தண்ணி பொழங்காத 

சாதிக்காரப் புள்ளைய

சினேகிதம் பண்ணி

கட்டிக்கிட்டவன்

மூத்தவன் பழனிச்சாமி

சேதி காதுக்கு வந்தப்போ

அண்டமே கிடுகிடுங்க

அங்கம் பதறிக் கொதிச்சு

வெட்டிப் பொலி போடாம

உடமாட்டன்னு

தீட்டுன வீச்சருவாளோட

வேட்டிய மடிச்சுக் கட்டி

கெளம்புனவருதான்

சென்னியப்பன்

அப்பறம்

ஒட்டுமில்ல

ஒரவுமில்லேன்னு

தலமுழுகி 

வெட்டி உட்டு

ரெண்டு வருசமாச்சு

பொறந்து ஆறு மாசமான

பேத்திய எடுத்துகிட்டு

அவுங்க ரெண்டு பேரும்

ஊட்டு வாசல்ல

வந்து நின்னப்போ

கையும் ஓடுல

காலும் ஓடுல

அப்பாரு மூஞ்சிய

அப்பிடியே உருச்சு வெச்ச

அந்த

பச்ச மண்ணு

ஜொல்லு ஒழுகி மினுக்குற

பொக்க வாய காட்டி

மொகம் பாத்து சிரிச்சப்ப

சரிஞ்சுதான் போச்சு

சென்னியப்பனோட 

வீராப்புக் கோட்டை

அன்னைக்கினு பாத்து

பேத்திய தூக்கிக் கொஞ்சி

பொடக்காலிப் பக்கம் வந்த

சென்னியப்பனப் பாத்து

நமட்டலாத்தான் சிரிக்கறாங்க

அடுப்பெரிக்க

சுள்ளி தரிக்கும்

ஊட்டுக்காரி நாச்சாத்தாளும்

அந்த

பழைய வீச்சருவாளும்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.