எட்மண்ட் டான்டஸ்சின் இருபத்தைந்தாம் நினைவு நாளையொட்டி, The Cross Section எனும் இலக்கியப் பத்திரிகை, ஒரு சிறப்புக் கட்டுரையையும், ஒரு சிறுகதையையும் வெளியிட்டு அவரை கௌரவித்திருந்தது. சிறந்த மொழியியல் அறிஞரும் சிறுகதை எழுத்தாளருமான டாக்டர் வில்லியம் மோர்ஸ் அவர்களால், எட்மண்ட் டான்டஸ்சின் ஆய்வுகளை உள்வாங்கி, எழுதப்பட்ட இக்கதை சிதைந்து வரும் நமது கிராமியக் கலாச்சாரத்தையும் வாய்மொழிக் கதைகளின் வீச்சையும் நுட்பமாக பதிவு செய்கிறது. கன்னிமார்குறித்த ஆய்வுகளை தொடர மேற்கொண்ட அவரது முயற்சிகளையும், இதுவரை விளங்கிக் கொள்ளவே முடியாத அவரது புதிர் நிரம்பிய மறைவையும் தனக்கே உரித்தான தொனியில் வில்லியம் மோர்ஸ் எழுதிச் செல்கிறார். கதையின் போக்கோடும் முடிவோடும் ஒத்துப்போக முடியாத பட்சத்தில் கூட, இக்கதையில் படிந்திருக்கிற கிராமம் சார்ந்த நம்பிக்கையின் நுண்அரசியலும் அவசியம் என்றே தோன்றுகிறது.

மேலும் எட்மண்ட் டான்டஸின் மறைவானது., கன்னிமார் குறித்த ஆய்வோடு அவருக்கிருந்த ஈடுபாட்டினால் ஏற்பட்ட மனப்பிறழ்வு சம்பந்தப்பட்டது மட்டும் தானா என்பதை இன்றளவும் விளக்கிக் கொள்ள முடியவில்லை. கன்னிமார்கள் குறித்த ஆய்வின் கடைசித் தொகுதி முற்று பெறவே இல்லை என்பதும், அதைத் தொடர யாரும் விருப்பம் காட்டவே இல்லை என்பதும் ஆய்வுலகில் அவ்வப்போது ஏற்படும் பெரிய சோகங்களில் ஒன்றாகும். டான்டஸின் இறுதிக் காலங்கள் கூட மற்றவர்கள் மத்தியில் இவ்வாய்வு குறித்த பயத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்றும் எண்ண இடமிருக்கின்றது. கன்னிமார்கள் குறித்து பதினாறு தொகுதிகள் கிட்டத்தட்ட இருபத்திமூனாயிரம் பக்கங்கள் என்று வளர்ந்து கொண்டே இருந்தவரின் செயல்பாடு கடைசியில் சுயநினைவின்றி, “தான் தான் கன்னிமார்களின் கதைகளை எழுதவந்தவன்” என்று புலம்பியபடி பச்சபுள்ளா குளக்கரையிலும் கோணமலைக் காடுகளிலும் சுற்றிச் சுற்றி வந்ததை இக்கட்டுரை காத்திரமாக முன்வைக்கிறது. இதை வாசிக்கும் போது நமக்கும் மனம் கனத்து கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது. பிரசுர வசதி கருதி கதையின் சுருக்கப்பட்ட வடிவம் மற்றும் டான்டஸ் பற்றிய சிறு குறிப்பும் பதிப்பாளரின் அனுமதியோடு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

ஈசான மூலையில் மேகம் கரும்பாறையென திரண்டிருந்தது. மழைவருவது போல தோன்றிய போது, பண்டாரம் துண்டை உதறிக்கொண்டே எழுந்தார். சுற்றிலும் இருள் சூழ்ந்து கிடந்தது. கிணற்று மேட்டில் தவளைச் சத்தம் தொடர்ந்து கேட்டபடி இருந்தது. மடியில் சுருட்டி வைத்திருந்த பீடிகத்தையிலிருந்து ஒன்றை உருவி பற்றவைத்துக்கொடு மோட்டார் கொட்டகையிலிருந்து கீழிறங்கினார். அவர் கால்வைத்த இடத்திலிருந்து ஒரு தவளை தாவிக்குதித்து ஓடியது. கண்களை அழுத்தி துடைத்தபடி விளைச்சலை ஊடுருவிப் பார்த்துக்கொண்டே வந்தவர் கீழண்ட வாய்க்கால் ஓரம் தொடர்ச்சியாக தீப்பந்தங்கள் போன்று எதுவோ அசைந்து செல்வதைக் கண்டார். கண்களை நன்கு துடைத்துக் கொண்டு உற்றுப்பார்த்தார். கையில் தீவட்டிகளோடு கன்னிமார்கள் சாரியாக சென்று கொண்டிருந்தன. ஒரு நெருப்பு கோடு நகர்வதைப் போன்று ஒளியும் மாறி மாறித் தோன்றின. கீழண்ட வாய்க்காலைக் கடந்து சிறு மேட்டை அடைந்தபோது அது கன்னிமார்களின் சாரிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அவரை பயம் கவ்விக்கொண்டது. வேக வேகமாக நடந்து மோட்டார் கொட்டகையின் மீது ஏறி தூங்கிக் கொண்டிருந்த தனது மகனை அதட்டி எழுப்பினார்.

“டேய் வினாயகம் எழுந்திர்டா” அவன் சட்டை செய்யாமல் புரண்டு படுத்தான். அவர் வேகமாகத் தட்டி எழுப்பினார். அவன் அலண்டு அடித்துக்ள கொண்டு எழுந்தான். சோம்பல் முறித்தபடியே அவரைப் பார்த்துக் கேட்டான்.

