ஆதிக்க ஆண்களின் பாலுணர்வுத் தேவைகளையும் உடமைச் சமூகத்தின் பண்பாட்டு உணர்வுகளையும் உள்வாங்கி ஆகச் சிறந்த நுட்பங்களுடன் பெண்களுக்கெதிராக உருவாக்கப்பட்ட கருத்துருவே கண்ணகியும் மாதவியும். கற்பு நெறியும் பரத்தமை நெறியும் சமூக ஒழுங்காக கட்டமைக்கப்பட்டு லட்சுமணன் கோடு கீறப்பட்டது. பத்தினித் தன்மை மிக உன்னத நிலையாக வரையறை செய்யப்பட்டும் பரத்தமை கடமையாக்கப்பட்டும் பெண்ணின் பாலியல் நடவடிக்கைகள் ஆணின் ஆதிக்கத் தேவையிலிருந்து ஒழுங்கு படுத்தப்பட்டன. மீறி கள்ளக்காதலில் (வார்த்தை என்னுடையதல்ல - ஊடகங்கள் தந்தது) ஈடுபடும் பெண்களை வெட்டிக் கொல்லவோ, உயிரோடு எரித்துப் பொசுக்கவோ உணர்வு ரீதியான உரிமை வழங்கப்பட்டுள்ளது. விரிந்து பரந்த இவ்வுலகில் கற்பு நிலையிலிருந்து பெண்ணின் புழங்குமிடம் பேசும் வார்த்தைகள் அணியும் ஆடைகள் கட்டுப்படுத்தப்பட்டன.

எந்த ஆண் உடல் மீதும், பாலியல் ரீதியான பலாத்காரம் பெண்ணால் நிகழ்த்தப்படுவதில்லை. ஆனால் பெண்ணுடல் மட்டுமல்ல பெண்ணின் சாயல் கொண்ட உடல் கூட வன்முறையின் களமாகிறது. எனவேதான், நமது தாய்மார்களின் சேலை மடியை - எரித்துப் பொசுக்கும் நெருப்பாக - பெண் பிள்ளைகள் வளர்கின்றனர். மக்கள், சாதி ரீதியாகவும் வர்க்கரீதியாகவும் ஒடுக்கப்படும்போது பெண் மட்டும் கூடுதலாக உடல் ரீதியாகவும் இம்சிக்கப்படுகிறாள்.

பெண்ணின் கார் கூந்தலும் ஆரஞ்சு இதழ்களும் ததும்பும் மார்பகமும் கொடி இடையும் பருத்த பிருஷ்டமும் ஆண்களால் வர்ணிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன. அவை ஆண்களின் போகத்திற்குரிய சொத்தாகக் கருதப்படுவதால், அதன் நீட்சியாக நவீன இணையதளம் வரை விளம்பரங்களில் பெண்களின் மார்பகங்கள் வெளிப் பிதுங்குகின்றன. ஆண்களின் கண்களை அலைய விட்டு தங்களின் பொருளுக்கு விலை பேச.

