சென்ற வாரத்தில் இந்தியப் பத்திரிகைகள் அனைத்திலும் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது ரத்தன் டாடாவின் ‘நேநோ’ கார். முதல் பக்கத்திலேயே வண்ணப்படம்; உள்ளே விரிவான கட்டுரை. இனி இந்திய மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு லட்ச ரூபாய் காரில் எல்லோரும் உலா வரப்போகிறார்கள். டாட்டாவுக்கு இணை டாட்டாதான், சொன்ன சொல்லைக் காப்பாற்றிவிட்டார்களே என்கிற ரீதியில் புகழ் பாடாத பத்திரிகைகளே இல்லை. அதி நவீனமான வடிவமைப்பு, இந்தியச் சாலைகளுக்கு ஏற்றது, நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களுக்கும் ஏற்றது.... இப்படியான விவரணங்கள்.

‘பிரமிடின் அடித்தட்டுக்கு அதிர்ஷ்டத்தை’ அள்ளித் தரும் அற்புதம் என்றும் ஓர் இதழ் எழுதியது. ஆக இவர்களின் கணக்குப்படி இந்தியப் படிநிலை வரிசையில் ஆகக் கீழாக உள்ள மக்கள் யாரென்றால் சுமார் ஒன்றரை லட்சம் செலவு செய்து டாடாவின் புதிய காரை வாங்கக் கூடியவர்கள்தான். அதற்கும் கீழே உள்ள நாற்பது கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இவர்களைப் பொறுத்தமட்டில் கணக்கில் வராதவர்கள்.

100 சிசி மோட்டார் சைக்கிள்களைத் தற்போது பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் இனி ‘கவலைப்பட வேண்டியதில்லை’ இரு சக்கரத்திலிருந்து நான்கு சக்கரத்திற்கு மாறிவிடலாம். இதற்கும் கீழே உள்ளவர்கள் இன்றைய கார்ப்பரேட் உலகின் கரிசனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்.

டாட்டாவின் நேநோ கார் செப்டம்பர் வாக்கில் இந்தியச் சாலைகளில் தவழுமாம். ஒரு லட்சரூபாய் எனச் சொல்லப்படுகிறதேயழிய குறைந்தபட்ச விலை 1,30,000 வரை இருக்குமாம். அதோடு “ஏ.சி. ’’ முதலான வசதிகளுடன் கூடிய “டீலக்ஸ்’’ மாடல்கள் இரண்டு லட்சம் வரை ஆகக்கூடும். மத்திய தர வர்க்கத்திற்குக் கடன் கொடுக்கத் தயாராக உள்ள கார்ப்பரேட் வங்கிகளின் உதவியோடு இனி அவர்கள் நேநோக்களில் ஜமாய்க்கலாம்.

மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள டாடாவின் ‘சிங்கூர்’ தொழிற்சாலையிலிருந்து வெளிவர உள்ளன இந்த மலிவு விலை சொகுசுகள். சென்ற ஆண்டு தொடக்கத்தில் இந்தத் தொழிற் சாலைக்கான நிலப்பறிப்பை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் நடத்திய போராட்டங்களை நாம் மறந்துவிடக் கூடாது. நந்திகிராம் மக்கள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்களின் விளைவாக அந்த ‘புராஜெக்டை’ நிறுத்திக் கொண்டதாக அறிவித்த மேற்கு வங்க அரசு எக்காரணம் கொண்டும் டாட்டாவின் ‘சிங்கூர்’ கார் தொழிற்சாலைத் திட்டத்தை நிறுத்த முடியாது என உறுதியாக அறிவித்தது. அரசைப் பொருத்தமட்டில் அது ஒரு கவுரவப் பிரச்சினை.

சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் இன்று டாட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தடையற்ற மின்வசதி, நீர் வசதி ஆகியவற்றுக்காக மேலும் 135 கோடி ரூபாய் மானியமும் வழங்கப் பட்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் இன்று ஒரு லட்ச ரூபாய் காரை டாடா நிறுவனம் உருவாக்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பஞ்சுக்கும், கோதுமைக்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையை அரசு விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகுமாறு அறிவிக்க வேண்டும், கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை ஏற்கத் தயங்கும் அரசுகள் தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் பெரு நிறுவனங்களுக்கு எல்லாவிதமான சலுகைகளையும், மானியங்களையும் அளிக்கத் தயாராக உள்ளன.

புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவும் விவசாயத்திலும் கார்ப்பரேட்களின் ஊடுருவல்களாலும் தினந்தோறும் தற்கொலை செய்துகொண்டு செத்துமடியும் விவசாயிகள் குறித்துக் கவலைப் படத்தான் இங்கு யாருமில்லை.

‘டூ வீலர்கள்’ இடத்தை இந்த நான்கு சக்கர சொகுசுகள் நிரப்பும்போது அதற்குரிய வகையில் இங்கே அகக் கட்டுமானங்கள் விரிவாக்கப்படுதல் குறித்து அரசிடம் என்ன மாதிரி திட்டங்கள் உள்ளன என்பதும் விளங்கவில்லை.

