(இனமானப் பேராசிரியர் படிப்பு வட்டம் சார்பாக மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி....)
அது உலகில் மாற்றங்களுக்கான புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டு இருந்த காலம் . 1848 பிப்ரவரி 21, பொதுவுடைமைக் கட்சி அறிக்கை.1856இல் தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்ட கார்டுவெல் ஒப்பிலக்கணம். மைக்கல் பெரடே, சீமன்ஸ், தாமஸ் ஆல்வா எடிசன், டெஸ்லா ஆகியோரின் மின்னாற்றல் கண்டுபிடிப்புகளுக்கு இடையில் டார்வினின் மாபெரும் கண்டுபிடிப்பு
1856 இல் வெளிவந்தது. இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதி என்பது உலகை மாற்றிப் போட்ட காலம். 17, 18 நூற்றாண்டிலேயே வானியல் ஆய்வுகள் தொடங்கின. கெப்லர், கோப்பர் நிக்கோலஸ், கலிலியோ, ப்ரூனோ என்று பலர் வருகின்றார்கள்.
அறிவியலில் ஒன்றை இவர் கண்டுபிடித்தார் என்று சொல்லுவது வெறும் அடையாளத்திற்காக மட்டுமே. எந்த ஒரு தனிமனிதனும் எதையும் முழுமையாகக் கண்டுபிடிக்கவில்லை, அனைத்தும் தொடர்ச்சி தான். படிப்படியாக வளர்ந்து இறுதி இடத்திற்கு வருகிற பொழுது அதைச் சொன்னவர் அறியப்படுகின்றார். ஆனால் மதங்கள் அப்படியல்ல. நேரடியாகக் கடவுளில் இருந்து வந்தது என்பார்கள். இரண்டிற்குமான அடிப்படை வேறுபாடே அறிவியல். அது பரிணாம வளர்ச்சி உடையது. மதம் என்பது பரிணாம வளர்ச்சிக்கு எதிரானது. அறிவியலை யாரும் கேள்வி கேட்கலாம். மதத்தைக் கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்கிறார்கள். ஆனால் கேள்வி கேட்பது தான் அறிவியல். திராவிட இயக்கம் ஓர் அறிவியல் இயக்கம் என்பதற்கான அடிப்படை எது என்றால், கூட்டத்திற்கு வருபவர்களைத் தன்னிடம் கேள்வி கேளுங்கள் என்று சொன்னவர் பெரியார்...டார்வின் கோட்பாடு படி இவ்வுலகத்தில் நிலையானது என்று எதுவுமில்லை. மாறாதது என்று எதுவுமில்லை. அழியாதது என்று எதுவுமில்லை. இப்பொழுது புரிகின்றதா “சனாதம்” சாய்ந்த இடம்? அழியாதது, மாறாதது என்று எதுவுமில்லை. அழியாது, மாறாது என்று யாராவது சொன்னால் அதைவிடச் சிறந்த பொய் ஏதுமில்லை. காலம் உறைவதில்லை. காலம் உறையாதவரையில் உலகின் எந்த ஒன்றும் உறைவதில்லை.
டார்வின் உயிரினத்திற்கு அடிப்படை உந்துதலாக இரண்டை சொல்கிறார். 1. இருத்தல், 2. பெருகுதல். உயிரினத்தில் போட்டி என்பது தன் இனத்துக்குள்ளான போட்டி, பிற இனத்திற்கு இடையிலான போட்டி என்று இரு வகைகளில் நடைபெறுகின்றது. ஏன் குயில் காக்கைக் கூட்டில் முட்டையிடுகின்றது? ஏன் என்று கேட்பது தான் அறிவியல். நியூட்டனுக்கு முன்பும் ஆப்பிள் பழம் கீழே விழுந்தது. எல்லோரும் எடுத்து தின்றுவிட்டுச் செல்லும் பொழுது, ஏன் கீழே விழுகிறது என்று கேட்டது நியூட்டன் தான். அதன்விளைவாகத் தான் புவிஈர்ப்புவிசை கண்டறியப்பட்டது.
இவ்வளவிற்கும் டார்வின் காலத்தில் குரோமோசோம், நியுக்ளியஸ் போன்றவை கண்டறியப்படவில்லை. ஆனால் இவ்வளவு விளக்கமாகப் பலவற்றை எழுதி இருக்கின்றார். பின்பு ஏன் எதிர்க்கப்பட்டார்? ஏன் என்றால், ஒன்று இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்று கருதப்பட்ட நிலையில், டார்வின் ஓர் உயிரில் இருந்து, அது இன்னொன்றாக மாறுகிறது என்றார். இரண்டாவது காரணம் மனித உயிர் தான் இவ்வுலகத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தது என்று கருதப்பட்ட நிலையில் டார்வின் அப்படியில்லை, எல்லாம் உயிர்தான் என்றார். டார்வினுக்குப் பின்பும் இப்பொழுதும் அந்தத் துறையில் ஆய்வுகள் நடைபெறுகின்றன.
(அடுத்த இதழில் நிறைவு பெறும்)
- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
தொகுப்பு : மதிவாணன்