1. முன்னுரை

தொல்காப்பியம் தமிழில் இன்று கிடைக்கும் இலக்கண நூல்களில் முதல் இலக்கண நூல். அதுமட்டுமல்ல; இன்று கிடைக்கும் நூல்களில் முதல் நூலும் அதுவே. தமக்கு முன்பான இலக்கியங்களிலிருந்து தேர்ந்து தொல்காப்பியர் தமது இலக்கண நூலினைப் படைக்கின்றார்.

"முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே...”

என்று சிறப்புப்பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுவதிலிருந்து மேற்கண்ட உண்மையை நாம் அறிகின்றோம். எழுத்திற்கும், சொல்லிற்கும் இலக்கணம் கூறுகின்றார். பின்பு இலக்கியம் படைப்பதற்கான நெறிகளைப் பொருளதிகாரத்தில் முறைப்படுத்துகின்றார். அவ்வாறு கூறும்போது தமிழர் வாழ்வியல் முறைகளையும் தெரிவிக்கின்றார்.

இலக்கியம் மக்கள் வாழ்முறையைக் காட்டும் கண்ணாடி. அவ்விலக்கியத்திலிருந்தே இலக்கணம் எழுகின்றது. எனவே இலக்கணமும் மக்கள் வாழ்வைக் காட்டவே செய்யும்.

"தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும்போது ஒருசொல் நீர்மைத்து. பொருளை விளக்கும்போது அதைத் தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். பழமையைத் - தொன்மையைக் காத்து இயம்புவது என்று பொருள்பெறும். தமிழரின் தொன்மையைப்- பழமையைக் காத்து இயம்பும் நூல்.”

- முனைவர் ச.வே.சு. தொல்காப்பியம் தெளிவுரை.

(தொல் - Tradition; காப்பு - Preservation; இயம் - Oration)

தொல்காப்பியர் மக்கள் வாழ்வை அகம், புறம் என்று இருபெரும் கூறாகப் பகுத்துக் காட்டுகின்றார். இப்பகுப்பு முறையே பின்பு அறம், பொருள், இன்பம் என்று சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரப் பகுப்பிற்கு அடித்தளமாகியுள்ளது.

மக்களின் அகவாழ்க்கையையும், புற வாழ்க்கையையும் கூட அகத்திணை, புறத்திணை என்பதாகப் பிரித்துள்ளார். இதிலிருந்து தமிழரின் வாழ்நெறி திணைமஇயல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்பது விளங்கும். அகவாழ்விலிருந்தே புறவாழ்வு தொடங்குகின்றது. முதல் ஆசான் அகத்திணை பற்றி முதகல் கூறுவதிலிருந்தே இதை அறியலாம். மேலும் புறத்திணையைக் கூறும்போது அது அகத்திணையின் புறன் என்றே கூறுகிறார். வாழ்வை அகமாகவும் புறமாகவும் பகுத்தவர், அகத்திணையை முதல், உரி, கருப்பொருள்கள் என மேலும் மூன்றாகப் பகுத்துக் காட்டுகின்றார்.

2. நானிலத் திணை

இவ்வுலகம் நான்கு பிரிவான நிலத்தைக் கொண்டது. நிலம் (இது ஐம்பெரும் பூதங்கள் என்ற பொருண்மையுடையது) மற்றும் பொழுது என்ற முதற்பொருள், மக்கள் அக ஒழுக்கம் என்ற உரிப்பொருள், வாழ்வை உருவாக்கும் கருப்பொருள் என முப்பெரும் பகுப்பாகத் திணைப்பகுப்பை தொல்ஆசான் காட்டுகின்றார். இவ்வாறு நிலைத்திணைகள் மற்றும் இயங்குதிணைகளை (Categories of Immovables and Movables) அந்தந்த நிலங்களின் தாவர, சங்கம சொத்தாக அமைத்துக் காட்டுகின்றார்.

3. திணைப் பெயர்

திணைப் பெயர்களாக அந்தந்த நிலத்திற்கே உரிய சிறப்பிடம் பெறும் மலர்களின் பெயர்களையே தொல்காப்பியருக்கு முன்பிருந்தே தமிழர் அமைத்துக் கொண்டுள்ளார்கள். இவ்வுண்மையை,

"சொல்லிய முறையால் சொல்லவும்படுமே” - (தொல். நூற்பா 951)
"முல்லைமுதலாச் சொல்லிய முறையால்” - (தொல். நூற்பா 974)
என்ற தொல்காப்பியரின் கூற்றாலேயே அறிய முடிகின்றது.

