உருளும் உலகப்பந்திலுள்ள நாடுகளில், பிரான்ஸ் தேசமே மானிட நியாயங்களுக்கான அதி உட்ச தேவையாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உன்னத மனித உணர்வின் அவசியம் கருதியது. அதுவே பிரான்ஸ் தேசத்தின் அதி உயர் இலட்சியமாகவும் உலகில் பிரகடனப்படுத்தியது.

 மேற்படி பிரான்ஸின் இலட்சியங்களானது, பிரான்ஸில் நிகழ்ந்த பல சமூக அசம்பாவிதங்களால் கேள்விக்குட்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது. இருப்பினும் அண்மையில் நிகழ்ந்த பாரதூரமான சமூக அசம்பாவித நிகழ்வே, பிரான்சின் அதி உட்ச அரசியல் சமூக இலட்சியமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மானிட நேசப் படிமங்களானது, பிரான்ஸின் அரசியல் சாசனங்களிலும், அரச கட்டிடங்களிலும் பொறிக்கப்பட்ட வெறும் பொருட்கள் மட்டுமே என்பதை நிரூபித்திருக்கிறது என நம்பலாம்.

அண்மையில் 27-10-2005 அன்று பாரிசின் புறநகர் பகுதியன்றில் ஆரம்பித்த கலவரத்தின் விளைவின் பிரதிபலிப்பாய் பிரான்ஸின் நிலப்பரப்பெங்கும் தீச்சுவாலைகள் பரவிப்படர்ந்தன. இச்சம்பவத்தை வெறும் செய்தியாக மட்டுமே காட்சிப்படுத்திய பிரான்ஸ் உட்பட, உலக செய்தித் தொடர்புச்சாதனங்களால் அதனை வெறும் செய்தியாகவே உள்வாங்கிய சமூகங்களும், மற்றும் அந்நிகழ்வை தமது பாசப் பற்றுதிகொண்ட தத்துவ - சித்தாந்த - கோட்பாட்டு - அரசியலின் அடிப்படையிலும் உள்வாங்கியவர்கள் / புரிந்து கொண்டவர்களுக்கு மத்தியில் - அதாவது குறிப்பிட்ட கலவரம் சம்பந்தமாக அவரவர் தமது சமூக பண்பாட்டு - கலாச்சாரப் பின்புலத்தில் உணர்ந்து மதிப்பிடுவதும், உதாரணமாக, எமது சமூக பொதுமதிப்பீடானது, “கறுவல், அடையார் - தான் (அரபு நாட்டு வம்சாவளிகள்)” இந்த வேலை செய்யிறது இவங்களை நாட்டைவிட்டுத் துரத்த வேணும் என்பதாக ஒரு புறம், மறு புறமாக “வெள்ளை இன வெறி வன்முறைக்கு (பிரான்ஸின்) பலியாகும்.... பொருளாதார அடிப்படை விளைவு நிமித்தம் சமூக ஒழுங்கை மீறிய அராஜகக் கும்பல்....,” (கலவரத்திற்கு தூண்டப்பட்ட இளைஞர்கள்) என்பதாக பேசியும், எழுதியும் வருபவர்களுக்கு மத்தியில் இருந்து, விலகிய பார்வையின் தொகுப்பாக எனது இக்கட்டுரையை கருதலாம்.

பிரான்ஸின் தலைநகரான பாரிசின் புறநகர் பகுதியான CLICHY-SOUS-BOIS எனும் பகுதியில் 27-10-2005 அன்று மாலை நேரம் நிகழ்ந்த அசம்பா விதமும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த விளைவுகளுக்கும் வெள்ளை நிறத்தினரின் இனவாத அரசியல்தான், அடிப்படைக் காரணியெனக் கூறிச் சுரிக்கிவிட முடியாது.

