“நண்பர் கம்பதாசனை யாவரும் அறிவர்... இவர் கவிதைகளைப் படிக்கும்போது நமக்கு ஷெல்லியின் ஞாபகம் வருகிறது. அவனது கற்பனை அடுக்குகளின் கவின் விளங்குகிறது. டெனிசனின் அமர காவியக் கதையான ‘இன்மெமோரியம்’ போன்ற அகன்ற தன்மை ஆங்காங்கே ஒளி விடுகிறது.

சங்க இலக்கியமான கலித்தொகையின் கனிவு சிற்சில இடங்களில் கவின் விடுகிறது” என்று 1952 - ஆம் ஆண்டு ச.து.சு. யோகியாரால் பாராட்டப் பெற்றவர், கவிஞர் கம்பதாசன்.

கவிஞர், புதுவையை அடுத்து வில்லியனூர் எனும் சிற்றூரைச் சேர்ந்தவர்.

இவரின் தாயார் பாப்பம்மாள். தந்தை சுப்பராயன். 1916 -ம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் கவிஞர் பிறந்தார். களிமண்ணால் கைவினைப் பொருள்கள் செய்யும் குலாலர் சமூகத்தின் எளிய குடும்பத்தில் பிறந்தவர் இவர். இயற்பெயர் அப்பாவு.

இளமை காலத்திலேயே இவரின் குடும்பம், புதுவையைக் காலி செய்து விட்டு, சென்னை புரசைவாக்கத்தில் குடியேறிவிட்டது.

ஆறாம் வகுப்புக்கு மேல் இவரின் கல்வி தொடரவில்லை. குடும்பத்தில் வறுமை. கலைத்துறையில் நாட்டம் கொண்ட கம்பதாசன், சிறு வயதில் நாடகத் துறையில் நுழைந்தார்.

அங்கே பின்பாட்டுக்காரராகவும், ஆர்மோனியம் வாசிக்கும் பக்க வாத்தியக் காரராகவும், நாடகங்களுக்குப் பாட்டு எழுதியும் வந்தார். பின்னர் திரைத்துறையில் நுழைந்தார்.

திரௌபதி வ-ஸ்திராபரணம், சீனிவாச கல்யாணம் போன்ற சில படங்களில் நடித்தார். 1940 ஆம் ஆண்டு வாமன அவதாரம் என்ற படத்தில் முதல் திரை இசைப்பாடல் எழுதினார் இவர்.

கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி படத்தில் சிவாஜி நடிப்பில் சந்திரபாபு பாடும் “ஜாலி லைப் ஜாலி லைப்” என்ற பாடலும், மல்லிகா படத்தில் “வருவேன் நான் உனது வாசலுக்கே, ஏனோ அவசரமே எனை அழைக்கும் வானுலகே” போன்ற பல பாடல்களை கம்பதாசன் எழுதி இருக்கிறார்.

மொகல் - இ - ஆசம் என்ற இந்தி படத்தின் மொழி மாற்றாக வந்த அக்பர் திரைப்படத்தில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் நௌஷத் இசையில் பி.சுசிலா பாடிய “கனவு கண்ட காதல் கதை கண்ணிராச்சே” என்ற பாடல் இறவாப் புகழுடன் இன்றும் இசைக்கக் கேட்கிறோம்.

ஏராளமான கவிதைகளும் காப்பியங்களும் எழுதியுள்ள கவிஞர் கம்பதாசன் ஒரு சோசிலிச சிந்தனையாளர். 1950&களில் காங்கிரஸ் இயக்கம், திராவிட இயக்கம், போதுவுடமை இயக்கம் எனும் முப்பரிமானங்களுக்கு இடையில் தனித்துவமான தன் சோசலிசக் கருத்துகளை சமரசம் இன்றி கவிதைகளாக்கினார்.

1) தொழிலாளி, 2) ரிக்ஷகாரன், 3) கொல்லன், 4) மாடுமேய்க்கும் பையன், 5) செம்படவன், 6) கூடை முடைபவன், 7) ஒட்டன், 8) பிச்சைக்காரன், 9) பாணன் போன்ற இவரின் கவிதைகளுக்கான தலைப்புக்களே இதற்கு சான்று.

