மணமுறிவு உரிமை இருப்பதாலேயே, அனைவரும் அதை நோக்கிப் போய்விடுவதில்லைஞ் அப்படித்தான் தேசிய இனங்களுக்கான பிரிந்து போகும் உரிமையும் என்பார் லெனின். அவர் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை வரலாற்றுப் போக்கில் நாம் பார்க்க முடியும். பொதுவாக்கெடுப்பு நடத்தப்பெற்று, ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் பிரிந்து போகாமல் அப்படியே நீடிக்கும் பல நாடுகள் உள்ளன. கனடாவில் இருந்து க்யூபெக் பிரிந்து போக நினைத்தபோது, ஒரு முறையன்று, 1980,1995 என இரண்டு முறை பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முதல்முறை 19.12, இரண்டாவது முறை 1.16 விழுக்காடு என்ற வாக்கு வித்தியாசத்தில் பொதுவாக்கெடுப்புத் தோல்வியில் முடிந்தது. அண்மையில், கடந்தாண்டு (2014) இங்கிலாந்திலிருந்து ஸ்காட்லாந்து பிரிந்து போவதற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குறைந்த வாக்கு எண்ணிக்கையில் அது தோல்வியுற்றது. சில நாடுகள், பேச்சுவார்த்தையில் பிரிந்து போன வரலாறுகளும் இருக்கின்றன. இந்தோனேஷியாவில் இருந்து கிழக்குத் தைமூர் பிரிந்தது, சூடானில் இருந்து தெற்கு சூடான் பிரிந்தது அப்படித்தானே?
இதோ, ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமென்று, கேட்டலோனியாவில் உரிமைக்குரல் கேட்கிறது. ஏற்கனவே இறையாண்மையுள்ள தன்னாட்சி உரிமை பெற்ற பகுதிதான் கேட்டலோனியா. ஸ்பெயினின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்திவாய்ந்த, கேட்டலோனியாவில், கடந்தாண்டு நவம்பரில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஏறத்தாழ 80.76 விழுக்காட்டினர் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.
ஆனால், ஸ்பெயின் நாட்டின் பிரதமர் ரஜாய் இந்த வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்த போதும், தனி நாட்டுக் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லும், கேட்டலோனியாவின் பிரதமர் ஆர்டர் மாஸ் க்கு ஆதரவு பெருகி வருகிறது. கேட்டலோனிய நாடாளுமன்றத்திலும் தனி நாட்டு ஆதரவாளர்களே பெரும்பான்மை இடத்தைப் பிடித்துள்ளனர். இன்னும் 18 மாதங்களில், கேட்டலோனியா என்னும் புது நாடு உதயமாவது உறுதி என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இப்படி, இந்தப் பூமிப்பந்தில் உள்ள எல்லா தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமை அனுமதிக்கப்பட்டு, பொது வாக்கெடுப்புகள் நடத்தப்படும்போது, அதே காரணங்களுக்காக விடுதலை கோரி போராடிவரும், ஈழத்தமிழினத்திற்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவதேன்? மேசையில் உட்கார்ந்து பேசிப் பிரிந்த நாடுகள் எத்தனையோ இருக்க, கடந்த முப்பது ஆண்டுகளாக ஈழத்தமிழர்களின் கோரிக்கை மட்டும் சர்வதேச சமூகத்தின் செவிகளில் விழாது போனது எப்படி?
நேற்றுவரை நண்பர்களாக இருந்தவர்கள்கூட, இன்று சுமூகமாகப் பிரிந்து போக முடிகிறது. ஆனால், இனப்படுகொலை வரை துணிந்துவிட்ட சிங்கள தேசிய இனத்தோடு, தமிழ்த்தேசிய இனத்தை ஒன்றுபட்டு வாழ அறிவுறுத்துகின்றன, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள்.
தனித் தமிழ் ஈழம் தான் தீர்வு என்கின்ற முடிவை, 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலமும், அதைத் தொடர்ந்து, 1977 தேர்தல் வழியாகவும் ஈழத்தமிழர்கள் உலகிற்கு அறிவித்துவிட்டனர். இது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீர்மானம் அன்று. ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் தீர்மானம்.
