தேட்டை

யார் அசைந்தாலும் நம்மில்
ஏதும் நிகழ்ந்துவிடும் என
ஒரு மையம் தோன்றி
யுகம் கழிந்தது.

ஸ்தம்பித்தோம்
கண்கள் விலக்காமல்

வெடித்த விதை
விரிந்தது மரமாய்
பூக்கள் சிந்தி பின்
முதிர்ந்தது.
மரம் விரித்த ஒளிக்கிளைகள்
வீசி விரையும் பேரண்ட
எல்லையில் என்
ஒற்றையணுவின் பிம்பம்

மீண்ட விழியுணர்வில்
பூனையும் இல்லை
மரமும் அங்கே
இல்லை.

முக்தி

பிறகு
திறக்க முடியாத
ஜன்னல்களைக் கண்டேன்;
ஜன்னல் திறந்து.

நிறமற்று மணமற்று
வளர்ந்து கொண்டிருக்கிறது
திறப்பது குறித்த
சொற்கள் கசியும்
பனிப் பொழிவு வீதி

இரக்கமற்ற
நெடிய மலையுச்சியில்
கதவு திறந்தது
ஒரு நாள்

நிழல்களின் வெளிச்சங்களைக்
கண்டேன்.
ஒன்று மற்றொன்றை
கண்டடைந்து
கமலம் மலர்ந்தது.

முடிவில்
ஒரு மலர் மட்டுமே
மூடிக்கிடந்த
அந்த மலை உச்சியில்
கிடந்தது.

புத்த பற்று

நிகழ்வின்
விளிம்புவரை செல்லும்
தருணத்தை
சரியாகக் கையாள முடியாது.

பத்திரமாக இரு.
ஒரு கிளியைப் போல
கூண்டில்

எனது ப்ரியம்
மகத்தானது உன்மேல்.

புனித வெள்ளி

கண்டான்
கனிகளிரண்டு
தேகம் மையப்பட்டு
வேட்கை வீசி
விலகிய ரகஸியத்தில்
தென்பட்ட காம்பு
பீச்சியடித்தது
திரைச்சீலை கிழியுமளவு
முலைப்பால்.

மூடிய நிலவொளியில்
கிடந்த கோலமும்
கிடத்திய கோலமும்
புணர்வுற்று
வீறிட்டழுகிறது
வெண்படலம் பூசி
அவன் உடல்

ஒற்றை உறுப்பு

நெடுநாளொன்றின்
முடிவற்ற
கவிதை எழுதி
முடித்தான்
மகா உன்னதம்

கீழ்த்திசை
வெறித்துக்கிடந்த
அவளுக்கு
அடிவானத்திற்கு அப்பால்
ஒரு வானவில்
ரகஸியமாய்.

கடைசி இரவு போஜனம்

வழியில்
முகர்ந்து நகர்ந்த
பருத்த காம்பு
பன்றி;

அதிர்ந்தாடியது
அதி நவீன
கட்டுமானச் சின்னம்
சாலையோர
நீர்ப்பரப்பில்

வழிப்போக்கனின் மோன நிலை

கிடந்தேன்
பார்த்துக்கொண்டு
நெடு நேரம்
மர நிழல்
தொட்டில்.
பன்னீர் தெளித்து
சந்தனம் மணத்தது;
வீரிட்டெழுந்து
பாதை தொடர்ந்தேன்.
Pin It