ஆயினும் கருப்பொருட்களைத் தொகைப்படுத்தும் போது (நூற்பா 964) மலரை ஒரு கருப்பொருளாகத் தொல்லாசான் கூறவில்லை. இருப்பினும்,

"அவ்வகை பிறவும் கரு என மொழிய - (தொல்.நூற்பா 964)

"எந்நில மருங்கின் பூவும் புள்ளும்” (தொல்.நூற்பா 965)

என்றும் கூறுவதால் பூவும் ஒரு கருப்பொருள் ஆகின்றது.

கீழ்க்காணும் சங்கச் சான்றோர் பாடல்கள் இவ்வுண்மையை அரண் செய்கின்றன:

"தில்லை பாலை கல் இவர் முல்லை” - குறிஞ்சிப்பாட்டு 77
"தண்கயக்குவளை குறிஞ்சி வெட்சி” - குறிஞ்சிப்பாட்டு 63
“குருகிலை மருதம் விரிபூங்கோங்கம்”-குறிஞ்சிப்பாட்டு 73
"வாழைவள்ளி நீர் நறு நெய்தல்” - குறிஞ்சிப்பாட்டு 79
"பாலை நின்ற பாலை நெடுவழி” - சிறுபாண். 11
"பாலை மரம்” - சூடாமணி நிகண்டு, 4:34
"பாலைப்பழம்” - என் சரித்திரம். உவேசா.

தீம்பாலை - ஒருவகை மரம் - சென்னை.ப.பே. பக்.317 (பிற்சேர்ப்பு)

"பாலை என்பதற்கு நிலம் இன்றேனும், வேனில் காலம் பற்றி வருதகன் அக்காலத்துத் தளிரும் சினையும் வாடுதல் இன்றி நிற்பது பாலை என்பதொரு மரம் உண்டாகலின் அச்சிறப்பு நோக்கி பாலை என்று குறிப்பிட்டார்.”

-இளம்பூரணம் உரை - தொல். அகத். நூ.5.

குலக்குறி - Tolen என்பது போல திணைக்குறியாக மலர்களின் பெயர்களைப் பண்டைத் தமிழர் வழங்கி வந்துள்ளனர் என்பது இதுவரை காட்டிய சான்றுகளால் அறிகின்றோம்.

மலர்களின் பெயர்கள் நிலத்திற்கு ஆகிவந்து, திணை ஒழுக்கத்திற்கும், திணைப் பண்ணிற்கும் ஆகிவந்துள்ளது; தெய்வத்திற்கும் ஆகிவந்துள்ளது. இவ்வாறு இருமடி, மும்மடி என ஆகுபெயர்களாக ஆகிவந்துள்ளது.

முல்லை = கற்பு - திவாகரம் 1984
"வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும்” - தொல்.நூ. 1006
"வாடா வள்ளி வயவர் ஏத்திய” - தொல்.நூ. 1006
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று - குறள் 1304

குறிஞ்சி நிலத்தின் வள்ளி என்ற மலர் / கொடியின் பெயரே நிலத் தெய்வமான வள்ளிக்கும் ஆகிவந்துள்ளது. வஞ்சி, கொடிச்சி என்ற பெண்களின் பெயர்களும் மலர்களின் பெயர்களே. இன்றும் நம் பெண்களுக்கு தாமரை, மல்ககை, செண்பகம் என்றெல்லாம் பெயர் வைக்கும் மரபு உண்டு.

4. நாற்பெரும் பண்கள்

தமிழகத்தில் பாலை நிலம் இல்லை. எனவே பாலையை விலக்கி, நானிலப் பாகுபாட்டையே முதகல் காப்பியக் குடிமகன் கூறுகின்றார். அவர் கட்டமைத்த இலக்கண நெறியில் இலக்கியம் படைத்த இளங்கோ அடிகள் பாலைநிலம் உருவாகும் முறைபற்றிக் கூறுகின்றார்:

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்கயல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்” - சிலம்பு 11: 64-66

"முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே” - தொல்.நூ.951
"முல்லை முதலாச் சொல்லிய முறையால்” - தொல். நூ.974
"நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய” - தொல்.நூ.948

இவ்வாறு நான்கு நிலங்களையே முதலில் காப்பியனார் வரிசைப்படுத்துகிறார். இந்நான்கு நிலங்களின் பெருவழக்குப் பெற்ற நான்கு பெரும் பண்களையே பண்டைப் பனுவல்கள் கூறுகின்றன:

"குறிஞ்சி செவ்வழி மருதம் பாலை - திவாகரம் 1874
"ஈரிறு பண்ணும் எழுமூன்று திறனும்” - பிங்கலம் 1380
"நாற்பெரும் பண்ணும் ...” பெருங்கதை 1:37:116

பிறகே பாலைக்கான சிறுபொழுது பெரும்பொழுது கூறுகின்றார்:

"நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு” - தொல்.நூ.955

என்று பாலை நிலத்தினையும் உள்ளடக்கி ஐந்து நிலத்திற்கான ஐந்து பெரும் பண்களை உரையாசிரியர்கள் வரிசைப்படுத்திக் காட்டுகின்றனர்.