அந்த லட்சியத்தை வென்றெடுக்க இறுதி வரைப் போராடியவர்கள் புலிகள். இன்றைக்கு இந்தியா, இலங்கை ஆகிய தமிழ்ப்பகை நாடுகளின் கூற்றுப்படி, விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டுவிட்டது. இப்போது அங்குள்ள தமிழர் கட்சிகள், ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட்டார்கள். ஆனாலும் அங்கே, தமிழர்களுக்கு வாழ்வதற்கான அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
மனித உரிமைகளை மதிக்காத சிங்களவர்கள், தேசிய இன உரிமையை மதிப்பார்கள் என சர்வதேச சமூகம் எதிர்பார்ப்பது எத்தனை மடத்தனமானது! இலங்கைத் தீவில், பண்பாடு மிக்க தமிழ்த்தேசிய இனம் வாழ்ந்தது என்கின்ற சிறப்பு அடையாளத்தை வரலாறு சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்றால், அங்கே எஞ்சி இருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்ற பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிக்கின்ற அனைவரும் இதைத்தான் வலியுறுத்துகின்றனர்.
ஆனால், உலக அரங்கில் இதை முன்மொழிய வேண்டிய இந்தியாவோ, சிங்களவனின் கொல்லைப்புற நண்பனாக இருக்கிறது. ஒரே தீவில் உள்ள இரண்டு தேசிய இனங்களில், ஒன்றின் இறையாண்மைப் பற்றிக்கவலைப்படும், அணிசேரா கொள்கை வகுத்த இந்தியா,மற்றொரு இனத்திற்கும் இறையாண்மை உண்டு என்பதை எண்ணிப்பார்க்க மறுக்கிறது. எப்போதும் அதற்கு, தமிழ், தமிழர் என்றால் எட்டிக்காய்தான், ஏமாற்றுப் போக்குதான்.
ஓடிவந்த திபெத் மதத் தலைவருக்கு அடைக்கலம் கொடுத்ததோடு, புலம்பெயர்ந்த அரசாங்கம் அமைக்க குளு குளு சூழலில் இடத்தையும் தாரை வார்த்துக் கொடுத்த இந்தியாவுக்கு, வயதான காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக வந்த பார்வதி அம்மாவை அனுமதிக்க மனதில்லை. திபெத் அகதிகள் ஏதோ சொந்த நாட்டில் இருப்பது போல சுதந்திரமாக உலா வரும் இதே நாட்டில், ஈழத்தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
த்தலாய்லாமாவால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்ப முடியும், ஆண்டன் பாலசிங்கம் இந்தியா வந்து லண்டன் செல்லக் கூட அனுமதி இல்லை. தர்மசாலாவில், தலாய்லாமாவின் பிறந்தநாளைக் கொண்டாட முடியும், ஈழ அகதிகளால், மாவீரர்களாகிவிட்ட தங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதி கிடையாது.
ஈழத்தில் மீள் குடியேற்றம், காணி உரிமைகள், காவல்துறை அதிகாரம் எல்லாவற்றுக்காகவும் தொடர்ந்து போராடுவோம். ஆனால் அது மட்டும் போதாது. அவற்றைத் தக்க வைத்துக் கொள்ள, சுதந்திரத் தனி நாடு அவசியம் என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். முற்றிலும் வேறுபட்ட மொழி, கலாச்சாரம், அரசியல், புவி அமைப்பு கொண்ட இரு தேசிய இனங்கள் ஒன்றுபட்ட நிலப்பரப்பில் வாழ முடியாது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
போர்க்குற்றத்திற்கும் இனப்படுகொலைக்கும் ராஜபக்சேவைத் தண்டிக்க, சர்வதேச விசாரணை கோரும் போராட்டங்கள் ஒரு பக்கம் நடக்கட்டும். இன்னொரு பக்கம், ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெறட்டும். புலம்பெயர்ந்த தமிழினம், தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலை விடுத்து, தமக்கென ஒரு சுதந்திர அரசு அமைவதற்கான முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தட்டும்.
வழிகாட்டி எம்மை உருவாக்கும் - தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி
விழிமூடி இங்கே துயில்கின்ற - வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி
என்ற வரிகள் வெற்றுச் சடங்குக்கானவை அல்ல, தாயக விடுதலைக்கானவை என்பதில், புலம்பெயர்ந்த தமிழர்கள் மேலும் மேலும் உறுதி பெற்றால், அனைவருக்கும் சாத்தியமாகும் பொதுவாக்கெடுப்பு, ஈழத்திற்கும் சாத்தியமாகும்!