குழந்தை மனது கொண்ட எங்கள் சாத்வீக குருசாமி கூட தீவிரவாதியாக மாறிய சம்பவம் ஒன்று ஒரு சமயம் நடந்தது. அப்போது நாங்கள் பெரியானை வட்டத்தில் முகாமிட்டிருந்தோம். பெருவழியில் வரும் எல்லா அய்யப்பமார்களும் இந்த பெரியானை வட்டம் அல்லது சிறியானை வட்டம் எங்காவது ஓரிடத்தில் முகாமிட்டு கன்னிசக்தி பூஜை முடித்து விட்டுத்தான் மேற்கண்டு பயணப்படுவார்கள். பம்பை ஆற்றின் ஓரத்தில் இந்த முகாம்கள் அமைந்திருக்கின்றன.

அங்கே நூற்றுக்கணக்கான ராட்சசவிரிகள் அமைக்கப்பட்டிருக்கும் வனத்துறையிடம் அனுமதி பெற்ற தனியார்கள் இதை அமைத்திருப்பார்கள் ஒவ்வொரு விரியிலும் ஆயிரம் பேர் வரை தங்கிக் கொள்ளலாம். ஒருசாமிக்கு அய்ந்து முதல் பத்து வரை நோக்கம் போல வாடகை வசூலித்துக் கொள்வார்கள். கேஸ் சிலிண்டரும் அடுப்பும் கூட இங்கு வாடகைக்கு கிடைக்கும். நாங்கள் தங்கியிருந்த போது, எங்கள் ஊரைச் சேர்ந்த, தன்னை போட்டி குருசாமியாய் நினைத்துக் கொள்ளும், அந்த இன்னொரு குருசாமியின் குரூப்பும் தங்கியிருந்தது. சமையல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க எங்கள் குரூப்பைச் சேர்ந்த நாலைந்து சாமிகள் தண்ணீர் பிடித்து வர பாத்திரங்களுடன் சென்றது. தண்ணீர் பிடிக்கும் குழாய் முன் நீண்ட வரிசையில் சாமிமார்கள் காத்து நின்றனர். ஏற்கனவே அந்த குரூப்சாமிகள் இரண்டு பேர் வரிசையில் நின்றிருந்தனர். எங்கள் சாமிகளும் அவர்களிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு கடைசி ஆளாய் வரிசையில் வந்து நின்று கொண்டனர்.

லட்சக்கணக்கான சாமிமார்கள் வந்து, தங்கி, சமைத்து சாப்பிட்டுவிட்டுப் போகும் இடம் அது. ஆனால் குடி தண்ணீருக்கான குழாய்களோ இரண்டே இரண்டுதான் இருக்கின்றன. நீண்ட நேரம் காத்துக் கிடந்து, தள்ளுமுள்ளு, இடிபாடுகளுக்கு மத்தியில்தான் தண்ணீர் பிடித்து வரவேண்டிய அவலநிலை. ஓட்டல்கள் நடத்தும் தனியார்கள், தூரத்திலுள்ள சிறிய நீரோடைகளுக்கு அருகே சின்ன பள்ளம் தோண்டி, ஜெட்பம்பு மூலம் நீரை உறிஞ்சிக் கொள்வார்கள். அந்த நீரை காசுக்கு கூட நமக்கு தரமாட்டார்கள். நமக்கு இந்த அடிதடிக்குழாய்தான். அதே போல சுகாதாரமான கழிப்பறைகளும் அங்கே கிடையாது. எல்லா சாமிகளும் வழிநெடுக இருந்து வைத்திருக்கும். நடைபாதை நரகல் பாதையாய் மாறியிருக்கும். பாதையின் நடுவில்தான் எச்சரிக்கையாய் நடக்கவேண்டும். தப்பித்தவறி ஓரத்தில் ஒரு எட்டு வைத்தால் போதும். நாப்பத்தி ஒருநாள் விரதமும் வீண். இப்போதுதான் அகிலபாரத அய்யப்பா சேவா சங்கம் அரசாங்கத்தோடு போராடி , அனுமதி பெற்று,தற்காலிக கழிப்பறைகள் கட்டி, ஓரளவு சாமிமார்களையும், அய்யப்பனையும் காப்பற்றி இருக்கிறார்கள். இல்லையென்றால், எப்போதோ நாற்றத்தில் மூக்கை பொத்திக் கொண்டு அய்யப்பன் அந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிப்போயிருப்பான். இருப்பினும் அந்தக் கூட்டத்துக்கு இந்தக் கழிப்பறைகள் போதாது. எனவே பெரும்பாலான சாமிகள் இன்னும் திறந்த வெளி கழகம்தான். அலச புனித பம்பைதான்.

