"பாக்கு கடிக்கிற நேரம், ஓஞ்சி நிக்க முடியுதா ஒழிஞ்சி ஒக்காரத்தான் முடியிதா. மஞ்சகுறிச்சான போறவரைக்கும் இதே மாராயந்தான் நம்மளுக்கு” புலம்பிக்கொண்டே வந்த ஆவரணம் விருட்டென்று வீட்டிற்குள் நுழைந்தாள். கால்நீட்டிபோட்டு படித்துக் கொண்டிருந்த பார்வதி சடக்கென்று கால்களை மடக்கிக்கொண்டாள்.

“வாங்கண்ணி” பார்வதியின் அம்மா காமாட்சி கீரை ஆய்ந்து கொண்டிருந்தாள். வந்த வேகத்தில் புடவைத் துணியை ஒடுக்கி கால்களை முன்னால் எடுத்து வைத்துக்கொண்டு காமாட்சியின் ஓரமாய் உட்கார்ந்தாள். “கால ரெண்டயும் சுத்தமா அரிச்சிப்புட்டு புடுங்குற புடுங்கு தாங்க முடியல”. வரட்டு வரட்டென்று சொறிந்தாள். படித்துக்கொண்டிருந்த மகாபாரதம் புத்தகத்தின் பக்கம் மாறிவிடாமல் இருக்கும்படி விரல்விட்டு மூடிக்கொண்டு ஆவரணத்தின் கால்களைப் பார்த்தாள்.

“சேத்து புண்ணாத்த?”

“ஆமாங்கச்சி”.

விரல் இடுக்குகளும் விரல்களின் அடிப்பகுதியும் தண்ணீரில் ஊறியதுபோல பருத்து வெள்ளையாய் வெளிறி புண்பட்டுப்போயிருந்தது. அந்த இடங்களில் ஏற்பட்ட திணவை சொறிந்து தீர்த்துக்கொள்ள முடியாமல் மெதுவாய் வருடிக்கொடுத்தவள் அரிப்பு தாங்காமல் அதையயாட்டிய காலின் மற்ற பகுதிகளை ரத்தம் கசியும் அளவிற்கு சொறிந்து கொண்டிருந்தாள்.

“எப்புடித்த இவ்வளது புண்ணாப் போச்சி?”

பார்வதியையும் அவள் கையிலிருந்த புத்தகத்தையும் ஒரு தினிசாய்ப் பார்த்தவள் “ம்... நான் என்ன பஞ்சு மெத்தயிலயும் பட்டு விரிப்புலயுமா கெடக்குறன். பொழுதேனக்கிம் சாணிக்குள்ளயும் சவதிக்குள்ளயுமா நின்னாக்க புண்ணு வராம என்ன செய்யும்?”

பாஞ்சாலநாட்டு இளவரசியை சன்னியாசி வேடமிட்டிருந்த அர்ச்சுனன் போட்டியில் வென்று மணம் முடிக்கும் இடத்தில் கதை நின்றிருந்தது. ஏற்கனவே படித்ததுதான் என்றாலும் மறுபடியும் படிக்கும்போது கதை ஓட்டத்துடன் கரைந்து நின்றது பார்வதியின் மனம். அன்னிச்சையாய் செய்வதுபோல ஆவரணத்தைப் பார்த்து புன்னகைத்துவிட்டு விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்.

“எதாவுது மருந்து வாங்கி தடவுனா என்ன? இந்த காலோட எப்பிடிண்ணி நடக்குறிய?” என்றாள் காமாட்சி.

“அது கெடந்துட்டு போவுதுண்ணி. இப்புடி காத கொஞ்சம் காட்டுங்க, ஒரு விசயம் கேக்கணும்” ஆவரணத்தின் குரல் தணிந்தது.

“என்னண்ணி?”

“அது சரி... அந்த மாளியகாட்டு பொண்ணு வந்துருக்காமுல்ல... நீங்க பாத்தியளா?” என்றாள் கிசுகிசுப்பாய். படித்துக்கொண்டிருந்த பார்வதி நிமிர்ந்து உட்கார்ந்தாள். காலையிலிருந்து அவள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பிய விஷயம். யாரிடம் கேட்பது? எப்படி விசாரிப்பதென்று யோசித்துக்கொண்டிருந்த ஒன்றைப் பற்றிய பேச்சை ஆவரணமே ஆரம்பித்தது பார்வதிக்கு வசதியாகப் போய்விட்டது. இருந்தாலும் தான் கவனிப்பதை அம்மா அறிந்தால் அதுபற்றி எதுவும் பேசாமல் போய்விடுவாளோ என்று தோன்றியது. அதனால் படிப்பதுபோல பாசாங்கு செய்தாள்.

“ம்... பாத்தன்”.

“எப்புடிண்ணி இருக்கு?”

“அந்த வயத்தெரிச்சல யாங் கேக்குறிய?”

“.....”

“ஆளு எளச்சி எலும்பும் தோலுமா வெரப்பெரிசிக்கி இருக்கு. பல்லு காஞ்சிப் போயி பாக்கவே சயிக்கலண்ணி.”

“மவன் செத்தது தெரியுமா?” காமாட்சியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆவரணம்.

“கெழவி சொல்லிருக்குமுன்னு நௌக்கிறன். செத்தவனோட நோட்டு புத்தகத்தயயல்லாம் எடுத்து மடியில வச்சிக்கிட்டு ஒக்காந்துருக்குதாம்.”

“இவ்வள நாளும் எங்கண்ணி போயிருந்திச்சாம்?”

“யாரு கண்டா?”

“அப்புறம் எப்புடி கண்டுபுடிச்சி கொண்டாந்தா வொளாம்?”

“தானாதான் வந்துருக்கு. முந்தானயில முடிஞ்சிருந்த அஞ்சிகாச அவுத்து கெழவி கையில குடுத்துருக்கு. தேசாந்திரம் போயி தேடியாந்தது இதான். வச்சிக்கன்னு சொல்லிப்புட்டு அப்படியே கெழவி காலுக்குள்ள சுருண்டு வுழுந்துச்சாம்.”

“...”

“இஞ்ச எப்புடி வந்து சேந்துச்சாண்ணி?”

கெழவிதான் அழச்சாந்துருக்கு. அண்ணங்காரனுவொ ரெண்டியரும் மருந்த வூத்தி கொன்னுடுவமுன்னு சொல்லிருக்குறானுவொ. கெழவி பயந்துக்கிட்டு ராவோட ராவா இஞ்ச அழச்சாந்துட்டுது.

“கெழவி இப்ப இஞ்சதான் இருக்கா?”

“ஆமா. யாரு போனாலும் மொவத்த ஏறெடுத்து பாக்காமயே பேசுது.”

“பாவம். மவ பண்ணுன தப்புக்கு வயசான காலத்துல அந்த கெழவி கெடந்து அவமானப்படுது போலருக்கு.”

“என்னமோ போங்க. அந்த தம்பிய நெச்சாத்தான் இன்னம் கண்றாவியா இருக்கு.”

“அதக்கேக்க மறந்துட்டனே. அந்த தம்பி பாத்துட்டு என்னண்ணி சொன்னிச்சாம்.”

“ஒண்ணுமே முண்டலயாம். பொண்டாட்டிய பாத்ததும் சட்டய எடுத்து மாட்டிக்கிட்டு எங்குட்டோ கௌம்பிட்டுதாம்.”

“என்னதான் இருந்தாலும் பெத்த புள்ளைவொ தாய வெறுத்து ஒதுக்கிப் புடுங்களா?”

“பேசிப் பொழங்குதுவொ... ம்...?” ஆச்சரியமாய்க் கேட்டாள் ஆவரணம்.

“பேசிப் பொழங்குறது எங்க? அந்தப் பொண்ணுதான் யாருகிட்டயும் வாயத் தொறக்க மாட்டங்குதே.”