5. ஐந்து திணைப் பண்கள்

திணை இளம் பூரணர் கூற்று நச்சினார்க்கினியர்
கூற்று
முல்லை (சாதாரி என்ற
முல்லை நிலச் சிறுபண்) முல்லையாழ்
குறிஞ்சி குறிஞ்சி குறிஞ்சி யாழ்
மருதம் மருதம் மருத யாழ்
பாலை பாலை பாலை யாழ்
நெய்தல் செவ்வழி நெய்தல் யாழ்

6. ஏழ் பெரும் பாலைகள்

சங்கப் பாடல்கள், சிலப்பதிகாரம் போன்ற தொல்காப்பியத்திற்குப் பின்பான இலக்கியங்களில் ஏழ்பெரும் பாலைகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. பெரும்பண்கள் "யாழ்” என்பதிலிருந்து மாறி "பாலை” என்று பெயர் பெறுகின்றன.

குறிப்பிட்ட சில பெரும் பண்களை "ஏழ்பெரும் பாலைகள்” என்று சிறப்புப் பெயர் தந்து அழைத்துள்ளனர்.

"நாற்பெரும் பண்ணும் எழுவகைப் பாலையும்” - பெருங்கதை 1:37:116

"இவ்வேழு பெரும் பாலையினையும் முதலடுத்து நூற்று மூன்று பண்ணும் பிறக்கும்”. - சிலம்பு: வேனில் 8:35 அடியார்க்கு நல்லார் உரை.

"இவ்வாறே திரிக்க இவ்வேழு பெரும் பாலைகளும் பிறக்கும்”

அடியார்க்கு நல்லார் உரை - சிலம்பு, ஆய்ச்சியர்குரவை எடுத்துக்காட்டு 13.

இவ்வாறான "ஏழ் பெரும் பாலை” என்ற கூற்றால், ஏனைய பாலைகளும் பண்டைய காலத்தில் வழக்கில் இருந்துள்ளன என்பதை,

"வந்தது கொண்டு வராதது உணர்தல்” - தொல்காப்பியம் மரபியல் நூ.111
என்ற தொல்காப்பியர் நெறிப்படி நாம் அறிய முடிகின்றது.

பாலை என்பது ஏழு சுரப்பண்; தற்காலத்தில் பாலை என்பதைத் தாய்ப்பண் - மேளம் - கர்த்தா (Mode - Heptatonic - Generative Scale) - மேளகர்த்தா என்றெல்லாம் குறிப்பிடுகின்றோம்.

பாலை என்பது குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த பால் நிறைந்துள்ள ஒரு மரத்தைக் குறிப்பது. பால் நிறைந்துள்ள ஏனைய தாவரங்களுக்கும் பொதுப் பெயராகவும் வழங்கியுள்ளது.

குடசப் பாலை, வெட்பாலை, கருடப்பாலை போன்ற இவ்வகைத் தாவரங்களை நம் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன:

பாலை மரம் - சூடாமணி நிகண்டு 4:34
"பாலைநின்ற பாலை நெடுவழி - சிறுபாண் 11
பாலை - வராளி - ஒரு மலர் - Wedge - Leaved ape flower
- பக். 407 செ.ப. அமு.பிற்சேர்ப்பு

"தில்லை பாலை கல்இவர் முல்லை”-குறிஞ்சிப் பாட்டு 77
பாலைப்பழம் - என் சரித்திரம். உ.வே.சா.

ஏழு பிரிவுகளைக் கொண்ட இலைகளையுடைய பால் நிறைந்த ஒரு வகைத்தாவரம் - Alstonia Scholaris,
- முனைவர் எஸ். இராமனாதன்- பக்.7, Music in Silappathikaaram

ஏழிலைப் பாலை - Seven - leaved milk - Alstonia - பக். 568 செ. ப.அ.மு.

