டிசம்பர் 24 - தந்தை பெரியாரின் 38ஆவது நினைவுநாள்

தந்தை பெரியார் நம்மை விட்டு மறைந்து 38 ஆண்டுகள் ஆகின்றன. இறப்பதற்கு 5 நாள்களுக்கு முன்புகூடத் தன் 95ஆம் அகவையில், தாளமுடியாத வயிற்றுவலியையும் பொறுத்துக் கொண்டு, மக்களிடம் பேசியவர், மக்களுக்காகப் பேசியவர் பெரியார்.

அதனால்தான், அவரைப் பின்பற்றுகின்றவர்கள், அவரை எதிர்ப்பவர்கள் ஆகிய இரு அணியினராலும் அவரை மறக்க முடியவில்லை. எவ்வளவு பெரிய எதிர்க் கருத்துகளைச் சொன்னாலும், அவர்களை எதிர் நின்று அழிப்பது அல்லது உள்வாங்கிச் செரிப்பது, பார்ப்பனியத்தின் குணம். இரண்டு வகைகளிலும் இன்று வரை பெரியாரை அவர்களால் வெல்ல முடியவில்லை. இருப்பினும் தங்கள் முயற்சிகளை அவர்கள் சிறிதும் கைவிடவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியும், பெரியார் இறந்த டிசம்பர் மாதத்தில் அல்லோலப்படும் ஐயப்ப பக்தியும் தற்செயல் நிகழ்வுகளல்ல. எங்கு திரும்பினும் ஆரவாரம், பஜனை சத்தம், பக்திப் பரவசம் என்று மக்களைத் திசை திருப்பும் திருவிழாக்கள் இவை.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்குச் சென்றால், ஒரு துளி ஒலியும் இல்லாமல் அமர்ந்து தியான வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லும் அதே இந்து மதம்தான், சாமியே சரணம் ஐயப்பா என்று காதுகிழியக் கத்தவும் சொல்கிறது. சத்தம் விவேகானந்தருக்குப் பிடிக்காது, அமைதி ஐயப்பனுக்குப் பிடிக்காது போலிருக்கிறது.

வேறொன்றுமில்லை, தங்களைப் பெரிய அறிவாளிகள், அமைதியானவர்கள் என்று கருதிக்கொண்டிருப்பவர்களுக்குத் தியான மார்க்கம். கேளிக்கைகளில் மூழ்கிக் கிடக்கும் வெகுமக்களைக் கட்டிப் போட பக்தி மார்க்கம்.

சமற்கிருதமே தேவ பாஷை என்பதை நிலைநிறுத்துவதற்கு வேத, உபநிடதங்கள். தமிழ் பற்றாளர்கள் வேறு மதங்களுக்கு ஓடிவிடாமல் தடுப்பதற்குத் திருமுறைகளும், பாசுரங்களும்.

நாம் எந்தத் திசையில், எந்தக் கதவைத் திறந்து கொண்டு ஓடினாலும், அங்கே நம்மை வரவேற்று, மறுபடியும் அதே வைதீகக் கட்டிடத்தில் வைத்துப் பூட்டக் காத்திருக்கிறது இந்து மதம்.

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன், இந்து மதத்தைவிட்டு விலகினார் பசவண்ணர். அவர் தொடங்கிய வீர சைவமும், அவ்வழியைப் பின்பற்றிய லிங்காயத்துகளும், இன்று இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே அறியப்படுகின்றனர். சமயங்களை எதிர்த்து நின்றார் கபீர். இன்று கபீர் பாந்தி என்னும் பெயரில், அவரைப் பின்பற்றிய அணி, இந்துமதப் பிரிவுகளில் ஒன்றாய் மாற்றப்பட்டுள்ளது.