“.....”

இந்தப் புள்ளைவொளாவே காப்பிபோட்டுக் குடுக்குறதும் சோறு தண்ணி குடுக்குறதுமா நெருங்கிப் போவுதுவொ. ஆனா அந்தப் பொண்ணு அடிச்சிவச்ச ஐயனாரு செலமேரி அப்புடியேருக்கு.

“அந்தக்குட்டி பள்ளிக்கொடத்த வேற நிறுத்திப் புட்டாமுல்ல.”

“ஆமாமா. நல்லா படிக்கிற பொண்ணு. என்ன செய்யிறது. அதுக்குக் குடுத்து வச்சது அவ்வளதுதான்.”

“அது கெடந்து பரிதவிக்கிறத பாக்கணுமே, எங்கம்மா எங்களுக்கு எதுவும் செய்யாண்டாம். அம்மான்னு சொல்லிக்கிட ஆளா இருந்தாப் போதும். அதுக்கு எல்லாத்தயும் நாங்க செய்வமுன்னு சொல்லி அழுவுதுண்ணி.”

“அடக்கடவுளே”

“நல்லாருந்த குடும்பம். யாரு கண்ணு பட்டுச்சோ. இப்புடி சின்னாபின்னப் பட்டு நிக்கி.” மனம் கனத்துப் போயிருந்தது காமாட்சிக்கு.

“நானும் போயி ஒரு எட்டு பாத்துட்டு வந்தர்றண்ணி” என்ற ஆவரணம் எழுந்து போனாள்.

பார்வதியின் பார்வை புத்தகத்தின் வரிகளில் பதிந்திருந்தது. ஆனால் எதையும் படிக்க முடியவில்லை அவளால். எழுத்துக்கள் சொற்களாகவும் வரிகளாகவும் புத்தகத்தின் பக்கங்களில் மிதப்பதுபோல தோன்றியது. புத்தகத்திற்குள்ளிருந்து துருபத மன்னனின் மகள் பாஞ்சால நாட்டு அரசகுமாரி எழுந்து வருவதுபோல தோன்றின. அந்த அரசகுமாரியின் தோற்றம் அச்சு அசலாய் பதினைந்து வருடங்களுக்கு முன் பார்வதி பார்த்த மாளியக்காட்டுப் பெண் காந்திமதி போலவே இருந்தது.

வண்டிக்கார மணிக்கு காந்திமதியை கல்யாணம் செய்தபோது பார்வதிக்கு எட்டு வயதுதான். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். பார்வதி வீட்டிற்கும் நான்காவது வீடுதான் மணியின் வீடு என்பதால் அது தன்னுடைய வீட்டில் நடந்த கல்யாணம்போலவே இருந்தது பார்வதிக்கு. கல்யாணத்தன்று மட்டும் அப்பளம் பாயசத்திற்காக அடுத்தடுத்த மூன்று பந்திகளில் உட்காந்து மூக்குமுட்டத் தின்று திக்குமுக்காடி இருக்கிறாள். போதாதற்கு மணியின் அக்கா மகள் கோமதியின் கூட்டாச்சியால் காந்திமதிக்கு பெண்தோழியாய் இருக்கும் அந்தஸ்தும் கிடைத்தது. புதுப்பெண்ணுக்குத் தோழி என்றால் ஒரு நாள், இரண்டு நாளோடு முடிந்துபோகும் வேலையில்லை. கிட்டதட்ட மூன்று மாதங்கள் காந்திமதிக்கு தோழிகளாய் கோமதியும் பார்வதியும் இருந்தார்கள். புதுப்பெண்ணுக்குக் கிடைத்த சிறப்புகள் எல்லாம் இவர்களுக்கும் கிடைத்துக்கொண்டிருந்தது.

அப்போதெல்லாம் காந்திமதியைப் பார்க்க பார்வதிக்கு வியப்பாய் இருக்கும். வண்டிக்கார மணி நல்ல உயரம். மாநிறம். ஆள் பார்க்க வாட்டசாட்டமாய் இருப்பான். காந்திமதியும் அவனுக்கேற்ற உயரத்துடன் ஒடிசலா இருந்தாள். கொடிபோன்ற உடல்வாகு அவளுக்கு. மெல்லிய குரல். ஒருவருடன் பேசினால் அது மூனறாவது மனிதருக்குக் கேட்காது. பேசும்போது கண்கள் படபடத்து மின்னும். பார்வதிக்கு அவள் பேசுவதை கேட்க ஆசையாய் இருக்கும். அவளுடைய வாயையே பார்த்துக் கொண்டு இருப்பாள். "அய்யோ தெய்வமே' என்று அவள் பதறி ஒருமுறைகூட பார்வதி பார்த்ததில்லை. அதிர்ந்து நடக்கவும் தெரியாது. மண்ணுக்கு நோகாமல் நடப்பாள். அவளின் நடையேகூட அலாதி அழகாயிருக்கும். கருகருவென்ற அடர்த்தியான தலைமுடி. பின்னிப்போட்டால் இடுப்புக்குக் கீழேயும் ஒரு முழம் தொங்கும். ஊரில் மற்ற பெண்களைப் போலவே நாடா வைத்துத்தான் பின்னுவாள். பாதி சடையில் மடித்துக்கட்டி நாடாவில் பூ போட்டுக் கொள்வாள்.

தனக்கு இப்படி ஒரு பெண்டாட்டி வாய்த்ததில் வண்டிக்கார மணிக்கு ஏகப்பட்ட பூரிப்பு. அதோடு மட்டுமல்லாமல் காந்திமதி ஏழாம் வகுப்புவரை படித்தும் இருந்தாள். அரச குடும்பத்து பெண்களும் தேவலோகத்துப் பெண்களும் காந்திமதி போலத்தான் இருப்பார்கள் என்று பார்வதி கோமதியிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்.

“நம்ம ஊருக்கு வாக்கப்பட்டு வந்துருக்குற பொண்ணு வல்லயே காந்திமதி அக்காதான் ரொம்ப அழகு” என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வருவாள். இவள் தன் பெண்டாட்டி பற்றி எல்லோரிடமும் சொல்லுவதைக் கேள்விப்பட்ட வண்டிக்கார மணி ஒருநாள் பார்வதியைக் கூப்பிட்டு விசாரித்தான். அவனிடமும் அதையே சத்தியம் பண்ணிச் சொல்ல அவன் சந்தோஷத்தில் திளைத்துப் போனான். கொஞ்சமும் யோசிக்காமல் தன் சட்டைப் பையிக்குள் கைவிட்டு ஒரு ரூபாய் எடுத்துக்கொடுத்தான்.

அப்போது இடும்பவனம் கோவிலில் திருவிழா நடந்துகொண்டிருந்தது. கற்பகநாதர் குளத்திலிருந்து எல்லோரும் திருவிழா காண நடந்துதான் போவார்கள். ஆனால் வண்டிக்கார மணி தன் பெண்டாட்டியை நடக்கவிடக் கூடாதென்று மாட்டுவண்டி கட்டி அழைத்துப்போனான். காந்திமதியோடு கோமதியும் பார்வதியும் போனார்கள். மாட்டுவண்டி கடமுடவெண்டு போகுமென்பதால் வண்டிப்பலகை மீது நிறைய வைக்கோலை பரப்பி அதன்மீது ஜமுக்காளத்தை விரித்துப்போட்டு மெத்தென்று ஆக்கியிருந்தான். காந்திமதியோடு மாட்டுவண்டியில் சென்றதை பெருமையாக நினைத்தாள் பார்வதி.