இந்தியச் சமூகத்தில் ஆணாதிக்கச் சிந்தனைகளால் மட்டுமின்றி இந்துத்வ கருத்தியலாலும் பெண் ஒடுக்கப்படுகிறாள். பெண்ணடிமைத் தனம் இந்துப் பண்பாட்டின் சாரமாய்த் திகழ்கிறது. வேதங்களைக் கற்பதற்கே எழுத்தறிவு என்றிருந்த காலத்தில் இந்துத்துவம் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் எழுத்தறிவை மறுத்தது. வேதங்களுக்கும் பெண்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என மனு பிரகடனம் செய்தான். கலப்பு ஏற்படாமல் சாதித் தூய்மையைப் பாதுகாக்க கற்பு எனும் கருத்தியல் கட்டி எழுப்பப்பட்டது. கல்வி மறுப்பு, தேவரடியாள்களைத் தயாரிக்கும் தேவதாசி முறை, சிறார் திருமணம், உடன் கட்டை ஏறுதல், கணவனை இழந்த உடன் தரிசாகி விடுதல், சுட்டமண்ணும் பச்சமண்ணும் ஒட்டாதெனல், உண்டி சுருக்குதல், மொட்டையடித்து வெள்ளுடை தரித்தல் என இந்துத்துவம் பெண்களுக்கு வழங்கிய பரிசுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆணாதிக்கத்தைக் கற்பிக்கும், நிலை நிறுத்தும் அமைப்பாகவே குடும்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. உடைமையாளர்களுக்குத் தேவையான - கீழ்ப்படிதலுள்ள தொழிலாளர்களையும் தந்தை, சகோதரன், கணவன், மகன் என சகல ஆண்களுக்கும் அடி பணிந்து கிடக்கின்ற பெண்களையும் உருவாக்குகின்றன நம் குடும்பங்கள். சாண் பிள்ளைகளைக் கூட ஆண் பிள்ளைகளாக்குவதும் கல்லையும் புல்லையும் கூட கணவனாக்குவதும் உத்தியோகத்தை புருஷர்களுக்கு மட்டு மேயான லட்சண மாக்குவதும்

இந்துத்துவ குடும்பத்தின் மேன்மை. பெண்ணுக்கான இடத்தை நிர்ணயிப்பதும் அவளின் வார்த்தைகளை வரையறுப்பதும் அச்சம் மடம் நாணத்துடன் வடிவ மைப்பதும் கூலி இல்லாத வேலையாளாக அவளை உருவாக்குவதும் குடும்ப அமைப்பின் தனிச்சிறப்பு.

உலக மயம் குவிக்கும் பொருட்களுக்கு சந்தை பிடிக்க நெறியற்ற முறையில் பெண் விளம்பரப் பொருளாக்கப்படுகிறாள். கவர்ச்சி, கூடுதல் கவர்ச்சி என்று பாலியல் பொருளாக பெண் குறித்த பிம்பம் கட்டப்படுவதால், பாலியல் பலாத்காரத்திற்கு மிக எளிதாக ஆட்படுத்தப்படுகிறாள் பெண். ஊடகங்கள் காட்சிப்படுத்துகிற ஆடம்பர வாழ்க்கை முறை, பொருட்களின் மீதான நுகர்வுத் தாகம் - குடும்பத்தில் பெண் மீதான வன்முறையை மேலும் அதிகரித்துள்ளது. வேலையின்மை, விலைவாசி உயர்வு, குறைந்த சம்பளம் போன்ற பொருளியல் சிக்கல்களாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட குடும்பச்சுமைகளை சுமக்க வேண்டியவர்களாக பெண்களே உள்ளனர்.

அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், ஆண் சமூகத்தின் வேட்கைக்குப் படைக்கப்படும் அழகிய விருந்தாக பெண்ணின் உடலைக் காட்சிப்படுத்துகின்றன. ஆடை குறைப்பு, அங்கங்கள் குலுங்க ஆடல் பாடல், இரு பொருள் வசனங்கள் என அடித்து நொறுக்குகின்றன. ஆனால், விஞ்ஞானிகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்கும் உயர்கல்வி நிறுவனங்களோ நேர் எதிராக ஆடைக் கட்டுப்பாடுகளுக்கான அவசரச் சட்டங்களை இயற்றி அடித்து நொறுக்குகின்றன. இரண்டுக்குப் பின்னாலும் அணியும் ஆடையின் ஊடாக உள்ளிருக்கும் அவயங்களை சுவைக்கும் காமக் கண்களும் கயமை நெஞ்சங்களும் தடியுடன் நிற்கின்றன.

1850களில் தென் திருவிதாங்கூர் சமஸ்தான எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாடார் பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது, முழங்காலுக்குக் கீழே உடுத்தக் கூடாது. தங்க நகைகள் அணியக் கூடாது, இடுப்பில் குடம் எடுக்கக் கூடாது என்பதுதான் நிலை. மார்பை மறைக்காமல் தலையில் குடம் தண்ணீரை சுமந்து செல்லும் பெண்ணின் நிலையை ஒரு முறை உணர்ந்து பாருங்கள். சாதிய ஒடுக்குமுறையின் கோர முகம் இது. மேல்சாதி நீசத்தனங்களுக்கு சாதகமாகத் தான் சமஸ்தான அரசின் ராஜப் பிரகடனமும் இருந்தது.