உருவ வழிபாடுகளையும், மூட நம்பிக்கைகள் பலவற்றையும் விலக்கி உருவாக்கப்பட்ட சீக்கிய மதத்தையும், இந்து மதம் என்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வேத வைதீகக் கோட்பாடுகளை, வேள்விகளை எதிர்த்த சமண, பெளத்த இயக்கங்களும் கூட, சட்டப்புத்தகத்தில் இந்து மதப் பிரிவுகளாகத்தான் அடையாளப்பட்டு நிற்கின்றன. இந்தியாவல் தோன்றிய மதங்கள் எல்லாம் இந்து மதங்கள்தானாம். வெளிநாடுகளில் தோன்றிய கிறித்துவ, இசுலாமிய, பார்சி மதங்களை மட்டும்தான் புறச்சமயங்கள் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம்.

இந்து மத வேள்விகளை, மூட நம்பிக்கைகளைக் கடுமையாக எதிர்த்த புத்தரையே, விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர் என்று கூறும் கள்ளத்தனமும், கபட நாடகமும் இன்னும் நடந்து கொண்டுதானே உள்ளன.

பார்ப்பனியத்தைச் சிறு கத்தி கொண்டு சிதைக்க முடியாது. அந்த நச்சு மரத்தைக் கோடரி கொண்டு பிளக்க வேண்டும் என்று அறை கூவியவர் அண்ணல் அம்பேத்கர். அவருடைய நினைவுநாளில், அவர் சிலைகளுக்கு ஆங்காங்கே மாலை சூட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். கூட்டம்.

இவ்வாண்டு காரைக்குடியில் பெரிய பெரிய அறிவிப்புப் பலகைகளைக் காண முடிந்தது. அம்பேத்கரைப் பாரதிய ஜனதா கட்சி நினைவு கூர்கிறதாம். எச்.ராஜா தலைமையில், பா.ஜ.க.வினர் பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்று, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். என்ன கூத்து இது !

பெரியார் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும், பா.ஜ.க.விற்கும் என்ன தொடர்பு? இவர்கள் மாலை அணிவிக்கவில்லை என்று எந்தச் சிலை அழுதது? மனப்பூர்வமாக எதிர்க்கும் ஒருவரின் சிலைக்கு மாலை அணிவிக்க எப்படி மனம் வரும்? கோல்வால்கர் சிலைக்கும், கோட்சே சிலைக்கும் நம்மால் மாலை அணிவிக்க முடியுமா?

இத்தனை வினாக்களுக்குமான விடை ஒன்றுதான். அவர்களால் எல்லாம் முடியும். அவர்கள் மான்களோடு சேர்ந்தும் ஓடுவார்கள். புலிகளோடு சேர்ந்தும் துரத்துவார்கள். 'பலித்த வரை என்பதுதான் பார்ப்பனீயம்' என்பார் பெரியார்.

அம்பேத்கர் நினைவுநாள், நமக்குத் துக்கநாள். துக்கத்தின் வெளிப்பாடாய் நாம் மாலையிடுகிறோம். அந்த நாள் அவர்களுக்குக் கொண்டாட்டமான நாள். மகிழ்ச்சியின் அடையாளமாய் அவர்கள் மாலை அணிவிக்கின்றனர். டிசம்பர் 6 - அவர்களுக்கு இரண்டு வகைகளில் இன்பமான நாள். அம்பேத்கர் மறைந்ததும் அன்றுதான், பாபர் மசூதியை அவர்கள் இடித்ததும் அன்றுதான்.

ஆனால் நமக்கோ, நெஞ்சில் அனல் அள்ளிப் போட்ட நிகழ்வுகள் அவை !

அம்பேத்கருக்கு மட்டுமில்லை, தேர்தல் நெருங்க நெருங்க அவர்கள் பெரியார் சிலைக்கும் மாலை அணிவிப்பார்கள். திட்டமிட்டு ஏமாற்றுவதற்கு அவர்களும், எந்தத் திட்டமும் இல்லாமல் ஏமாறுவதற்கு நாமும் தயாராக இருக்கும்வரை இந்த மோசடிகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும்.

