1.

நீர் பாயும்வேளை, நான் உறக்கத்தில் இருந்தேன். ஒரு சங்கின் ஓசை, கனவில் ஒலித்து மறைந்தது. சூர்யோதயம் எழுந்தது. உணவு, உடை, காலணிகள் தயாராய் இருந்தன. உண்டு, உடுத்தி, அணிந்து வெளியேறினேன். சூரியனின் கதிர்கள் இந்நிலத்தில் பரவியபோது, இயந்திங்கள் இயங்கத் தொடங்கின. நான் சாலையில் நடக்கத் தொடங்கினேன். எதிரில் வந்தவர்கள், ஆற்றில் ‘வெள்ளம்’ என்றார்கள். நதியைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. நான் இயங்கித் தளர்ந்த போது, சூரியன் மறைந்தது. நதியைப் பார்க்கச் சென்றேன். அப்போது சாலைகள் நீரில்லா நதிகள் என்றே தோன்றின. நதியை அடைந்தேன். இருள் சூழ்ந்திருந்தது. கண்கள், நீரில் சுழித்தோடும் கருமையை உண்டன. செவிகள், நீரின் ஓலத்தைப் பருகின. கால்கள் நீரில் இறங்கி, நனைந்தன. அதன் குளிர்ச்சியில் என் இரத்தத்தில் நதியின் ஈரம் படரத் தொடங்கியது.

2.

மாலைவேளை. கரையில் அமர்ந்திருந்தேன். முன்னிரவில் பார்த்த நதி. யாமத்தின் நதியாகவே மிளிர்கிறது. இப்போது நதியின் உடல் சிவந்திருக்கிறது. அந்தச் சிகப்பு நிறம், நாகம் விழுங்கிக் கொண்டிருக்கும் சூரியனின் இரத்தம் என்றே படுகிறது. சிறிதளவே வெளிச்சம் இருந்தது. வானில் மேகங்கள் இல்லை. பறவைகள் இல்லை. நட்சத்திரங்கள் இல்லை. சந்திரனும் எழவில்லை. பாய்ந்து கொண்டிருக்கும் நதியை ஆழமாகப் பார்க்கிறேன். நதி பளிங்காகிறது. பளிங்கை ஆழ்ந்து பார்க்கிறேன். ஓரிரு பறவைகளின் நிழல்கள், பளிங்கில் நீந்துகின்றன. அவற்றின் கருத்த நிழல்களில், வானம் இறக்கத் தொடங்கியது. நான் கரையைக் கடக்கிறேன். என் தேகத்தால், இப்பளிங்கை அணைக்கும்போது, இப்பெரும் நதியில் எனது உடல், சின்னஞ்சிறு நிழலாகி நீந்து கிறது. பளிங்கை உடைத்து வெளியேறுகிறேன். வானில் பறவைகள், மேகங்களைச் சுமக்கின்றன. மேகங்கள், நட்சத்திரங்களைச் சுமக்கின்றன. நட்சத்திரங்கள், பௌர்ணமியைச் சுமக்கத் தொடங்கிவிட்டன.

3.

பல வருடங்களாக வாடிக்கிடந்த நதியில், முதல் வெள்ளம் பாய்ந்தபோது, அதில் மூர்க்கம் தெறித்தது. அதன் ஓலம், உக்கிரமாய் இருந்தது. நான் உறங்கிக்கொண்டிருந்ததால் அதன் ரௌத்திரத்தை உணர முடியவில்லை. நேற்று, நள்ளிரவில், பாய்ந்து வந்த நதியின் வருகையை வரவேற்ற, பேடி சாமியொருவன், சூடம் ஏற்றி, நீர் தெளித்து, புஷ்பம் வீசி சாந்தப்படுத்தியிருக்கிறான். நதியின் மணலுடனான புணர்ச் சியை, ஆக்ரோஷத்தை அவன் உணரவில்லை போலும். இன்று, மாலையில் நதியை அடைந்தேன். கரையோரமாக ஒதுங்கிய மலர்கள் இறந்தபடி அசைந்தன. நதியைத் தீண்டினேன். மிகக் குளிர்ச்சியாக இருந்தது. முதல் வெள்ளம் நதியில் பாயும்போது நாம் கொண்டாடியே ஆகவேண்டும். என் மதுவின், முதல் மிடறை, நதிக்கு ஊற்றுகிறேன். இரண்டாம் மிடறிலிருந்து தொடங்கும் எனக்கான மதுவைப் பருகத் தொடங்குகிறேன். போதை தோன்றத் தொடங்கி, என் உடலில் செடியென வளர்ந்தும்விட்டது. அதில் பூத்திருந்த ஒரு மலரைப் பறித்து, அதன் உடலில் மிதக்க விடுகிறேன். என் முதல் மிடறு மதுவைப் பருகிய நதியில் மூர்க்கம் இல்லை. ரௌத்ரமும் இல்லை. அது போதையுடன் பாய்கிறது. வெவ் வேறு காலங்களில். வேளைகளில், தாகம் தீர விரும்புபவர்கள், நதியை அள்ளிப் பருகுகிறார்கள். அவர்கள் விழுங்கும் முதல் மிடறு, மதுவாகவே இருக்கிறது. பருகித் தாகம் தீர்ந்த அவர்கள், என்னைப் போலவே, சாந்த சொரூபிகளாகிக் கிளை படருகிறார்கள்.

4.

என் உடலைக் காலம் வளர்க்கிறது. எலும்புகள் தளர்கின்றன. சதைகளின் திரட்சி அழிகின்றன. வயோதிகம் அடைந்தபடி, இருக்கும் என் உடலைச் சுமந்தபடி, நதியைத் தஞ்சமடைகிறேன். நான் நதியை உற்றுப் பார்க்கிறேன். நீர் பாயவே இல்லை. நீர் பாய்வதை உற்றுப் பார்க்கிறேன். அங்கே நதி இருப்பதில்லை. நதி காலத்தைக் குழப்பி, அகாலத்தை வளர்க்கிறது. நான் நதியில் இறங்கி, மூழ்கி, எழுகிறேன். நதி இளமையாய் ஓடுகிறது. அது என் உடலை வனைக்கிறது. தற்போது, என் எலும்புகள் இரும்பாகி விட்டிருந்தன. சதைகள் திரண்டுவிட்டன. அப்போது, என் உடலில் இருந்து மணம் வீசத் தொடங்கியது. நீங்கள் நினைப்பது போலவே, அது நதியோடதாய் இருந்தது.

Pin It