ஏற்கனவே நெரிசல் நிறைந்துள்ள நகரச் சாலைகள் குறித்தும், புதிய மாற்றங்களின் மூலம் உருவாகவுள்ள சுற்றுச் சூழல் பிரச்சினைகள் குறித்தும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை.

விவசாயம், சிறு தொழில்கள் மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைச் சேவைகள் ஆகியவற்றிற்கு மானியங்கள் அளிப்பதைக் கடுமையாகக் சாடும் நம் புதிய பொருளாதாரவாதிகள், கார்ப்பரேட்கள், ஊடகங்கள்.... ஆகியோர் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் டாட்டா போன்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் அபரிமிதமான வரிச்சலுகைகள், அதிகாரங்கள் ஆகியன பற்றிப் பேசுவதே இல்லை. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகளால் மட்டும் அடுத்த சில ஆண்டுகளில் அரசுக்குச் சுமார் 1,37,000 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்படும் என மத்திய அரசே ஒத்துக் கொண்டுள்ளது.

இன்னொரு பக்கம் ஒரு மக்கள் நல அரசு அளிக்க வேண்டிய குறைந்தபட்ச சமூகப் பாதுகாப்புகளையும்கூட இந்த ஊடகங்கள் கண்டிக்கத் தவறுவதில்லை. இன்றைய சூழலுக்குப் பொருத்தமற்றவை எனவும், பணவீக்கத்தை ஏற்படுத்துபவை எனவும் கடும் குற்றச்சாட்டுகளைக் கூறத் தயங்குவதில்லை. ஓர் உதாரணம் மட்டும் இங்கே சொல்ல விரும்புகிறேன். மத்தியில் ஆள்கிற ஐக்கிய முன்னணி அரசு தனது குறைந்தபட்சத் திட்டத்தில் அறிவித்திருந்த ஒரு நல்ல விசயம் ‘தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டம்’.

ஏற்கனவே இருந்து வந்த ‘உணவுக்கு வேலை’ முதலான திட்டங்களைக் கொஞ்சம் ‘உல்டா’ பண்ணி உருவாக்கப்பட்டதுதான் இது என்ற விமர்சனங்கள் இருந்த போதிலும் கிராமப்புறத்தில் உள்ள வேலை வாய்ப்பற்றோருக்கு ஆண்டாண்டுக்குக் குறைந்த பட்சம் 100 நாள்கள் வேலையை உத்தரவாதம் செய்கிற இந்தத் திட்டம் உண்மையிலேயே வரவேற்கப்படக்கூடிய ஒன்று. தற்போது 330 மாவட்டங்களில் மட்டுமே செயல்பாட்டில் உள்ள இத்திட்டத்தை நாடு முழுமையும் விரிவுசெய்யப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

சுமார் 10,000 கோடி ரூபாய் வரை இன்று இதற்குச் செலவிடப்படுகிறது. அமார்த்தியாசென், ஜீன் டிரெஸ் போன்ற பொருளியல் நிபுணர்கள், இடதுசாரிகள் முதலியோர் இதனை வரவேற்றுள்ளனர். கிராமப் பொருளாதாரம் வளம் பெறும்; சமூக சமத்துவத்திற்கும் கிராமப்புறத் தொழிலாளிகள் ஏராளமானோர் பயன் பெறுவதற்கும் வழிவகுக்கும் எனவும் இவர்கள் கருதுகின்றனர்.

ஆனால், நம் கார்ப்பரேட் ஊடகங்கள் ஆரம்பம் முதல் இந்தத் திட்டத்தைச் காய்ந்து, கண்டித்து வருவது கவனிக்கத் தக்கது. ‘கோணல் புத்தி’ ‘அரசு நிதியை அழிக்கும் முயற்சி’ ‘விலை உயர்ந்த நகைச்சுவை’ என்பன இத்திட்டத்தைக் கேலி செய்வதற்கு நம் ஊடகங்கள் பயன்படுத்திய சொற்களில் சில. இவர்களின் கருத்துப்படி அரசுத் தலையீடு, அரசுச் சலுகைகள் என்பன கார்ப்பரேட்களுக்குச் சாதகமாகவே இருக்க வேண்டும். சந்தையை அதற்குத் தக அரசு கையாள வேண்டும். மாறாக மக்கள் நலப் பிரச்சினைகளில் அரசு தலையீடு செய்வதும், அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதும், சலுகைகள் வழங்குவதும் ‘மரணத்தை நோக்கிச் செல்லும் செலவு மிக்க பயணம்.’

இதைத்தான் இவர்கள் ‘சந்தை சார்ந்த சீர்திருத்தம்’ என்கின்றனர். விசாயிகளின் நிலத்தைப் பறிப்பது முதலான நடவடிக்கைகளில் அரசு தலையிடுவது இவர்களைப் பொருத்தமட்டில் ‘சந்தைக்குப் பொருந்தாத அரசுத் தலையீடு’ என்கிற அம்சத்திற்குள் வராது.