உலக நிலப்பரப்புகளில் மிக அதிகமான பல இனத்தவர்களும் வாழ்வதற்கான வாய்ப்பும், சாதகமான சூழலும் நிலவுவது; நாம் அறிந்தவரை பிரான்ஸ் நிலப்பரப்பில் மட்டுமே. இதில் இனவாத பார்வை என்பது பிரான்ஸின் வெள்ளை இனத்தவரிடமிருந்தே வெளிப்படுவதாகக் கருதுவது மிகக் குறுகிய பார்வை, அல்லது அவரவர் விரும்புகிற அரசியல் - அதிகார நோக்கை மையமாக கொண்டதாகவுமே கருதலாம். இங்கு வாழும் அனைத்து சமூக இனத்தவர்களிடமும் அவரவர் பண்பாட்டுக் கலாச்சார பாதுகாப்பு /பின்பற்றுதல் ஊடாக இனவாதக் கருத்தியலையும் பேணுபவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். ஆட்சியையும், அதிகாரத்தையும் நோக்கித் தாவ முனையும் எச்சமூகமும் அதற்கு வாய்ப்பாக முதலில் பிரயோகிக்கும் ஆயுதமாக இருப்பது இனவாதமே யாகும். இதில் வெள்ளை இனவாதம், கறுப்பு இனவாதம், பச்சை, சிவப்பு இனவாதமெனப் பாகுபாடு இருக்கமுடியாது. மேலும் இன வாதமானது சமூகங்களின் மொழி மத பண்பாட்டுக் கலாச்சாரத்துடன் தொடர்புடையது. இவற்றை அரசியல் சட்ட ஒழுங்குகளின் நிர்ப்பந்தமூலமாக அகற்றிவிடுவதென்பது இலகுவானதல்ல; அப்படி எங்கும் இதுவரை நடந்ததாகவும் இல்லை. ஆனால் அதிகார ஆட்சியைக் கோருபவர்களுக்கு இந்த இனவாதக் கருத்தியலானது பல உயிர், உடைமை அழிவுகளின் ஊடாக அவர்களது அபிலாசைகளுக்கு சாதகமாகவே அமைந்துவிடும் சோகமான வரலாறுகளையும் நாம் அறிந்துகொண்டுதான் வருகிறோம். இதற்காக பல நாடுகளில் நிகழ்ந்த/நிகழ்ந்துவரும் சம்பவங்களை சாட்சியாக முன்வைக்கத் தேவையில்லை எனக்கருதுகிறேன்.

எனவே பிரான்ஸில் 27-10-2005ஆம் திகதி நிகழ்ந்த துன்பகரமான நிகழ்வையும், அதன் தொடர்ச்சியான பின் விளைவுகளையும், அதற்கான பின்புலங்களையும் சுருக்கமாக குறிப்பிட்டு புரியவைக்க முனைகிறேன். 27-10-2005 அன்று மாலை நேரம் CLICHY-SOUS-BOIS எனும் நகரப்புறத்தில் இளைஞர்கள் உதை பந்தாட்டம் ஆடிவிட்டு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றிருக்கிறார்கள். (இளைஞர்கள் கஞ்சா நுகர்விற்காக என கருதுகிறேன்.) அப்படிச் செல்லும்போது இளமைப்பருவ தூண்டுதல் காரணமாகவோ! ஓர் தொழில் நிறுவன கட்டிடத்தின் மதிலை தாண்டிக்குதித்து, குறித்த காட்டுப்பகுதியை நோக்கி சென்றிருக்கிறார்கள். அதைக் கவனித்த அயல் வீட்டார் ஒருவர் பொலிஸிற்கு தகவல் கொடுத்திருக்கிறார். பொலிசும் விரைந்து வந்து அங்கு நின்ற இளைஞர்களில் சிலரை கைதுசெய்து தமது வாகனத்தில் ஏற்றுவதை கவனித்த புனா துறோர் வயது 15 (BOUNA TRORE) சியாத் பெனா வயது 17 (ZIAD BENNA) முகுதீன் வயது (?) (MUHITTIN) எனும் மூவரும் ஓடிச்சென்று அங்குள்ள அதி உயர் மின் அளுத்திக்கட்டிடப் பகுதிக்குள் சென்று ஒளிந்திருக்கும் போது மின்சாரத் தாக்குதலில் குறிப்பிட்ட 15, 17, வயதுடைய இளைஞர்கள் இறந்து போக மூன்றாம் நபர் பலத்த எரிகாயங்களுடன் உயிர் தப்பினார்.

மறுநாள் 28-10-2005 அன்று நூற்றுக்கதிகமான இளைஞர்கள் இறந்தவர்களின் மரணத்திற்கு பொலிசாரே காரணமெனக் கூறி வீதிகளில் இறங்கி பொலிசிற்கு எதிரான ஆர்பாட்டங்களை விளைவிக்கும் போது, பொலிசினருக்கும் இளைஞர்களுக்குமிடையே மோதல்கள் நிலவியது. அதில் சில பொலிசார் காயமடைந்ததுடன் 13 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். மற்றும் பல வாகனங்களும், பிளாஸ்ரிக் குப்பை வண்டிகளும் ஆர்ப்பாட்ட இளைஞர்களால் எரியூட்டப்பட்டன.