கல்யாணமான ஓர் ஆண்டிற்குள் காந்திமதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. அதிக இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்தும் ஓர் ஆணையும் பெண்ணையும் பெற்றாள். மூன்றாவது பிள்ளைக்கு காந்திமதி அறையில் கிடந்தாள். பெண்டாட்டிக்கு வலிக்குமென்று நினைத்த வண்டிக்கார மணி தானே போய் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டு வந்தான். பெண்டாட்டியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதாய் எல்லோரும் கேலி பேசினார்கள். ஆனால் அதைப் பற்றியயல்லாம் அவன் கொஞ்சமும் கவலைப்படவில்லை. பெண்டாட்டி, மூன்று பிள்ளைகள் என்று தன் குடும்பம் பெரிதாகிவிட்டதால் அதிகமாய் சம்பாதிக்க வேண்டுமென்று நினைத்தான். ஊர் ஊராய் வண்டி ஓட்டிக்கொண்டு போனான்.

குடும்பக்கட்டுப்பாடு செய்து முழுதாய் இருபது நாட்கள்கூட ஆகவில்லை. ஆலங்காட்டுக்கு வைக்கோல் வண்டி ஓட்டிக்கொண்டு போனான் மணி. பட்டுக் கோட்டை ரோட்டில் எதிரே வந்த லாரிக்கு ஓரமாய் ஒதுங்கி வழிவிட்டபோது, வண்டி குடைசாய்ந்து பக்கத்தில் இருந்த கிடங்கு பள்ளத்தில் விழுந்தது. மணியும் மாடுகளும் உயிர் பிழைத்தது பெரும்பாடு. அப்படியும் ஏடாகூடமாய் விழுந்ததில் இடுப்புக்கு மேல் முதுகெலும்பில் பலமாய் அடிபட்டுவிட்டது மணிக்கு. ஒரு மாத காலம் எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாய்க் கிடந்தான்.
மணி படுக்கையில் கிடக்கும்போதே காந்திமதியிடம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டது.

வழக்கத்தைவிட அதிகமாய் அமைதியானாள். கைக்குழந்தை அழுதால்கூட வாய் திறந்து தாலாட்டுவதில்லை. தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்துவதில்லை. பிள்ளையைத் தூக்கி பால் கொடுப்பாள், தொட்டிலில் போட்டு ஆட்டி விடுவாள். யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. கிட்டதட்ட பேசுவதையே மறந்துவிட்டாளோ என்று கூட சந்தேகப்படத் தோன்றியது. தன் உணர்வற்று செய்பவளைப்போல வழக்கமான வேலைகளை செய்துவந்தாள். உண்பதும் உறங்குவதும் கூட முன்புபோல் இல்லையயன்று பேசிக்கொண்டார்கள் எல்லாரும்.

“புருசங்காரன் அடிபட்ட அதிர்ச்சியாலதான் இப்புடி ஆயிட்டு” என்றனர் சிலர். வண்டிக்கார மணி குணமடைந்து மறுபடியும் வண்டி ஓட்ட ஆரம்பித்தான். அவன் என்ன வாங்கிவந்து கொடுத்தாலும் எதுபற்றி கேட்டாலும் அவனிடம் வாய்திறப்பதில்லை. காந்திமதி வீட்டை விட்டு வெளியே எங்கும் போவதில்லை. யாரிடமும் எதிர்படுவதில்லை. வலியனாய் வீட்டிற்கே வந்து யாராவது பேச்சுகொடுத்தாலும் காதில் விழாதது போல நடந்துகொள்வாள்.

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானார்கள். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் காந்திமதி அப்படியேத்தான் இருந்தாள். ஒரு நாள் பார்வதி மணக்கொல்லையில் முற்றிய ஆமணக்கு காய்களை பறித்துகொண்டிருந்தாள். அப்போது அவளின் எதிரே வந்து நின்றாள் காந்திமதி. பார்வதியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

“எனக்கொரு ஒதவி செய்யிறியா?” உதடுகள் அசைவதைப் பார்த்திருக்காவிட்டால் அவள் என்ன சொல்கிறாள் என்பதை கண்டுபிடித்திருக்க முடியாது. இவ்வளவு மெதுவாகக்கூட பேச முடியுமா என்று தோன்றியது பார்வதிக்கு. இருந்தாலும் அவள் வாய் திறந்து பேசியதே ஆச்சர்யம்தானே.

“என்னக்கா செய்யணும் சொல்லுங்க.”

“நான் ஒரு நாடகம் எழுதி வச்சிருக்குறன். என்னோட கையயழுத்து அழகால்ல, அதப்பாத்து வேற தாளுல எழுதி திருச்சி ரேடியாவுக்கு அனுப்பிடு.”

“.....”

“நாடகம் நல்லாருக்குன்னு பணம் அனுப்புவானவொ. அத நீ எடுத்துக்க.”

தன் மாராப்பை விலக்கி ரவிக்கைக்குள்ளிருந்து நான்காய் மடித்து வைத்திருந்த ஒரு கோடுபோட்ட நோட்டுத்தாளை எடுத்து சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு பார்வதியின் கைக்குள் வைத்து அழுத்தினாள். “பத்தரம். யாருக்கிட்டயும் சொல்லிப்புடாதா” என்றவள் பார்வதியின் பதிலுக்குக் காத்திருக்காமல் திரும்பி நடந்தாள்.

எத்தனை நாட்களாய் ரவிக்கைக்குள்ளேயே இருந்ததோத் தெரியவில்லை. தாள் கசங்கி அதன் ஓரங்கள் நைந்துபோயிருந்தன. கிழிந்து விடாதபடி மெதுவாய் அதனைப் பிரித்துப் படித்தாள். சம்மந்தா சம்மந்தமில்லாமல், ஒவ்வொரு சொல்லாக, சேர்த்துப் படிக்க முடியாதபடி எழுதப்பட்டிருந்தன. பாதிக்கு மேற்பட்ட சொற்கள் குறில் நெடில் பிழையாகவும், ஒற்றெழுத்துக்கள் விடுபட்டும் இருந்தன. அதில் ஒன்றுமில்லை என்று நினைத்த பார்வதி அந்தத் தாளை தூக்கிப் போட்டுவிட்டாள். ஆனால் காந்திமதி மீதிருந்த வியப்பு அந்த தாளை மறுபடியும் எடுத்துப் பார்க்கத் தூண்டியது. சொற்களை மனதிற்குள்ளேயே திருத்தி தன் விருப்பத்திற்கு வரிசைப்படுத்திப் பார்த்தாள். அப்படி பார்க்கும்போது “சூரியன், ஒரு தாமரைக்குளம், ஏழெட்டு இலைகள், ஒரேயயாரு தாமரைப்பூ, வண்டு, தேன், தேன் இனிப்பாய் இருக்கும். தாமரை பூப்பது சூரியனுக்காக, சூரியனால் தேன் குடிக்க முடியாது, வண்டுக்கு தேன் கிடைக்கும். தாமரைக்கு வண்டைக் கண்டால் கோபம் வரும்” என்று வந்தது.

“என்ன இந்தக்கா இப்புடி எழுதியிருக்கே” என்று குழம்பினாள். எதுவாக இருந்தாலும் இருக்கட்டு மென்று வீட்டிற்குப்போய் அந்தத் தாளை தன்னுடைய துணிமணிகள் போட்டு வைத்திருக்கும் கொடிக்குப் பின்னால் வரிச்சிக் கீற்றுக்குள் யாருக்கும் தெரியாமல் செறுகி வைத்தாள்.

இது நடந்து ஏழெட்டு நாட்கள் இருக்கும். ஒருநாள் பார்வதி மட்டும் தனியாயிருந்த நேரம் பார்த்து பார்வதியின் வீட்டிற்கு வந்தாள் காந்திமதி.

“நான் குடுத்தனே அனுப்பிட்டியா?”

பார்வதிக்கு அவளிடம் பொய்சொல்ல மனம் வரவில்லை. “இன்னம் அனுப்பலக்கா” என்றாள் தயக்கமாக.

