யானைகளை நெடுங்காலமாக நமது நாட்டில் போற்றித் துதிக்கப்படும் அளவைக் காட்டிலும், அதைப்பற்றிய புரிதல்கள் மிகக் குறைவானது. மிகைபடு மூடநம்பிக்கைகள் எண்ணிலடங்கா பல்வேறு யூகங்களில் படித்தவர், பாமரர் வேறுபாடின்றி படர்ந்துவிட்டன. இவை ஆளுக்கு ஆள், குடும்பத்திற்கு குடும்பம், வீதிக்கு வீதி, ஊருக்கு ஊர் என அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் அசைக்க முடியா அசிங்கங்களாகியுள்ளன. இந்தியக் காட்டுயிர்ப் பாதுகாப்புப் பணிகளின் பின்னடைவுக்கு நிச்சயமாக இதுவும் ஒரு காரணமே.

பகுத்தறிவுக் கல்வியற்ற படித்தவர்கள் தமது நவீன ஊடகங்கள் வழியே இத்தகைய அடுத்துக்கெடுக்கும் வேலைகளை அவ்வப்போது தொடர்ந்து செய்வது தற்செயலானது அல்ல. “பாம்பு பால் குடிப்பது, பிள்ளையார் பால் குடிப்பது, நத்தைகள் படையெடுப்பது, ராமரின் மூலிகைப் பெட்ரோல், குரங்கு மனிதனின் அட்டகாசம், கொடிய மிருகங்களின் தாக்குதல்” என... நமது ஊடக மன்னர்களின் கைங்கரியங்கள் யாவும் மனித வாழ்வாதாரத்தின் மூலமான உயிரினங்களின் மாபெரும் நன்மைகளைப் புரியாததாக்கிவிட்டன. இதனால்தான் அறிவியலாக ஆப்பிரிக்கா அறியப்பட்ட அளவில் இந்தியா அறியப்படவில்லை.

காட்டு யானைகளுக்கு கருத்தடை திட்டங்களும், அவற்றின் நடமாட்டம், மற்றும் நடத்தையியல் பற்றி அறிய செயற்கைகோள் வழியே செல்பேசி இணைப்புத் திட்டங்களும் அறிமுகமாகும் இக்கால கட்டத்தில் நாம் “கல்யானை” பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். மைக்ரோ சிப்ஸ்களை இறக்குமதி செய்து உருளைக்கிழங்கு சிப்ஸ்களை ஏற்றுமதி செய்யும் நாம் சிறிதும் வெட்கமின்றி ரங்கோலி கோலத்தையும், மருதாணி ஓவியங்களையும் பெருமையோடு சிலாகிக்கிறோம். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு கடைவீதிகளில் விற்றுக்கொண்டிருக்கின்ற பல கருவிகளில் 75 விழுக்காட்டை இன்னமும் அறியாதவர்கள் நாம். இதே போல் இதுவரை தெரிவு செய்யப்பட்டு உலகம் ஏற்றுக் கொண்டுள்ள விளையாட்டுகளில் 50 விழுக்காடு நமக்குத் தெரியாது. நவீன இந்தியாவின் ஜனாதிபதி ஆற்றல் மிக்க அறிவியல்வாதி அப்துல்கலாமால் கூட ஒரு அஞ்சல் நிலைய சேமிப்பு வங்கியின் விண்ணப்பத்தை மாற்றியமைக்க முடியாது என்பதால்தான் கணினி படித்துவிட்டு “கம்ப்யூட்டர் சித்தாள்களாக” நாட்டைவிட்டு ஓடுகின்றனர் நல்லோர்கள். சரி கல்யானைக்கு வருவோம்.

இக்கதையின் தற்போதைய நாயகன் சாலி பலோடே என்ற ஒரு மலையாளி. காட்டுயிர் பாதுகாப்புக்காகவே நடத்தப்படுவதாகக் கூறிக்கொள்ளும் பதிப்புத் தரமிகுந்த Sanctuary என்ற இருமாத இதழ்தான் இந்த மலையாளியை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. தற்செயலானது போலவும், அரசியலற்றது போலவும் அக்கட்டுரையின் போக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு சில மாதங்களாக 'குள்ளயானை' செய்திகள் (Pigmy Elephant) இந்திய மாநில மொழிகளிலும், ஊடகங்களிலும் வெளிவந்து ஒரு விதப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

“அறிவியல் பூர்வமாக” கதை அளந்த புரிந்து கொள்ளத் தகாதவற்றையெல்லாம் புனைவாக உருவகப்படுத்தி 1001 கேள்விகளுக்கு இடம்தந்த எழுதப்பட்டுவிட்டது அக்கட்டுரை. கட்டுரையின் சாரம் கேரள மாநிலப் பற்றையும், கண்டுபிடிப்புத் தற்பெருமையையும் தெளிவாக்குகிறது. ஒரு குள்ள யானை இறந்து கிடந்த காட்சியும் புகைப்படமாக அதில் வந்திருக்கின்ற நிலையில் சோதித்துப் பார்ப்பதும் டி.என்.ஏ. பரிசோதனைக்குட்படுத்துவதும் பெரிய சங்கதியல்ல. பலோடே, காணி ஆதிவாசிகளையே அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளதை வனத்துறையினரும் மற்றும் பீச்சியிலுள்ள வன ஆராய்ச்சி நிலையத்தின் காட்டுயிரியலாளர் முனைவர் ஈசா போன்றவர்களும் சுட்டிக் காட்டுவதை ஒப்பிடலாம்.

