கடவுளுக்கு ஒரு கடிதம்

எங்கும் நிற்காமல்
ஓடிக்கொண்டிருக்கும் சாலையின்
சலசலப்பிலிருந்து கரையொதுங்கி
கடைப்படிக்கட்டுகளில் அமர்ந்து
தலைகலைந்து கிழிந்த ஆடையில்
எழுதிக் கொண்டிருக்கிறாள் கிழவி
சற்றும் தயங்காமல் தொடர்ந்து
பழையதான சில தாள்களில்
உலகின் கடைசியில் மிஞ்சியிருக்கும்
ஒரு புழுக்கைப் பென்சிலால்
மிகத் தீர்க்கமான எழுத்துக்கள்
சீராய் ஓடிக்கொண்டிருக்கும் வரிகள்
குழந்தைமையின் கோணல்களற்று
மெத்தப் படித்ததுப்போன்றக் கையெழுத்தில்
அச்சடித்ததைப் போலிருக்கின்றன
எல்லாம் சிறு சுழிகள் கோடுகள் கூட்டல்
பெருக்கல் குறிகளாகவே நிரம்பி
காகிதங்கள் கூடிக் கொண்டிருக்கின்றன
இறுதித் தேர்விலிருப்பவள் போல்
சிரத்தையாக எழுதி
யாராலும் வாசிக்க முடியாத அதை
அவ்வப்போது எடுத்து
அவளேப் படித்து ரசிக்கிறாள்


கழுவ முடியாத இரத்தம்

சற்றுமுன் நடந்து கொண்டிருப்பவள்
கீழே வீழ்ந்து விட்டாள்
அசைவற்றிருக்கும் அவளின்
தலையிலிருந்து பெருகும் இரத்தம்
சாலையின் கண்கள் கால்கள்
எல்லாவற்றையும் நனைத்து சிவப்பாக்கி
மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது
அனைவரும் பார்த்திருக்கிறோம்
கனத்தப் பேருந்து இடித்து
பயணம் தடைபட்டதையும்
அடியற்ற மரம் போல்
அவள் சரிந்ததையும்
யாரோ ஒருவர் ஊற்றும்
கடைசித் தண்ணீர் வாயில்
சிற்றோடை போல் ஓடுகிறது
சக்கரங்கள் சுழல முடியாமல்
அங்கேயே நின்றிருக்கிறது
அந்த ஒரு கணத்தோடு
மனிதர்கள் வாகனங்கள்
உடன் மரணமுற்றோம்
பிறகு மீண்டும் உயிர்பெற்று
அவரவர் வழியில் செல்கின்றோம்
கைகளில் ஒட்டியிருக்கும் கறையை
போகும் வழியெங்கும் துடைத்து


நின்ற வழி

ஆட்களாலும் வாகனங்களாலும்
இட்டு நிரப்பப்பட்டிருக்கும் சாலையில்
நான் கொண்டு செல்லப்படுகிறேன்
சுற்றிலும் பல்வேறு முகங்கள்
கண்ணில் விழுந்து மறைகின்றன
செல்ல வேண்டிய வழி
முன்னால் வளர்ந்து கொண்டிருக்கிறது
என் மேல் குறிக்கப்பட்டுள்ள
நேரத்தை நோக்கி விரைகிறேன்
அடைவது எப்போதுமே சந்தேகம்
எனக்கான முடிவு காத்திருக்கிறது
அதற்குள் நெருங்க வேண்டும்
மேலும் என்னை வேகமாக்க
இடையில் தடுப்பது போல்
ஒரு கரம் நீள்கிறது
Pin It