ஏழிலைம்பாலை- பக்.568- மேலது
"பூத்த ஏழ் இலைப் பாலையைப் பொடிப்பொடியாகத் தேய்த்த”
- கம்பரா. வரைக். 6

நன்னன் என்ற குறுநில மன்னனின் மலைநாடு "ஏழில்”, "ஏழில் குன்றம்” என்று பெயர் பெற்றுள்ளது.

"நன்னன் ஏழில் நெடுவரை” - அகநானூறு 152

"ஏலப்பிலக்கிழங்கு” என்ற சொல்லாட்சி திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையருகிலுள்ள குற்றால வட்டாரங்களில் வழங்குகின்றது. இச்சொல்லாட்சியானது "ஏழிலைப் பாலைக்கிழங்கு” என்பதின் திரிந்த வடிவமே. இக்கிழங்கானது ஏழிலைக்கிழங்கு (ஏலக்கிழங்கு, ஏலேலக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கப்பைக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, ஏழிலை வள்ளிக்கிழங்கு, ஆழ்வள்ளிக்கிழங்கு, கொம்புக்கிழங்கு, சவரிக்கட்டை என்றெல்லாம் பெயர் பெற்றுள்ளது. (தேவநேயம் பக்.300/VII) (இக்கிழங்கு மலை நாட்டிகருந்து (கேரளம்) அதை அடுத்துள்ள குற்றாலம், செங்கோட்டை, தென்காசி வட்டாரங்களுக்கு வருகிறது) பெரும்பண் ஏழு சுரங்களைக் கொண்டுள்ளதால் ஏழு பிரிவுகளைக் கொண்ட இலைகளை உடைய பாலைத் தாவரத்தின் பெயரான "பாலை” என்பதைப் பெரும் பண்ணிற்குத் தமிழர் தந்துள்ளனர்.

ஏ - ஏழ் - எழு - ஏழ - எழுவுதல் - ஒகயெழுப்புதல் ஏழ்- யாழ் - ஏழ்- எழும் இசை

இசை ஏழாதலால் ஏழாம் எண் ஏழ் என்ற பெயர் பெற்றது - தேவநேயம் பக்.39/IV

பாலை என்று பெயர் பெற்ற சிறப்பான ஏழு பாலைகளை அந்தந்த காதைகள் நடக்கும் நிலத்திலேயே இளங்கோ அடிகள் சிலம்பில் அமைத்துக் காட்டியுள்ளார்.

7. செம்பாலை

முல்லை - முல்லைப் பண் - முல்லையாழ் என்ற தொல்காப்பிய வழக்கிற்குப் பின்பு "செம்பாலை” என்ற புதிய பெயர் இப்பெரும் பண்ணிற்கு ஆகிவந்துள்ளது.

"அதுவும் குணம் காரணமாய்ச் செம்பால், செம்பாலையாயினால் போல நின்றது” - தொல்காப்பியம். அகத்.நூல். 13 நச்சினார் உரை.

செம்மலை - ஆவிரை - ஆவாரம்பூ Tanners Senna "பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்” - தொல்காப்பிய நூ. 283

என்று தொல்காப்பியம் செம்மலை என்ற ஆவிரையைக் குறிப்பிடுகின்றது.

செம்மலைப்பாலை என்றொரு பண்ணின் பெயரைச் சங்க அகராதியும், மதுரைத் தமிழ்ப் பேரகராதியும் (பக்.1007/I) குறிப்பிடுகின்றன.

செம்முல்லைக்குப் பரியாய பெயர் செம்மல். இவைகளை அடியொட்டி "செம்பாலை” என்ற பெயரைத் தமிழ் இசையின் தலைமைப் பாலையான முல்லையாழ் பெற்றிருக்கலாம். இது மேலும் ஆய்வுக்குரியது.

முல்லை நிலப் பெரும்பண்ணான, முல்லையாழ் - செம்பாலை, தற்காலம் அரிகாம்போதி என்று பெயர் பெற்றுள்ளது. தலைமைப் பாலையாக விளங்கும் சிறப்பைக் கொண்டுள்ளதால் இதற்கு "பாலை யாழ்” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் வருகின்ற குரவைப்பாட்டில் ஆய மகளிர் எழுவரை நிறுத்தி, அவர்களுக்குச் சுரப் பெயரிட்டு அந்த எழுவர் மூலம் செம்பாலையின் ஏழு சுரநிரல்களைத் தெளிவாகக் காட்டியுள்ளார் இளங்கோஅடிகள். இதன் மூலம் முல்லை நிலப் பெரும்பண்ணான முல்லை-முல்லையாழ் - செம்பாலை என்பது இன்றைய அரிகாம்போதியே எனத் துல்லியமாக அறிய முடிகின்றது. ஒரு பண்ணின் சுரநிரல்களை ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ அடிகள் காட்டியதைப்போல வேறு எவரும் உலகில் இதுவரை காட்டியதில்லை. "குரல்துலை வில்துத்தம்...” போன்ற எடுத்துக்காட்டு வெண்பாக்கள் மூலம் உரையாசிரியர்கள் இதற்கு மேலும் அரண் செய்துள்ளனர். இப்பாடல்களில் வரும் "தொல் ஏழிசைக்காம்” என்ற சொல்லாட்சி மூலம், தமிழரின் ஆதிப்பண் - Primordial Scale - தலைமைப் பாலை - இந்தியச் சாமகானம், அரிகாம்போதியே என்று இளங்கோ அடிகளும் உரையாசிரியர்களும் நிலைநாட்டியுள்ளனர்.