“இது தெரியாம நான் தெனமும் பெரியபண்ண ரேடியாவுல நம்ம நாடகம் ஓடுதான்று காதுகுடுத்துக் கேட்டுக்கிட்டு இருக்குறன்”.

பார்வதியால் பதிலேதும் சொல்ல முடிய வில்லை.

“நீனாவுது படிச்சியா?”

“ம்”

“என்ன படிச்ச சொல்லு”

பார்வதிக்கு எல்லாம் மனப்பாடமாய் இருந்தது. வரிசையாய்ச் சொன்னாள். தான் எழுதியது இவ்வளவு நன்றாக இருக்குமென்பது அவள் எதிர்பார்க்கவில்லை போலும். பார்வதி படித்ததைக் கேட்டு கைகளையும் தொடையையும் மாற்றி மாற்றித் தட்டி மகிழ்ச்சியில் திளைத்தாள். அவளுடைய முகம் பூரிப்பால் பளிச்சிட்டது.

“நான் எழுதுனத்த அப்புடியேச் சொல்லிட்டியே. எங்க கோமதிக்கெல்லாம் இத படிக்கவேத் தெரியாது. அதுனாலதான் ஒன்னக்கிட்ட குடுத்தன்” என்றாள்.

காந்திமதி இவ்வளவு பேசியது பார்வதிக்கு ஆச்சரியமாய் இருந்தது. பார்வதிக்கு பரிசாக ஏதாவது கொடுக்கவேண்டுமென்று நினைத்திருக்க வேண்டும். தன் மடியை பிரித்து அதில் கிடந்த நான்கைந்து தேங்காள் இணுக்குகளை எடுத்து பார்வதியின் கையில் திணித்தாள்.

“எதுக்குக்கா?”

“தொவய அரைக்க இணுக்குனது. நீ தின்னு.”

“நின்னுக்கிட்டே இருக்குறியளேக்கா. ஒக்காருங்களேன்” என்றவளுக்கு பதிலேதும் சொல்லாத காந்திமதி “நீ சூரியன பாத்துருக்குறியா?” என்றாள்.

“ம்”

“எங்க?”

“மேலதான்.”

“நான் அதக் கேக்கல.”

பார்வதிக்கு குழப்பமாக இருந்தது. காந்திமதியின் முகத்தையே பார்த்தாள்.

“நான் எழுதியிருக்குற சூரியன தெரியுமா?”

தெரியாதென்று தலையாட்டினாள் பார்வதி.

“தெனமும் தெக்கேருந்து சைக்கள்ல்ல காலயில வரும். சாங்காலம் திரும்பிப் போவும்” காந்திமதி சொல்லும்போது அவளுடைய கண்கள் மின்னியது.

“காலயில எட்டேமுக்கா வண்டி திரும்பிப் போனதுக்குப் பெறவு எங்க வூட்டுக்கு வா நான் காட்டுறன்.”

“யாருன்னு சொல்லுங்க நான் இஞ்சயிருந்தே பாத்துக்கிறன்” கிணற்றுக்குள்ளிருந்து பேசுபவளைப் போலிருந்தது பார்வதியின் குரல்.

“ரோட்டுல போறத்த வூட்டுக்குள்ள இருந்துக்கிட்டு எப்புடி பாப்ப?”

“.....”

“எங்க புளிய மரத்துல ஏறி ஒக்காந்துக்கிட்டு பாத்தா தெக்கேருந்து வடக்க போறவரைக்கும் பாக்கலாம்” என்றாள் காந்திமதி.

“மரத்துல ஏறிக்கிட்டு பாக்குறதா?” ஆச்சரியத்தை அடக்க முடியாமல் கேட்டேவிட்டாள் பார்வதி.

“ஆமா” தலையாட்டி புன்னகைத்தாள்.

“யாராவுது பாத்துட்டா?”

“எங்க வூட்டுக்கு யாரும் வரமாட்டாவொ. யாராலயும் கண்டுபுடிக்க முடியாது.”

“சரிக்கா” என்றாள் பார்வதி. அப்போதைக்கு அவளை அங்கிருந்து போகச்சொல்ல வேண்டுமே என்பதற்காக.
வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போய்விட்டாள் காந்திமதி. பார்வதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இவள் பேச்சைக் கேட்டு போவதா வேண்டாமா என்று பலமாக யோசித்தாள். இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது அவள் அம்மா காமாட்சிக்குத் தெரிந்தால் தோலை உறித்து தப்புகட்டி விடுவாள். “நமக்கேன் வம்பு. அந்த பைத்தியத்தின் பேச்சை கேட்டுக்கொண்டு போவதாவது. பேசாமல் இருந்து விடுவோம்” என்று முடிவு செய்துகொண்டாள்.

மறுநாள் காலை பார்வதி ஆடுகளை மேய்ச்சலில் கட்டிக்கொண்டிருந்தாள். அப்போது பக்கத்து சவுக்குத் தோப்பிற்குள்ளிருந்து வந்தாள் காந்திமதி. அவளைப் பார்த்ததும் திடுக்கிட்டது மனது. “என்ன சொல்லப் போகிறாளோ” பயந்தாள். கிட்டே வந்த காந்திமதி “மறந்துடாத. எட்டேமுக்கா வண்டி திரும்புனதும் வந்துடு” சொல்லிவிட்டு ஒரு வினாடிகூட நிற்கவில்லை. போய்விட்டாள். என்ன செய்வதென்று மறுபடியும் குழம்பினாள் பார்வதி. "அம்மாவுக்குத் தெரியாம போவமுடிஞ்சா போயிட்டு வந்துடலாம்' என்று நினைத்துக் கொண்டாள். ஒருபக்கம் பயம் பார்வதியை தயங்க வைத்ததென்றாலும் இன்னொரு பக்கம் காந்திமதி காட்டப்போகும் சூரியன் யாரென்று தெரிந்து கொள்ளும் ஆவலும் அதிகமானது.

நல்லவேளையாக பார்வதியின் அம்மா காமாட்சி அந்த காலை நேரத்திலேயே களையயடுக்கும் ஆட்களை அழைத்துக்கொண்டு கொல்லைக்குப் போனாள். இனி பொழுது சாய்ந்துதான் வீடு திரும்புவாள். இது பார்வதிக்கு சற்று ஆறுதலாய் இருந்தது. சூரியனை பார்க்கும் ஆர்வம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. எட்டேமுக்கால் வண்டி ஒலித்தபடி ரோட்டில் திரும்பிப் போனது. வீட்டின் பின்பக்க வழியாக போனாள் பார்வதி. வேலிக்கு வெளியே நின்று மரத்தினடியில் வண்டியும் வண்டி மாடுகளும் கிடக்கின்றனவா என்று பார்த்தாள். இல்லை. மெதுவாக வேலிக்கு உள்ளே நுழைந்தாள். காந்திமதியின் வீட்டைச்சுற்றி உயர உயரமான மரங்கள் அடர்ந்திருந்தன. பிள்ளைகயளல்லாம் பள்ளிக்கு அப்போதுதான் கிளம்பிப் போயிருந்தார்கள்.

