"எனக்கு ஒரு ஆதாரம் கொடுங்கள், நான் உலகையே அசைத்துக் காட்டுகிறேன்" என்று சொன்ன கிரேக்க அறிவியல் அறிஞர் ஆர்க்கிமிடிஸைப் போல, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தனது சொல்லாலும் செயலாலும் மாபெரும் மாற்றங்களை உருவாக்கிய புரட்சியாளர் தலைவர் கலைஞர்.

karunanidhi 253அறிவியல் உலகில் ஆர்க்மிடிஸ் கண்டுபிடித்த நெம்புகோல் கொள்கையைப் போல, அரசியல் உலகில் கலைஞர் தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல், படைப்பாற்றல், போன்ற அறிவாயுதங்களால் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினார்.

ஆர்க்கிமிடிஸ் எப்படிக் கணிதம், இயற்பியல், பொறியியல் போன்ற துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை செய்தாரோ, அதேபோல் தலைவர் கலைஞர் இலக்கியம், நாடகம், திரையுலகம், அரசியல் என பல துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்தார். பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காத போதிலும், கலை, இலக்கியம், உலக வரலாறு, அரசியல், தத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கிய கலைஞரை பற்றி எழுதப்பட்ட நூல்களும் ஆய்வேடுகளும் ஏராளம், ஏராளம்!

அவரது அறிவின் விரிவு மட்டுமல்லாமல், அதை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறமையும் வியக்க வைக்கும். சிக்கலான அரசியல் கருத்துகளை கூட கதை, கவிதை, உவமை என பல வழிகளில் விளக்கி இருக்கிறார். இது தான் அவரை மற்ற தலைவர்களிடமிருந்து தனித்துக் காட்டியது.

ஆர்க்கிமிடிசின் நெம்புகோல் எப்படி சிறிய விசையால் பெரிய பொருளை நகர்த்த முடியும் என்பதை நிரூபித்ததோ, அதேபோல் கலைஞரின் பேச்சு, சிறிய வார்த்தைகளால் பெரிய மாற்றங்களை உருவாக்கியது. அவரது பேச்சில் இருந்த கவித்துவம், நகைச்சுவை, தர்க்கம், உணர்ச்சி ஆகியவை கேட்கிற பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரே நேரத்தில் அவர்பால் ஈர்த்தது. அவர் ஆற்றிய ஆயிரக்கணக்கான உரைகள் ஒவ்வொன்றும் சமூக மாற்றத்திற்கான விதைகளாக இருந்தன. அவரது பேச்சில் தமிழின் இனிமையும், கருத்தின் ஆழமும், கொள்கைப் பிடிப்பும் நகைச்சுவை உணர்வும் ஒன்றாக கலந்திருந்தன.

பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின் திமுக தலைமையை ஏற்ற கலைஞர், கட்சியை பலப்படுத்துவதற்காக எடுத்த முடிவுகள் அனைத்தும் கணித துல்லியத்துடன் இருந்தன. எதிர்க்கட்சிகளுடனான அணுகுமுறை, மத்திய அரசுடனான உறவு, அண்டை மாநில உறவு, பிற மாநிலக்கட்சிகளுடனான உறவு, என அனைத்திலும் சமநிலை காத்த கலைஞர், ஜனநாயகத்திற்கு சிக்கல் வரும்போதெல்லாம் அதிகார வர்க்கத்திற்கு எதிராக துணிச்சலோடு களத்தில் நின்றார்.

ஆர்க்கிமிடிஸ் கண்டுபிடிப்புகள் மனித குலத்திற்கு நன்மை பயந்ததைப் போல, கலைஞர் ஆட்சிக்கால கொள்கைகளும் திட்டங்களும் மக்கள் நலனுக்காக அமைந்தன.

 சைக்கிள் ரிக்சா திட்டம், கண்ணொளித் திட்டம், குடிசைமாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச அரிசி விநியோகம், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் இலவச பேரூந்து பயணம், கைம்பெண் உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், வண்ணத் தொலைக்காட்சி போன்ற திட்டங்கள் வெறும் அரசியல் வாக்குறுதிகள் அல்ல, மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை கொண்டு வந்த புரட்சிகரத் தொலைநோக்குத் திட்டங்கள்.

ஆர்க்மிடிஸ் புலிட்சர் என்ற கருவியால் கனமான பொருட்களை எளிதாக உயர்த்தினார். அதேபோல் பெண் உரிமை,பாலின சமத்துவம், மத நல்லிணக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன் ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்தி கல்வி வாய்ப்பில் அவர் நிகழ்த்திய மாற்றங்கள் தான் தமிழ் சமூகத்தை இன்றும் வழிநடத்துகின்றன.

ஆர்க்மிடிசின் கண்டுபிடிப்புகள் காலம் காலமாக நிலைத்து நிற்பதைப் போல, கலைஞரின் அரசியல் நிலைப்பாடுகளும் ஆட்சிக்கால சாதனைகளும் காலத்தால் அழியாத வலிமை கொண்டவை.

ஆர்க்மிடிசின் கொள்கைகள் இன்றும் பொறியியல் கல்வியில் கற்றுக் கொடுக்கப்படுவதைப் போல, கலைஞரின் அரசியல் பாடங்களும் இன்றும் பலருக்கு வழிகாட்டுதலாக இருக்கின்றன.

கலைஞரின் வாழ்க்கை எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள் கூட கடின உழைப்பு, தொடர் கல்வி, மக்கள் மீதான அன்பு ஆகியவற்றின் மூலம் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

அவர் உருவாக்கிய அரசியல் மரபு இன்றும் தமிழ்நாட்டின் அரசியலை வடிவமைத்துக் கொண்டே இருக்கிறது.

ஜூன் 3, தலைவரின் பிறந்தநாள்.

- நெல்லை பாபு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.