படுமலைப் பாலை

இப்பண் ஏழ்பெரும் பாலை வரிசையில் இரண்டாவது பாலையாக வரும் ஏழு சுரப்பெரும் பண். குறிஞ்சி - குறிஞ்சி யாழ் என்று தொல்காப்பிய காலத்தில் பெயர் வழங்கிய குறிஞ்சி நிலப்பண், சங்க காலத்திலும் சிலம்பு காலத்திலும் படுமலைப்பாலை என்று பெயர் பெறுகின்றது.

"பாணர் படுமலை பண்ணிய எழாலின்” - குறுந். 323:2
"படுமலை நின்ற நல்யாழ் ...” - நற்றிணை 139:4
"படுமலைப் பாலைநின்ற பயங்கெழு
சீறியாழ்” - புறநானூறு 135:7

மலைப்பாலை என்பது ஒருவகைச் செடிவகை என்பதைக் கீழ்க்காணும் உண்மையால் அறிய முடிகின்றது:
மலைப் பாலை-ஒரு செடி-Minusops- செ.ப.அ.மு.பக்.3108

செம்பாலையின் துத்த நரம்பைக் கொண்டு வலமுறையில் பண்பெயர்க்க படுமலைப்பாலை என்ற பண் கிடைக்கிறது. இளங்கோ அடிகள் இவ்வுண்மையைக் கீழ்க்காணும் முறையில் காட்டுகின்றார்:

"குரல் குரலாக வருமுறைப் பாலையில்
துத்தம் குரலாத் தொன்முறை இயற்கையின்
அம்தீம்குறிஞ்சி” -சிலம்பு. நடுகல் காதை 28:33-35

மேற்கண்ட பாடல்காட்டும் சுரநிரல்படி குறிஞ்சி - குறிஞ்சியாழ் - படுமலைப்பாலை என்பது இன்றைய நட பைரவிதான் என்பதை ஐயத்திற்கிடமின்றி அறிய முடிகின்றது.

செவ்வழிப்பாலை

செவ்வழி என்றும் நெய்தல்யாழ் என்றும் தொல்காப்பிய காலத்தில் பெயர் பெற்ற நெய்தல் நில ஏழு சுரப் பெரும்பண் ஏழ்பெரும் பாலை வரிசையில் மூன்றாவதாக வரும் செவ்வழிப் பாலையே.

தமிழிசையின் தலைமைப் பாலையான செம்பாலையின் (அரிகாம்போதி) கைக்கிளை (காந்தாரம்) குரலாக வலமுறையில் பண் பெயர்க்க செவ்வழிப்பாலை கிடைக்கின்றது. இதை இருமத்திமைத் தோடி என்று குறிப்பிடலாம். இப்பண் வரும் முறை பற்றி இளங்கோ அடிகள் கீழ்க்கண்டவாறு கானல் வரியில் கூறுகின்றார்:

"காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப்பாலை ...”
- சிலம்பு கானல் வரி, பாடல் 47

அரும் பாலை

பாலைத் திணைக்குரிய ஏழு சுரப் பெரும் பண் பாலை - பாலையாழ். தொல்காப்பியருக்குப் பின் இது அரும்பாலை - சுடுநிலப்பாலை - மருவின் பாலை என்றெல்லாம் பெயர் பெற்றிருக்கின்றது.

ஏழ்பெரும் பாலை வரிசையில் நான்காவதாக, நடுவில் வரும் பாலையாதலால் இதற்கு நடுவண்பாலை என்ற பெயரும் உண்டு.

"உழை குரலாயது அரும்பாலை” என்று இதன் சுரநிரல்களை அடியார்க்கு நல்லார் (சிலம்பு ஆய்ச். 17:13) காட்டுகின்றார்.

