மாநில மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கையின் படி, அன்றைய இந்திய ஒன்றிய அரசு, 1956 நவம்பர் 1ஆம் நாள், இந்தியாவைப் பல்வேறு மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்தது. அதன் அடிப்படையில், முந்தைய தமிழ்நாடு அரசு, நவம்பர் ஒன்றாம் தேதியைத் “தமிழ்நாடு நாள்’’ என்று அறிவித்தது!

anna 306இந்த அறிவிப்பை இன்று புதிதாகப் பதவி ஏற்றுள்ள நம் தமிழ்நாடு அரசு மறுஆய்வு செய்திட வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

1956 நவம்பர் 1ஆம் நாள் உருவாக்கப்பட்ட மொழிவாரி மாநில அமைப்பை நாம் ஏற்கின்றோம். அது சரியான முடிவே! எனினும், அந்த நாளில் தமிழ்நாடு பெற்றதை விட இழந்ததே மிகுதி. பழைய சென்னைத் தலைமாகாணம் (Madras Presidency) இன்றுள்ளத் தமிழ் நாட்டை விட மிகவும் விரிந்து பரந்து இருந்தது. இன்று கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல பகுதிகள் அன்று சென்னைத் தலைமாகாணத்தில் இருந்தன. இன்றைய ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தின் ஒரு பகுதி கூட அன்று நம்முடன் இருந்தது.

எல்லைகள் பிரிக்கப்பட்ட போது, நம் மண்ணின் பல பகுதிகளை அண்டை மாநிலங்களிடம் நாம் இழந்து விட்டோம். எனவே அந்த நாளைக் கொண்டாடுவதற்கு ஒன்றும் இல்லை என்பதே உண்மை! அந்த நாளில் எல்லைப் போராட்டத் தியாகிகளை நாம் நினைவு கூர்ந்து பாரட்டலாம், அவ்வளவே!

அப்படியானால் தமிழ்நாடு நாள் என்னும் பெயரும், கொண்டாட்டமும் எந்த நாளுக்குப் பொருந்தும்?

தமிழ் நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் 1955 அக்டோபர் மாதம் கோரிக்கை விடுத்தார். அதே கோரிக்கையை முன்வைத்து, தியாகி சங்கரலிங்கனார் பட்டினிப் போர் நடத்தி 1956 அக்டோபரில் உயிர் துறந்தார். பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில், தி.மு.கழகமும், வேறு சில கட்சிகளும் பலமுறை தீர்மானங்களை முன்மொழிந்தன. பிறகு நாடாளுமன்றத்தில், பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த பூபேஸ் குப்தா அதே தீர்மானத்தைக் கொண்டு வந்த போது அறிஞர் அண்ணா அதனை மகிழ்ந்து வரவேற்று மாநிலங்களவையில் உரையாற்றினார்.

இறுதியாக, தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பு 1967 ஜூலை 18 அன்று, முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் முன்மொழிய அத்தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது. பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுச் சட்ட வடிவத்தையும் பெற்றது!

எனவே ‘தமிழ் நாள்’ என்ற பெயரில் நாம் கொண்டாட வேண்டிய நாள் ஜுலை 18 தான்! தாய்க்குத் தலைமகன் பெயர் சூட்டிய திருநாள் அதுதான். திராவிட இயக்கம், தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டிப் பெருமையடைய வைத்த நாள் அதுதான்.

எனவே ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 18 ஆம் நாளைத் தமிழ்நாடு நாள் என்று தமிழ்நாடு அரசு கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அந்த நாள் நமக்கு மகிழ்வூட்டும்! தமிழ் உணர்வூட்டும்!!

(நன்றி - முரசொலி)

- சுப.வீரபாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.