29-10-2005 அன்று மின்சாரத் தாக்குதலால் மரணமுற்ற இளைஞர்களுக்கான அமைதியான அஞ்சலி ஊர்வலத்தில் உறவினர் நண்பர்கள் அயலவர்கள் மற்றும் அந்நகரத்து மேயரும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களில் பலர் மரணமுற்ற இளைஞர்களின் பெயர்கள் முன்பாகவும் பின்புறம் அநியாய மரணம்’ எனும் குறிப்புகள் அடங்கிய ரி - சேட் அணிந்தவாறு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அன்றிரவு பொலிசாருக்கும் இளைஞர் களுக்குமிடையில் மோதல்கள் நிலவாத போதும், சில குப்பை வண்டிகளும், வாகனங்கள் சிலவும் எரிக்கப்பட்டதுடன் சில இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர். 30-10-2005 அன்று இரவு 8 மணி தொலைக்காட்சிச் செய்திப்பகுதி நேரத்தில் பிரான்சின் உள்துறை அபிவிரித்தி அமைச்சரான நிக்கோலா சாக்கோசி நேரடியாக கலந்து கொண்டு பேசும்போது, “ இளைஞர்கள் மரணத்திற்கு அடிப்படைக் காரணமாக பொலிசாரே எனும் குற்றச்சாட்டை நீங்கள் மறுக்கிறீர்களா” எனக்கேட்டபோது, “பொலிசார் அவர்களை அந்த குறிப்பிட்ட உயர் மின் அளுத்திப்பகுதிவரை துரத்திச் செல்லவில்லை. பொலிசார் கடும் பொறுமையை (La Tolerence Zero) கடைப்பிடித்தனர் இளைஞர்களின் ‘வன்முறைகளின்’ போதும் மிகவும் பொறுமையுடனேயே பொலிசார் நடந்து கொண்டனர். நான் பல விசேட பொலிஸ் பிரிவுப் பொறுப்பதிகாரிகளை சந்தித்து நிகழ்வை பரிசீலித்தபோது, தாம் இளைஞர்களின் அருகிலே செல்ல முடியாதவாறு ‘வன்முறை. மிக உச்சத்தில் நிகழ்ந்ததாகவும், ஆனால் பலரை கைது செய்துள்ளதாகவும் கூறினர்.” அருகிலேயே செல்லமுடியாதபோது எப்படி கைது செய்வது சாத்தியமானதென 07-11-2005 ஆம் திகதியில் வெளிவந்த லூ மொன்ட் (Le Monde) பத்திரிகையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட நகர்ப்புறத்தைச் சுற்றியுள்ள இடங்களிலேயே இளைஞர்கள் பொலிசாருக்கெதிரான தமது எதிர்ப்பை காட்டிவந்த போதும் மரணமுற்ற இளைஞர்களின் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு முன்னால் ஏற்பட்ட கலவரத்தின் போது, பொலிசாரால் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதெனும் செய்தியே பிரான்சை சுற்றியுள்ள நிலப்பரப்பெங்கும் தீச் சுவாலைகள் பரவிப் படர்ந்ததற்கான காரணம் என நம்பலாம். இதன் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான பொதுமக்களின் வாகனங்களும் அரச கட்டிடங்கள் சிலவும் எரிக்கப்பட்டன. நிலைமை மோசமாகி கலவரம் பொலிசாரால் கட்டுப்படுத்த முடியாத சூழலின் விளைவாய் பிரான்சில் 1955இல் நடைபெற்ற கலவரத்தின் போது அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தையும் ஊரடங்குச் சட்டத்தையும் பிரகடனப்படுத்தியது. இந்த அதிகாரத்தை மாவட்ட அரசாங்க அதிகாரிகள் தமது தேவையின் அவசியம் கருதி பிரயோகிக்கும் உரிமையும் வழங்கப்பட்டதுடன் குற்றவாளிகள் என ஊர்ஜிதப் படுத்தப்படும் இளைஞர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராயினும் அவர்களை நாடுகடத்தும் அதிகாரத்தையும் அந்த அரசாங்க அதிபர்களுக்கு வழங்கியது.