அரும்பாலை - காட்டுப்பாலை என்று ஒரு தாவரத்தை மதுரைத் தமிழ்ப் பேரகராதி (பக். 421/ஐ) காட்டுகின்றது. தமிழிசையின் தலைமைப் பாலையான முல்லையாழ் - செம்பாலை - அரிகாம்போதியின், உழை (மத்திமம்) குரலாக வலமுறையில் பண்பெயர்க்க, பாலை - பாலையாழ் - அரும்பாலை என்ற இன்றைய சங்கராபரணம் கிடைக்கின்றது.

கொடிப்பாலை / கோடிப்பாலை

மருத நிலத்திற்குரிய ஏழு சுரப் பெரும்பண் மருதம் - மருதயாழ். இது காப்பியருக்குப் பின்பு கொடிப்பாலை / கோடிப்பாலை என்று பெயர் பெறுகின்றது.

கொடிப்பாலை - வனதித்தம் - Green Wax Flower
- சென்னை ப.அ.மு. பக்.1135

கொடிப்பாலை - திவாகரம் 1878

சிலப்பதிகார அரங்கேற்றுக்காதை வரி 70 & 71ற்கான அடியார்க்கு நல்லார் உரைப் பகுதியின் அடிக்குறிப்பில் (பக்.111),

"இதனை இக்காலத்துக் கொடிப்பாலை என வழங்குகின்றனர்” என்று உ.வே.சா. குறிப்பிடுகின்றார்.

"கூறிய பட்டடை குரலாய் கொடிப்பாலையில் நிறுத்தி”
- பெரிய புராணம் ஆனாய. பாடல் 25

"கொடிப்பாலை” என்றே பழைய பதிப்புகளில் உள்ளது.

தமிழரின் ஆதிப்பாலையான செம்பாலையின் (அரிகாம்போதி) இளி நரம்பை (பஞ்சமம்)க்குரலாகக் கொண்டு வலமுறையில் பண் பெயர்த்தால் கிடைக்கும் பண் மருதம் - மருதயாழ் - கொடிப்பாலை / கோடிப்பாலை என்ற இன்றைய கரகரப்பிரியா.

அரிகாம்போதியின் பஞ்சம சுரப்பண்பெயர்ப்பால் கரகரப்பிரியா வருவதால், "பஞ்சமம்” என்ற பெயரும் கரகரப்பிரியாவிற்கு உண்டு.

விளரிப்பாலை

ஏழ்பெரும் பாலை வரிசையில் ஆறாவதாக வரும் பாலை விளிப்பாலை என்பது.
விளரிப்பாலை - விளா மரம் - Wood - apple
- சென்னை ப.அ.மு. பக்.3728

இளங்கோ அடிகள் சிலம்பு கானல்வரி 48ஆம் பாடகல் இப்பண் கிளைமுறை(மத்திமபாவம்)யில் வரும் முறையைக் குறிப்பிடுகின்றார்.

0 1 2 3 4 5
ச ரி1 ரி2 க1 க2 ம1 ம2 ப த1 த2 நி1 நி2
5 ----- > 0 1 2 3 4

எடுத்துக்கொண்ட சுரத்திற்கு (ப), ஐந்தாவதாக வரும் சுரம் (ச) முதல் சுரத்தின் மத்திம சுரம். இது கிளைமுறை - ஐந்தன்முறை - மத்திமபாவம். இவ்வாறு சுழற்சி செய்யும் போது,

பச, சம1, ம1நி1, நி1க1, க1த1, த1ரி1

என்று ஐந்தன் முறைக் கோவைகள் வந்து,

சரி1க1ம1பத1 நி1 என்ற விளரிப் பாலையின் சுரநிரல்கள் கிடைக்கின்றன.

"நுளையர் விளரி நொடி தரும் தீம்பாலை
இளிகிளையிற் கொள்ள...” -கானல்வரிப் பாடல் 48

என்று தமக்கே உரிய இசைப் புலமை நுட்பத்தால் இப்பண் வரும் முறையை இளங்கோ அடிகள் காட்டியுள்ளார். மேற்கண்ட சுரநிரல்களால் இப்பண் தற்காலத்தில் வழங்கும் தோடிதான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. மேலும் கானல்வரியில் இப்பண்ணினை, அடிகளார் அமைத்துக் காட்டுவதால் இப்பண் நெய்தல் நிலத்திற்கு உரியது என்பதையும் நாம் அறிகிறோம். எனவே நெய்தல் நிலத்திற்கு செவ்வழி, விளரிப்பாலை (இருமத்திமைத் தோடி, தோடி) என்ற இரு பெரும் பாலைகளும் உரிமை கொள்கின்றன.

