இசைக்கலைஞனைப் பின்தொடரும்
குழந்தையென
நீர்க்குமிழிகளைப் பின்தொடர்கிறேன்
காற்றின் சொல் கேட்டு
திசையற்ற வெளிகளில் பயணித்த
நீர்க்குமிழ்கள்
சிறகுகளைத் தந்தன கால்களுக்கும்
வானவில் ஒன்று
மிதந்து வருவதாய் பதறின
மேகக்கூட்டம்
கரைந்து மிதக்கிறதோ
தன் வண்ணங்களென
திடுக்கிட்டு விழித்தது
வண்ணத்துப்பூச்சி
குமிழொன்றிற்குள்
விதைக்குத் திரும்பும் விருட்சமாய்
சுருண்டு படுத்திருந்தது
தென்னை
கருப்பை ஒன்றின்
பனிக்குடமென
வசீகரித்தது ஒரு குமிழ்
சோப்புக் கரைசலின் மாயத்தில்
உருவாகியிருந்தது
புத்தம் புதிதாய் ஓர் உலகம்
காலி டப்பாக்களை
தூக்கி வீசியபடி
வீட்டுக்குள் ஓடிப்போனார்கள்
சிறுவர்கள்
கைவிடப்பட்ட குமிழ்கள்
வெடித்துச் சிதறின
காற்றின் திசை பற்றி
பறந்திருந்த எனக்கு
தொலைந்துபோயிருந்தது
என் திசை.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.