கவிஞனின் மனைவி
தன் சவப் பெட்டியை
தினமும் அறைக்குள்
திறந்து மூடுபவளாக இருக்கிறாள்
அது அவளின் சீதனமாக இருக்கலாம்
அல்லது
அவள் விரும்பி தேர்ந்தெடுத்து இருக்கலாம்

காலையில் வீட்டைப் பூட்டிக் கொண்டு
சுதந்திரத்தைச் சுவாசிக்க
கிளம்பும் கவிஞன்
தன் விடுதலையைப் புகழும் கவிதைகளுக்கு முன்
மதுதீர்ந்த புட்டிகளை உடைத்துக்கொண்டாடுகிறான்
கூலிக்குப் புணர அழைத்தவளை
பணம் கொடுக்காமல் ஏமாற்றியோ
அந்நிய பெண்களின் அறைக்குள்
அத்து மீறி நுழைந்த சாகசத்துடனோ
அன்றைய கலக நாளை
தன் வீர காவியத்தின் பக்கத்திற்குள்
தைத்து வைக்கிறான்

பின் சாமத்தில்
தன் ராஜ்ஜியத்தின் கோட்டைக் கதவுகளை
திறந்து கொண்டு உள் நுழைப வன்
பேழையைத் திறந்து மனைவியிடம்
தன் சாம்ராஜ்ஜியத்தின் வாரிசை உருவாக்கும்படி
கட்டளை இடுகிறான்

அவளும்
அவனுடைய சவத்துக்கு கொள்ளி வைக்கும்
புத்திரர்களை ஈன தயாராகிக்கொண்டிருக்கிறாள்.
Pin It