத்தெழுதிய நூல். அதில் ஓரிடத்தில் அயோத்திதாசரின் பெருந்தன்மையையும் சகிப்பு மனப்பான்மையையும் சுட்டிக்காட்டும் சான்றாகக் கீழ்க்கண்ட தகவலைத் தருகிறார்: “வைஸ்ராய் மிண்ட்டோவும் அவர் மனைவியும் சிம்லாவில் தங்கள் நாயுடன் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது ஒரு வெறிபிடித்த நாய் அவர்கள் நாயைத் தாக்க, அவர்கள் அதனை விரட்டிவிட்ட செய்தியை “ஸ்டாண்டர்ட்” எனும் ஆங்கில ஏடு, “விஜயா” எனும் தமிழ் ஏடு, “சுதேசமித்திரன்” ஆகிய மூன்றும் எவ்வாறு வெளியிட்டன என்பதை எடுத்துக்கொடுத்து, பிராமணப் பத்திரிக்கையாசிரியரின் குறுமதியையும் சாதி வெறியையும் தாசர் தெளிவுபடுத்துவார். “ஸ்டாண்டர்டு” பத்திரிகை அந்நாயைப் பைத்தியம் பிடித்த நாய் என்றும், “விஜயா” பத்திரிகை அதனை “வெறிநாய்” என்றும் குறிப்பிட, சுதேசமித்திரனோ ஏழுவரிச் செய்தியில் மூன்று இடங்களில் “பறைநாய்”, “பறைநாய்” என்று அதனைச் சுட்டுவதை உள்ளவாறு தந்து, சுதேசிமித்திரன் ஆசிரியரின் சாதிவிரோத உணர்வை இது காட்டுவதாக மட்டும் எழுதி, அவரை எந்த விதமான கடும் சொற்களாலும் சாடாது விட்டுவிட்டார்.”

சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயரை “ஆகா, ஓகோ, என்று அப்படி ஒரு பரவசத்துடன் உச்சிமீது வைத்துக் கொண்டாடுவார்கள் “பிராமணோத்தமர்கள்”. அவர் லட்சணம்தான் இது. அயோத்திதாசர் இவ்வகை ஆட்களை “வேஷ பிராமணர்கள்” என்றும் தம் மக்களை “எதார்த்த பிராமணர்கள்” என்றும் சுட்டுவார்.

அச்சொல்லாடல்கள் எத்தனை கச்சிதமாய்ப் பொருத்தி விடுகிறது! பிரிட்டிஷ் இந்தியாவில் விழிப்புற்ற தலித் தலைவர்கள், சமூக சமத்துவமும் சாதி ஒழிப்பும் எட்டப்படாத வரை இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கக்கூடாது என்று வற்புறுத்தினர். ஓர் அந்நியனால் மட்டுமே அவற்றைப் பெற்றுத்தர முடியும் என்பதற்கு, சுதந்திர இந்தியாவில் அவை இரண்டும் தொலைந்துபோன பகற்கனவாகிக் கொண்டிருப்பதே சாட்சியமாகிறது.

- கவிதாசரண்

Pin It