1)

மின்சார விளக்கெரியும் அறைக்குள்

எப்படி கண்களுக்கெதிரில்

மின்மினிகள் பறக்கிறதென்பதைச் சொல்ல

இக்கணம் எனக்கு

யாருமில்லை அருகில்

 

நான் நடுங்குகிறேன்

காலம் உமிழ்ந்த புன்னகைகள்

நம்மைப் போர்த்துவதில்லை

நட்சத்திரங்களை

அசையாமல் வைத்திருக்கும்

இரவின் மேல் சிதறும்

அரற்றலும் இறைஞ்சுதலும்

எரிந்த மீன்களாய் நிலம்படுகின்றன

 

பயம் நீள்கிறது பாலையாய்

மணற்துகள்கள் தீப்பிடித்து எரியும்போது

சந்தியாகால ரகசியங்களை

மண் எழுதும் சிருஷ்டித்தனிமையில்

மின்மினிகளின் ஒளிவெளியில்

என் பெளதீகத்தின்

துயரக் குறுக்கிடலை நினைத்து

எழுந்தடங்குகிறது ஊமைக்குமுறல்

 

ஒளியுமிழாத இந்த உடலை

இரவு தன் சவப்பெட்டிக்குள்

புதைத்துக் கொண்டுவிட்டால்

பிறகு பறக்கும் மின்மினிகளை

மண்ணை மேற்துளைத்து

பார்த்துக்கொண்டிருப்பேன் நிம்மதியாய்.

 2)

பழந்துயர்களை நினைவூட்டும்

மெர்க்குரியின்

சி

யு

ம்

மஞ்சள் ஒளி

வழி

குளிர் இறங்கும்

எட்டரை மணியிரவில்

தேனீர்கடையின் வாசலோரம்

உடைத்துப்போட்ட

பிஸ்கட்துண்டுகளின் முன்

துறுத்தும் எலும்புகளின் மேல்

ப்ரவுன் நிறத்தோல் போர்த்தப்பட்டு

சப்தங்களுக்கு வெகு தொலைவில்

மெலிதாய் துடிக்கும் பிரக்ஞையோடு

சுருண்டிருக்கிறது நாய்க்குட்டி

 

இயலாமையின் துயரக்கோபத்தில்

நான் காலத்தை ஏசுகையில்

சிரமத்தோடு தலையுயர்த்தி பார்த்துவிட்டு

நாய்க்குட்டி கவிழ்ந்துகொள்கிறது.

நானென்ன செய்வேனென முனகிக்கொண்டே

காலம் மறைகிறது

மாநகருக்குள்

3)

நடுப்பகலில் பனியைப்போல்

வெயில் பொழிகிறது

செய்வதற்கு ஏதுமற்ற எனக்கும்

வெயிலுக்குமிடையே

ஜன்னலின் இரும்புக்கம்பிகள்

எப்போதுமான மோனத்திலிருக்கின்றன

வியர்வையில் வழியும்

மின்விசிறியை நிறுத்தியபின்னும்

சுழலும் முனகலோசைக்கு

அறையைத் திறந்து ஓடிவிடலாமென்றால்

வெயில் பூட்டிவிட்ட கதவை

திறப்பதற்கு யாருமில்லை

ஜன்னலின் இடைவெளிகளின் வழி

காலைகளின் ஈரத்தையும்

மாலைகளின் அமைதியையும் கற்பித்து

நான் தணிகையில்

வெயிலின் உடலின் மீது

ஒரு தட்டான் வந்தமரும் இடத்தில்

பெருகிய குளத்தைக்

கடக்கும் சிறுகாற்று

திறந்துவிட்டுப்போகும் அறைக்கதவை

நான் ஏன்

உட்தாழ் இடுகிறேன்

இப்பொழுது.?

4)

ஆட்டுக்குட்டியின் குரல்

அபயத்தை யாசித்து

எதிரொலிக்கையில்

வழிதவறிய பாதைகளில்

எப்போதும் யாருமிருப்பதில்லை-அது

திசைகளை மோதிக்களைத்து

இருளைவிரித்து அயர்ந்தும்விடுகிறது

பின்வரும் முதற்புலரியில்

அதற்கென்றே

தருக்கள் பூச்சொரிந்து

வனலோக ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதும்

பால்மிகுந்த கொடிகள்

வேலிகளில் படர்வதும்

நீர்த்துறை கண்படுவதும்

கசியும்

இயற்கையின் முலைப்பாலன்றி

எதுவுமல்ல - நில்

தனிமையின் ஆதுரம்

ஒரூயிரைத் தழுவினாலும்

வழி தவறாத இன்னொன்றின்

இன்மை என்பது

நன்னம்பிக்கைகள் எரிக்கப் போதுமானதல்லவா?

வெறியில் பூச்சிகளை புழுக்களை

பிடித்து தின்னப் பழகுமதன்

ரோமங்கள் நீங்கி

உடல் வரிகள் வளரும்

கோடையின் வழி தவறிய பாதையில்

அபயத்தைத் துறந்து எதிரொலிப்பது

இப்போதொரு புலிக்குட்டியின் உர்ர்...றுமல்..

Pin It