“நடு ராத்திரில ஏன் தான் எழுப்பறீங்களோ”

“டேய் அங்க பார்றா. கன்னிமார்லாம் சாரி போவுது” என கீழண்ட வாய்க்காலை நோக்கிக் கையை நீட்டி காண்பித்தார். தொலைவு வரை அடர்ந்திருந்த இருளில் மின்மினிப்பூச்சிகள் நீந்திக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றின. கண்களை கசக்கியபடி, அவர் கைநீட்டிய திசையைப் பார்த்தான். தீப்பந்தங்களுடன் ஆட்கள் நடந்து செல்வது போலத் தோன்றியது. மேட்டின் மீது வளர்ந்திருந்த தென்னைகளின் ஊடாக அவை நடந்து கொண்டிருந்தன. அவனுள் பயத்தின் பிடிமெல்ல இறுகிக்கொண்டிருந்த போது அவர் பீடியை ஆழ்ந்து புகைத்துக் கொண்டிருந்தார்.

ஒலி நாடாவில் பதிவாகியிருந்த குரல் துல்லியமாக ஒலித்தது. ஒலி வடிவத்தை எழுத்தாக மாற்றும் போது அயர்வாக உணர்ந்த எட்மண்டான்டஸ் ஒலி நாடாவின இயக்கத்தை நிறுத்தினார். களைப்பை போக்க அவருக்கு சிறு தூக்கம் தேவைப்பட்டது. மீதியை அப்புறம் எழுதிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தவருக்கு அதுவரை எழுதியவற்றை மாற்றும் போது தான் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது காற்று வேகமெடுத்து பெருத்த சப்தத்தோடு வீசியது. தோட்டத்தில் மரங்கள் ஒடிந்து வீழ்ந்து விடுவதைப்போல ஆடின. அவர் எழுந்து வெளியில் வந்து பார்த்தார். வானம் இருட்டிக் கொண்டு வந்தது. தூரத்தில் மழை பெய்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. சிறிது நேரத்தில் மின்சாரம் நின்றுபோன போது மீண்டும் அவர் உள்ளுக்குள் சென்று நாற்காலியில் வருகை சங்கடத்தையே அளிக்கும் என நினைத்தபடி மேசை மீது படபடத்துக் கொண்டிருக்கும் ஏடுகளின் சப்தத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.

தென்னாற்காடு முழுக்க அலைந்து திரிந்து சேகரித்த கன்னிமார்களின் கதைகள் அடங்கிய ஏடுகள் புதர் போல் மண்டிக்கிடந்தன. எத்தனையோ பேர் பார்க்கமுடிந்தகன்னிமார்களை தன்னால் ஏன் பார்க்க முடியவில்லை எனும் கேள்வி அவரை அரித்தது. ஒரு வேளை கன்னிமார்கள் கற்பிதங்கள் தானோ என்றும் யோசிக்க வேண்டியிருந்தது அவருக்கு. தமது ஆய்வின் முடிவு எப்படி இருக்கப் போகிறது. எந்த திசை நோக்கிச் செல்கிறது என அவரால் யூகித்து அறியமுடியவில்லை. இருட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தெருவில் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்த போது அவரை உறக்கம் மெல்ல தழுவ ஆரம்பித்தது.

கன்னிமார் குறித்த அச்சம் மெல்ல விலக ஆரம்பித்திருந்த ஓர் நாள் அதிகாலை சாமிக்கண்ணு வாத்தியாரை கன்னிமார் அறைந்து விட்டதாக ஊர்முழுக்க ஒரே பேச்சு அன்றிலிருந்து மீண்டும் கன்னிமார்கள் குறித்த பயம் விநாயகத்தைத் தொற்றிக் கொண்டது. அன்றிரவு தெருவில் படுத்துக் கொண்டிருந்த போது பாட்டியிடம் கேட்டான்.

“வாத்தியார எப்படி பாட்டி கன்னிமாரு அறஞ்சிச்சி?”

அவன் கேட்டவுடன் அருகில் படுத்துக் கொண்டிருந்த அவன் அக்கா, அவனை பார்த்து அதட்டலுடன் சொன்னாள்.

“டேய் பேசாம படு”

அவன் விடுவதாக இல்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தன் பாட்டியிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான். அவனுடைய அக்கா எதிர்ப்பு தெரிவித்தபடியிருந்தாள். இருவரும் மோதிக்கொள்ளத் தயாராகயிருந்தபோது பாட்டி அவர்களைச் சமாதானம் செய்தபடி தொடங்கினாள். பாட்டிச் சொல்லச் சொல்ல வார்த்தைகள் பீதி நிறைந்த சித்திரமென விரிந்தன.

அன்று சீக்கிரமாகவே மொட்டை மாடிக்குச் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டார் சாமிக்கண்ணு வாத்தியார். காற்று சில்லென்று வீசியது. தோட்டத்து தென்னைமரங்கள் சலசலத்தபடியிருந்தன. அண்ணாந்து வானத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தவர் மெல்ல உறக்கத்தின் பிடியில் சிக்குண்டார். சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளியால் நிரம்பியிருந்த தெரு முக்கில் சில நாய்கள் ஊளைவிட்டுக் கொண்டிருந்தன.