கழிப்பறைகளுக்குகே இந்தப்பாடு என்றால் குடிநீர் குழாய்கள் எம்மாத்திரம்?

அகில பாரத அய்யப்பா சேவாசங்கத்தை போய் கேட்டால் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டை கைகாட்டுகிறார்கள் தேவஸ்வம் போர்டை கேட்டால் கேரள வனத்துறையை கைகாட்டுகிறார்கள் வனத்துறையை கேட்டால் பொதுப்பணித்துறையை கைகாட்டுகிறார்கள். அவர்களை கேட்டால் கேரளா குடிநீர் வடிகால் வாரியத்தை கைகாட்டுகிறார்கள் வாரியத்தை கேட்டால் பம்பை நகரியத்தை கைநீட்டுகிறார்கள் நகரியத்தை கேட்டால் பெரியார் புலிகள் சரணாலக நிர்வாகத்தை கை நீட்டுகிறார்கள் நிர்வாகத்தை கேட்டால் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டை கைகாட்டுகிறார்கள்.

அய்யப்பன் அக்கடா வென்று குந்தியிருக்கும் சந்நிதானமும் அதைச்சுற்றியுள்ள கோவில் கட்டிடங்களும் மட்டுமே தேவஸ்வம் போர்டு நிர்வாகத்தில் இருக்கிறது. மற்றபடி எருமேலியில் ஆரம்பித்து கோயில் வரை செல்லும் பெரு வழிப்பாதை முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அவர்களும் சுதந்திரமாய் எதுவும் செய்து விடமுடியாது. பெருவழிப்பாதை பகுதிகளும் அதையொட்டிய காடுகளும் பெரியார் புலிகள் சரணாலகம் என அரசு அறிவித்து விட்டதால் அவர்களின் குறுக்கீடு வேறு சாதாரணமாக இந்தப் பகுதிக்குள் நாலுக ôல் புலிகளுக்கு மட்டுமே அனுமதி இரண்டு கால் புலிகள் நுழைவதே சட்டவிரோதம். ஏதோ போனால் போகிறது என்று அய்யப்பனுக்காக மன்னித்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதில் அந்த வசதி இந்த வசதி என்று கேட்டால் எப்படி? ஆனாலும் வருடத்திற்கு வருடம் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்து கொண்டுதான் போகிறது. தேவஸ்வம் போர்டுக்கும், கேரளா அரசுக்கும் கோடிக்கணக்கில் பணம் கொட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தர தயாராய் இருக்கிறோம். அனுமதி மட்டும் தாருங்கள் என்று கேட்டு பல ஊர்களைச் சார்ந்த பல்வேறு பக்தர்கள்சபை தொடுத்த வழக்குகள் மட்டும் பத்துப் பதினைந்து, பத்தனம் திட்டை நீதிமன்றத்தில், நீண்ட காலமாய் நிலுவையில் இருக்கிறது.

ஆனால் எந்த அரசுத்துறைக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளது என அவர்களுக்கே தெரியவில்லை. அந்த அளவு எல்லா துறையும் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கிடப்பதுதான் அவர்களின் அதிகார வரம்பு அவர்களுக்கே புரிபடாமல் தலையை போட்டு உடைத்துக் கொள்கிறார்கள். சரி. அதை விடுங்கள் நம்ம குருசாமிகளிடம் வருவோம். தண்ணீர் பிடிக்க நீண்ட நேரம் வரிசையில் நின்ற பிறகு, அந்த குரூப் சாமிகளின் முறை வந்தது. தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களின் நீரைப்பிடிக்க ஆரம்பித்தார்கள். அப்போது கன்னட மொழி பேசிக்கொண்டு நாலு முரட்டுச்சாமிகள் அங்கு வந்தனர். வரிசையைப் பற்றியோ, அதில் நின்று கொண்டிருந்த சாமிகளைப் பற்றியோ சட்டை செய்யாமல், நேரே குழாயடிக்குப் போனார்கள். தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த நமது சாமிகளை தள்ளிவிட்டு தங்கள் பாத்திரத்தை அடியில் வைத்தனர்.

