Sophia Lois“ஆனி முத்து வாங்கி வந்தேன்

ஆவணி வீதியிலே

அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன்

அழகுக் கைகளிலே

நூலை எடுக்கவும்,

மாலை தொடுக்கவும் நேரம் இல்லையடியோ?” என்று பாடிக்கொண்டு, வீட்டு வேலைகளைச் செய்யும் பெண்களே வீட்டுக்கும் நாட்டுக்கும் தேவை என்பதாகப் “பாமா விஜயம்” திரைப்படம் சொல்லும்.

இன்றைக்கு இருக்கும் பெண்கள்,

“ஆனி முத்து வாங்கி வந்தேன்” என்று பாடுபவர்கள் அல்ல.

ஆளும் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் (குறிப்பாகப் பெண்ணடிமைத்தனத்தை முன்னெடுக்கும் பா.ஜ.க.வின் பெண் தலைவர்)

ஆய்வுப் படிப்புப் படிப்பவர் மற்றொருவர்.

இது பெரியாரின் சமூக நீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்.

மாணவியின் முழக்கம்:

இவர்கள் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் இந்த வாரம் முழுதும் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. ஆய்வு மாணவி சோபியா, விமானப் பயணத்தின் போது பா.ஜ.க வின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களைப் பார்த்து “பாசிச பா.ஜ.க ஆட்சி ஒழிக!” என்று முழக்கமிட, அவர் மேல் தமிழிசை புகார் அளிக்க அந்த மாணவி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

பெண்ணியப் பார்வை:

தமிழிசை சவுந்தர்ராஜன் அவர்களைக் கண்டித்துப் பல குரல்கள் ஒலித்தன. அதே நேரத்தில் யாரும் மாணவி சோபியா செய்ததைச் சரியென்றும் சொல்லவில்லை. இந்நேரத்தில் புதிய குரல் அமைப்பின் தோழர் ஓவியா அவர்கள் மாணவி சோபியா செய்த தவற்றை முதன்மையானதாகச் சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும் பொது வாழ்வில் ஈடுபடும் பெண்களை இந்தச் சமூகம் அணுகுவதில் காணப்படும் வேறுபாட்டையும் எடுத்துரைத்தார்.

தமிழிசை அவர்களைப் பெண் காவலர் கையாண்ட விதத்தைக் காணொளியில் பார்த்த போது ஒரு கட்சியின் ஆண் தலைவரைக் காவலர்கள் இப்படித்தான் கையாளுவார்களா என்ற கேள்வி எழுந்தது. பெண்களிலேயே அதே கட்சியைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் அவர்களை இப்படித் தான் காவலர்கள் கையாளுவார்களா என்ற கேள்வியும் எழுந்தது. பாலின வேறுபாட்டோடு வருண வேறுபாடு இருப்பதையும் உணரமுடிகிறது.

இதற்கு முன் தலைவர்கள் முன்னிலையில் முழக்கமிடப்பட்ட போதும், முகத்தில் மையடிக்கப்பட்ட போதும், அச்செயலைச் செய்தவர்களே கண்டிக்கப்பட்டிருக்கின்றனர்.

மென்மையான போக்கைக் கடைப்பிடித்திருக்கலாம் என்கிற கூற்றும் சொல்லப்படுகிறது. அது சரிதான் என்றாலும் தவறு செய்தவர் மீது புகார் கொடுப்பதை எந்த வகையிலும் தவறு என்று சொல்ல முடியாது. புகார் கொடுக்கக் கூடாது என்று சொல்வது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?

‘மென்மையான போக்கு, இருபாலருக்கும் பொதுவாகச் சொல்லப்பட்டாலும், பெண்கள் பொதுவாழ்வில் மென்மையாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படும்போது அது, குடும்பத்தைப் பெண்கள் அரவணைத்துத் தியாகியாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதன் நீட்சியாகவே இருக்கிறது’ என்கிற கருத்தும் சிந்தனைக்காக வைக்கப்படுகிறது.

எதிர்ப்பில் நேர்மை:

எடுத்தவுடனேயே பா.ஜ.க.வின் பக்கம் தான் தவறு என்று முடிவெடுக்காமல் நடந்ததைச் சரியாகப் புரிந்துகொண்டு தவறு செய்தவரை நேர்மையோடு கண்டித்துவிட்டு, பின்னர் பா.ஜ.க வின் அத்துமீறல்களைக் கண்டிக்கும் போதுதான் நம்முடைய கண்டனங்களுக்குரிய மதிப்பு அதிகமாகும் என்பதே இக்கட்டுரையின் மூலம் எடுத்து வைக்கவிரும்பும் கருத்து.

எதிரியை எதிர்க்கும் போது கூட நாம் நேர்மையான முறையைக் கையாள வேண்டும். அப்போது தான் நம்முடைய எதிர்ப்பின் நியாயம் எடுபடும். இல்லாவிட்டால் நம் பக்க நியாயத்திற்குப் பங்கம் ஏற்பட்டுவிடும். பின்னர் மகாபாரதக் கதைகளுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லாது போய்விடும்.

பாசிச பா.ஜ.க:

பொதுவாக விமானப் பயணத்தின் போது நடக்கும் சம்பவங்கள், விமான நிறுவனத்திடம் புகார் செய்யப்படும். அந்நிறுவனம் தவறு இழைத்தவருக்கு விமானத்தில் பயணிக்கத் தடையோ, அபராதமோ விதிப்பதை அன்றாடம் செய்தித்தாள்களில் பார்க்கிறோம். இதில் பிரபல திரைப்பட நடிகர்களும் அமைச்சர்களும் அடங்குவர். ஆனால், இங்கு காவல் துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டு தொடர் அச்சுறுத்தல்கள் நிகழ்த்தப்படுவது கண்டனத்துக்குரியது. குறிப்பாக அந்தப் பெண் ஆபாசமாகத் திட்டப்படுவது பெரிய அளவில் கண்டிக்கப்பட வேண்டியது. மாணவி சோபியாவின் செயலைப் பெரிதுபடுத்தாமல் தமிழிசை அவர்களும், காவல் துறையினரும் விட்டுவிட வேண்டும்.

பத்திரிக்கைத் துறையில் பணியாற்றும் பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரை எட்டும் தூரத்தில் இருந்தும் கைது செய்யாத காவல் துறையினர் இப்போது எம்பிக் குதித்து வருவதைக் கண்டிப்பாகப் ‘பாசிசம்’ என்று சொல்லாமல் என்ன சொல்வது? அவாளுக்கு ஒரு நியாயம். நமக்கு ஒரு நியாயமா-?

இங்கு அரங்கேறுவது பார்ப்பனிய பாசிசம் தான். அந்தப் பாசிசத்திற்குச் சூத்திரர்களே பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்துகிறார்கள்.

(மேற்காணும் தோழர் உதயகுமாரின் கட்டுரையின் சில இடங்களில் மாறுபட்ட கருத்துள்ளது. அடுத்த இதழில் அதுகுறித்த என் பார்வையைப் பதிவு செய்வேன். - ஆசிரியர்)

Pin It