தன்னை யாரோ தொட்டு எழுப்புவதை உணர்ந்த அவர் எழுந்த போது ஊர் அடங்கி விட்டிருந்தது. எங்கும் நிசப்தம் அருகில் நின்று கொண்டிருந்த உருவத்தைப் பார்த்தவர் அதிர்ந்து போனார். அருகில் இருந்தவள் தன் மனைவி அல்லாத வேறு பெண்ணாக இருந்தாள். அதீத அழகோடு சற்று நேரத்திற்கு முன்பு குளித்து விட்டு வந்தவளைப் போல இருந்தாள். மஞ்சள் படர்ந்திருந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென தோன்றியது அவருக்கு. சுண்டினால் ரத்தம் வந்துவிடக்கூடிய உடம்பு, இவ்வளவு வாளிப்பான உடல்வாகு கொண்ட பெண்ணை அவர் இதுவரை கண்டதே கிடையாது.அவளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். தன் இதழ் ஓரங்களில் புன்னகையை தேக்கியபடி அவரை நெருங்கினாள். அவரின் தலையைக் கோதியபடி நெற்றியில் அழுத்தமாக ஓர் முத்தமிட்டாள். சடுதியில் அனைத்தும் மாறத் தொடங்கின. அவள் விரல்கள் அவரது உடலெங்கும் ஊர்ந்தன. அவருள் காமத்தின் வேட்கை வேர்விடத் தொடங்கியிருந்தது. அவளை வாரி அணைத்தபோது அவள் கூறினாள். அவளது பேச்சு தேர்ந்த சாஸ்தீரிய சங்கீதமென இருந்தது அவருக்கு.

“இங்க வேணாம் வேற எங்கயாவது போவம்”

அவளின் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாதவராக இருந்தார் அவர். சத்தமே எழாமல் சிரித்தபடி மெல்ல எழுந்தாள். தனது ஆடைகளை சரி செய்து கொண்டபடியே அவளைப் பார்த்து கேட்டார்

“வேற எங்க போறது. யாராச்சும் பாத்துட்டாங்கனா அவ்ளோதான்”.

இதை கேட்டதும் அவள் மென்மையாக சிரித்தாள். முத்துகள் சிதறியதைப் போன்றிருந்தது தனது உடலின் செழுமையை அவர் கவனிக்கயேதுவாக வெளிச்சத்தில் நின்றவாறு அவள் கூறினாள்.

“எங் கூட வாங்க மற்றதெல்லாம் நா பாத்துக்கறேன்”

அவள் வார்த்தைகள் அவளைப் போலவே மிகக் கச்சிதமாகவும், அவ்வளவு அழகாகவும் இருந்தன. இனிமேல் தான் இப்படித்தான் பேச வேண்டுமென நினைத்துக் கொண்டார். சுவாசிக்கும்போது அவளது உடம்பில் ஏற்படும் மேடு பள்ளங்களை உற்றுக் கவனித்தார். அவரது கையைப் பற்றிக் கொண்டு மெல்ல நடந்தாள். மாடிப்படி தெருபக்கமாக இருந்தது. எந்த அதிர்வு மேற்படாமல் அவள் நடந்து சென்றாள். கிறக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வாசனை வெளியேறிக் கொண்டிருந்தது அவளது உடலிருந்து. அதில் மயங்கிக் கிடந்தார் அவர். சோடியம் விளக்கு வெளிச்சத்தில், ஒரு தங்க விக்ரகம் நடந்து வருவதைப் போல இருந்தது அவளைப் பார்ப்பதற்கு. அவர்களை பார்த்து நாய்கள் குரைக்கத் தொடங்கின. எதிர்வீட்டிலிருந்து பூவரச மரத்திலிருந்து கோட்டான் பெருங்குரலெடுத்துக் கத்தியபோது அவர்கள் தெருவைக் கடந்து கிழக்கு நோக்கி திரும்பி விட்டிருந்தார்கள்.

சாலை வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்து நிறுத்தத்தில் யாரும் நின்றிருக்கவில்லை. தன்னை எங்கு அழைத்துச் செல்கிறாள் என்பதை அவரால் யூகிக்க முடியவில்லை. கொஞ்ச தூரம் நடந்தபின் வடக்கு நோக்கிப் பிரிந்த ஒரு மண்பாதையில் திருப்பினபோது அவளிடம் கேட்டார்.

“எங்க போறோம்? பாழடைந்த மான்ராசா கோயிலத் தவற வேற எதுவும் இங்க இல்லையே”

பேசாமல் வருமாறு சைகை செய்து காண்பித்தாள். அடர்ந்த இருளும், படர்ந்திருந்த நிசப்தமும் அவருக்கு பயத்தை ஏற்படுத்தின. அவள் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவரும் நடக்க வேண்டியிருந்தது. மான்ராசா கோயிலை அடைந்த போது இருவருக்கும் வியர்த்துக் கொட்டியது. கோயிலுக்குள்ளிலிருந்து நாய் ஒன்று எழுந்தோடி இருளுக்குள் சென்றது. கோயில் மிகவும் சிதிலமடைந்திருப்பதை உணரமுடிந்தது. அவளது வியர்வை நாற்றத்தை முகர்ந்துகொண்டே இருக்க வேண்டுமென நினைத்தவர், மிகுந்த ஆவேசத்தோடு இறுக்கி அணைத்தார். எந்த எதிர்ப்பையும் காட்டாது மிக லாவகமாக அமர்ந்து கொண்டாள். அவர் சூழலை மறந்திருந்த நொடியில் அவள் பேசினாள். அவளது பேச்சை உணர்ந்து கொள்ள முடியாதவராக அவர் மயங்கிக் கிடந்தார்.

“ஒரே கசகசப்பா இருக்குது. குளிச்சா தேவலாம்”

அவருக்கும் அப்படித்தான் தோன்றியது. இருவரும் ஒன்றாக குளித்துக்கொண்டிருப்பதை கற்பனை செய்து பார்த்தவர் அவளிடம் கேட்டார்.

“இந்த நேரத்துல எங்க போயி குளிக்கிறது?”

அவள் ஒன்றும் தெரியாதவளைப் போன்று கேட்டாள்.

“கிட்டக கெணறு ஒண்ணுமில்லையா?”

“இருக்குது. ஆனா ஆட்கள் காவலுக்கு படுத்திட்டுருப்பாங்க சரிபட்டு வராதே”.

அவள் சிரித்தாள். சிறு மின்னற் துண்டைப் போன்றிருந்தது சிரிப்பு. வேம்பின் காற்று சில்லென இருந்தது. அவளது சிரிப்பிலிருந்து அவர் இன்னும் விடுபட்டிருக்கவில்லை. புன்னகைத்தபடி அவளே கேட்டாள்.