குறிப்பிட்ட இளைஞர்களின் மரணத்திற்கு முன்பே, பாரிசையும் அதைச்சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வாழும் இளைஞர்கள் மீதான பொலிஸ் கண்காணிப்பின் அதிகரிப்பும், இளைஞர்கள் பற்றியும், அவர்கள் வாழும் கட்டிடப்பகுதிகள் பற்றியும் உள்துறை அமைச்சர் அவர்களின் வார்த்தைப் பிரயோகங்கள் சம்பந்தமாகவும் ஏற்கனவே அமைச்சர் மீதான அதிருப்தியும் இணைந்தே, பின்பு இரு இளைஞர்களின் மரணத்தோடும் வெளிப்பட்டு கலவரம் உச்ச நிலையை அடைந்தது. உள்துறை அமைச்சரின் வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி அவரது கட்சி அமைச்சர்களில் ஒருவரான azouzbegag அவர்கள் மறைமுகா நிக்கோலா சாக்கோசியை இவ்வாறு விமர்சிக்கிறார். “இளைஞர்களை போக்கிரித்தனமானவர்கள் / கயவர்கள் (racailles) என்று எப்படி கூறமுடியும். நாம் முஸ்லிம் ஒருவரை மாவட்ட அரசாங்க அதிகாரியாக்க வேண்டும் எனக் கூறுகிறோம், வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறோம், அத்துடன் அடி தடி பொலிசாரை இளைஞர்களுக்கு எதிராகவும் ஏவுகிறோம். இவ்வாறான கூற்றுகளில் பாரிய முரண் நிலவுகிறதே? இளைஞர்களை எமது ஒழுங்கு நிர்வாகத்திற்குள் கொண்டுவர முனைவதா சமத்துவ ஒழுங்கென்பது? அதுவா எமது இன பாகுபாட்டிற்கு எதிரான போராட்டம்” இவ்வாறு தனது கருத்தைக் கூறியதற்காகவே நிக்கோலா சாக்கோசிக்கு நெருக்கமான உறவுள்ள அமைச்சர்கள் azouz begag அவர்களின் மேற்படியான கருத்திற்கு அவரை இராஜினாமா செய்யும்படி வற்புறுத்தியிருக்க வேண்டும் என பேசியுள்ளார்கள். அது மட்டுமல்லாது உள்துறை அமைச்சர் அவர்கள் தனது நிர்வாகக் கூட்டங்களுக்கு azouz begag என்பவருக்கு அழைப்பிடுவதையும் தவிர்த்துக் கொண்டுள்ளார். (Le Monde 07-10-2005) இப்படி ஒரு நபர் நிக்கோலா பற்றிய விமர்சனத்தை வெளிப்படையாக பேசியிருந்தாலும் ‘கட்சி மானம்’ காக்க பல பேர் வாய்மூடி... மௌனித்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே புலனாகிறது. பிரான்சின் அரசியலை கவனித்து வருபவர்களுக்கு அவர்களையும் இனம் காணக்கூடியதாக இருக்கும்.

பிரான்சின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் (Frane2) செய்தியாளர், பொலிசார் பள்ளிவாசலுள் கண்ணீர் புகைக்குண்டு வீசியதில் பள்ளிவாசலில் இருந்தோர் பலர், பெண்கள் உட்பட பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பற்றி என்ன கூறுகிறீர்களென பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது உண்மையே ஆனால் அது பள்ளிவாசலுக்குள் வீசப்படவில்லை. நீங்கள் தொலைக்காட்சியில் கவனித்திருப்பீர்களேயானால் அக்குண்டின் அடிப்பகுதி பள்ளிவாசலின் வாசல் கதவின் முன்பாகவே கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அக்குண்டினது தாக்கமானது பள்ளிவாசலுள் பரவியிருக்கிறதே அல்லாது பள்ளி வாசலுக்குள் வீசப்படவில்லை”. ஆகவே பள்ளி வாசலுக்குள் எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் அவர்களால் தெரிந்து கொண்ட விடயம் என்பதை அப்பொலிஸ் அதிகாரியின் கூற்றே உறிப்படுத்தியும் உள்ளது.

உள்துறை அமைச்சரான நிக்கோலா சாக்கோசி அவர்கள் கூடுதலாக வெளிநாட்டவர்கள் வாழும் நகர் பகுதிகளில்தான் வன்முறைகள் தொடர்ந்து நடைபெறுவதாக கூறி அப்பகுதிகளை ‘அடித்துக் கழுவி துப்புரவாக்குங்கள்’ என பொலிசாருக்கு பகிரங்கமாக கட்டளையும் பிறப்பித்துள்ளார். இது விடயமாக இளைஞர்களிடம் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றால் அபிப்பிராயம் கேட்கப்பட்டபோது, “கழுவித் துப்புரவாக்குவது அழுக்கு, குப்பை, மலங்களைத்தான் அப்படியாயின் அமைச்சர் நிக்கோலா சாக்கோசி எம்மை மலங்கள், குப்பைகள் என இழிவுபடுத்துவது உங்களுக்குத் தெரியவில்லையா” எனக்கேள்வி எழுப்பினார்கள். மின்சாரத் தாக்குதலில் மரணமுற்ற இளைஞர்களின் பெற்றோர்களும் நிக்கோலா சாக்கோசியுடன் பேசுவதற்கான அழைப்பையும் மறுத்து நாம் பிரதம மந்திரியுடன் மட்டுமே பேசத்தயாராயுள்ளோம் எனவும் கூறியிருந்தனர்.