வரிசையில் நின்றிருந்த மற்ற சாமிகள் கத்தி கூப்பாடு போட, எங்கள் ஊர் சாமிகள், அவர்களின் பாத்திரத்தை தூக்கி தூர எறிந்தனர். பதிலுக்கு அவர்கள் இவர்களின் கையில் இருந்த பாதி நீர் பிடித்திருந்த பாத்திரத்தை பிடுங்கி தூர எறிந்தனர். அவ்வளவுதான். அவர்களுக்குள் தள்ளுமுள்ளு சண்டை தொடங்கி விட்டது. பொதுவாக சண்டை என்று வந்தால் முதலில் நாம் செய்வது எதிராளியின் சட்டையைப் பிடிப்பதுதானேஙு அதே மாதிரி அந்த கன்னட சாமிகள் சட்டையில்லாத எங்கள் ஊர் சாமி ஒன்றின் வெற்றுடம்பில் தொங்கிய மாலைகளை கொத்தாக பிடித்தது. இந்தச் சாமி திமிற அந்த விசையில் மாலைகள் அறுந்து விட்டன. வெறியே வந்துவிட்டது நமது சாமிக்கு.

மாலை என்று கழுத்தில் போட்டுவிட்டால் கோயிலுக்கு போய் விட்டு வரும் வரை கழற்றவே கூடாது. வீட்டில் யாராவது üசரணம்ý ஆகிவிட்டால் மட்டுமே கழற்ற வேண்டும். இடையில் எக்காரணம் கொண்டும் மாலை கழன்று விழக் கூடாது. அப்படி கழன்று விட்டால் கெட்ட சகுனம். யாரவது உறவு சாமிகள் சரணம் ஆகிவிடும் என்று பயமான நம்பிக்கை அல்லது குடும்பத்தில் எதாவது துர்ச்சம்பவம் நிகழ்ந்து விடும் என்று அச்சம். இதனால் எல்லா சாமிமார்களும் மாலை விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கும்.

அப்படியிருக்க அந்தக் கன்னடசாமி, மாலையை அறுத்துவிட்டது. இந்தச்சாமியை வெகுண்டெழ வைத்து விட்டது. உடனே கையிலிருந்த, நீர்பிடிக்க வைத்திருந்த, அலுமினிய வாளியால் அதன் தலையில் ஓங்கி ஒரு அடி கொடுத்தது. அந்தச்சாமி முரட்டுச்சாமி கூட மூன்று சாமிகள் வேறா. நான்கு பேரும் சேர்ந்து கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் கொண்டு இந்தச்சாமியை நையப்புடைத்து விட்டன. கை,கால்,முகம், முதுகு எல்லாம் ரத்தக்காயம் அடிப்பட்ட சாமி வலிபொறுக்க முடியாமல் ரத்தம் வழிய தன் குரூப் இருக்கும் இடம் நோக்கி அழுது கொண்டே ஓட்டம் பிடித்தது. அடித்த சாமிகளும் தங்கள் இடத்திற்கு ஓடி விட்டன.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வரிசையில் நின்றிருந்த எங்கள் சாமிகள் வரிசையிலிருந்து விலகி ஓட்டமும் நடையுமாய் நேரே குருசாமியிடம் வந்து விஷயத்தை சொன்னார்கள். அவ்வளவுதான். எங்கள் குருசாமிக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ தெரியவில்லை. குரூப்பிலுள்ள நல்ல தாட்டியமான பத்து இருபது சாமிகளை கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு தன்னுடன் புறப்படச் சொன்னார். நாங்களும் சாதம் கிளறும் நீண்ட இரும்புக் கண்ணாப்பை, ஈயக்கரண்டி, பம்பை ஆற்றில் சப்பரம் செய்து விட வாங்கி வைத்திருந்த மூங்கில் கழி என கிடைத்ததை எடுத்துக்கொண்டு உற்சாகமாய் அவர் பின்னால் போனோம்.

நேரே அடிபட்ட சாமி இருந்த விரிக்குப் போனார் அங்கே அந்தச்சாமி இன்னும் அழுதுகொண்டிருக்க, மற்றச்சாமிகள் காயத்திலிருந்து வழிந்த ரத்தத்தை துண்டைக்கிழித்து துடைத்துக்கொண்டிருந்தனர். அந்த குருசாமியோ அமைதியே உருவாய் அமர்ந்திருந்தார். அவரை ஒருமுறை ஏற இறங்க முறைத்துப் பார்த்த எங்கள் குருசாமி அடிப்பட்ட சாமியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார். எதிரே இருந்த அய்யப்பா சேவா சங்க டிஸ்பென்சிரியில் காயங்களுக்கு மருந்திட்டு கட்டுப்போட வைத்தார். பம்பை ஊருக்குள் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக காவல் தலமையகத்திற்கு தகவல் கொடுக்கச் சொன்னார். பிறகு அடிபட்ட சாமியைக் கூட்டிக் கொண்டு, அடித்த சாமிகள் இருக்கும் விரிக்குப் போனார்