“இவ்ளோ பெரிய ஊர்ல குளிக்கறதுக்கு ஒரு எடம் கூடவா கிடையாது?”

அவருக்கு அசிங்கமாக இருந்தது. எந்த நிலையிலும் தன்னூரை குறைத்து மதிப்பிடுவதை விரும்பாதவர் அவர். யோசனையில் ஆழ்ந்தார். அவரை உசுப்பேற்றிக் கொண்டுஇருந்தாள் அவள். தனது நாவால் அவரது கழுத்துப்பகுதியில் வருடிக்கொண்டிருந்தாள். பின் மெல்ல காதுமடல்களை கடித்தாள். சுகிப்பிலிருந்து மீள முடியாமலிருந்த போது அவளிடம் கூறினார்.

“ஒரு எடம் இருக்கு. ஆனா கொஞ்சம் தூரம். யாரும் இருக்க மாட்டாங்க” ஆர்வ மிகுதியில் அவரை இறுகத்தழுவியபடி கேட்டாள்.

“பச்சபுள்ளா குளம்”

“கொளமா?” என ஆச்சரியத்தோடு கேட்டாள். அவர் கண்களில் காமம் கொப்பளிக்க தலையாட்டினார் அவர் தளர்ச்சியடைந்து விடாதவாறு பார்த்துக் கொண்டாள். இருவரும் வேக வேகமாக நடந்தனர். அவளை சுலபத்தில் அவரால் பின்தொடர முடியவில்லை. சாலை ஓரங்களில் நின்றிருந்த புளிய மரங்கள் பயத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றியது. நன்கு மழிக்கப்பட்ட பனைகள் பீதியூட்டுவதாக இருந்தன. ஒரு மிருகத்தைப் போல அவள் நடந்தாள். நீண்ட கருங்கூந்தலைப் போல வளைந்து நெளிந்து கிடந்தது தார்ச்சாலை சில்வண்டுகள் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. காட்டுப்பூக்களின் வாசம் தூரத்தை கடந்தும் மணம் வீசிக் கொண்டிருந்தது. அவரும் வேகத்தைக் கூட்டி நடக்க வேண்டியிருந்தது. இருவருக்குமான தூரம் அதிகரிக்கத் தொடங்கியது போது அவர் ஓடவும் செய்தார். அவளிடமிருந்து கசிந்து கொண்டிருந்த ஒருவித வாசனை தொடர்ந்து அவரை முன்னிழுத்தபடியே இருந்தது. அவளுக்கு எப்படி பச்சபுளா குளம் செல்வதற்கான வழி தெரியும் என்று அவரால் யோசிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு கட்டுண்டு கிடந்தார். அவரது சிந்தனை முழுக்க அவளே நிரம்பியிருந்தாள்.

நிலவொளியில் சாலை ஓரத்தில் வட்டவடிவிலான ஒரு கண்ணாடியைப் போன்று இருந்தது குளம். நான்கு பக்கமும் படிக்கட்டுகள். ஒரு சில இடங்களில் சிதிலமடைந்து இருந்தன. குளத்திற்கு வடக்கில் புளிய மரம். அதன் கீழே கழிப்பு கழித்ததன் அடையாளமாய் முறம், சிவப்பு, மற்றும் சில்லறைகள் சிதறியிருந்தன. மேற்கில் எருக்கு, புதர் கிழக்கும் தெற்கும் எந்த அடைசலுமின்றி இருந்தது. நிலவின் நகர்வு குளத்து நீரில் பிரதிபலித்தது. கிழக்கு பக்கமாக அவள் குளத்தினுள் இறங்கினாள். மேலேயே நின்று கொண்டிருந்தார் அவர். நீருக்குள் இறங்கியவள் தன் ஆடைகளை களைந்து படியில் வைத்தாள். ஓர் ஆணின் முன் அம்மணம் கொள்வதை சிரமம் கருதாதவளாக இருந்தாள். அவருக்குத்தான் பதற்றம் கூடத் தொடங்கியிருந்தது. மிக நெருக்கத்தில் நிர்வாணம் உணரப்படும்போது முதலில் பயத்தையே ஏற்படுத்துகிறது. அதிலிருந்து மீள கொஞ்ச நேரம் பிடித்தது அவருக்கு. தேர்ந்த சிற்பியின் செதுக்கல்களிலிருந்து உயிர் பெற்றவளைப் போல இருந்தாள்.

நிலவின் ஒளிபட்டு ஜொலிக்கின்ற அவளது உடலையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரை குளத்திற்குள் இறங்குமாறு சொன்னாள். தயக்கமாக இருந்தாலும் இறங்கியாக வேண்டிய கட்டாயம். தன்னை அம்மணமாக்கிக் கொள்வது அவருக்கு கூச்சமாக இருந்தது. அவள் உதவினாள். பின் இருவரும் நீந்தினார்கள். அவருக்கு சோர்வாக இருந்த போது படியில் சிறிது நேரம் அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவள் வேக வேகமாக நீந்தினாள். மேற்கு புறமாக சென்று படியேறியவள், ஒரு பலகைக்கல்லில் மஞ்சளை இழைத்து உடல்முழுக்க பூசிக் கொண்டு குளத்திற்குள் இறங்கினாள். அதைக்கண்ட அவருக்கு பயம் ஏற்பட்டது. இரவில் யார் மஞ்சள் பூசி குளிப்பார்கள் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். அவர் முகம் இறுகத்தொடங்கியது. நீந்தியவாறே அவருக்கு அருகில் வந்தவள், அவரைப்பிடித்து நீருக்குள் இழுத்தாள்.

