கணினி யுகம்..... காலம் வேக வேகமாகப் பறந்து செல்கின்றது; புதுமைகள் பல தோன்றுகின்றன. பண்புகள் மாறுகின்றன. பழக்கவழக்கங்கள் வேறுபட்டுள்ளன. அன்று தொட்டு இன்றுவரை இவற்றிற்குக் காரணமான மனித ஆற்றலின் இன்றியமையாச் சிறப்பினைப் படைப்பாளர்கள் உணர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். கவிச்சக்கரவர்த்தி கம்பர் மனித ஆற்றலின் மேன்மையினை சுக்கிரீவன் மூலம் நமக்கு உணர்த்துகின்றார்.

“வேறுல குழுவை எல்லாம்
மானுடம் வென்றதம்மா!’’

மானுடம் வெல்லக்கூடிய சக்தியாக இருப்பதனால் தான் புதுமைகள் பல தோன்றியுள்ளன. அறிவியல் ஏணியில் ஏறி, எத்தனையோ சாதனைகள் புரிந்து, இன்று நம் உயிரணுவிலிருந்தே, நம்மின் நகலாக மற்றொரு உயிரைப்படைக்கும் Cloning ஆற்றலையும், இருந்த இடத்தில் இருந்தே உலகின் அத்தனை விவரங்களையும் அறியமுடியும் திறனையும் பெற்றுள்ளான்.

ஆனால் அறிவுத்திறன் ஒன்று மட்டும் போதுமா? மனித நேயம் மிக்கவனே மாமனிதன். ‘மகாத்மா’
தன் மாபெரும் அன்பினால் பெரும் மக்கள் படையையே அவர்பின் வரச்செய்தார். அன்னை தெரசாவின் அன்பினால் கட்டுண்டவர்கள் கோடி, கோடியான மக்கள் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’’ என்பது வள்ளுவம்.

‘வாழ்வாங்கு வாழ்தல் என்றால் என்ன?’

உயர்ந்த எண்ணங்களுடன் எளிமையாய் வாழ்தலே சிறந்த வாழ்க்கை. இதனை ஆங்கிலத்தில் “High Thinking and simple living” என்று கூறுவார்கள்.

சமனிலை நோக்குடன் உலகைப் பார்ப்பவனே, வாழ்பவனே மனிதருள் மாணிக்கமாகக் கருதப் படுவான். சமனிலை அல்லது சமத்துவம் என்பது மனிதர்களிடையே எவ்வித வேறுபாடுகளுமின்றி, எல்லோரும் ஒரே நிலையாய் வாழ்வதாகும்.

பொதுவுடைமை கொள்கைப்பிடிப்புடைய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,

‘தனியுடைமைக் கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா --_ நீ
தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா _ எல்லாம்
பழைய பொய்யடா’ என்று பாடுகின்றார்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனும் மனித நேயத்துடன் திகழ்ந்தால் நம்மிடையே வேறுபாடுகள் தோன்றுமா ! மானிட நேயமிக்க சமுதாயச்சிற்பிகள் சிந்தனை ஒருமுகப்பட்டு, ஏழைகளின் துயர்தீர இருப்பவன் இல்லாதவன் என்ற நிலை மாற வழியினை ஆராய்ந்து. தம் எண்ணங்களைப் படைப்புகளில் வெளிப்படுத்தினர்.

‘எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமை எல்லாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே !
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக !
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக !
எல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை
வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயழிக
வல்லார்க்கும் நல்லுதல் மாதர் எல்லார்க்கும்
விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே’

பாரதிதாசனின் இப்பாடல் மானுடம் வாழ்வதற்குரிய வழியினை எடுத்துரைக்கின்றது.

‘பட்சி சாதி நீங்க எங்க பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க.....
பட்சமாயிருங்க பகிர்ந்துண்டு வாழுங்க,
பழக்கத்தை மாத்தாதீங்க....’’ கலைஞரின் இப்பாடல் மனிதர்களின் தன்னலத்தை இகழ்ந்து, மனித நேயத்தின் சிறப்பினை உணர்த்துகின்றது.

அன்றைய இலக்கியங்களில் மனித நேயம் பாடுபொருளாக இருந்ததனை அறிகின்றோம். மனிதர்கள் வாழ வேண்டிய நெறியினைக் கலித்தொகைப் பாடல் எடுத்துரைப்பதனைக் கீழே நோக்குவோம்.

‘ஆற்றுதலென்ப தொன்றலந்தவர்க்குதவுதல்
போற்றுதலென்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுதல்
அன்பெனப்படுவது தன்கிளை செறாஅமை
அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவெனப்படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிறயாமை
முறையெனப்படுவது கண்ணோடாதுயிர் வெலிவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்’
(கலித்தொகை _ 133 நெய்தல்)

துன்பத்தில் வாடுபவர்களுக்கு உதவுதலை தலையாயப் பண்பாக அக்கால மக்கள் பெற்றிருந்தனர்.