சாலையை ஒட்டியிருந்தது அந்த பெரிய புளியமரம். நல்ல உயரம். சுற்றிலும் வேலியடைத்து தென்னங்கீற்றால் வேய்ந்திருந்தான் மணி. ரோட்டில் போகும் யாருக்கும் மரத்தடியில், வீட்டுவாசலில் நிற்பது தெரியாது.
காந்திமதி தயாராய் மரத்தடியிலேயே நின்று கொண்டிருந்தாள். பார்வதியைக் கண்டவுடன் "வா' என்பதுபோல கைகாட்டிவிட்டு மரத்தில் ஏறினாள். முண்டும் முடிச்சுமாய் இருந்தது அடிமரம். மரக்கிளைகளும் அடிக்கொன்றாய் இருந்தன. அவற்றில் அடிவைத்து பிடித்துக்கொண்டு ஏறுவது சுலபமாக இருந்தது. காந்திமதி உயரமான கிளையயான்றில் ஏறி உட்கார்ந்துகொண்டாள். கால்களை தொங்கப் போட்டுக்கொண்டு சாய்மானம் போன்ற நடுமரத்தில் சாய்ந்து கொண்டாள். கீழேயிருந்து பார்த்தால் மரத்தில் உட்கார்ந்திருப்பதை அவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்க முடியாதுதான். இன்னொரு கிளையைக் காட்டி பார்வதியை அதில் உட்காரச் சொன்னாள். ஒருவித நடுக்கத்தோடும் ஒருவிதமான சுவாரஸ்யத்தோடும் ஏறி காந்திமதி காட்டிய கிளையில் உட்கார்ந்துகொண்டாள். காந்திமதியின் பார்வை தெற்கிருந்து வரும் சாலையில் பதிந்திருந்தது.

“யாரும் கண்டுக்கிட்டா” என்றாள் பார்வதி மறுபடியும் தயக்கமாக. சற்று மேலே இன்னொரு பக்கமாய்ப் போகும் கிளையை நோக்கி கைகாட்டினாள் காந்திமதி.

காட்டிய கிளையைப் பார்த்தாள். பெரிய தேனடை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் இன்னும் பயமாகிவிட்டது. அந்தக் கிளையை கொஞ்சம் அசைத்தாலும் போதும் தேனீக்கள் அவர்களை மொய்த்துக் கொள்ளும். இவ்வளவு தேனீக்களிடமிருந்து உயிரோடு தப்பிப்போக முடியுமா என்று நினைத்துப் பார்த்தாள்.

“யாருங்கேட்டா தேனெடுக்க வந்தன்னு சொல்லு”

“தேனெடுக்குற ஆளா நம்ம? தேனெடுக்க இப்புடித்தான் வருவாவொளா? கேப்பயில நெய் வடியிதுன்னா கேப்பாருக்கு புத்தி பீ திங்கயா போயிரும்” காந்திமதியை ஏறிட்டுப் பார்த்தாள். இவளா பைத்தியம்? இவளுக்கா சித்தம் கலங்கிப் போயிருக்கிறது.

“அங்க பாரு சூரியன” உற்சாகமாய் கையைக் காட்டினாள்.

தெற்கேயிருந்து தூரத்தில் யாரோ ஒருவர் சைக்கிள் மிதித்துக்கொண்டு வருவது தெரிந்தது.

“தெரியிதா, இல்லியா?”

“மொகம் சரியாத் தெரியலக்கா.”

“சூரியன பாத்தா கண்ணு கூசுமுல்ல. அதான் தெரியல.”

காந்திமதி பேசுவதைக் கேட்க வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருந்தது.

சைக்கிள் அருகில் வந்தது. வந்தவனின் முகத்தை நன்றாகப் பார்த்த பார்வதிக்கு அதிர்ச்சியில் நெஞ்சு அடைத்துக்கொண்டது போலிருந்தது. வண்டிக்கார மணியின் சொந்தக்கார பையன் அவன். காந்திமதிக்கு தம்பி முறையானவன். இருபத்தைந்து வயதுதான் இருக்கும் அவனுக்கு. படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இடும்பவனம் சொசைட்டியில் கணக்கெழுதிக் கொண்டிருந்தான்.

அவனை பார்த்த பிறகு ஒரு நொடிகூட மரத்தில் இருக்கப் பிடிக்கவில்லை பார்வதிக்கு. சரசரவென்று மரத்தைவிட்டு இறங்கினாள். அவன் போவதையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த காந்திமதி, இவள் கீழே இறங்குவதை உணர்ந்து திடுக்கிட்டு பின்னால் இறங்கி வந்தாள்.

“எப்புடி என்னோட சூரியன்? தேவலாமா?”

“இது சரியில்லக்கா” வேறொன்றும் சொல்ல முடியவில்லை அவளால்.

“யாஞ் சரியில்லங்குற?”

“எனக்கு அது அண்ணன். ஒங்களுக்கு தம்பி மொறயாவணும்.”

“எப்புடி? யாங்கூட ஒட்டியா பொறந்திச்சி?”

“அண்ணந்தம்பி மொறன்னாலே கூடப் பொறந்தமேரிதான்.”

“நீ என்ன இப்ப வந்து இப்புடி சொல்லுற? ஆறு மாசமா அந்த சூரியனப் பாத்துதான் இந்தப் பூ பூக்குது. அது ஒனக்குப் புடிக்கலயா?”

பார்வதியால் பதிலேதும் சொல்ல முடியவில்லை. அதற்குமேல் அங்கு நிற்கவேப் பிடிக்கவில்லை அவளுக்கு. வந்த வழியில் திரும்பி ஒரே ஓட்டமாக ஓடி வந்துவிட்டாள். வீட்டிற்கு வந்தும்கூட படபடப்பு அடங்கவில்லை. காந்திமதி எழுதிக் கொடுத்த தாளை எடுத்து கிழித்து அடுப்புக்குள் போட்டாள். இனிமேல் காந்திமதியோடு பேசவேக் கூடாதென்று முடிவு செய்துகொண்டாள். அதற்குத் தகுந்தாற்போல் காந்திமதியும் அவளைத் தேடிக் கொண்டு வருவதை நிறுத்திக்கொண்டிருந்தாள். நிம்மதியாய் இருந்தது பார்வதிக்கு.

இது நடந்து ஆறு மாதம் ஆகியிருக்கும். ஒரு நாள் சவுக்குத் தோப்பிற்குள் ஆடுகளுக்குத் தழை ஒடித்துப் போட்டுக்கொண்டிருந்தாள் பார்பதி. அரவம் படாமல் அவளுக்கு முன்னால் வந்து நின்றாள் காந்திமதி.

“என்னோட விஷயம் ஒனக்கு மட்டுந்தான் தெரியும். நீதான் என்னமோ பண்ணிப்புட்ட” என்றாள்.

அதுகேட்டு திடுக்கிட்ட பார்வதி “நான் ஒண்ணும் பண்ணலயே”

“நாலு நாளா என்னோட சூரியனக் காணும். எல்லாம் இருளோகமா கெடக்கு நான் எப்புடி பொழக்கிறது?”

தனக்குள் புலம்புபவளைப்போல சொல்லிக் கொண்டிருந்தாள்.

“.....”

“நான் செத்துப் போவணுமுன்னு நௌக்கிறியா?”

“அக்கா. எனக்கொன்னும் தெரியாது. இனிமே என்னக்கிட்ட இதப் பத்தியயல்லாம் பேசாதீய்ய.”

“நான் செத்துருவன். நீதான் காரணமுன்னு எழுதிவச்சிட்டு செத்துருவன்.” அதிகமாய் அவள் உதடு அசையவில்லை. குரலும் உயரவில்லை. இருந்தாலும் பார்வதியை அந்த வார்த்தைகள் நூறு கூறாக்கிப் போட்டுவிட்டதுபோலிருந்தது. அவள் காலடியின் சருகு நொறுங்காமலும் புல்லின் நுனி மடங்காமலும் நடந்து காற்றைக்கூட கலைத்து விடாதவள்போல திரும்பிப் போய்விட்டாள்.

பார்வதிக்கு பயமாக இருந்தது. இந்தப் பைத்தியம் எதையாவது எழுதி வைத்துவிட்டு உண்மையாகவே செத்துப் போய்விட்டால் என்ன செய்வதென்று பயந்தாள்.