தி.மு.கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் பலர் (பொறுப்பாளர்கள் சிலரே கூட), கறுப்பு வேட்டியோடும், கழுத்தில் அய்யப்ப மாலையோடும் நின்றிருந்த கோலத்தைப் பல ஊர்களில் பார்க்க நேர்ந்தது. அவர்கள் தி.மு.கழகத்தின் மீதும், தலைவர் கலைஞரின் மீதும் மாறாத அன்போடுதான் உள்ளனர். அதில் என்னால் எந்தக் குறையையும் சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு விதமான இந்துத்துவ உளவியல் அவர்களை ஆட்கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

தி.மு.க.வில் கிறித்துவர்களும், இசுலாமியர்களும் இல்லையா, அவர்கள் தங்கள் மத நம்பிக்கைகளின் வழி, வழிபாடுகள் செய்யவில்லையா என்ற எண்ணம் வரலாம். கடவுள் நம்பிக்கை மட்டுமில்லாமல், மூடநம்பிக்கைகளும் கூட, எல்லா மதங்களிலும் உள்ளன, எல்லா நாடுகளிலும் உள்ளன என்பதை நாம் எப்போதும் மறுப்பதில்லை.

எனினும் பிற மதங்களிலிருந்து இந்து மதம் வேறுபடுகிற ஓர் இடம் குறித்தே நாம் அடிக்கடி பேசிவருகின்றோம். எல்லா மதங்களிலும் பிரிவுகள் உண்டு. கத்தோலிக், பிராட்டஸ்ட்டண்ட் முதலான பிரிவுகள் கிறித்துவத்திலும், சன்னி, ஷியா முதலான பிரிவுகள் இசுலாத்திலும் இருக்கின்றன. சைவம், வைணவம் போன்ற பிரிவுகள் இந்து மதத்தில் இருப்பது போல. ஆனால் சாதியம் என்ற ஒன்று இந்து மதத்திற்கே உரியது. பிற மதங்களுக்கு மாறிய பிறகும் கூட, விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய நஞ்சு அது. இந்துமதத்தையும், சாதியையும் ஒரு நாளும் பிரிக்கவே இயலாது, எனவேதான் இந்துத்துவ உளவியல் பரவி விடக் கூடாது என்பதில் நாம் கூடுதல் கவனமும், கவலையும் உள்ளவர்களாக இருக்கிறோம்.

எவ்வளவோ அறிவியல் வளர்ச்சி வந்தபின்னும், இந்த இந்துத்துவ உளவியல் நம்மை விட்டு நீங்கவில்லை. உண்ணும் உணவில் கூட சாதியின் அடையாளத்தை இந்து மதம் பதிவு செய்து வைத்துள்ளது. புலால் உண்போர், புலால் உண்ணாதோர் என்று இரண்டு வகை மட்டுமே நம்மிடம் உள்ளதாக நினைப்பது தவறானது. புலால் உண்போரில் ஆடும், கோழியும், மீனும் உண்பவர்கள் மேல் தட்டினராகக் கருதிக்கொள்பவர்கள். மாட்டுக் கறி உண்ணுதல் அதற்கு அடுத்த இடத்திலும், பன்றிக் கறி, நரிக் கறி உண்போர் அதற்கும் கீழான தட்டுகளிலும் நிறுத்தப்படுகின்றனர். இப்படி வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் சாதியை நிலைநிறுத்தியதே இந்துத்துவாவின் சாரம்.

மூட நம்பிக்கைகளையும் முடிந்த அளவு உயர்த்திப் பிடிக்கும் குணம் இந்துத்துவாவிற்கு உண்டு. அதனால்தான் மின் மயானத்திற்குப் போகும்போதுகூட, கொள்ளிச் சட்டியை எடுத்துப் போகும் நம் மக்களை இப்போதும் பார்க்க முடிகிறது. இது போன்ற இந்துத்துவ உளவியலை முறியடிக்காத வரையில், சமூகத் தளத்தில் மட்டுமின்றி, அரசியல் தளத்திலும் நமக்குத் துன்பங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

இனி ஒரு விதி செய்வோம். தந்தை பெரியாரின் நினைவு நாளில் இந்துத்துவ உளவியலை வேரோடு வெட்டி எறிய அனைவரும் உறுதி ஏற்போம்.