கந்தை உடைதான் இடையிலுண்டு - கையில்

கைதியைப் போலவே வில்லையுண்டு

சந்து முனையில் நாய்களைப் போலவே - என்றன்

சகாக்களின் கூட்டமும் நிற்பதுண்டு

என்று தெருச் சந்துகளில் கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார் தன் கவிதையில். அவர்களை என்றன் சகாக்களின் கூட்டம் என்று சொல்வதில் இருந்து இவரின் சமத்துவ சிந்தனையைக் காணலாம்.

நீங்கள் சிலபேர் நிலம் படைத்தோர்

நாங்கள் பல பேர் ஏர் உழுவோர்

நீங்கள் சில பேர் விருந்துண்போர்

நாங்கள் பல பேர் பசித்திருப்போர்

நீங்கள் சில பேர் மாளிகையில்

நாங்கள் பல பேர் மண்குடிலில்

இயல்பாக வந்து விழும் எளிய கவிதை வரிகளில் என்னே பார்வை! என்னே ஏக்கம்! இந்தச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வில் சிலர் வளமையிலும், பலர் வறுமையிலும் வாழ்வதை உடல் கூச, உளம்கூச இப்படிச் சொன்னவர் கவிஞர் கம்பதாசன்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையான்” என்பார் வள்ளுவர் இதோ கம்பதாசனின் வரிகள்.

மண்பாண்டம் செய்யும் குயவனும் - புது

மனைகட்டித் தந்திடும்  கொத்தனும்

எண்ணெய் விளைத்திடும் வாணியன் - சிகை

எழிலுறச் செய்திடும் நாவிதன்

புண்ணைத் துடைக்கும் மருத்துவன் - கல்வி போதிக்கும் பள்ளி ஆசானும்

கண்ணுக்குத் தோற்றம் வேறாயினும் - அவர் காணும் பசியே சமத்துவம்

இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையோ! தொழில் வேறு. தொழில் செய்பவன் வேறு. இவைகளில் வெவ்வேறு தோற்றம் இருக்கின்றன. ஆனால் தோற்றமே இல்லாத பசி மட்டும், அனைவருக்கும் சமத்துவமான தோற்றமாய் இருப்பதை இந்த வரிகள் காட்டுகின்றன.

நலமுறவே உழைப்பவர்க்க உணவு வேண்டும்

நியாயமிது நியாயமிது நியாயமிது

அல்லவென மறுப்பார்கள் கடவுளேனும்

அடுத்தகனம் அவர்தலை எம்கால் வீழும்

அனல் தெரிக்கும் வரிகள் இவை. கொதிக்கிறார் கவிஞர் கம்பதாசன்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் என்று பொதுவாகத்தான் சொன்னார் வள்ளுவர். ஆனால்  கடவுளின் தலை காலில் விழும் என்று குறிப்பாகச் சொல்லும் துணிச்சலின் பெயர் கம்பதாசன்.

தொட்ட இடமெல்லாம் தமிழ்மணக்கும் - அதில்

சுதந்திரக் காதல் குரல் கேட்கும்

சட்டமொடு சாதி பேதத்தை - பொய்ச்

சாமி தலையையும் தாரணி மேல்

வெட்டிப் பிளந்திட வாள் மொழிகள் - அதில் விடுதலை ஜோதி பளபளக்கும் என்று ஆர்ப்பரித்து அன்று முழங்கிய கவிஞர், 1961க்கு பின்னர் 10 ஆண்டுகள் வறுமையின் கோரப் பற்களில் சின்னாபின்னப்பட்டுப் போனார்.

சுற்றமும், நட்புகளும் ஒதுங்கிப் போய்விடத் தனித்துவிடப்பட்டு, சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 1973ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள் மரணத்தைத் தழுவினார்.

அப்போதும் அவருக்குத் துணையாக இருந்தவை இரண்டு. ஒன்று வறுமை, மற்றொன்று காசநோய்!                 

Pin It