இவ்வளவு உச்ச நிலயில் கலவரம் நிகழ்ந்து பல நாட்களின் பின்பே எமக்கும் ஞாபகம் வந்தது பிரான்சில் ஜனாதிபதி என்பவர் ஒருவரும் இருக்கிறார் என்பது!! பல நாட்கள் கடந்த பின்பு கலவரம் பற்றிய தனது அபிப்பிராயத்தையும், அதற்கான தனது நடவடிக்கைகளையும் பொதுமக்களுக்கு தொலைக்காட்சி முன் தோன்றி விளக்கமளிக்கும்போது, பிரத்தியேகமாக இறந்த இளைஞர்கள் பற்றியோ, அல்லது அவர்களை இழந்த பெற்றோர்களுக்கோ தனது வருத்தத்தை தெரிவிக்காது, “கலவரத்தின்போது அதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடமையாளர்களுக்கும், எனது தனிப்பட்ட அனுதாபத்தை தெரிவிப்பதோடு இழந்த, சேதமுற்ற உடமையாளர்கள் அனைவருக்கும் அதற்கான நஸ்ட ஈடுகள் நீதிப்படி, நியாயப்படி கிடைக்க ஆவன செய்யப்படும்... கல்வி போதாமையும் வேலையின்மையும், வீட்டு வசதிப் பற்றாக்குறையுமே நடந்த, நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளுக்கு அடிப்படைக்காரணமாக இருக்கிறது... இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு பெற்றோர்களே பொறுப்பானவர்கள் என்பதோடு அதை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்... எனவும் கூறி மறைத்தார்...” அவர்களுக்கு கொடுக்கப்படும் சமூக நிதியுதவிகளையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் முனைந்துள்ளது.

பிள்ளைகளின் நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும் காரணம் என்பது ஓரளவிற்கு உண்மையே. இங்கு வெளிநாட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் வழப்பினூடாக பாரிய முரண்பாடுகளை பெற்றோர்களும், பிள்ளைகளும் எதிர்நோக்கி வருவதை நாம் அறியக்கூடியதாக இருக்கிறது. பெற்றோர்கள் தமது தேச மத மொழிப் பண்பாட்டுக் கலாச்சாரங்களை இங்கு பிறக்கும் / வளரும் பிள்ளைகளுக்கு திணிக்க முற்படும் போக்கும் நிகழ்ந்து வருகிறது. ஆனால் இங்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் பாதுகாவலர்கள் மட்டுமே பெற்றோர் எனப்படுவோர் அவர்களுக்கு உணவும், கல்வியும் அளித்து ஒரு வயதுவரை வளர்ப்பது மட்டுமே அவர்களது கடமையும் பணியுமாகும். பிற தனித்துவ விருப்பு வெறுப்புகளுக்கு அரசாங்கம் தனக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பதை பிள்ளைகள் தாம் பெறும் கல்வியினூடாகவும் மற்றும் ஊடகங்களின் ஊடாகவும் அறிந்து சுயாதீன உணர்வுடன் வளர்க்கப்படும்போது, பிள்ளைகளின் சமூகத் தவறுகளென குற்றஞ்சாட்டப்படுபவைகளுக்கு பெற்றோர்கள் மட்டுமே பொறுப்பானவர்களென்று எப்படிக் கூறமுடியும்.

இந்த கலவரத்தில் பங்கு கொண்ட இளைஞர்கள் பற்றிய அரசாங்க அபிப்பிராயங்களானது, அவர்களின் கல்விப் போதாமை, வேலையில்லாப் பிரச்சனை, வீட்டு வசதியின்மை போன்றவையே இக்கலவரத்திற்கு மூலகாரணம் என அறியக்கூடியதாக உள்ளது. இக்காரணத்தையே ‘தமதளவில்’ செழுமைப்படுத்தி அதை வெள்ளை இன வாதப்போக்காகவும், அடையாளப்படுத்திய விமர்சனங்களையும் 10-12-2005 பிரான்ஸ் பத்திரிகை) (தமிழில் றயாகரன் 05, 12-12-2005 கட்டுரைகள்) காணக்கூடியதாக உள்ளது.