தோள் சீலை அணிந்து மார்பை மறைத்ததற்காக மேல் சாதிக்காரர்களால் நாடார் பெண்கள் கடைத் தெருக்களில் அடித்து உதைக்கப்பட்டார்கள். ஊர்ச் சந்தை ஒன்றில் ஒரு சிறு அதிகாரி அரசாங்கத்திடமிருந்து, தான் அதிகாரம் பெற்றதாகச் சொல்லி ஒரு நாடார் பெண்ணின் மார்புத் துணியை கிழித்து எறிந்தான். 1859 டிசம்பர் 27-ல் மேக்கோடு எனும் கிராமத்தில் ஜெபவீடு கொளுத்தப்பட்டது. நாகர் கோயிலில் உள்ள ஆங்கிலேயப் பிரதிநிதியின் பங்களாவுக்கும் கூட தீ வைக்கப்பட்டது. பல ஜெபவீடுகளும் கிறித்துவ பள்ளிக் கூடங்களும் அழிக்கப்பட்டன. ‘மீட்’ எனும் கிறித்துவ மிஷனரியாரைக் கொல்ல முயற்சி நடந்தது. இத்தனை அடியும் உதையும் இழப்புகளும் - ஒரு நாடார் பெண் தன் மார்பகத்தை மறைத்து குப்பாயம் அணியவும் குட்டை ரவிக்கை அணியவும் ரவிக்கையின் மேலாக தோளில் முந்தானையைப் போடவும் உரிமை கோரியதற்காகத் தான்.

பெண்ணின் திருமண வயதை 14 என நிர்ணயிக்கும் ‘சாரதா மசோதா’ டில்லி மத்திய சட்ட சபையில் விவாதத்திற்கு வந்தபோது, விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் சுயராஜ்ஜிய கட்சியின் சென்னை மாகாண பிரதிநிதிகள் கடுமையாக எதிர்த்துப் பேசினர். தந்தை பெரியார் அவர்களால் ‘இந்து வர்ணாசிரமப் பிரதிநிதி’ என்றழைக்கப்பட்ட எம்.கே. ஆச்சாரியா ‘பால்ய விவாகம்’ இருந்தாலொழிய வாழ்க்கையில் உண்மையான ஒழுக்கம் ஏற்படுவது அசாத்தியம். குடும்ப வாழ்க்கை துக்கமயமாகி சதா ஆபத்துக் குள்ளாகி விடும். உண்மையான கற்பு என்பது சாத்திய மில்லை. பெண்களின் வாழ்க்கை நாசமடைந்துவிடும் என்று பேசினார்.

மட்டுமின்றி, தேவதாசி முறை என்ற பெயரில், இந்து மத அங்கீகாரம் பெற்ற சட்டப்பூர்வ விபச்சார முறையை ஒழித்துக்கட்ட டாக்டர் முத்துலட்சுமி அவர்கள் சென்னை மாகாண சட்டசபையில் மசோதா ஒன்றை முன்மொழிந்த போது, இம்மசோதாவைக் கடுமையாக எதிர்த்தவர்களில் மிக முக்கியமானவர் சத்தியமூர்த்தி ஐயர் ஆவார். சத்தியமூர்த்தி ஐயர், பெருந்தலைவர் கு. காமராஜ் அவர்களின் அரசியல் குருவும் தமிழக மக்களிடம் பிரபலமடைந்திருந்த விடு தலைப் போராட்ட வீரரும் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவார்.