அவளை மீறி அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தங்கத்தைப்போல பிராகாசிக்கும் அவளது உடம்பு இப்போது அவருக்கு பயத்தை ஏற்படுத்தியது. வெறியோடு இறுக்கி அணைத்தாள். எலும்புகள் நொறுங்கிவிடுவதைப் போன்றிருந்தது. அவருக்கு மூச்சை அடைத்தது. நீருக்குள்ளாக அவளின் தீவிரம் கூடத் தொடங்கியபோது எப்படியாவது மேலேறி சென்றுவிட வேண்டுமென நினைத்தார். முடியவில்லை. அவர் தன்னை மெல்ல இழந்து கொண்டிருந்தார். நினைவுகள் மங்கத்தொடங்கியபோது அவர் மீதான அவளின்பிடி இறுகத் தொடங்கியது. நிலமெலாம் அதிரும்படி அவள் சிரித்தாள். சிரிப்பொலி நாலா திசையிலும் பட்டு எதிரொலித்தபடியிருந்தது. அவள் ஆவேசத்தோடு இயங்கினாள். காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று அவர் உரக்கக் கத்தினார். ஆனால் குரல் அவருக்குள்ளேயே ஒடுங்கிப்போனது. வெறுமையாக்கி அவரை தூக்கி வீசினாள். பின் மெல்ல கரையேறி ஆடைகளை உடுத்திக்கொண்டு தெற்கு பக்கமாக நடக்க தொடங்கினாள். இருள் அடர்ந்திருந்தது. குளம் அûதியாக இருந்தது. பேச்சு மூச்சற்று புளிய மரத்தின் கீழே வீழ்ந்து கிடந்தார் அவர். விடிந்ததும் விடியாததுமாக ஊர் முழுக்க செய்தி காட்டுதீ போல பரவியது. அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஊர் முழுக்க பலகதைகள் உலவிக்கொண்டிருந்த அந்த வாரத்தின் கடைசி நாளில் இறுதிவரை நினைவு திரும்பாமலேயே இறந்தும் போனார்.

என்றோ பாட்டி கூறிய கதை அவனுள் பயத்தை ஏற்படுத்தியது. கீழண்ட வாய்க்காலையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அப்பா வேறொரு பீடியை எடுத்து புகைக்கத் தொடங்கினார். அவன் இருளை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்த போது அவர் கீழிறங்கி சிறுநீர் கழித்துவிட்டு வந்து படுத்துக்கொண்டார். உடனே தூங்கியும் விட்டார். ஆனால் அவனுக்கு தூக்கம் வரவில்லை புரண்டு படுத்தான் சுற்றும் முற்றும் பார்த்தான் பூச்சிகள் ரீங்கரித்துக் கொண்டிருந்தன. அருகில் தூங்கிக் கொண்டிருந்தவரை திரும்பிப் பார்த்தான். அவர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். வானத்தில் நிலவு மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது.

கதவு தட்டும் சத்தம் தூரத்தில் கேட்பதுபோல தோன்றிய போது எட்மண்ட்டான்டஸ் விழித்துக்கொண்டார். கண்களை கசக்கிக்கொண்டு ஒலிநாடா பெட்டியை பார்த்தார். அது ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தது. அவருக்குள் குழப்பமாக இருந்தது. சாமிக்கண்ணு வாத்தியார் கதை வெறும் கனவுதானோ என்றும் யோசித்தார். எழுதிக்கொண்டிருக்கும் தாள்களை புரட்டிப்பார்த்தார் தான் சேகரித்த அநேக கதைகளில் அதுவும் ஒன்றென எண்ணிக்கொண்டு படபடத்துக் கொண்டிருக்கும் தாள்களையே பார்த்துக் கொண்டிருந்தார். நேரில் பார்த்ததைப்போல காட்சிகள் அவர் மனதில் குமிழிட அவருக்கு மேலும் குழப்பம் அதிகரித்தது. எப்போது சாப்பிட்டோம் என்று கூட அவருக்கு தெரியவில்லை.

மேசைமீது உணவுப் பாத்திரங்கள் அப்படியே இருந்தன. மீண்டும் ஆழ்ந்து யோசித்தார் நினைவின் கீற்று அவரது மனதில் மின்னி மறைந்தபோது அவரை ஞாபகத்தின் கொடிகள் பற்றத் தொடங்கின தெளிவான காட்சிகளாக பிம்பங்கள் நகரத்தொடங்கின. விழுப்புரம் தாலுக்கா கெடார் கிராமத்திற்கு அருகில் உள்ள செல்லங்குப்பத்தில் ஓர் மழை இரவில் பண்டாரத்தோடு பேசியதும் அவர் கூறிய சாமிக்கண்ணு வாத்தியார் கதையை கெடார் பழனிவேல் முதலியார் ஊர்ஜிதம் செய்த காட்சியும் கோர்வையாக அவரது மனதில் தோன்றிய போது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனையோ கதைகள் இருக்க இந்த கதை மட்டும் ஏன் கனவாக வரவேண்டும் என்று யோசித்தவர் கடிகாரத்தைப் பார்த்தார். பன்னரெண்டாக இன்னும் சிலமணித்துளிகளே இருந்தன. தெருப்பக்கம் சென்று கதவைத் திறந்தார். தொப்பளாக நனைந்த ஓர் நெடிய உருவம் நின்று கொண்டிருந்தது. மழை வேகத்தோடு பெய்து கொண்டிருந்தது. அந்த உருவம் அழகிய பெண் என்பதை சில வினாடிகளுக்குள் அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவளது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. மழை ஈரத்தால் அவளது உடலின் வனப்புகளை இருட்டில் கூட அவரால் கூர்மையாக காண முடிந்தது. அவளின் உயரம், நீண்ட கருங்கூந்தல் மஞ்சள் பூசிய முகம் அனைத்தும் அவருள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தின. எதையும் அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்று கொண்டிருந்தார். மழைக்கு ஒதுங்கிய நாய்கள் குரைக்கத் தொடங்கின. தெருவில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தூரத்தில் ஏதோ ஓர் மரம் ஒடிந்து விழும் சப்தம் கேட்டது. அவள் உடல் அதிகமாக நடுங்க ஆரம்பித்ததை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் பேசினாள்.

