ஆலயம்

நகரத்தின் போக்கு

சிறிதும் மாறவில்லை

அவனுக்கு

கல் ஆகும் தகுதியை

இழந்து விட்டான்

சிற்பங்களில் அவன்

கடவுளாகத் தெரியவில்லை

யுக அவஸ்தையை தணிக்க

கடவுளால் அனுப்பப்பட்ட

அவன் எல்லோர் மீதும்

அன்பாக இருந்தான்

கருவறையில் மல்லாத்தி

அவர்களை

சந்தோசப் படுத்தினான்

அலுவலகங்களில் அல்லது

பக்கத்து வீட்டுப்பெண்களிடம் நாம்

நடந்து கொள்வது போலவே.

 

அர்த்தநாரீசுரன்

ஆண்டின் முதல் நாள்

பாறைகளாகி இருந்தோம்

பார்த்தவர்கள் அர்த்தநாரீசுரன் என்றனர்

நம் சந்திப்பு நிகழும் போதெல்லாம்

மற்றொன்றாகவே அவர்களுக்கு

தெரிந்ததும் இப்படிதான்

மிருகக் காட்சி சாலையில் பார்த்தவர்கள்

ஆண் கழுதைக்கும் பெட்டை நாய்க்கும்

பிறந்த கழுதைநாய் என்று சொன்னார்கள்

நம்மில் இருந்து மரம் வளர்கிறது

தொடுவோர் மயங்கி விழுந்தனர்

இளைப்பாருவோர் வெந்து சாய்ந்தனர்

வேப்ப அரசனின் வினோத அக்கினி

என்று சுற்றி வந்தனர்

அரண்மனையில் நுழைந்தபோது

அரசன் மனைவியுடன் வரவேற்றான்

இறந்த வீரர்கள் உயிர்ப்பெற்றனர்

அணிவகுப்பு நடந்தது

தெருக்கள் கூடும் இடத்தில்

நாம் சிலை ஆனோம்

பின்பு வரும் நாட்களில் முந்தைய

நாட்களின் நினைவுகளோடு அலைந்தாய்

எதிர் வரும் நாட்களில் பயணித்தேன்

நமக்குள் இடை வெளி பாலமற்று நீண்டது

பருவத் திமிரோடு சுற்றி வந்த

உன்னோடு சாத்தான் உறவு கொண்டது

சாத்தான் இடம் இருந்து மீள

எனை அழைத்தாய் நான் ஆசிர்வதித்தேன்.

 

மஞ்சள்  நிற ஆறு

அன்பின் பரிமாற்றமே இல்லாத நகரம்

ஒரு முத்தத்திற்கு ஏங்குகிறான்

வண்ணாத்தியின் மகன்

ஆழப்புதைந்து இருந்தவள் மெல்ல

தேகத்தை உருட்டுகிறாள்

ஊரைச் சுற்றி மஞ்சள் ஆறு ஓடியது

மஞ்சள் நாட்டு இளவரசி

ஏழு அடுக்கு மாடியின்மேல் நின்று

கூந்தலைக் காயப் போடுகிறாள்

நீண்டிருந்த கூந்தல் தரையை வருடியது

துணியைக் காயப்போட்டு கரையில்

காத்துக்கொண்டு இருந்த

வண்ணாத்தி மகனை நினைத்து

மாளாத துயரம் கொண்டாள்

இளவரசியிடம் தன் மகனின்

நிலைமையைச் சொன்னாள்

எதிரி நாட்டுப் படைகள்

தந்தையைத் தாக்கியது போல்

கனவு கண்டாள் இளவரசி

வண்ணாத்தி துணியாக மாற்றி

மகனை மூட்டையில் சுமந்து சென்றாள்

துணிமூட்டையில் இருந்து வெளியே

வந்தவன் அரசன் கண்ணில் பட்டுவிட

அவன் தலை துண்டிக்கப்பட்டது

மேலும் கீழுமாக அலைமோதிய

வண்ணாத்தியின் ஓயாத ஒப்பாரி

ஒரு திட்டு மேகமாக மாறியது

துண்டிக்கப்பட்ட தலை சூரியனின்

நேர் எதிர் திசையில் பிரகாசித்தது

தனித்த அறையில் இளவரசியின் துயரம்

வண்ணாத்தி மகன் மீது காதலாக மாறியது

எதிர்திசையில் பிரகாசித்துக் கொண்டிருந்த

ஒளியால் இளவரசி கர்ப்பமானாள்

ஊர்முழுக்க பரவியச் செய்தி வளர்ந்தது

அரசக் குடும்பத்தின் மரியாதை காக்க

பிரசவத்தன்றே சேலையில் சுற்றி

தொட்டிலோடு ஆற்றில் விட்டு விட்டாள்

வளர்ந்த குழந்தை பெற்றோரைத்

தேடி அலைந்தான் ஒரு நாள்

மஞ்சள் ஆற்றைக் கடக்கும்போது

வேறு நாட்டுக்காரன் எல்லைக்குள்

நுழைந்துவிட்டதாக கைது செய்து

நீண்ட முடிகளை உடைய

ராணியின் முன் நிறுத்தினார்கள்

ராணியைக் கண்டவுடன் அவன் உறுப்பு

கழுதையதாய் பெருத்தது

காதலை அனுபவித்தவள் போல்

ராணியின் முகத்தில் அன்பு மலர்ந்தது

சுமத்திய குற்றத்திற்கு எல்லாம்

மறுப்பேதும் சொல்லாததால்

அரச நீதிப்படி அரண்மனை

சிறையில் அடைத்தார்கள் அன்று

இரவு பருவப் பெண்ணைப்போல்

மாறிய ராணியைத் தனிமையின்

துயரம் வருத்தியது

மறுநாள் காலையில் சிறைச்சாலையில்

பிணமாய் கிடந்தான்

நீண்ட நரைத்த முடி ஒன்று

அவன்மேல் விழுந்து கிடந்தது.

 

நிறைந்திருந்த ஏரி

நிறைந்திருந்த ஏரியின்

ஒருபுறம் நான்

எதிர்க் கரையில் சூரியன்

இடையில் பறந்துக்கொண்டிருந்த கொக்கை

யாரோ சுடுகிறான்

கொக்கில் இருந்து சொட்டிய

ஒரு துளி இரத்தம் ஏரியில் விழ

நீரோடுகலந்து

ஏரிமுழுக்க சிவப்பானது

பறந்த இரவை குண்டு

நட்சத்திரமாகி எங்கும்

இருண்டுக் கொண்டிருப்பதை

 

Pin It