இக்கலவரம் சம்பந்தமாக பிரான்சின் சில புத்திஜிவிகள் மட்டத்திலே விவாதிக்கப்பட்ட விடயமானது, இளைஞர்களுக்கு கல்வியின் அவசியமும், பிறருடன் எப்படி பண்பாக, நாகரீகமாக பேசத்தெரியவேண்டும் என்பதும் பெரிய குறைபாடாக உள்ளதாக, இக்கலவரத்தில் மரணமடைந்த இளைஞர்கள் பற்றிய அபிப்பிராயத்தை அறிந்து கொள்வதற்காக பிரான்சின் தொலைக்காட்சி நிறுவனமான ‘பிரான்ஸ் 2’ (தி2) அவர்கள் படிக்கும் பாடசாலை நிர்வாகத்திடமும், சக மாணவர்கள், அயலவர்கள் நண்பர்களென அனைவரிடமிருந்தும் அபிப்பிராயங்களை திரட்டியபோது அவர்கள்மீதான நல் அபிப்பிராயத்தையே நாம் அறியக்கூடியதாக இருந்தது. குறிப்பாக அவர்களது பாடசாலை பதிவேட்டிலே எவ்விதமான குற்றப்பதிவுகளும் அவர்கள் பற்றி இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால் படித்து பட்டம், புகழ்பல பெற்ற உள்துறை அமைச்சரான நிக்கோலா சாக்கோசி அவர்களது பேச்சும் வார்த்தை பிரயோகங்களும் அநாகரிகமானவை என அவரது மந்திரிசபை உறுப்பினர் ஒருவர் உட்பட பத்திரிகைகளும் அது பற்றி பிரஸ்தாபித்தும் வருகிறது.

இந்த நிகழ்விலே பாதிக்கப்பட்ட, பிள்ளைகளை இழந்த சமூகங்களின் உணர்வு நிலையையும், பிரான்சின் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்பிரதான உறுப்பினர்களின் அரசியல் அதிகார குரூரத்தன்மையையும் பிரித்தறிவதன் ஊடாகவே உண்மை நிகழ்வை புரிந்து கொள்ளலாம். பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகங்களின் சார்பாக அப்பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் பொதுச்சபை கூடி விவாதிக்கும்போது அவர்களின் இமாம் (மதக்குரு) பேசும் போது, ஜனாதிபதியோ, அல்லது பிரதமரோ எமது நிலைமையை புரிந்து கொண்டு இரண்டு விநாடிகள் செலவு செய்து ஒலி பெருக்கி முன்னால் வந்து நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருந்தால் பிரான்ஸ் இவ்வளவு தூரம் பற்றி எரிந்திருக்காது என ஆனால் ஆளும் அரச மட்டத்தினர் சிலரின் பேச்சுக்களும், வாக்கு மூலங்களும் அரசியல் தனம் மிக்கதாகவும், தமது அதிகாரப் பதவிகளை மீண்டும் தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளாகவே காணக்கூடியதாக இருக்கிறது-.

இந்த நிகழ்வை உள்துறை அமைச்சர் அவர்கள் எப்படி தனது அரசியல் இலாபம் கருதி பேசுகிறார் என்பதை லூ மொன்த் (le monde 07-10-2005) பத்திரிகை அம்பலப்படுத்தியது. “எமது ஆட்சிமீது குற்றம் சுமத்தி சுத்த சித்தாந்த நியாயம் கூறுபவர்களுக்கு குறுகிய ஞாபகசக்தி இருக்கலாம், ஆனால் மக்கள் மறந்திருக்கப் போவதில்லை கடந்த அரசாங்கத்தின் தூய்மையான அரசியல் சாதனைகளை, 2002ஆம் ஆண்டில் 4.1 மில்லியன் வன்முறைக் குற்றங்கள் பதிவுகளாகியுள்ளது. எமது ஆட்சியின் இரண்டு வருட தொடர்ச்சியில் குற்றப்பதிவுகளை 3.8 மில்லியனாக குறைத்துள்ளோம். அவை 8 வீதமாக குறைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு கணிப்புடன் ஒப்பிடும்போது 2005இல் எமது ஆட்சியில் கீழ் 17 வீதமாக வன்முறைக் குற்றப்பதிவுகள் குறைந்துள்ளது. ஆகவே கடந்த சோசலிசக் கட்சியின் ஆட்சியே எமது பாதுகாப்பிற்கு பாதகமாக அமைந்திருக்கிறது...” என்பதாக புள்ளி விபரம் காட்டுகிற உள்துறை அமைச்சர் அவர்கள், 1955 ஆம் ஆண்டின் போது அமுல்படுத்தப்பட்ட, அவசரகால சட்டத்தையும், அதற்கு துணையான ஊரடங்குச் சட்டத்தையும் இன்றுவரை எந்த ஆட்சியின் காலத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. ஆனால் இன்று நீங்கள் உள்துறை அமைச்சராகவும் உங்கள் கட்டளைக்கு பணிகின்ற பொலிஸ் நிர்வாகத்தின் கீழ்தான் கலவரம் என்றுமில்லாதவாறு அத்து மீறிப்போக, அவசரகாலச் சட்டமும், ஊரங்குச்சட்டமும் நடைமுறைப்படுத்தும் நிலை வந்தது. இதை எந்த விகிதாசாரத்தில் கணக்கிடுவது. இதுவே பிரான்சின் வரலாற்றில் என்றுமே நீங்கிடாத கறையுமாகிப்போனது.