“தொப்பர நனைஞ்சி வந்திருக்கேன். உள்ள வாங்கனு கூப்பிட மாட்டிங்களா?”

குரல் வெண்கல மணிச்சத்தம் போல ஒலித்தது. பற்கள் வெண்மையாக இருந்தன. உதட்டசைவையே அவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். மீண்டும் அவள் பேசினாள்.

“உங்கள தான் கேக்கறேன்.”

இப்போது அவளது குரல் அவளை பேசவைத்தது மிக அமைதியாகவும் பதற்றத்துடனும் சொன்னார்.

“உள்ள வாங்க”

ஈரம் சொட்டச் சொட்ட அவள் நடந்து உள்ளே வந்தாள். அவர் திரும்பித்திரும்பி பார்த்தவாறு முன்னால் சென்று, துவட்டிக் கொள்ள துண்டை எடுத்துக் கொடுத்தார். அவள் துண்டை வாங்கிக்க கொண்டு சுற்று முற்றும் பார்த்தாள். புரிந்து கொண்டவராக கிழக்கு பக்கமிருக்கும் அறையைக் காட்டினார். அறை நோக்கி மெல்ல நடந்தவள், திரும்பிப் பார்த்து மென்மையான சிரிப்பொன்றை உதிர்த்தாள். பெருமழையின் சீற்றம் குறைந்திருக்கவில்லை. ஆனாலும் அவருக்கு வியர்த்தது. உடல் முழுக்க உஷ்ணம் பரவியது. அவர் வியர்வையை சிறு துண்டால் துடைத்துக் கொண்டிருந்த போது கதவைத் திறந்து கொண்டு அவள் வந்தாள். ஈரத்துணி அவளது உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்தது.

அவர் அவளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பார்வைகள் நிலை கொள்ளாது அலைந்தன. சிந்தனைகள் கட்டற்று எழுப்பின. காமம் அவருள் தீயின் நாவென துடித்துக் கொண்டிருந்தபோது அவளை நெருங்கினார். அவள் யாராக இருக்ககூடுமென்ற சிந்தனையும் அவரால் புறந்தள்ள முடியாததாக இருந்தது. சூழலின் தனிமை அவர்களை விழுங்கத் தொடங்கிய போது அவர் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டிருந்தார். இருவரது உதடுகளும் மொழிமீறிய வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டன. காற்றின் வீச்சத்தால் ஜன்னல் கதவுகள் படபட என அடித்துக்கொண்டபோது அவளது இடது காது மடலுக்கும் கீழாக அழுத்தமாக அவர் முத்தமிட்டார்.

அவளுக்குள்ளாகவும் காமத்தின் சுருள்கள் இறுகத்தொடங்கியபோது மழையின் வேகம் குறையத்தொடங்கியது. தெருவில் வெள்ளத்தின் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

உணர்வுகளில் கட்டுண்டு கிடந்தாலும் அவர் கவனத்துடனேயே இருந்தார். எப்படியாவது கன்னிமார்களின் நடமாட்டத்தை, விசித்திரத்தை நேரில் கண்டுவிட வேண்டும் எனும் ஆவல் அவரது விழிகளில் தேங்கிக்கிடந்தது. மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு அவள் போக்கிலேயே இயங்கினார். மழை முழுவதுமாக ஓய்ந்திருந்தது. மழைக்கு பிறகான நிசப்தம் பேரமைதியாக எங்கும் கவிந்திருந்த போது அவள் சொன்னாள்.

“எனக்கு உடம்பு கசகசனு இருக்கு, குளிக்கணும் போல இருக்குது”

ஆட்டம் தொடங்கிவிட்டதென நினைத்தவருக்கு சட்டென சாமிக்கண்ணுவாத்தியாரின் கதை நினைவுக்கு வந்தது. அக்கதை வெறும் கனவுதானோ என்று திரும்பவும் யோசித்தவர் அவளிடம் சொன்னார்.

“இங்கேயே குளிக்கலாமே”

“அது சரியா வராது; கிட்டக்க கெணறு எதுவும் இல்லையா?”

அவர் அவள் பேச்சை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினார், அவளின் செய்கைகள் அவரை உசுப்பேற்றின. வீழ்ந்து விடாமலிருக்க நிறைய சிரமப்பட வேண்டியிருந்தது அவருக்கு. அவள் தன்னிடம் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவர் சொன்னார்.

“இருக்குது ஆனா மோட்டார் கொட்டாயில ஆட்கள் படுத்துக்கிடப்பாங்க பாத்துட்டாங்கனா அவ்ளோதான்”

“வேற எடமே இல்லையா?”

“இருக்குது கொஞ்சதூரம்”

ஆர்வ மிகுதியில் அவள் கேட்டாள்.

“எந்த இடம்”

அவளது விழிகளில் தேங்கியிருந்த வஞ்சகத்தை கண்டவராக கூறினார்.

“பச்சபுள்ளா குளம்”

அவர் கூறிவிட்டு அவளைப் பார்த்தார். அவளின் விழிகளில் ஆச்சரியம் மின்னலெனத் தோன்றி மறைந்தது. அவள் அவரை இறுக்கி அணைத்து அவரது உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு சொன்னாள்.

“போகலாமா”

அவர் தலையாட்டி, தெருக்கதவை திறக்கச் சென்றார்.

