முதுமரமனம்

நெடுங்காலமாய்
Man நின்று கொண்டிருக்கிறேன்
பாதையோரத்தில்
காலடி கவ்விக் கொண்டு என்
ஆதாரப்படச் சுருள்களை
தன் பல்லிடுக்குகளில் இந்த
மண்வாய்
தொட்டுவிடமுடியாத தூரத்தில் என்
கிளைகள் வான் நோக்கித்
திரும்பியிருக்கின்றன
பார்வைக்கும்
ஸ்பரிசத்திற்கும் அருவருப்பாய்
புறக்கணிக்கப்படுகிறது முரட்டுத்
தோல் கறுப்புப் பாளங்களாய்
என்மேனி
நின்று கொண்டிருக்கிறேன் சாலை
வழிப்போக்கர்களின் கண்
உயரும் பார்வைக்கும்
கை தொடும் நிழலுக்கும்
சாட்சி ஸ்தம்பமாய்
ஊடுபாவிக் கொண்டு.

மரூஉ

இன்றென் திதி போலும்.
சிரார்த்த அலங்காரத்தில்
மணம் வீசிக் கொண்டு
என்வீடு
மடிப்புடவைத் தலைப்பைப்
பிடித்திழுக்கும் புதுக்குழந்தையை போடா என்று
போலியாய் விரட்டும் என் மாமியார்
புருஷனின் புதுப் பெண்டாட்டியின்
சமையலறை முணுமுணுப்புகள்
அதோ வீடுகூட்டி சுத்தம் செய்யும்
என் மூத்த பெண்
அதிரச மாவு பிசையும் அடுத்தவள்
போலி அங்கலாய்ப்புக் கணவன்
தாமதமாய் வந்த வாத்தியார்
அலுப்பாய் ஓரகத்தி... மற்றும்
ஒட்டடைத் திரை மறைவில்
என் புகைப்படம்
கதம்பம் குங்குமக்கலவை மணம்
எண்ணெய்ப் பிசுக்குக் கையில் ஒட்டிய
சோறு புரட்டியெடுக்கும்
அமில அவஸ்தையில்
பட்டினி பொறுமையிழந்து
திரும்பிய நான்
கா... கா... என்று அடிக்கொருமுறை
கத்திக்கொண்டு
அவனும்
அவளும்
சோற்றுக்கல் உடையக் காத்திருக்கும்
குடல் முகங்கள் வீடு நிறைந்து
ஊமைகளாய் இரு பெண்பிள்ளைகள்
முற்றத்தின் மேல் படிந்த
வெற்றுப்பார்வையுடன்
விழிநீர் துடைத்துக்கொண்ட என்
முலைக்காம்புகள்
உராய்ந்து உடைபடுகிறது கல்
பித்ரு சாபம் நீங்கியதில்

திரும்பிப் பார்க்காத சொற்கள்

காற்று எடுத்துச் சென்றிருக்கக் கூடும்
அடித்து
வீழ்த்தியிருக்கக் கூடும்
வீசி எறிந்திருக்கக் கூடும் எங்கோ ஓர்
குழியில் புதைந்து
விட்டிருக்கக் கூடும் வேறோர்
பிரதேச மண்ணுக்குள்
அழிப்பான் தீண்டியிராத ஆயுட்காலம்
வாழ்ந்து கொண்டோ
நசுங்கி செயலற்று
வெட்கத்துடன் சவம் போன்று
எங்கேயோ...
சண்டப்பிரசண்டம்
ஆகச் செய்யும் சாமர்த்தியம்
முஷ்டி மடக்கும் மல்யுத்த வீர
சாகஸம் என
எப்படியோ ஓர் இருத்தலில்
பென்சில் கொண்டு பேசப்படாத
பேனா பேசியறியாத என்
பிரத்யேக சொற்கள்

நாளெல்லாம் தோரணம்

கந்தல் துணி கமலமாய் என்வீட்டுக்
கூரைமேல் வானம்
கார்காலத் துண்டுச் சூரியன் ஒன்று
பிறை வழித்தெடுத்துக் கொஞ்சம்
கண்ணுக்கெட்டியவரை
பறித்துப்போட்ட பஞ்ச இதழ்
ஒளிப்பூக்கள்
மஞ்சள் ஊதா ஆரஞ்சு
வர்ணம் தோய்த்துக்
கோட்டோவிய வானம்
நாளெல்லாம் தோரணம்
அதிசயித்தவர் அறிந்திருக்க நியாயமில்லை
ஊரில் உன்னைக் கண்டு திரும்பிய போது
உன் கூரைபடிந்த நிர்மால்ய வானக்
கீற்று ஒன்று கத்தரித்துக்
கொண்டுவந்து ஒட்டவைத்திருப்பது
Pin It