செங்கல்பட்டு - பூந்தமல்லி பகுதிகளில் ‘சிறப்பு முகாம்’ என்ற பெயரில், வழக்கில் விடுதலை யானவர்களையும், பொய் வழக்குப் புனைந்து கைது செய்யப்பட்டவர்களையும், வழக்கே இல்லாதவர்களையும் தமிழக அரசு சட்ட விரோதமாக சிறைவைத்துள்ளது.

பலமுறை காலவரையற்ற உண்ணாப் போராட்டம் நடத்திய இம்முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை 15.06.2012க்கு பின் படிப்படியாக விடுதலை செய்கிறோம் என தமிழக அரசு சமாதானம் செய்தது. அவ்வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்ட தமிழக அரசைக் கண்டத்தும், வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் தற்போது மீண்டும் ஈழத்தமிழர்கள் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ் அமைப்புகளும், உணர்வாளர்களும் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் ஒன்று கூடி தமிழக முதல்வருக்கு 19.06.2012 அன்று பல நூற்றுக் கணக்கில் அவசரத் தந்திகளை அனுப்பும் போராட்டத்தை நடத்தினர்.

இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தென் சென்னை மாவட்டச் செயலாளர் திரு. வேளச்சேரி மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தென் சென் னை மாவட்டச் செயலாளர் தோழர் தபசி குமரன், தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங் கிணைப்பாளர் தோழர் அருண்சோரி, தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான், திருமதி அற்புதம் குயில்தாசன், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத்தலைவர்களும், உணர்வாளர்களும் திரளாக பங்கேற்றனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் கவிஞர் கவிபாஸ்கர், மகளிர் ஆயம் பொறுப்பாளர் தோழியர் ம.இலட்சுமி, எழுத்தாளர்கள் வான்முகில், அமரந்தா, புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்ட தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, 22.06.2012 அன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘விடுதலை செய்! விடுதலை செய்! ஈழத்தமிழ் அகதிகளை வாக்குறுதிக்கேற்ப விடு தலை செய்! தமிழக அரசே விடுதலை செய்’ என்பன உள்ளிட்ட முழக்கங்களை ஆர்ப்பாட்டத் தோழர்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தலைமையேற்றார். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசு, மனித நேய மக்கள் கட்சி காஞ்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஷாஜகான், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “தமிழகத்தில் செயல்படுகின்ற ஈழத்தமிழர் சிறப்பு முகாம்கள் தமிழினத்தின் அவமானச் சின்னமாக கருதப்பட வேண்டும். எங்கோ இருக்கும் ஆஸ்திரேலியா போன்ற அயல்நாடுகள் எல்லாம் ஈழத்தமிழர்களை சகமனிதனாக அங்கீகரித்து அவர்களுக்கு குடியுரிமை அளித்து வாழ்க்கை அளிக்கிறது. ஆனால், எங்கிருந்தோ வருகின்ற மார்வாடி, குசராத்தி சேட்டுகள் உள்ளிட்ட வடநாட்டுக்காரர்களுக்கும் மலையாளிகளுக்கும் குடியுரிமை அளிக்கும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களுக்கு இங்கு ஏன் குடியுரிமை வழங்க மறுக்கிறது? தமிழ்நாட்டுத் தமிழர்கள் இனஉணர்வுடன் ஒன்று சேர்ந்து போராடாமல் இருந்ததும் இதற்குக் காரணம். உண்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டி ருக்கும், ஈழஅகதிகளின் உயிருக்கு ஏதேனும் கேடு நேர்ந்தால் அதன்பின் சடங்குப் போராட்டங்கள் நடைபெறாது. தமிழ்த் தேசிய விடுதலைக்கானப் போராட்டத்தின் தொடக்கமாக அது அமையும்” என்று தெரிவித்தார்.

நிறைவில், தீர்மானம் முன்மொழிந்து பேசிய இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், “இப்போராட்டம் முதலில் முற்றுகைப் போராட்டமாகத் தான் அறிவிக்கப்பட்டது. எனினும், தமிழக முதல்வருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கிப் பார்ப்போம் என்ற அடிப்படையில் தற்போது ஆர்ப்பாட்டமாக நடக்கிறது. இவ்வாய்ப்பையும் அவர் தவற விட்டால், நாங்கள் செங்கல்பட்டு சிறப்பு முகாமை கூட்டம் கூட்டமாகச் சென்று முற்றுகையிடு வோம். அப்போது எங்கள் உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது” என ஆவேசமாகப் பேசினார். பெ.தி.க. இளைஞரணிச் செயலாளர் தோழர் டேவிட் பெரியார் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், செங்கல்பட்டு அரசுப் பொது மருத்துவமனையில், உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக அனுமதிக்கப் பட்டிருந்த தமிழீழ அகதிகள் திரு. செல்வராஜ், சதீஷ்குமார், மதன், பராபரன், செல்வம் ஆகியோரை தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினர்.

24.06.2012 அன்று உண்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தங்களது உயிருக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அது தமிழக அரசையேச் சேரும் என கையெழுத்திட்டு கடிதம் வெளியிட்டனர் ஈழத்தமிழர்கள். தமிழக அரசை மட்டுமல்ல, அவர்களை விடுவிக்க வீரியத்துடன் போராடாத நம்மையும் அப்பழிச் சேருமல்லவா? நாம் என்ன செய்யப் போகிறோம்?

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.