மழைநீர் வடிந்திருக்கவில்லை பாதங்களை நனைத்தபடி ஓடிக் கொண்டிருந்தது. மேட்டுத்தெரு வழியாக அவர்கள் பள்ளிக்கூடச் சந்தை அடைந்தனர். தெரு நெடுக சேரும் சகதியுமாக இருந்தது. அதிக ஒலி எழுப்பாமல் நடந்தனர். பள்ளிக்கூடத்தின் பின்புறமிருந்த இலுப்பையின் உயரம் பீதியை ஏற்படுத்தியது அவருக்கு. வெள்ளக்குளத் தெருவிற்குள் நுழையும் போது நாய்கள் விடாமல் குரைத்தன. எங்கும் இருள் சூழ்ந்து கிடந்தது. இருவரையும் நாய்கள் பின்தொடர்ந்தன. அவள் அவற்றைத் திரும்பிப் பார்த்தாள். அவை வால்களை ஆட்டிக் கொண்டு பின்னோக்கி ஓடின. வெள்ளக்குளம் முழுக்க நீர் நிரம்பியிருந்தது. தெருவை அடைத்தபடி வெள்ளநீர் ஓடிக்கொண்டிருந்தது.

மாந்தோப்புக் கழனிக்குள் அவர்கள் நுழையும் போது அவர் மணிப் பார்த்ததர். சரியாக ஒரு மணியாக இருந்தது. தமது ஆர்வம் விபரீதத்தில் முடிந்துவிடுமோ என்றும் அவர் யோசித்தார். கண்களில் பயத்தின் திவலைகள் ஊர்ந்து கொண்டிருந்தன. அப்போது அவள் நடையைத்துரிதப் படுத்தியிருந்தாள். அவரும் வேகமாக நடக்க வேண்டியிருந்தது. நரிமுட்டு கழனியைத் தாண்டி சாலையை அவர்கள் அடைய குறைந்த நேரமே பிடித்தது. சாலையில் மேற்கு நோக்கி நடந்தனர். குளிர்ந்த காற்று வீசியது. மரங்களில் ஈரம்படர்ந்திருந்தது. காற்றில் பரவியிருந்தது முட்டிப்பூக்களின் மணம். இரவின் தனிமையை மழைபெய்து அதிகப்படுத்தியிருந்ததை உணர முடிந்தது.

பச்சபுள்ளா குளத்தின் வளைவில் ஓங்கி வளர்ந்திருந்த அரசமரத்தின் கீழிருந்து குளத்தை நன்கு பார்க்க முடிந்தது. படிக்கட்டுகளை காணமுடியாதபடி நீர் நிரம்பியிருந்தது. வேகவேகமாக நடந்து அவர்கள் கிழக்கு பக்கமாக குளத்தை அடைந்தனர்.

ஆடைகளை களைந்து விட்டு நீருக்குள்ளாக இறங்கியவள் அவரை நீருக்குள் வருமாறு அழைத்தாள். ஆடைகளை அவிழ்த்து ஈரம்படாதவாறு மடித்துவைத்து விட்டு குளத்திற்குள் இறங்கினார். இருவரும் நீருக்குள்ளாக இறுக்கி பின் மெல்ல விலகி இருவரும் நீந்த ஆரம்பித்தனர். அவளுக்கு ஈடுகொடுத்து அவரால் நீந்த முடியவில்லை. குளம் அதிர அவள் நீந்தினாள். புளியமரத்து பறவைகள் சடசடத்தபடி அங்குமிங்கும் அலைமோதின. தெற்கு பக்கமாக நீந்திச் சென்றவள், கரையேறி மஞ்சள் அரைத்து உடம்பு முழுக்க பூசிக்கொண்டு மீண்டும் நீருக்குள் சென்றாள். அவர் குளித்து கரையேறி விட்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவளும் கரைக்குச் சென்று அவரை இறுகத் தழுவினாள். அவருள் கட்டுண்டிருந்த காமம் நாகமெனச் சீறியது. எலும்புகள் நொறுங்க அவளை இறுக்கினார். காமத்தின் நெடி மெல்ல இருவர் மீதும் படர ஆரம்பித்த போது அவர்களின் உடல்கள் உரையாடலைத் தொடங்கிவிட்டிருந்தன.

மிக நெருக்கத்தில் அவரது கண்களை மீண்டுமொரு முறை உற்றுப் பார்த்தாள். இருவரும் மாறிமாறி தங்களது உணர்வுகளை பரிமாறிக் கொண்டிருந்தனர். இருவரின் மூச்சுக்காற்றும் அங்கேயே மோதிச் சரிந்தன. வியர்வை கசகசப்பை ஏற்படுத்தியபோது அவர் உச்சம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். அவள் உணர்வுகளை உள்வாங்கியபடி மெல்லிய ஒலிகளை எழுப்பிக் கொண்டிருந்தாள். தீவிரத்தோடு வெம்மைக்கூடி வெளிவந்தது. தன் வாழ்நாளிலேயே நீண்ட புணர்ச்சியை முடித்துக்கொண்ட திருப்தியோடு புரண்டு கீழே படுத்தபோது ஒரு துளி விந்து சிதறி குளத்தில் விழுந்தது. கண்களை மூடிப்படுத்துக் கிடந்தவளின் சுவாசம் தாறுமாறாக இருந்தது. சிறிது நேரம் கழித்து கண்களை மெல்லத் திறந்தாள். பின் எழுந்து அவரது கண்களை உற்றுப் பார்த்தவள், ஓங்கிச் சிரித்தாள். குளம் அவளது சிரிப்பை எதிரொலித்தது.