"என்னதான் ஆகியிருக்கும் அந்த அண்ணனுக்கு?' நான்கு நாட்களாய் சொசைட்டிக்குப் போகாமல் எங்கே போயிருக்கும் என்று நினைத்தவள் அவனைப்பற்றி விசாரிக்கத் தொடங்கினாள். தஞ்சாவூரில் அரசாங்க வேலை கிடைத்துப் போய்விட்டது பிறகுதான் தெரியவந்தது. "அந்தண்ண வேலகெடச்சிப் போவ, நம்ம தலயில ஏறி ஒக்காந்துக்கிட்டுதே இந்த சனியன். அம்மாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆவும்' அவ்வப்போது காந்திமதியை நினைத்து பயந்து கொண்டேயிருந்தாள்.

அடுத்த ஒரு மாதத்திற்குள் காந்திமதியைப் பற்றிய செய்தி ஒன்று பரவியது. நல்லவேளையாக அதில் பார்வதியை அவள் சம்மந்தப்படுத்தவில்லை. இவர்கள் இருக்கும் தெருவில் கடைசி வீடு குமார் வீடு. குமாரின் அப்பாவும் அம்மாவும் சற்று வயதானவர்கள். குமார் அவர்களுக்கு ஒரே பிள்ளை. பட்டப் படிப்பெல்லாம் படித்து முடித்து விட்டு ஆறுமாதமாக வீட்டில் இருக்கிறான். படித்த பிள்ளை என்பதால் வீட்டின் பக்கவாட்டில் ஒரு கொட்டகையைப் போட்டுக்கொண்டு அதில் இருந்து வந்தான். கொட்டகையை வெகு நாகரீகமாய் ஆக்கியிருந்தான். மேசை நாற்காலி, புத்தகங்கள், கண்ணாடி, படுத்துக்கொள்ள உயரப்பலகை இதுபோன்ற பொருட்களைக் கொண்டு அலங்கரித்திருந்தான். சாப்பிட மட்டும்தான் வீட்டிற்குள் போவான். மற்றபடி படிப்பது, எழுதுவது, தூங்குவது எல்லாம் இந்த கொட்டகையில்தான். அவனை ஒத்த படித்த ஆட்கள் வந்தால் மட்டும் கொட்டகைக்குள் உட்காரவைத்துப் பேசிக் கொண்டிருப்பான். வேறு எவரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. குமாரின் அம்மா அப்பாகூட அவனிருக்கும்போது கொட்டகைக்குள் போவது கிடையாது.

அன்றும் அப்படித்தான் குமார் இரவு சாப்பாட்டுக்குப் பிறகு தன்னுடைய கொட்டகையில் வந்து படுத்துக் கொண்டான். அவனின் அம்மாவும் அப்பாவும் வழக்கம்போல வீட்டிற்குள் படுத்துக்கொண்டார்கள். சிறிது நேரத்தில் எல்லோரும் நன்றாக தூங்கிவிட்டார்கள்.

தன் வீட்டிலும் தெருவிலும் எல்லோரும் தூங்கிய பிறகு, தான் படுத்திருந்த இடத்தைவிட்டு எழுந்தாள் காந்திமதி. தூக்கத்தில் நடப்பவளைப்போல நடந்து தெருவைக் கடந்து குமாரின் கொட்டகைக்குள் நுழைந்தாள். இருட்டில் பழகிய அவள் கண்களுக்கு அவன் தலை வைத்திருக்கும் இடமும் கால் நீட்டியிருக்கும் திசையும் நன்றாகத் தெரிந்தது. அவன் படுத்திருந்த அந்த பலகைக்கும் பக்கத்தில் தரையில் அவனுக்கு இணையாய் படுப்பளைப்போல படுத்துக்கொண்டாள். குமார் தூக்கத்தில் உருள்பவனாயிருந்தால் அவள்மீதுதான் உருண்டு விழவேண்டியிருக்கும். நல்லவேளையாக அப்படி யேதும் நடக்கவில்லை. ஆனால் நடு இரவில் சிறுநீர் கழிக்க எழுந்த குமார் கீழே கால் ஊன்ற, காந்திமதியின் மீது காலை வைத்துத் தடுமாறி, விழுந்து, பயந்து, அலறினான். மகனின் அலறல் சத்தம்கேட்டு பாம்போ, பேயோ, பிசாசோ என்று தடிக்கம்பு விளக்குமாற்றுடன் ஓடிவந்தார்கள் குமாரின் பெற்றோர்.

அடிப்பதற்கு முன்னால் அரிக்கனைத் தூண்டிவிட்டு யாரென்று பார்த்தார் குமாரின் அப்பா. கனவில் நிற்பவளைப்போல எந்த குற்றவுணர்வும், பதட்டமும் இல்லாமல் எழுந்து நின்றாள் காந்திமதி. இவளைப் பார்த்து மூன்று பேரும் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சிலரும் வந்து சேர்ந்தனர். கூட்டம் கூடுவதை விரும்பாத குமாரின் அம்மா “ஏதோ தூக்கத்துல நடக்குறமேரி வந்துட்டு போலருக்கு. இத பெரிசி படுத்தாண்டாம். எல்லாரும் போயி படுங்க. இந்தப் பொண்ண நாங்கொண்டு உட்டுட்டு வந்தர்றன்” என்றவள் காந்திமதியின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள்.

இந்தப் பிரச்சனை இதோடு முடிந்து போகவில்லை. மறுநாளும் அதற்கு மறுநாளும்கூட காந்திமதி அதேபோல் நடந்துகொண்டாள். குமாரின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பயமேற்பட்டது. தன் மகன் மீது ஏதாவது பழி விழுந்துவிட்டால் என்ன செய்வதென்று நினைத்தவர்கள் மறுநாள் நடந்த விஷயங்களை வண்டிக்கார மணியிடமும் அவன் சொந்தக் காரர்களிடமும் சொல்லிவிட்டார்கள். விஷயம் ஊரெங்கும் பரவிவிட்டது.
அதற்குப் பிறகு தினமும் இரவில் மட்டும் காந்திமதியின் காலில் சங்கிலிப்போட்டு அதைத் தன் கையில் சுற்றிப் பிடித்தபடியே தூங்கினான் மணி. தன்னை சங்கிலியால் கட்டியதற்கு மறுப்பேதும் சொல்லாமல் கட்டுப்பட்டு கிடந்தாள் காந்திமதி.

அடுத்த சில நாட்களில் பகல் நேரத்தில் தோப்பிற்குச் செல்ல ஆரம்பித்தாள் காந்திமதி. வண்டிக்கார மணிக்கு ஒரு மா தோப்பும் நூற்றைம்பதுக்கு மேற்பட்ட தென்னை மரங்களும் இருந்தன. மரங்களிலிருந்து விழுந்து கிடக்கும் மட்டைகளை பொறுக்கி அடுக்குவது, விறகுகளை பொறுக்கி முட்டு குவிப்பது போன்ற வேலைகளை செய்துகொண்டிருந்தாள். பெண்டாட்டிக்கு தோப்பை கவனிக்கும் அக்கறை வந்துவிட்டது என்று நினைத்தான் மணி. அவனுக்கு காந்திமதியின் இந்தச் செயல் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது. இனிமேல் படிப்படியாக நம் பெண்டாட்டி சரியாகிவிடுவாள் என்று நம்பினான். காந்திமதி எப்போது வேண்டுமானாலும் தோப்பிற்கு போகட்டும் வரட்டுமென்று அதுபற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் இருந்தான்.