மேலும் இந்திய அரசின் விலங்கியல் பகுப்பாய்வகமோ, பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகமோ, தெராதூணியிலுள்ள இந்தியக் காட்டுயிர்க் கல்வி நிறுவனமோ, கேரள மாநில வனத்துறையோ, அல்லது சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றுக் கல்வியகமோ இதுகுறித்த எந்த வெகுசன ஊடகங்களின் செய்திகளுக்கும் பதிலோ, சான்றோ அளித்ததில்லை. இந்தியாவின் காட்டுயிர் - காடுகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி முடிவுகட்டு மேற்கண்ட அமைப்புகளே முழுப்பொறுப்பாக விளங்குவது சிந்திப்போர் அறிந்ததே.

அகில உலக யானையினத்தின் நேர்ந்த ஆராய்ச்சியாளர் அனைவரும் யானைகளின் உள்ளினம், வகைபாடுகள் குறித்து வெளுத்துக் கட்டிவிட்ட பிறகு நமக்குள்ளான அவநம்பிக்கை எதைச் சுட்டுகிறது? “யானைகள் : அழியும் பேருயிர்” நூலின் 68 ஆம் பக்கத்தின் 2 ஆம் பத்திதான் நினைவுக்கு வருகின்றது. சுமார் 10 ச.கி.மீ பரப்பளவு கொண்ட சுற்றியுள்ள அகஸ்திய வனம், நெய்யாறு, பெப்பாரா பகுதிகளிலும் அதுவும் மலை உச்சிதனில்(?) கற்கள் நிறைந்ததொரு(?) தனியிடத்தில் கல்லானை வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. இப்பகுதியை ஒட்டியுள்ள வேலி எதுவுமில்லாத தமிழ்நாட்டு எல்லைக்குள் மட்டும் அவை வருவதே இல்லை! இங்கு வாழும் பழங்குடிமக்களுக்கும் அது பற்றி ஒன்றும் தெரியவில்லை! இது ஒன்றும் சிறு பூச்சியோ, சிறு குருவியோ அல்ல இருப்பது தெரியாமல் போக. எளிதாகக் காண இயலும் பேருயிர்.

சாங்சுரி - இதழ் அந்தக் கட்டுரையை மட்டும் வெளியிட்டது தவறு. அத்துடன் ஒரு முதிர்ந்த நிபுணர் கருத்தையும் வெளியிடாதது அதன் பகுத்தறிவற்ற தன்மையை வெளிக்கொணர்ந்துவிட்டது. இருப்பினும் தனது ஐயப்பாட்டினை கீழ்க்கண்டவாறு வெளியிட்டு தனது “நடுநிலை”யை பறைசாற்றிக் கொண்டுள்ளது.

“குள்ளயானைகள் என்பது ஆதாரமற்ற ஒரு கருத்து என்றே கருதப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய யானைகளில் குள்ளயானைகள் இருப்பது பற்றிய கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார் முனைவர் அருணாச்சலம் குமார். நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள யானை மந்தைகள் தனித் தனியாகப் பிரிந்துள்ளன. அது மட்டுமல்ல. நாட்டின் தெற்குப் பகுதிகளில் வாழும் யானைகளிடம் பிரிந்து வாழும் தன்மை காணப்படுகிறது, என்கிறார் அவர். இவரது கூற்றுகள் அறிவியல் ரீதியான முடிவல்ல என்றாலும், பிரிந்த சில மந்தைகள் அந்தப் பகுதிக்கு உரியதாகவும், முற்றிலும் தனித்தன்மைகளைப் பெற்றிருக்கவும் கூடும்.”

“இந்த வகையில் ஒரு பகுதியில் மட்டும் தனித்து வாழும் யானை அளவில் மாறுபட்டதாக மாறியிருக்கக் கூடும். அதுவே குள்ளயானையா? சாதாரண யானை மந்தைகளிலிருந்து பருவ வயதை எட்டும் நிலையிலுள்ள யானைகள், இளம்யானைகள், குட்டிகள் மட்டுமே பிரிந்து இருக்கலாம். இந்நிலையில் ஐந்தடியே உயரமுள்ள ஒரு யானை மந்தையை தனி வகையாக்க கருத வேண்டியது இல்லை. அது பருவ வயதை எட்டுவதற்கு முன்னுள்ள யானைகளாகவும் இருக்கலாம் என வேறு சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது புதிய யானை வகையா? ஆசிய யானையின் துணை வகையா? என்பது பற்றி மரபணு ஆய்வுக்குப் பிறகே முடிவுக்கு வர இயலும்.”

