நல்ல தமிழைக் கேட்க வேண்டுமா? பெரிதும் பிறமொழிக் கலப்பில்லாத தமிழைக் கேட்க வேண்டுமா? பழந்தமிழ்ச் சொற்களைப் பாதுகாத்து வைத்திருக்கும் நாட்டாரிடம் போங்கள். ‘‘யாயும் யாயும் யாராகியரோ” இந்த ‘‘யாய்” இன்றும் புழக்கத்தில் இருக்கிறதா? ஆம்.

அம்மாயி, அப்பாயி, சின்னாயி, பெரியாயி என்ற உறவுமுறைச் சொற்களைப் பாருங்கள். இந்த யாய் > ஆய், ஆகி > ஆயாவாகி உள்ளதே. இதனைக் குழந்தைகளைக் கவனிக்கும் வேலைக்காரர்களைச் சுட்டும் பொருண்மையாக்கி விட்டோமே. குழுமாயி, கருப்பாயி, மாரியாயி, மகமாயி என்றும் வழக்குச் சொற்கள் உள்ளனவே.

‘‘பால்புரைப் புரவி நால்குடன் பூட்டி” என்று ‘‘புரவி” என்ற சொல் பெரும்பாணாற்றுப்படையில் வருகிறதே; குதிரையைக் குறிக்கும் அந்தச் சொல் இன்றும் அய்யனார் கோயிலுக்குப் ‘‘புரவி எடுப்பு” என்று வழக்கில் உள்ளதே.

மேலும் வள்ளுவரும் சங்கவிலக்கியச் சான்றோரும் பயன்படுத்தும் ஊருணி, ஈனுதல் என்ற சொற்கள் இன்றும் எங்கள் மக்கள் போற்றிப் பேசிப் புழக்கத்தில் வைத்திருக்கிறார்களே, ‘‘ஈனவும் தெரியாது நக்கவும் தெரியாது” என்று உருவகப் பழமொழியாக்கி நறுக்குத் தெறித்தாற்போல் பேசுகிறார்களே! இதனை என்ன சொல்வீர்கள்.

திருவள்ளுவரே பேச்சு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் ‘‘குழலினிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்” என்கிறார். மழலைச் சொல்லை ஏற்ற வள்ளுவர் பேச்சுத் தமிழை ஏற்க மாட்டாரா?

குறிப்பு: முனைவர். தே. லூர்து அவர்களின் தலைமை உரை: ‘உலகளாவிய நாட்டுப்புறவியல் இன்றைய நோக்கும் போக்கும்’ கருத்தரங்கம், புதுவை.

வயதான பெண்டிரை ‘‘ஆயா” என்று அழைப்பது இன்றும் புதுவையில் வழக்கத்தில் உள்ளது.

Pin It