மணியின் தோப்பிற்கு அடுத்த தோப்பு இராமையன் வாத்தியாருக்குச் சொந்தமானது. தன் தோப்பிற்குள் பெரிய கொட்டகை ஒன்றை கட்டியிருந்தார் அவர். தேங்காய் வெட்டு முடிந்து, தேங்காய்களை லாரியில் ஏற்றி விடும்வரை அந்தக் கொட்டகைக்குள்தான் போட்டு வைத்திருப்பார். வாத்தியாருக்கு இரண்டு ஜோடி உழவு மாடுகளும் ஒரு டயர் வண்டியும் ஒரு ஜோடி வண்டி மாடுகளும் இருந்தன. மாடுகளைக் கட்டுவது, வண்டி நிறுத்துவது எல்லாம் இந்த கொட்டகைக்குள்தான். படிப்பை பத்தாவதோடு நிறுத்திவிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்த அண்ணன் மகன் ரவியை, தன் வண்டியை ஓட்டும்படி அமர்த்தியிருந்தார். பெரும் பாலான நாட்கள் வண்டி தேங்காய் ஏற்றப்போகும். தினமும் வண்டிக்கு வாடகைப் பணம் கிடைத்து வந்ததால் ரவியின் கையிலும் எப்போதும் காசு புழங்கிக் கொண்டேயிருக்கும்.

வண்டி ஓட்டினாலும்கூட ரவி நாகரிகமாய் உடுத்திக்கொள்வான். சோப்பு போட்டு குளிப்பது, துணிமணிகளை சுத்தமாய் வைத்துக்கொள்வது, துளசியாப்பட்டிணம் மரைக்காயர் வீட்டிலிருந்து வெளிநாட்டு சென்ட் வாங்கிவந்து போட்டுக் கொள்வது. எப்போது பார்த்தாலும் ஒரு பணக்கார தோரணையுடனே இருந்தான் ரவி.

வண்டி மாடுகளையும் உழவு மாடுகளையும் பராமறிப்பதுகூட ரவியின் வேலைதான். மாட்டுக்குத் தேவையான வைக்கோலை வேறொரு இடத்தில் இருக்கும் போரிலிருந்து எடுத்துவந்து போடவேண்டும். வைக்கோல்கட்டை தலையில் தூக்கிவர நாகரிகம் பார்க்கும் ரவி வண்டியை ஓட்டிக்கொண்டுபோய் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையான வைக்கோலை பிடுங்கி வண்டியில் போட்டுக்கொண்டு வருவான். அன்றும் அப்படித்தான் வண்டியில் வைக்கோலை போட்டு நிரப்பிக்கொண்டு வந்தான். வைக்கோலுடன் வண்டியை கொட்டகைக்குள் நிறுத்திவிட்டு மாடுகளுக்கு தண்ணீர் காட்டினான். தனித் தனியாக அவற்றைக் கட்டினான். சூரியன் அப்போதுதான் உச்சியைவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தது. பொழுதுபோகும் நேரத்தில்தான் மாடுகளுக்கு தீனி அள்ளிப்போடுவான். பொழுது போகும்வரை இங்கே எதற்காக உட்கார்ந்திருக்கவேண்டும் என்று நினைத்தவன் வீட்டிற்குப் போய்விட்டான்.

இதையயல்லாம் தன் தோப்பிலிருந்தபடியே கவனித்துக்கொண்டிருந்தாள் காந்திமதி. அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. வீட்டிற்குப் போகாமல் தன் தோப்பிலேயே நீண்ட நேரம்வரை உட்கார்ந்திருந்தாள். பொழுதுபோகும் நேரத்தில் வாத்தியார் வீட்டு தோப்புக் கொட்டகைக்குள் நுழைந்தாள். தன் புடவையை அவிழ்த்து பந்துபோல சுருட்டி வண்டிச் சக்கரத்தில் செறுகி வைத்தாள். வெறும் உள்பாவாடை சட்டையுடன் வண்டியில் கிடந்த வைக்கோலுக்குள் புகுந்து மல்லாந்து படுத்துக்கொண்டாள். தன் கால்களும் உடம்பும் வெளியே தெரிந்து விடாதபடி வைக்கோலால் நன்றாக மூடிக்கொண்டாள். பிணம்போல அசையாமல் கிடந்தாள். ரவி வருவான் என்று அவள் எதிர்பார்த்தது போலவே, புதுப்பட பாடலொன்றை சன்னமாய் பாடியபடி வந்தான். ரவியின் காலடியோசை வண்டிக்குப் பக்கமாய்க் கேட்டது. மூச்சுவிட்டாலும் தெரிந்துவிடுமோ என்று நினைத்த காந்திமதி மூச்சை அடக்கிக்கொண்டு கிடந்தாள்.

வழக்கமாய்ச் செய்யும் வேலைதான் என்பதால் ஒருவித அலட்சியத்தோடு வண்டிக்குள் கிடந்த வைக்கோலை இரண்டு கையாலும் சேர்த்து அள்ளிக் கொண்டுபோய் பக்கத்தில் கிடந்த மாடுகளுக்குப் போட்டான். மறுமுறை வைக்கோல் அள்ளுவதற்காக வண்டியின் அருகே வந்தான். வண்டியில் இவன் முன்பு அள்ளிய இடைவெளியில் இரண்டு கால்கள் மட்டும் தெரிந்தன. வைக்கோலுக்குள் இருந்து நீண்டு கிடந்த அந்தக் கால்களைப் பார்த்தவுடன் ரவி தன் ரத்தம் உறையும் அளவிற்கு நடுங்கிப் போனான். பேயோ, பிசாசோ என்று பயந்த ரவி "வால்' என்று கத்திவிட்டான். அவன் அங்கிருந்து ஓடிவிடலாமென்று நினைத்த நேரத்திற்குள் சடக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் காந்திமதி.

“யாம்ப்பா இப்புடி கத்துற?” என்று கேட்டவாறே வண்டியைவிட்டு இறங்கி வந்து பாவாடையை உதறி விட்டுக்கொண்டாள் காந்திமதி. சாவகாசமாய் புடவையை எடுத்துக்கொண்டு தன் தோப்பிற்குள் நுழைந்தாள்.
ரவி போட்ட சத்தம் கேட்டு, தூரத்திலிருந்து ஓடிவந்த சிலர், அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற ரவியை விசாரித்தார்கள். அவன் எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் கூறி “அந்த சின்னம்மா இப்புடி செய்யுமுன்னு நான் கொஞ்சம்கூட நெனைக்கல” என்றான். அவன் முகமெங்கும் வியர்த்து வெளிறிப் போயிருந்தது.

வண்டிக்கார மணியும் இதைக் கேள்விப்பட்டான். அவனுக்கு அவமானமாக இருந்தது. இருந்தாலும் தன் பெண்டாட்டியை அவன் எதுவும் சொல்லவில்லை. பகலிலும் காந்திமதியை சிறை வைத்தான். முழு நேர காவலில் இருந்தாள் காந்திமதி. அதைப் பற்றி அவள் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. எப்போதும்போல ஊமையாய் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள்.

காந்திமதியின் இச்செயல்களையயல்லாம் சகித்துக் கொண்டு எப்படித்தான் மணியால் பொறுமையாக இருக்க முடிகிறதோ என்று பார்ப்பவர்கயளல்லாம் பேசிக் கொண்டார்கள். நெருங்கிய உறவினர்கள் சிலர் காந்திமதியிடம் மணியின் அருமை பெருமைகளை எடுத்துச்சொல்லி அவனிடம் இனியாவது நல்லவிதமாய் நடந்துகொள்ளும்படி புத்திமதி கூறினார்கள். யார் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னபோதும் அவை தன் காதில் கொஞ்சமும் விழவில்லை என்பதுபோல நடந்துகொண்டாள் காந்திமதி.