மேற்செம்பாலை

ஆய்ச்சியர் குரவை உரைப்பகுதியில் "தாரம் குரலாயது மேற்செம்பாலை” என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். வலமுறையில் செம்பாலையின் (அரிகாம்போதி) தாரம் (கைசகிநிசாதம்) குரலாகப் பண் பெயர்க்க மேற்செம்பாலை கிடைக்கின்றது. இதையே "தலையின தாரம் செய்யும் தாரம்” என்ற நூற்பா மூலமும் அரும்பத உரைகாரரும் வேனில்காதை (வரி 25)க்கு உரை கூறும்போது உறுதி செய்கின்றார்.

"மதுர கீதம் பாடினள் மயங்கி” - சிலம்புவேனில் 8:24 என்ற பகுதிக்கு உரை வகுக்கும்போது, "மேற்செம்பாலை என்னும் பண்ணைக் கண்டத்தால் பாடி...” என்றே கூறுகின்றார். வேனில் காதை நிகழும் இடம் மருதநிலம். இளங்கோ அடிகள் வேனில்காதையை மருதநிலத்தில் அமைத்துள்ளதால் இப்பண் மருத நிலத்திற்குரியது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

மேற்காட்டிய உரையாசிரியர்களின் உரைகளின் மூலம் மேற்செம்பாலை என்பது இன்றைய கல்யாணிப்பண் என்பது பெறப்படுகின்றது. இவ்வாறு ஏழ்பெரும் பாலை வரிசையில் ஏழாவதாக, இறுதியில் வரும் கல்யாணியுடன் கரகரப்பிரியாவும் மருதநிலத்திற்கு உரிமை பெருகின்றது.

8. ஐந்து சிறு பண்கள்

ஐந்து நிலத்திற்கான ஐந்து சுரங்கள் அமைந்த ஐந்து சிறுபண்களை நம் முன்னோர் ஐந்திணைக்கும் வகுத்துள்ளனர். (ஒளடவம் - Pantatonics - 5 சுரப்பண்கள்)

"செய்தி யாழின் பகுதியொடு...”- தொல்காப்பியர் அகத்.நூ.20 என்ற பகுதிக்கு இளம்பூரணர் உரை செய்யும் போது,

"யாழின் பகுதி என்பது பண்- அது சாதாரி” என்றே உரை வகுக்கின்றார்.

"பண் : "முல்லைத் தீம்பாணி என்றாள்” என்பதனால் சாதாரியும் கூறினார்” என்று பதிக உரையில் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார்.

"போதாரி வண்டெல்லாம் நெட்டெழுத்தின் மேல்புரிய சாதாரி நின்றறையும் சார்ந்து” - திணைமாலை 150-95:3-4. சாதாரிப்பண், திருவிளையாடல் புராணத்தில் விறகு விற்ற படலத்தில் குறிப்பிடப்படுகின்றது. தேவாரத்திலும், ஆழ்வார் பாசுரங்களிலும் இப்பண் பயின்று வருகின்றது. இப்பண்ணுக்குத் திருமுறை கண்ட புராணத்தில் ஒன்பது கட்டளைகள் கூறப்பட்டுள்ளன.

"குரல் மந்தமாக இளி சமனாக...” என்றது சிலம்பு. ஆய்ச்சியர் குரவை வெண்பாவில் குறிப்பிடப்படும் சுரநிரல் (சரி2 க2 பத2) இன்றைய மோகனப் பண்ணிற்கு உரியதென முனைவர் எஸ். இராமனாதன் நிறுவியுள்ளார். எனவே சாதாரி என்றும் முல்லைத்தீம்பாணி என்றும் நம் முன்னோர் கூறியது இன்றைய மோகனப் பண்ணே. ஆய்ச்சியர் குரவையில், குரவைக்கூத்தில் அரிகாம்போதிப் பண்ணினைக் காட்டி உடன் மோகனப் பண்ணையும் இளங்கோ அடிகள் காட்டுகின்றார். இதிகருந்து இரண்டு முடிவுகளை நாம் பெற முடிகின்றது.

1) மோகனம் என்ற சிறுபண் (யாழின் பகுதி அரிகாம்போதிப் பண்ணின் திறம் என்பது. (அதாவது ஜன்யம் - Derivative)

2) அரிகாம்போதி மற்றும் மோகனப் பண்களை (முல்லை நில) ஆய்ச்சியர் பாடுவதாக இளங்கோ அடிகள் அமைத்துக் காட்டுவதால், முல்லை நிலத்திற்குரிய பெரும்பண் அரிகாம்போதி என்றும், சிறுபண் (யாழின் பகுதி) மோகனப் பண் என்பதும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

ஒரு பெரும் பண் பாடி அதன் திறம் பாடுவதற்கு வழித் திறம் (பெறும் பண்ணில் - கர்த்தாவில் பிறக்கும் சிறுபண்) பாடுதல் என்று பெயர்.