“போர்னியோ குள்ளயானையுடன் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக கூறப்படும் கல்லானையை ஒப்பிடுவது தவறு என்கிறார்கள். போர்னியோ குள்ளயானைகள் உருவானதற்கு காரணங்கள் வேறு. அந்த யானைகள் வசிக்கும் போர்னியோ பகுதி ப்ளைஸ்டோசின் காலகட்டத்திலிருந்து பிரிந்திருக்கிறது. ஆனால் பெரியாறு சரணாலயப் பகுதியில் கல்லானைகள் வசிப்பதாகக் கூறப்படும் பகுதி, பிரிந்த பகுதிகள் அல்ல. மாறாக இணைந்திருக்கும் பகுதிகள்தான்.”

“ஆப்பிரிக்க காங்கோ மண்டலம், மைய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் போர்னியோவில் குள்ளயானைகள் உள்ளன. ஆப்பிரிக்க குள்ளயானைகள் ஆப்பிரிக்க யானையின் துணை வகை என சில அறிஞர்கள் கூறுகின்றனர். அவை ஆப்பிரிக்க யானைகளை விட குட்டையானவை, காதுகளும் வட்டமானவை. சில அறிஞர்களே அதைத் தனிவகை என்று” பகுத்துள்ளனர்.”

“போர்னியோ குள்ளயானைகள் தனி வகைதான் என்று டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அண்மையில் நிரூபிக்கப் பட்டுள்ளது. அவை ஆசிய யானையிலிருந்து கிளைத்தவை. போர்னியோ யானைகள் 3 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தனிமைப்பட்ட பகுதிகளில் வாழ்பவை என்று நிரூபிக்கப்பட்டது. கடல் மட்டம் உயர்ந்ததால் சுமத்ரா பகுதியிலிருந்து போர்னியோ துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு அத்தீவில் மட்டும் இந்த யானை இருந்து வருகிறது...”

தொன்று தொட்டு கேரளா மூட நம்பிக்கைகளில் முன்னணியில் இருந்ததால்தான் “சூனியக்காரர்களின் வீடு” என விவேகானந்தர் வர்ணித்தார் போலும். அது இன்றும் பொருத்தம் என்பதற்கு “கல்லானா” -வுடன் “புகையன்புலி” யும் சான்று பகர்கிறது. ஆம் சில ஆண்டுகளுக்கு முன் “புகையன்புலி” என்றதொரு தனித்த சிறுத்தையினம் கண்டுபிடிக்கப்பட்டதாக கதை கட்டப்பட்டது. “எங்கள் ராஜியத்தில் எதுவும் இஷ்டம் போல் கிட்டும்....” என்பது கம்யூனிஸ்டுகள் ஆளும் “God’s own country” யின் சொலவடைகளில் ஒன்று.

ஆப்பிரிக்காவிலும், போர்னியாவிலும் உள்ளனப் போன்று சில யானைகளின் அரைகுறை உயரங்களை வைத்து யாரோ ஒரு படைப்பு இலக்கியவாதி வழக்கம் போல சுவைக்காக, உணர்வுக்காக, வியாபாரத்திற்காக அறிவியலை அலட்சியப்படுத்திவிட்டு பெருமைக்கு பிக்மி எலிபெண்ட் என எழுதிவிட்டார், வந்தது வினை. பாலூட்டிகள் வகுப்பில், ப்ரொபாசடே வரிசையில், யானைகள் குடும்பத்தில், மூன்றே இனங்களில், நான்கு (ஆசிய) உள்ளினங்களாகவே யானைகள் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் அடர்காட்டு யானை, புதர்க்காட்டு யானை என்ற இரு இனங்கள் ஆப்பிரிக்காவிலும், ஆசிய யானை என்ற ஒன்று உள்ளிட்ட 3 இனங்கள் உள்ளன. பொதுவான இவற்றுள், ஆசிய இனம் மட்டும் 4 உள்ளினங்களாக பகுக்கப்பட்டுள்ளன. அவை இந்திய யானை, இலங்கை யானை, சுமத்ரா யானை, மற்றும் போர்னியோ யானை என்பனவாகும். இவற்றில் போர்னியோ உள்ளினம் தனி இனமாக அறிவிக்கத்தகுமா என்று ஆராயப்பட்டு வருகின்றது.

தென் மாவட்ட தமிழர்களிடமும் கல்யானை பற்றிய ஐதீகம் உண்டு. இந்த ஐதீக நம்பிக்கையே இதுபோன்ற புனைவுகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. இதற்கு வெள்ளை அறிக்கை தர அரசு முன்வராது. ஏனெனில் அப்புறம் ஆயிரமாயிரம் ஐதீகங்களுக்கும் வெள்ளை அறிக்கை கோரப்படலாம் ஆட்சியே கவிழும் அபாயம் ஏற்படலாம். சரி ஐதீகம் என்றால் என்ன? பகுத்தறிவு இல்லாதவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் ஆதாரமற்ற சமய நம்பிக்கையே ஐதீகம் ஆகும்.

கட்டுரையாசிரியர் ‘ஐதீகம்’ என்று குறிப்பது ‘புராணீகம்’ (Mythi என்பதைத்தான்... (ஆர்.)

Pin It