1941-ல் பி.என். ராவ் அவர்கள் தலைமையில் ஆங்கிலேய இந்திய அரசால் அமைக்கப்பட்ட குழு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து இந்து சட்டத் திருத்த மசோதா ஒன்றை உருவாக்கியது. 1946 முதல் இம் மசோதா மீது மத்திய சட்டசபையில் விவாதமும் நடை பெற்று வந்தது. நாடு சுதந்திரமடைந்த பிறகு டாக்டர் அம்பேத்கர் இம்மசோதாவின் வடிவை மாற்றி அமைத்தார். ஒரு தார மணம், விவாகரத்து செய்யும் கணவனிடமிருந்து மனைவிக்கு ஜீவனாம்சம், கூட்டுக் குடும்பத்தில் பெண்களின் சொத்துரிமை ஆகியன பற்றி வடிவமைக்கப்பட்டிருந்த விதிகளை முன் வைத்து அம்பேத்கர் பேசத் தொடங்கியதும் நாடு முழுவதிலுமிருந்த இந்து சமய அறிவாளிகள் இரு முகாம்களாகப் பிரிந்து காரசாரமாக விவாதிக்கத் தொடங்கினர். இம் மசோதாவின் சீர்திருத்தங்களை வெறுத்தவர்களால் ‘மனு’ முன்னிறுத்தப்பட்டார். இந்து சமய பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் முற்றாக ஒழித்துக் கட்டுவதே திருத்தங்களின் நோக்கம் என்று குறை கூறினர்.

இம்மசோதா சட்டமானால் இந்து சமூகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் அத்தனைத் தூண்களும் ஆட்டம் கண்டுவிடும் என்றனர். நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிரதமர் நேருவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் புரட்சிகரமான மாற்றங்களை உள்ளடக்கியுள்ளதால், இம்மசோதாவைத் தான் முழு மூச்சாக எதிர்ப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். குடியரசுத் தலைவரே எதிர்ப்புக் களத்தில் முழு மூச்சாக குதித்தார். ராஜேந்திர பிரசாத் சுட்டிக்காட்டியதைப் போல, இதில் புரட்சிகரமாக ஏதும் இல்லை, மிகவும் மிதவாதமான சமூக சீர்திருத்தம் தான் இது. எனினும் இந்துத்வ பழமைவாதிகளின் கடுமையான தொடர் தாக்குதலினால் 1949-ல் அம்பேத்கர் அவர்களால் முன்மொழியப்பட்ட சீர்திருத் தங்களை நீர்த்துப் போகச் செய்து 1955-ல் சட்டமாக்கினர்.
தொடர்ந்து உலக, உள்நாட்டு சமூக, அரசியல் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கேற்ப பெண்களுக்கு ஆதரவான புதிய சட்டங்களும், சட்ட திருத்தங்களும் இந்திய நாடாளுமன்றம், சட்ட மன்றங்களால் உருவாக்கப்பட்டன. எனினும் இன்றைக்கு விவாதத்திலிருக்கும் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா உட்பட - பெண்கள் முன்னேற்றம் சம்பந்தப்பட்ட சீர்திருத்தங்கள் எதுவொன்றும் இலகுவில் நிகழ்ந்து விடவில்லை. அதே சமயம் எதையும் நிகழ்த்தவிடாமல் நிறுத்தி வைக்கவும் ஆதிக்க சக்திகளால் இயலவில்லை.

கற்பு குறித்த வாதங்கள், செருப்பு துடைப்பம் ஆர்ப்பாட்டங்கள், வழக்குகள், கைது பிடியாணைகள், விளையாட்டு வீராங்கனையின் ஆடை குறித்த மிரட்டல்கள், உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கெதிரான அவசரச் சட்டங்கள், பெண் கவிஞர்களின் உடல் மொழி கவிதைகளுக்கெதிரான தீப்பந்தங்கள் - இவைகள் பெண்களின் குரல்வளையை அறுக்கும் பாசிச அடக்கு முறையை உணர்த்துகின்றன. மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போரை அவமானப்படுத்தும், அச்ச மூட்டும் நோக்குடன் நிகழ்த்தப்படுகின்றன. வேலைக்குப்போகும் பெண்கள் ஒழுக்கங்கெட்டவர்கள் எனும் சங்கராச்சாரியாரின் தீய நாக்கின் தொடர்ச்சியாக உணரப்படுகின்றன.

பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களும் உருவாக்கப்பட்ட சிந்தனைகளும் சாதிய - ஆணாதிக்க இந்திய சமூகத்திற்குள் ஊடுருவி குடிமைச் சமூகத்தின் கருத்துக் கோட்டைக்குள் என்ன விளைவை ஏற்படுத்தியுள்ளன என்பதை நோக்கும்போதுதான் கற்பு - அரசியல் - ஆணாதிக்க சிந்தனையின் வலுவான பாதுகாப்பு அரணாகத் திகழ்வதை உணர முடியும்.

பாலியல் சுதந்தரம் என்பது பெண்களுக்கு முற்றிலுமாக மறுக்கப்படுகிற ஒன்றாகும். ‘கண்ட நேரத்தில் கண்டவனோடு மேய்வதற்கு’ என கொச்சை யான வார்த்தைகளால் மிக மோசமாக அவமானத்திற்கு ஆளாக்கப்படுகிற ஒன்றுமாகும். அதன் உண்மையான சாரம் காது கொடுத்துக் கேட்கப்பட்டதே இல்லை. அது, ஒரு பெண் யாரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதை நான்கு ஆண்கள் சேர்ந்து முடிவு செய்வதற்கு எதிரானது. ஒரு பெண்தான் யாரோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதை தன் விருப்புடன் முடிவு செய்வதற்கான உரிமையைக் கோருவது, வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்திற்கெதிரானது.

பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப் படிகள் எவையென்றால் - என பத்துப்படிகளை பாரதி சுட்டிக்காட்டுகிறார்.
அதில்

1.பெண்களை ருதுவாகுமுன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது.

2.அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.

3.விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.

4.புருஷன் இறந்த பின்பு ஸ்த்ரீ மறுபடி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.

5.விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபா ரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும்.

6.பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷனுடன் பேசக் கூடாதென்றும் பயத்தாலும் பொறாமை யாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்

- என ஆறு படிகள் பெண்ணின் பாலியல் சுதந்திரம் குறித்து விவாதிக்கும் படிகளாகும்.

பெண்ணும் ஆணும் சேர்ந்துப் பழகும் வாய்ப்பும் சமூகக் கல்வியும் தான் சேர்ந்து வாழும் ஆணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் திறனையும் வழங்கும். தேர்ந்தெடுக்கும் உரிமைதான் தேர்ந்தெடுக்கும் திறனை வழங்கும்.

பாலுணர்வு என்பது ஆண்- பெண் பாலாருக் கிடையேயான கவர்ச்சிக் காரியமல்ல. ஒரு சமுதாயத்தின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் கடமையோடு இணைந்ததுமாகும். எனவே, பாலுணர்வு குறித்த அறிவியல் பூர்வமான அறிவு நம் இளைய தலைமுறையினருக்கு தேவை.

பெண்களின் ஆடை முதல் வார்த்தைகள் வரை ஒவ்வொன்றின் மீதான கட்டுப்பாடுகளையுமே சாதியத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. சாதிய ஒடுக்குமுறையின் இறுக்கத்தில் உடைப்பை ஏற்படுத்த அகமண முறைக்கு எதிரான சிந்தனையோட்டத்தை திட்டமிட்டு உருவாக்க வேண்டும்.

பெண்கள் கல்வி, வேலை, சொத்துரிமை பெறுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தாங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதற்கான உரிமையைப் பெறுவதும் முக்கியம். அதுவே சாதீய அமைப்பை ஓரளவுக்கேனும் அசைத்துப் பார்க்கும்.

பெண்கள் பாலியல் விவகாரங்களில் முழு உரிமை பெற்றவர்களாகவும் விஞ்ஞானப் பூர்வமான அறிவை பெற்றவர்களாகவும் திகழ வேண்டும். அதற்கேற்ப சமூகச் சூழலை உருவாக்குவது அவசியம். அதற்கு பாரதி, சிங்காரவேலர், பெரியார் சிந்தனைகள் தொடக்கமாய் துணையாய் அமையும்.

Pin It