இதற்குள் விஷயம் பக்கத்து விரிகளில் இருந்த மற்ற சாமிமார்களுக்கும் பரவியது. “கன்னட சாமிகள் நம்ம தமிழ்நாட்டு சாமிகளை ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சுப் போட்டுட்டாங்களாம்” என்ற ரீதியில் செய்தி போனது. உடனே பக்கத்தில் உள்ள விரியில் தங்கியிருந்த சேலத்தைச் சேர்ந்த கபகபச்சாமிகள்-அப்படித்தான் அவர்கள் ஒருவரை ஒருவர் வழி நெடுக அழைத்துக் கொண்டார்கள் - பொதுவாகவே ஒவ்வொரு குரூப்புக்கும் ஒரு பெயர் உண்டு தனித்தனி கொடியும் உண்டு. பெருவழியில் நடக்கும் போது இந்தக் கொடியை பிடித்துக் கொண்டுதான் நடப்பார்கள். லட்சக் கணக்கான சாமிகள் நடக்கும்போது தங்கள் குரூப்பை அடையாளம் காண இந்தக் கொடி முக்கியம் அப்படியும் சில சாமிகள் கூட்டத்தில் தவறி விடும். சுற்றும் முற்றும் தங்கள் குரூப் ஆட்கள் யாரும் கண்ணில் படவில்லையென்றால் நடையில் நாம் பின் தங்கி விட்டோம். அல்லது வேற குரூப்போடு கலந்து விட்டோம் என்று அர்த்தம். உடனே தம் குரூப்பின் பெயரைச் சொல்லி உரக்கக் கூவ வேண்டும் அதைக்கேட்டு, அந்த குரூப்பைச் சேர்ந்த மற்ற சாமிகள் முன்னாலிருந்தோ அல்லது பின்னாலிருந்தோ பதில் குரல் கொடுக்கும். அந்த சத்தம் வந்த திசையை வைத்து அவர்கள் குரூப் சாமியை அடையாளம் கண்டு சேர்ந்து கொள்ள வேண்டும். இன்னும் சில குரூப்புகளுக்கு தனி யூனிபார்ம் கூட உண்டு. குறிப்பிட்ட நிறத்தில் முன்னும் பின்னும் குரூப் பெயர் பொறித்த பனியன் அணிந்து வருவார்கள். இதெல்லாம் கூட்டத்தில் தொலையாமல் இருக்க பின்பற்றப்படும் வழக்கம்.

அந்தபடியே தங்களை கபகப சாமிகள் என்று அழைத்துக் கொண்ட சேலம் குரூப் ஆக்ரோசமாய் எழுந்து எங்களுடன் சேர்ந்து கொண்டது. பெரும்படையாய், அடித்த சாமிகள் இருந்த விரிக்குப் போனோம். அடிப்பட்டசாமி ஆட்களை அடையாளம் காட்டியது. அடித்த நால்வரும் நடுவில் பம்பிக்போய் கிடக்க அந்த குரூப்பிலுள்ள மற்ற சாமிகள் அவர்களைச்சுற்றி அரண்போல் அமர்ந்திருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் அந்த குரூப் குருசாமி எழுந்து ஏதோ சொல்ல வந்தார். அதற்குள் எங்கள் குருசாமி “அந்தச் சாமிகளை புடிங்க சாமிகளா” என்று குரல் கொடுத்தார்.

அதுதான் தாமதம் அடுத்த நொடியே அந்த சேலத்துச் சாமிகள் எங்களையும் முந்திக்கொண்டு கூட்டத்தில் பாய்ந்தது. தடுக்க வந்தவர்களை பின்னியெடுத்து விட்டார்கள். அந்த குரூப்பில் அம்பது பேர்வரை இருந்தார்கள். எல்லோர்க்குமே செம அடி. அலறிக்கொண்டு ஆளுக்கு ஒருபக்கம் ஓட்டம் பிடித்தார்கள். இருமுடிக்கட்டு, ஜோல்னாப்பை எல்லாம் நாலாபுறமும் சிதறியது. அப்படியும் விடவில்லை. விரட்டிக் கொண்டுபோய், அந்த நால்வரையும் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்த பிறகே ஓய்ந்தார் எங்கள் குருசாமி.

(முத்து மகரந்தனின் யாத்திரை நாவலிலிருந்து ஒரு பகுதி)

Pin It