மேற்படி இரு இளைஞர்களின் மரணமும் திட்டமிட்டு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டதல்ல, எனினும் பொலிசாரின் நடவடிக்கையே அவர்களது மரணத்திற்கு காரணம் என்பதுதான் உண்மை நிலை. இச்சம்பவத்தை பிள்ளைகளை இழந்த பெற்றோர்களினதும் அச்சமூகத்தினதும் உணர்வு நிலையில் இருந்து பொலிசாரும் உள்துறை அமைச்சரும் அணுகியிருப்பார்களேயாயின், நிலைமை இவ்வளவு தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை.

ஆகவே இச்சம்பவமானது எவ்வகையில் எனது அறிதலுக்கும், பன்முக பரிசீலனைக்கும் உள்ளானது என்பதைக் குறிப்பிட்டு இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன். “மூலதனச் சட்டத்தை பொக்கற்றில் வைத்துக் கொண்டு வேலையை விட்டே அன்றாடம் உழைத்து வாழும் மனிதர்களை துரத்தும் இவர்கள்தான், இந்த நிலைமைக்கான முழுப்பொறுப்பாகும்...” என்பதாகவும், மற்றும் சில பத்திரிகைகள்போல் வெள்ளையின வாதமே இதற்கான காரணம் எனும் கூற்றையும், நடந்த சம்பவத்திற்கான பிரதான காரணிகளாக நான் கருதவில்லை. நிரூபிக்க முடியாது போனாலும், நடைமுறைகளும், சம்பவங்களும் முஸ்லிம் இனமக்களுக்கான விரோதச் செயல்பாட்டின் தொடர் நடவடிக்கையாய் அமைந்துள்ளதை என்னால் சந்தேகிக்கக் கூடியதாயுள்ளது.

இறந்த இரு இளைஞர்களின் மரணத்திற்கு பிற்பாடு நிகழ்ந்த கலவரத்திற்கு எந்த விதமான அரசியல் பின்னணியோ, தூண்டுதலோ இன்றி இயல்பான உணர்வு நிலை என்பதை அனைத்து மீடியாக்களும் ஊர்ஜிதப்படுத்தியும், உள்துறை அமைச்சர் நிக்கோலா சாக்கோசி அவர்கள் பாராளுமன்றத்தில் கூறுகிறார். இதையாரும் இயல்பான நடவடிக்கையாகக் கருத வேண்டாம், இந்த வன்முறை நடவடிக்கையானது மிகவும் திட்டமிட்டு பிரான்சிலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் நடைபெறுகிறது. என மொட்டையாகவே கூறினார். அது எவ்வாறு யாரால் என்பதை அவர் நிரூபிக்கவில்லை. அமைச்சரின் இக்கூற்றை கருத்தில் கொண்டு லூவிகாரோ பத்திரிகை பிரான்சின் பிரதம மந்திரியான டொமினிக் வில்பன் அவர்களின் கருத்தை வெளியிட்டிருக்கிறது. நிக்கோலா சாக்கோசியின் போக்கிரிகள் / கயவர்கள் எனும் வார்த்தைப் பிரயோகம் பற்றி பிரதம மந்திரியிடம் அபிப்பிராயம் கேட்கப் பட்டபோது “எல்லா வார்த்தைகளும் முக்கியமானவைதான் நாம் தீர்வை நோக்கி அனைவரும் இணைந்து முன்நகர வேண்டிய சூழலில், எதையும் நுணுக்கமாக பார்க்கவேண்டிய நேரம் அல்ல இது... இதில் முஸ்லிம் சமூகம் சம்பந்தப் பட்டிருக்கிறதாக நான் கருதவில்லை. அது முக்கியமல்ல இன்று... முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு பற்றிய விசனம் இருக்கத்தான் செய்கிறது. நான் கருதுகிறேன் இன்று அதைப்பற்றி பேசவேண்டிய முக்கியத்துவம் இல்லை என்று... மேலே நிக்கோலா சாக்கோசி அவர்கள் இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு பின்புலத்தில் ஒரு ‘திட்டமிட்ட’ சக்தி உள்ளது என ஆதாரம் ஏதுமின்றி கூறினார். பிரதம மந்திரியின் கருத்தினூடாக உள்துறை அமைச்சரின் ‘திட்டமிட்ட சக்தி’ என்பது, பேசப்படும் முஸ்லிம் தீவிரவாதிகளை மனதில் வைத்தே அப்படிக் கூறுகிறார் என நம்பலாம்.