வீட்டிற்குள்ளேயே ஒருத்தியை அடைத்து வைத்து எத்தனை நாட்களுக்கு காவலிருக்க முடியும். தவிரவும் காந்திமதியின் அசாத்தியமான அமைதியும் அடக்கமும் காவல் இருப்பவர்களையே கூச்சப்பட வைத்தது. ஒரு நல்ல பெண்ணை தேவையில்லாமல் சந்தேகப்பட்டு காவல் காத்துக்கொண்டிருக்கிறோமோ என்று நினைக்க வைத்தது. அதற்கு மேற்கொண்டு சொந்தக்காரர்கள் யாரும் காந்திமதிக்கு காவலிருக்க முன்வரவில்லை. வண்டிக்கார மணியாலும் தொடந்து வீட்டிலிருக்க முடியாது என்றானபோது காந்திமதியைப் பற்றிய நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாய் வளர்த்துக் கொண்டான். ஒரு கட்டத்திற்குமேல், இனிமேல் அவளால் எந்தப் பிரச்சனையும் வராதென்றெ நம்பினான். தைரியமாய் வேலைக்குப்போக ஆரம்பித்தான்.

நல்ல பெண்மணியைப்போல வீட்டையே வளைய வந்துகொண்டிருந்த காந்திமதி திடீரென்று ஒருநாள் காணாமல் போய்விட்டாள். வீட்டை விட்டு எப்போது கிளம்பினாள், எந்தவழியாக எந்தப்பக்கம் போனாள் என்று எதுவும் தெரிய வில்லை. யார் கண்ணிலும் அகப்படாமல் மாயமாய் அவள் மறைந்துபோனது மணிக்கும் அவள் பிள்ளைகளுக்கும் அதிர்ச்சியாகிப் போனது. நாலாப் பக்கமும் ஆள் வைத்துத் தேடினார்கள். சொந்தக்காரர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் வீடுகளிலும் தேடிப் பார்த்தாகிவிட்டது. எங்கும் கிடைக்கவில்லை.

காந்திமதியின் பெரியமகன் ஒன்பதாம் வகுப்பிலும் சிறியவன் எட்டாம் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வருடமாக அம்மாவைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போன ஏமாற்றத்தால் காந்திமதியின் மகள் வள்ளி சோர்வடைந்தாள். இருந்தாலும் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் தானே ஏற்றுக் கொண்டாள். தன் அப்பாவுக்கும் அண்ணன்களுக்கும் தாயிக்குத் தாயாய் நடந்துகொள்ள ஆரம்பித்தாள்.

என்னதான் தங்கை கவனித்துக்கொண்ட போதும் காய்ச்சலென்று படுக்கையில் விழுந்த சிறியவன் சரியான வைத்தியம் செய்யாததால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இறந்துபோனான். பெண்டாட்டி போனதோடு இல்லாமல் பிள்ளையும் இப்படி அநியாயமாய் செத்துப் போய்விட்டானே என்று துடித்துப் போனான் வண்டிக்கார மணி.

பார்வதியின் அம்மா காமாட்சி ஆய்ந்த கீரையை தனியாய் வைத்துவிட்டு கீரைக் கழிவுகளைக் கூட்டி முறத்தில் அள்ளினாள். விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள் பார்வதி. துருபத குமாரியுடன் குடிலுக்குத் திரும்பிய பாண்டவர்கள் வெளியே நின்றபடி உள்ளேயிருந்த குந்தியிடம் “அம்மா இன்று நாங்கள் ஒரு கன்னியுடன் வந்திருக்கிறோம்” என்று சொல்ல, அது கனி என்று குந்தியின் காதில் விழுகிறது. “ஐவரும் எடுத்துக்கொள்ளுங்கள்” என்கிறாள் குந்தி.

கன்னி என்பது கனி என்று எப்படி காதில் விழுந்திருக்க முடியும். பார்வதிக்கு அது உண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. சூரியதேவன், தர்மதேவன், வாயுதேவன், இந்திரன் இவர்களிடமிருந்து புத்திரர்களை மட்டுமல்லாமல், உலக சூட்சுமங்களை பற்றிய ஞானத்தையும் பெற்றிருந்த குந்தியின் புலனறிவிலும், நுட்பமான நோக்கிலும் குறையேற்பட்டிருக்க வாய்ப்பிருக்காது என்றே தோன்றியது பார்வதிக்கு.

புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வெளியே எழுந்து வந்தாள். குப்பைக் குழியை நோக்கி நடந்துகொண்டிருந்த தன் அம்மாவின் பின்னால் இவளும் போனாள்.

“அம்மா”

“என்ன?”

“நானும் ஒரு நட காந்திமதி அக்காவ போயி பாத்துட்டு வரட்டா?” என்றாள் தயங்கியபடியே.

“நீ எதுக்கு அங்க போவணுங்குற?”

“சும்மாதாம்மா. ஒடனே வந்தர்றன்.”

“பொயிட்டு சீக்கிரமா வந்துடு.”

இவ்வளவு எளிதில் அவள் அனுமதிப்பாள் என்று பார்வதி எதிர்பார்க்கவில்லை. சற்று தாமதித்தாலும் அம்மாவின் மனம் மாறிவிடவும் வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தவள் அப்போதே வீட்டின் பின்பக்க வழியாக காந்திமதியின் வீட்டிற்குப் போனாள்.

வீட்டு வாசலில் நின் றிருந்த காந்திமதியின் மகள் வள்ளி “வாங்க சித்தி” என்றாள். அவளின் மீது அந்த நேரத்தில் ஏற்பட்ட பரிவும் பச்சாதாபமும் பார்வதியின் நெஞ்சை கனக்கச் செய்தது. அவளை அணைத்தபடி உள்ளே போனாள். சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டிப்போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் காந்திமதி. மடியில் மகனின் புத்தகங்கள். கண்கள் குத்திட்டு நின்றன. வள்ளியை அணைத்தபடியே காந்திமதியின் எதிரில் போய் உட்கார்ந்தாள்.

“அக்கா” என்றாள் மெதுவாக.

நிமிர்ந்து பார்வதியைப் பார்த்தவள் ஒரு ஞானியைப்போல பார்வையை விலக்கிக் கொண்டாள். அவளுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் பார்வதி. முகத்தில் ஒருவிதமான அமைதி தெரிந்தது. அது குற்றவுணர்வு எதுவுமற்ற பரிசுத்தமான பேரமைதியாகத் தெரிந்தது. வாயில் போட்டு மென்ற தேங்காயின் பால் இதழ்கடையில் ஒழுகுவதைப்போல அப்பேரமைதியின் ஓர் ஓரத்தில் மகனை இழந்துவிட்ட சோகம் வழிந்து கொண்டிருப்பதைப்போலவும் தோன்றியது.

ஊரைவிட்டு ஓடிப்போன இந்த மூன்று வருடத்தில் யாரிடம் போய் வரம் வாங்கிக் கொண்டு வந்திருக்கும் இந்த அக்கா? இதன் முகத்தில் எப்படி வந்தது இப்படி ஒரு அமைதி. புத்தரின் முகத்தில் தெரியும் அதே சாந்தம் எப்படி வந்தது இந்த அக்காவின் முகத்தில்? பார்வதி பலவாறாக யோசித்தபடி அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சூரியன மறைச்சி, என்ன குருடியாக்கி, யாம் புள்ளய கொன்னுட்டல்ல”

மந்திரத்தைப்போல உச்சரித்த காந்திமதியின் வார்த்தைகளைக் கேட்டு திடுக்கிட்டு சடாரென்று எழுந்தாள் பார்வதி. சிலை ஒன்று திடீரென்று வாய்திறந்து பேசியதுபோல, பேசிய தன் அம்மாவைப் பார்த்து, மிரண்டு பின்னகர்ந்தாள் வள்ளி. அவளுக்கு தன் அம்மா பேசியது என்னவென்று புரியவில்லை.

இங்கிருந்து உடனே போய்விட வேண்டுமென்று கிளம்பிய பார்வதி கடைசியாய் ஒருமுறை திரும்பி காந்திமதியின் முகத்தைப் பார்த்தாள். அதே அமைதியான முகம், ஆனால் அதற்குப் பின்னால் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது அணையாத தீ.

Pin It