உடலை வருடிச் செல்லும் காற்று

பறவையின் பால் தன்னை
இணைத்துக் கொண்டவன்
ஒரு நாடோடி போல பறந்து திரிகிறான்
அவன் உடலை வருடிச் செல்லும் காற்றில்
கந்தகங்கள் மூலிகைகளாகின்றன
இயல்பாகவே வெளிவரும்
அவனது வார்த்தைகள்
அறிவைக் கேள்விக்குள்ளாக்குகின்றன
வளைவுகளிலும் நேராய்ச் செல்லும்
அவனின் தீட்சண்யம்
புறாக்களின் கூடுகளில் இருக்கும்
அதன் குஞ்சுகளுக்கான இரையை
சேகரிக்கிறது
நாடோடிகள் பறந்தாலும்
இரை கண்டு இறங்கும் திடல்களில்
பசியின் சப்தத்தையும்
அதன் பின்னால் நீண்டிருக்கும் இருளையும்
காண்கிறார்கள்
வானத்தில் ஒலிக்கும் பறவைகள்
மறைந்து போகின்றன
இறுதியில் நாடோடிகள் விட்டுச் சென்றிருப்பது என்னவோ
கொஞ்சம் மூலிகைகளையும்
கூடுகளுக்குள் வெளிச்சத்தையும்
அறிவுக்கு அப்பால் குறைந்த
வார்த்தைகளையும் தான்.

சீட்டாடும் மங்கை

சகியே
உனக்கு சீட்டாடத் தெரியாது இல்லையா
ஆனாலும் உனக்கு எப்படியோ
ஜோக்கர்கள் கிடைத்து விடுகிறார்கள்
ஜோடி சேர்வதில் இருக்கும் துயரம்பற்றி
ஜோக்கர்களிடம் தானே கூறமுடியும்
நீ கழற்றும் கார்டுகள் எது
சேர்த்துக் கொள்ளும் சீட்டுகள் எது
யார் அறிய முடியும் அதை
ஜெயிப்பதற்கான பதற்றத்தில் இருக்கிறாய்
கையில் ரம்மி இருக்கிறது
பர்ல்லா இருக்கிறது
ஜோக்கர்களுக்கும் குறைவில்லை
ஜெயித்த மாதிரிதான்
ஆனால் நான்காவது கார்டு
எவ்வளவு மோசம் பண்ணுகிறது
உனது தந்திரங்களுக்கு அப்பால் விவரமற்று
தன்னிச்சையாக அலைகிறது
இருந்தும் அதிர்ஷ்டவசமாக அதுவரும்வேளை
போட்டியாளர்கள்
அதன் பதற்றத்தில்
இம்முறை நீ கழற்றிவிட்டது சகியே
ஒரு முழுமையான ரம்மியை


பதங்கமானவன்

காற்றை இரைப்பையிலும்
நெருப்பைக் கண்களிலும்
நீரைத் தோலிலும்
நிலத்தை பாதத்திலும்
வானத்தை தலைக்குள்ளும்
சுமந்தவன் ஒரு படரும்
தாவரத்தினைத் தொட்டான்
அது தங்கமானது
சொந்த உப்பினை முகர்ந்து பார்க்க
அது பதங்கமானது
ஒரு நத்தையைக் கையில் ஏந்த
அது பாஸ்பரஸ் போல எரிந்து போனது
நட்சத்திரங்களை கீழிறக்கி
நிலவில் படுத்துறங்கி
கடலில் நடந்து போகும் அவன்
நேற்றிரவு இரயில் விபத்தில் பலியாகி
உடல் சிதறிக் கிடந்தபோது அதனை
பஞ்சபூதங்களும் மௌனமாய்
பகிர்ந்து கொள்ளத்துவங்கின

உலகம் ஒரு உணவு விடுதி

உலகம் ஒரு காதலின் விடுதி
உணவுத்தட்டுகள் பறவைகள் போல பறக்கும்
இசையில்
ஒரு கரும்புத் தோட்டத்தின் சாறு
நிறம் மாறி இறங்கும் மஞ்சள் வெளி
வெந்த உணவுகள் தட்டுகளிலும்
வேகாத உணவுகள் கடலிலும் இருக்க
சாலையோரங்களில் நாற்காலிகளும்
மரத்தினடியில் மாணவிகளும்
நின்று கடித்துப்போக மாமிசத் துண்டுகளோடு
பப்பாளிக் கீற்றுகளுமாய்
சூரியனுக்குக் கீழ்
உணவு விடுதிக்குள் நடக்கிறது உலகம்
இது காதலர் நாம்
ஒரு மரச்சரிவில் அமர்ந்திருக்கிறோம்
வந்து கொண்டிருக்கிறது ஒரு செய்தி

ஒரு கவிதை

வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்
புல்வெளியில் ஒரு எருமைக்கன்று மேய்கிறது
அதன் தலையில் ஒரு பறவை அமர்ந்திருக்க
எனக்கு அதற்கப்பால் இருக்கும்
மலைகளில் ஏறி அந்தப்புரம் செல்ல ஆசை
கையில் தொலைபேசியுடன் நடக்கிறேன்
வெகுதூரக் காதலியின் உத்திரவுகள்
மிதிபடும் புற்களும் குளிர்ந்த காற்றும்
உலகம் சுழல்வதாகத் தெரியவில்லை
பறவையை விளையாட்டாகத் துரத்துகிறேன்
அது வானில் ஏறிப் பறக்கிறது
கைபேசி தவறிவிழ
அதன் கால்களைப் பற்றிக் கொண்டேன்
மலைக்கு அப்பால் கொண்டு அது இறக்கியது
எதிரே தனது போனில் பேசியபடி
ஒருவன் வந்தான்
இரண்டு பெண்கள் என்னிடம் முகவரி கேட்டார்கள்
சுழலும் உலகத்தை அறியமுடிந்தது
பறவைக்கு காத்திருந்தேன்.
காதலியின் சொல் ஒலித்துக் கிடக்கும்
புல்வெளியில் ஒரு செல்போன்
அதன் திரையில்
மஞ்சள் நிற வண்ணத்திகள்

வெளியே சாரல்

மரங்கள் சாலைகளில் வனங்களில்
கொல்லையில் கோயில்களில்
வளர்கின்றன
பறவைகள் கோபுரத்தில் அமர்கின்றன
பிள்ளைகள் பள்ளியில் இருக்கிறார்கள்
ஆசிரியர்கள் அதிகாரிகள் அலுவலர்கள்
ஊழியத்தில் நிறுவனத்தில் உழல்கிறார்கள்
மாடுகள் பால் கறக்கின்றன
தேயிலை விளைகிறது
பாடகர்கள் பாடுகிறார்கள் இசைக்கிறார்கள்
மண்ணைப் பிசைந்து ஒரு பானை
நீர்விட்டுக் குழைத்து நிலக்கடலைப்பயிர்
காற்றில் விமானம் கடலில் கப்பல்
நேற்றுப் போலில்லை இன்று
நாளைப் போல் இருக்காது தகவல்
கதவுகள் திறந்திருக்கினறன
உள்ளே வருவதற்கு அல்ல
வெளியேறுவதற்கு
அதுவும் உன்னோடு சேர்ந்து ஆமாம்
அவனுடனும்தான்
Pin It