இன்று உலகம் பொருளினை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதைக் காண்கின்றோம். கல்வி நிலையங்களும் வணிகச் சந்தையாக மாறி வருவதையுணரும் பொழுது, மானுடம் தழைக்குமோ என்ற ஐயம் எழுகின்றது.

‘கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டு’ என்று பாவேந்தரும்,

‘ஒருமைக்கண் தான் கற்ற கல்வி, ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து’

என்று வள்ளுவரும் கல்வியின் சிறப்பினை வலியுறுத்தியுள்ளனர். கல்வியுடன் சேர்ந்த உழைப்புதான் பலன்தரும் என்பதனை பட்டுக்கோட்டையார் எளிய நடையில் எடுத்துரைத்துள்ளார்.

‘படிப்பு தேவை அதோடு
உழைப்பும் தேவை - முன்னேற
படிப்பு தேவை அதோடு
உழைப்பும் தேவை
உண்மை தெரியும், உலகம்
தெரியும் படிப்பாலே - நம்
உடலும் வளரும் தொழிலும்
வளரும் உழைப்பாலே’

உழைப்பும், முயற்சியும், தன்னம்பிக்கையும் பெற்று மனித நேயத்துடன் வாழ்ந்தால் மேம்பாட்டினை அடையலாம். படிப்பு என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மாறக்கூடாது. வாழ்க்கைக்குப் பயன்தரும் முறையில் கல்வி அமைய வேண்டும்.

இன்றைய கல்வி முறையில் எத்துணையோ புதுமைகள் இருப்பினும், இளைஞர்கள் புறத் தாக்குதல்களால் திசைமாறிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிராக’ வாழ்ந்த காலம் மறைந்துவிட்டது. ‘பொருளே’ அடிப்படையாக மாறிவிட்ட காலத்தில் மானுடம் வாழ, நீதிதரும் கவிதைகளை, நூல்களை இளைஞர்களைப் படிக்கப்பழக்குதல் நலம் பயக்கும். வாழ்க்கையைச் செப்பனிடுதலை நோக்கமாகக்கொண்டு வாழ்ந்தனர் ஆன்றோர். அவர்களுடைய படைப்புகள் என்றும் மனக்கோட்டத்தை நீக்குபவை.

‘உரத்தில் வளம் பெருக்கியுள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின் கனக் கோட்டந்தீர்க்கு நூலஃதேயோன் மாந்தர் மனக்கோட்டந்தீர்க்கு நூன் மாண்பு’ (நன்னூல்-நூற்-25)
என்றுரைக்கும் வெண்பா, நூலின் பயனை எடுத்துரைப்பதிலிருந்து, மனக்கோட்டத்தை (இலக்கியங்கள்) அகற்றுபவை என்பதனை நன்கு உணரலாம்.

‘பொருளே’ சமுதாய மதிப்பீட்டினைத்தரக் கூடியது என்று இன்றைய மக்கள் நினைக்கின்றனர். அக்காலத்தில்,

‘செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே’

(புறம் - 189) என்று வாழ்ந்திருக்கின்றார்கள். பொருளாசையினால் பற்பல கேடுகள் ஆழ்ந்து நாட்டைப் பாழ்ப்படுத்திக் கொண்டிருப்பதனை இன்று கண்கூடாகப் பார்க்கின்றோம். பொருளாசை மனிதனுடைய மனதினைக் கலந்து எவ்வழியும் மீளமுடியாதபடி தன்வயப்படுத்தும் தன்மையுடையது. இதனைக் கம்பநாடன்,

‘உலிப்பரும் பிணிப்புறா உலோபம் ஒன்றுமே
அலிப்பரும் குணங்களை அழிக்கும் ஆறுபோல்
கிலிப்பரும் கொடுமையை அரக்கி கேடிலா
வலிப்பரு மருதவைப்பு அழித்து மாற்றினாள்’
(பால _ தாடகைவதை _ 42)

என்று கூறுகின்றான். ‘உலிப்பரும் பிணிப்புறா உலோபம்’ என்பது உள்ளத்தைப் பிணித்து நிற்கும் உலோபம் என்ற பொருளாகும்.

நற்குணங்கள் நிறைந்தவர்களும் பொருளாசையினால் மனம் தடுமாறுவதைக் காண்கிறோம். மானுடம் வாழ, சமுதாய மதிப்பீடு மாற வேண்டும். பொருள் பெரிதும் பெற்றதனால் நிலைத்தப் புகழ் என்றும் கிட்டாது. மனித நேயமிக்க ஆன்றோர் இறந்தும் இறவாப்புகழைப் பெறுவதனை உணர வேண்டும்.

வாழ்க்கையின் உயர்ந்த அடிப்படையுணர்ச்சி களான அன்பு, நட்பு, காதல், ஈதல், சான்றாண்மை போன்ற பண்புகளுடன் கல்வியறிவும் பெற்று, மனித நேயத்துடன் வாழ முயற்சித்தால், மானுடம் சிறக்கும்.
Pin It