இந்த ஆட்சியில்தான் கடந்த வருடம் அரசாங்க பாடசாலைகளில் எந்தவித மத அடையாளத்துடனும் மாணவர்கள் செல்வது தடைசெய்யப்பட்டது. இதில் பெரிதும் மதக் கலாச்சாரப் பண்பாட்டிற்கு விரோதமான சட்டமாகும் என கருதியது; முஸ்லிம் பெண்கள் முக்காடணிந்து செல்லும் வழக்கத்தையே, இச்சட்ட அமுலாக்கத்திற்கான காரணமாக இவ் அரசாங்கத்தால் கூறப்பட்ட நியாயமானது, பாடசாலைகளில் இனப்பாகுபாட்டை இல்லாதொழிப்பதற்காகவே என்பதாக, பல்லின பண்பாட்டுக் கலாச்சார மக்கள் வாழும் பிரான்ஸ் நாட்டில் சட்டங்களினூடாக இனப்பாகுபாட்டை இல்லாது ஒழித்து விடலாம் என்பது இயலாது. இத்தேவை ஏன் வந்தது எனில் இந்த அரசாங்கத்தினதோ அல்லது அரசாங்க உயர் மட்டத்தினரின் முஸ்லிம் விரோதமே காரணம் என்பதை நிரூபிக்க முடியாது விடினும் சந்தேகிப்பதற்கான வாய்ப்பை உள்துறை அமைச்சர் அவர்களின் கீழ் காணும் கூற்றுகள் உறுதிப்படுத்துகிறது...

பாடசாலைகளுக்கு மத அடையாளங்களுடன் செல்ல தடை விதிக்கப்பட்ட காலத்தில் நிதி அமைச்சராக இருந்த நிக்கோலா சாக்கோசி அவர்கள், அமிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாடு திரும்பியபின், பாராளுமன்றத்தில் அவரது அமரிக்க விஜயம்பற்றிய உரையாடலின்போது கூறுகிறார். “அமரிக்க அரசாங்கமானது எம் ஆட்சியின் மீது (வலதுசாரி) மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. காரணம் எமது ஆட்சியில்தான் யூத இன மக்களுக்கான பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டிருப்பதாக லியோனல் யஸ்பனின் கடந்த சோசலிசக் கட்சியின் ஆட்சியில் யூத இனமக்கள் மிகவும் இக்கட்டான சூழலில் பிரான்சில் வாழு நேர்ந்ததை அமெரிக்க அரசாங்கம் சுட்டிக் காட்டியது” எனக் கூறினார். இவ்வாறான ஆதாரங்களின் அடிப்படையிலேயே இவ் அரசாங்கமோ, அல்லது அரசாங்க உயர் மட்டத்திலுள்ளவர்களோ முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இயங்குவதான எனது சந்தேகம் வலுவாகிப்போனது.

மேற்படி எனது பார்வையினூடான இளைஞர்களின் தீவைப்புச் சம்பவங்களை நியாயப்படுத்துவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். இவ் அசம்பாவித நிகழ்வை தடுப்பதற்கான சந்தர்ப்பம் ஓர் நூல் இழையில் இருந்தது. மேலே சுட்டிக்காட்டியபடி முஸ்லிம் இமாம் அவர்களின் கோரிக்கையின்படி இரண்டு விநாடிகளே போதுமானதாக இருந்தது. ஆனால் மனித நாகரீகம் தோன்றிய காலம் தொடக்கமாக அரசியலிற்கும் அதிகாரத்திற்கும் பல்லாயிரம் உயிர்களும், உடமை அழிவுகளும் தேவையாகவே தொடருகிறது!!!

பிந்தி வந்த அதிரடிச் செய்தி: மரணமுற்ற இரு இளைஞர்களின் நகரமான Clichy-sous-bois விலுள்ள வாகனத் தரிப்பு கட்டிடத்துள் பல வெடி மருந்துகளும் ஆயுதங்களென பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அது சம்பந்தமாக 27 சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்வதாகவும் 15-12-2005 இன் புதிய தகவல் கிளம்பியுள்ளது. நாளை மரணமுற்ற இளைஞர்களும் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் சம்பந்தம் உள்ளவர்களெனும் கண்டுபிடிப்பும் வெளிவரலாம்.

Pin It