அந்த சிரிப்புக்கான அர்த்தத்தை அவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. மீண்டும் அவரைப்பார்த்து ஓங்கிச் சிரித்தபடியே நீருக்குள்ளாக இறங்கி தனது இரு கைகளாலும் நீரை அள்ளி ஒரு மிடறு பருகிய நொடியில் ஒரு துளி நீர்கூட இல்லாமல் சட்டென குளம் வறண்டது. புதிர் நிறைந்த அக்கணத்தில் அவர் அவளாகவும், அவள் அவராகவும் உருமாறிவிட்டிருந்தனர். அவராக உருமாற்றம் கொண்ட அவள் ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தான் கன்னிமார்களின் கதையை எழுதவந்தவன் என்று வறண்ட குளத்தின் கரையில் நின்று புலம்பிக் கொண்டிருந்தார் அவள் உரு கொண்ட அவர். அதன்பிறகு அந்தக்குளம் எப்போதும் நிரம்பவேயில்லை.

குறிப்புகள்

எட்மண்ட் டான்டஸ்

கொலம்பியாவைச் சேர்ந்த எட்மண்ட் டான்டஸ் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களில் தனித்துவமானவர். ஆண்ட்ரியோ, மெபக்கி படைப்பாளிகளுக்கு முந்தைய தலைமுறையைச் சார்ந்தவர். இவரது கதைகள் அன்றாட வாழ்வில் மறைந்திருக்கும் மர்மத்தையும், அபத்தத்தையும் மனப்பிறழ்வையும் கரிசனத்துடன் ஆராய்பவை. இவரது கட்டுரைகள் பெரும்பாலும் நாட்டார் வழக்காற்றியலோடு தொடர்புடயவையாக இருக்கின்றன. எல்லை தெய்வங்கள், பழங்குடி மக்களின் வாய்மொழிக்கதைகள், நாட்டுப்புற கதைப்பாடல்கள் போன்றவற்றை சேகரிக்கவும் ஆய்வு செய்யவும் உலகம் முழுக்கப் பயணித்த ஓர் பண்பாட்டு ஆய்வாளர். இவரது கதைகளைப்போலவே இவருடைய வாழ்வும் மிகுந்த சோகத்துக்குரியது. கடுமையான வறுமையை எதிர்கொண்டவர். சம்பாத்தியத்தை முழுக்க முழுக்க எழுத்துக்காகவும் பயணத்திற்காகவும் செலவிட்டவர். ஆரம்ப நாட்களில் ஜீவனத்தின் பொருட்டு பல்வேறு வேலைகளைப் பார்த்தவர். மௌனப்படங்களுக்கு பழங்குடிகளின் இசைக்கருவிகளை வாசித்திருக்கிறார்.

இந்தியாவில் சந்திக்க நேர்ந்த நாடோடிகளின் கதைகளை கேட்டிருக்காவிட்டால், அன்றாட வாழ்வின் மர்மங்களைப்பற்றி இவ்வளவு துல்லியமாக என்னால் கதைகளை எழுதியிருக்க முடியாது என்று கூறும் டான்டஸ்சால் வாழ்வின் புதிர்த்தன்மையை கடைசிவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. The black stones, A woman under the Blanket, A collection of folktales of North Tamilnadu ஆகியன அவரது சிறுகதைக் தொகுதிகள். சிறுகதைகளோடு ஓரிரு நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

“The foot prints” எனும் தலைப்பில் கன்னிமார் குறித்த கட்டுரைகள் பதினாறு தொகுதிகளாக வெளிவந்திருக்கிறது. “Unfinished life” எனும் தலைப்பில் முடிவு பெறாத ஓர் சுயசரிதையையும் எழுதியிருக்குமிவருக்கு தமிழ்நாட்டில் தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் திருவண்ணாமலைச் சாலையில் அடுக்கம் கிராமத்திற்கருகே பச்சபுள்ளா குளக்கரையில் நின்ற நிலையில் வடக்குநோக்கி பார்த்தவாறு ஓர் கற்சிலை நிறுவப்பட்டிருக்கிறது. சரியாக பராமரிப்பு இன்றி மெல்ல சிதைந்து வரும் அச்சிலையின் கண்கள் இன்னும் எதையோ தேடிக்கொண்டே இருக்கின்றன என்பதை அச்சிலையை கூர்ந்து பார்ப்பவர்கள் நிச்சயம் உணர முடியும்.

வில்லியம் மோர்ஸ்

வில்லியம் மோர்ஸ் 1932 ல் பெருவில் பிறந்தவர். வாழ்வின் பெரும்பகுதியை மெக்ஸிகோவில் கழித்தார். கட்டுரைகள், நாடகங்கள் எனப் பலவற்றைப் பிரசுரித்துள்ள போதும் மோர்ஸ் அடிப்படையில் ஓர் மொழியியலாளராகவே அறியப்படுகிறார். மெக்ஸிகோவிலிருந்து பெருவுக்கு திரும்பிய பின்னர் டான்டசுடன் சேர்ந்து அவருடைய ஆராய்ச்சியில் பங்கெடுத்துக் கெர்ணடார். டான்டஸ் வெளியிட்ட “The foot prints” எனும் நூலின் ஏழாம் தொகுதிவரை மோர்ஸ் அவருடன் இணைந்து பணியாற்றினார். வயது முதிர்ந்த நிலையில் இன்று பெருவில் வாழ்ந்து கொண்டிருக்குமிவருக்கு இரு மனைவியரும் ஒன்பது பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

“Game of the language, Magic of Alphabets” என்பன மொழியில் குறித்த அவரது நூல்கள். “Collected stories of William morce” என்னும் தலைப்பில் அவரது ஒட்டு மொத்த கதைகளையும் “The Hard Bound” எனும் பதிப்பகம் வெளியிட்டு கௌரவித்திருக்கிறது. டான்டசுடன் இணைந்து பணியாற்றிய காலங்களை பசுமையுடன் நினைவு கூர்கிறார். தன்னால் எழுத்தில் சாதிக்க முடிந்தது என்று ஏதாவது இருந்தால் இது டான்டஸ் குறித்த எழுதிய இந்தக் கதை மட்டுமே என்று தீர்க்கமாக்க கூறுமிவர் தற்போது பழங்குடிகள் குறித்து ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார்.

Pin It