"குழகனும் யாழினும் குரல் முதல் ஏழும்
வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்
- சிலம்பு: இந்திர. 5: 35-36

இவ்வாறு வழித்திறம் பாடும் முறையை அடிகளாரே வகுத்துக் காட்டுகிறார்.

மோகனப்பண்ணின் ஏனைய சுரங்களால் பண் பெயர்ப்பு செய்யும் முறையால், மத்தியமாவதி, இந்தளம், சுத்தசாவேரி, சுத்த தன்யாசி என்ற சிறுபண்கள் - பாணிகள் கிடைக்கின்றன. பண்டைய நமது இலக்கியங்கள் இச்சிறு பண்களையும் காட்டியுள்ளன.

நிலம் பண்டையப் பெயர் இன்றையப்
பெயர்
1.முல்லை- முல்லைக்குழல், முல்லைப்பாணி மோகனம்
சாதாரி முல்லையந்தீங்குழல்
(ஆய்ச். குரவை, கூத்துள் படுதல்)
வெண்பா மற்றும் பாடல் 3)
2.குறிஞ்சி- குறிஞ்சிப்பாணி, வேலன்பாணி மத்தியமாவதி
(நீர்ப்படைக்காதை 27:224)
(காட்சிக்காதை 25:25)
3.நெய்தல்- கானல் பாணி இந்தளம்
(வேனில் 8: வெண்பா-2)
4.பாலை- பாலைப்பாணி, கொன்றையந், சுத்தசாவேரி
தீங்குழல் (ஆய்ச். குரவைகூத்துள் படுதல் பாடல்1)
கொன்றைக்குழல்
5.மருதம்- ஆம்பல்பண் (சிலம்பு 7: சுத்ததன்யாசி
பாடல் 29) ஆம்பலந் தீங்குழல்
(ஆய்ச். குரவை பாடல் 2)
ஆம்பல் குழல்

முடிவுரை

இவ்வாறு முல்லை, குறிஞ்சி, கொன்றை, ஆம்பல், என சிறு பண்களும் திணைக் கருப்பொருளான மலர்களின் பெயர்களையே பெற்றுள்ளன.

மதுமாதவி என்று ஒரு பண்ணின் பெயரை நாரதரின் சங்கீத மகரந்தம் குறிப்பிடுகின்றது. மதுமாதவி என்பதே பின்னாளில் மத்தியமாவதி எனத் திரிந்ததாக யாழ்நூலார் (யாழ் நூல் பக்.289) குறிப்பிடுகின்றார்.
மாதவி = குருக்கத்தி - ஒரு கொடி வகை

மத்தியமாவதியின் இன்னொரு பண்டையப் பெயர் செருந்தி என்பது. செருந்தி என்பது வாட்கோரை என்ற ஒருவகைக் கோரையைக் குறிப்பது.

பஞ்சரம் = செருந்தி மரம் - சூடாமணி 11: ஞகர.1

பைரவி, நடபைரவி என்று இன்று அழைக்கப்பட்டாலும், இப்பண்ணினை "பயிரவி” என்றே திவாகரம் குறிப்பிடுகின்றது.

"பிலகரி பயிரவி காம்போதி என்ன” - திவாகரம் 1984

பயிரவி என்பது முடக்காத்தான்-உழிஞை என்ற கொடிவகை - Lasser Baloon, - சென்னை ப.அ.மு. பக்.2489

வெட்சி, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, காஞ்சி என்ற புறத்திணையின் பெயர்களும் மலர்ப்பெயர்களே.

இயற்கையோடு இயற்கையான வாழ்வு வாழ்ந்த நம்முன்னோர் திணைத்திறள் கூட்டமாக வாழ்ந்து அவர் பாடிய பண்களுக்கும் மலர் செடி கொடி மரப்பெயர்களையே வழங்கி வந்துள்ளனர்.

(குறிப்பு: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (CIIL) மைசூர் மற்றும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய "தொல்காப்பியத்தில் இசைக்குறிப்புகள்” குறித்த 27 & 28.7.2006இல் தஞ்சையில் நடந்த கருத்தரங்கில் வாசித்தளித்த கட்டுரை.)

Pin It