‘இந்திய வளர்ச்சி நிறுவனம்’ என்கிற அமைப்பு வெளியிட்ட ‘ஆய்வு’ என்பதைப் பற்றிச் சில மாதங்களுக்கு முன்னர் நம் கார்ப்பரேட் ஊடகங்கள் ஏராளமாய் எழுதிக் குவித்தன. கிராமப்புற வேலை உத்தரவாதத் திட்டம் ‘பணவீக்கத்தை’ ஏற்படுத்தும் என்று இந்த ‘ஆய்வு’ புலம்பியது. பத்திரிகைகள் முக்கியத்துவம் அளித்து வெளியிட்ட இச்செய்தியைப் புலனாய்வு செய்த போதுதான் அப்படியான ஓர் ‘ஆய்வே’ நடக்க வில்லை என்று தெரிய வந்தது.

அந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் ஒரு விவாதத்தின்போது ஊகமாகச் சொன்னதை ஒரு நிறுவனத்தின் ஆய்வு முடிவாக கார்ப்பரேட்கள் முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்தன. வேலை உத்தரவாதத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக (சுமார் ஒருலட்சம் கோடி ரூபாய்கள்) ஆண்டு தோறும் இராணுவச் செலவுகளுக்காகவும் ஆயுதம் வாங்குவதற்காகவும் ஒதுக்கப்படுகிறது-. மக்களுக்கு எவ்வகையிலும் பயனளிக்காத இச்செலவு குறித்து ‘பணவீக்கம்’ ஏற்படுத்தும் என இவர்கள் யாரும் சொல்வதில்லை.

கார்ப்பரேட்களுக்குச் சாதகமான நம் அறிஞர் பெருமக்கள் எவரும் இந்த வேலை வாய்ப்புத் திட்டங்கள் எப்படி நடைபெறுகின்றன, யார் பயன் பெறுகின்றனர் என்பதை நேரடியாகச் சென்று பார்த்தவர்களல்லர். ஜீன் ட்ரெஸ் சொன்னது போல அப்படிப் பார்த்திருந்தாலும் விமானத்தில் உட்கார்ந்து கொண்டு கீழே எட்டிப் பார்த்திருப்பார்கள்.

சமீபத்தில் இந்தியக் கணக்காயரின் ஆய்வறிக்கை இந்த வேலை உத்தரவாதத் திட்டத்தில் உள்ள சில நடைமுறைக் குறைகளைச் சுட்டிக் காட்டியிருந்தது.

அரசே சொல்கிறது: எளிய மாநிலங்களில் வேலைக்காக ஒதுக்கப்படும் நிதி ஏழை மக்களைச் சென்றடைவதில்லை’ என்கிற தலைப்பில் கார்ப்பரேட் இதழ்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் செய்திகளை வெளியிட்டிருந்தன. அப்படியான ஊழல் பற்றி அந்த அறிக்கை எதையும் சொல்லவில்லை. அந்த நோக்கில் அந்த ஆய்வும் செய்யப்படவில்லை. விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படாதது குறித்த நியாயமான சில விமர்சனங்களை முன்வைத்த அந்த அறிக்கையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய கார்ப்பரேட்கள் இதன் மூலம் மிகப் பெரிய ஊழல் நடப்பதாகப் பிரச்சாரம் செய்தன.

இந்தத் திட்டம் ஊழலற்றது, எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கவல்லது என்று நாம் சொல்லவில்லை. கார்ப்பரேட்களின் மக்கள் விரோதப் போக்குகளைப் புரிந்துகொள்ள ஒரு சிறு எடுத்துக்காட்டாகவே இங்குப் பேசப்படுகிறது. சமூக நிதியையும்கூட இனி கார்ப்பரேட்களின் பொறுப்பில் விட்டுவிடுவது என்பதே அரசின் கொள்கையில் உள்ளது. கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் இனி கார்ப்பரேட்களைச் சார்ந்த நிதியை ஊருவாக்கிக்கொள்ள வேண்டும் என அறிவுரை சொல்லப்படுகிறது.

மருத்துவம் பெரிய அளவில் கார்ப்பரேட் மயமாகிவிட்டது. ஆனால், கார்ப்பரேட்களைப் பொருத்தமட்டில் லாபம் ஒன்றைத் தவிர வேறு எந்தக் குறிக்கோளும் அவர்களுக்குக் கிடையாது. ஒன்றை ஒன்று விழுங்குவது, ‘கார்கடல்’ களை அமைப்பது, அதன் மூலம் விலைகளை ஏற்றுவது, ஆட்குறைப்பு செய்து லாபத்தை அதிகரிப்பது, திரளும் மூலதனத்தை வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவது என்கிற பெயரில் ஏற்றுமதி செய்வது இவையே கார்ப்பரேட் களின் பண்புகள்.

கார்ப்பரேட்களின் ‘ஏஜன்ட்கள்’ ஆட்சியில் உள்ள காலம் இது. கார்ப்பரேட்களிடமிருந்து நமக்குச் சமூக நீதி கிடைக்கும் என நம்புவது மாதிரி அபத்தம் ஏதுமில்லை. கார்ப்பரேட்களை எதிர்த்தே நாம் சமூக நீதியைப் பெற வேண்டும்.
- அ.மார்க்ஸ்
Pin It