மதிப்பிற்குரிய தோழர் ஆர்.என்.கே. அவர்களுக்கு,
வணக்கம்

 தங்களது எளிமையை, நேர்மையை, இதர உயர் பண்டிகளைப் புகழாத தமிழர்கள் யாருமில்லை. அத்தனை புகழுக்கும் தகுதியானவர் நீங்கள். இன்றைய சூழலில் நீங்கள் ஒரு லட்சிய மாதிரி. உங்களுக்குக் கிடைத்த புகழ்ச்சிகளிலெல்லாம் ஆகச் சிறந்ததாக நான் கருதுவது சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் பி.எஸ்.ஆர். அவர்கள் உங்களைப் பற்றி எழுதிய அந்தச்சில வரிகளே.

இன்றைய புகழ்ச்சிகளினூடாக ஒரு விண்ணப்பத்தை உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

தமிழ் எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்களிடம் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். லாப நோக்கிற்காக எதையும் செய்யக் கூடியவர்கள் அவர்கள். உஙகளைச் சுற்றியுள்ள அரசியல்வாதிகளைக் காட்டிலும் ஆபத்தானவர்கள். பார்ப்பன சங்கக்கூட்டத்தையும் அதன் நியாயங்களையும் புகழ்ந்து பேசுகிற சுஜாதாவின் பத்து நூற்களை வெளியிட்ட ஒரு நிறுவனம் நடத்திய விழாவில் உங்களைத் தலைமை ஏற்கச் செய்தது மனுஷ்யபுத்ரனின் தந்திரம் என்பதை நீங்கள் உணரவில்லையா? உங்கள் மீதும், உங்கள் கொள்கைகளின் மீதும் உங்கள் இலக்கிய அபிமானத்தின் மீதும் உள்ள மரியாதை நிமித்தமாகவே நீங்கள் தலைமை தாங்க அழைக்கப்பட்டீர்கள் என நம்புகிறீர்களா? அந்தக் கூட்டத்தில் நிகழ்ந்த பிரச்சினையை நீங்கள் நேரில் பார்த்தவர். அது குறித்த மனுஷ்யபுத்ரன் எழுதியுள்ள அவதூறுக் கட்டுரையில் (உயிர்மை, பிப்ரவரி 2006) இருமுறை உங்கள் பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஏதோ உங்கள் கூட்டத்தில் கலாட்டா செய்தது போல, அதிகார பலமில்லாத ஒரு பெண் கவிஞருக்கு எதிராக உங்களையும் அவர்கள் பயன்படுத்த முனைவதை நீங்கள் கவனிக்க வில்லையா? சென்ற ஆண்டு என நினைக்கிறேன். புத்தகச்சந்தையில் காலச்சுவடின் ஆயிரமாவது சந்தாதாரராக நீங்கள் சேர்ந்ததாக அவர்கள் விளம்பரப்படுத்தினர். சுந்தர ராமசாமியின் நூலில் ஜீவா பற்றி எழுதப்பட்ட சில செய்திகள் குறித்துத் தோழர் சி. மகேந்திரன் கடுமையாக விமர்சனம் செய்திருந்த ஒரு சூழலில் ஒரு damage control exercse ஆகவும் விளம்பர உத்தியாகவும் காலச்சுவடு கும்பல் உங்களைப் பயன்படுத்திக் கொண்டதை யோசித்தீர்களா?

இப்படித்தான் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியனும் இன்னும் அதற்கு விசுவாசமாக கம்யூனிச எதிர்ப்பு பேசுபவருமான ஜெயமோகன் சோவியத் ருசியாவைக் கொச்சைப்படுத்தி எழுதிய நூலை (பின்தொடரும் நிழலின்) கம்யூனிஸ்டும், மூத்த தொழிற் சங்கத் தலைவருமான ஜெகனைக் கொண்டு வெளியிட்டார். இதெல்லாம் கம்யூனிஸ்ட்களின் அப்பாவித்தனத்தை வணிக முதலைகள் பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியங்கள் இல்லையா?

கம்யூனிஸ்டுகளின் மிகச் சிறந்த பண்புகள் எளிமையும் நேர்மையும் இவற்றின் ஒப்பற்ற வெளிப்பாடு நீங்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளின் இன்னொரு முக்கியமான பண்பு அரசியல் கூர்மை. உங்களுக்கு அரசியல் கூர்மை இல்லை என்பதாக நான் சொல்லவருவதாக நினைத்துவிடாதீர்கள். அப்படிச் சொல்லுகிற எந்தத்தகுதியும் எனக்குக்கிடையாது என்பதை நான் அறிவேன்.

ஆனால் 90களில் ஏற்பட்ட சரிவுகளுக்குப் பின் கம்யூனிஸ்ட்கள் மத்தியில் அரசியல் கூர்மை மங்கத்தொடங்கியுள்ளதாகவே நான் உணர்கிறேன். சில தவறுகள் நேர்ந்து விட்டது என்கிற சுயவிமர்சனம் தேவைதான். ஆனால் புலம்பிக் கொண்டிருக்க முடியாது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான வாதங்கள், செயற்பாடுகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ளும் தன்மை குறைந்துள்ளது. வர்க்க நிலைப்பாடு, வர்க்கப்பார்வை என்பனவற்றின் தேவையும் நியாயமும் இன்னும் முக்கியமானவையே.

தங்களின் மேலான சிந்தனைக்கு மிக்க பணிவோடு இதைச் சமர்ப்பிக்கிறேன்.

தோழமையுடன்
அ. மார்க்ஸ்.
சென்னை - 20, 22.06.06.

Pin It