பல ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து அடிமைகளாக அழைத்து வரப்பட்ட கறுப்பின மக்களுக்கு காலப்போக்கில் தங்கள் சொந்த ஊரின் பெயர், தாங்கள் சார்ந்த பிரிவின் பெயர், என தங்களைப் பற்றிய உண்மையான அடையாளங்கள் எல்லாமே மறந்து போயிற்று. பின் தங்கள் முதலாளிகளான அமெரிக்கர்களின் குடும்பப் பெயர்களையே தங்கள் பெயருக்கு பின்னால் வைத்துக்கொண்டார்கள். கறுப்பினத்தவர்களின் குடும்பப் பெயர்களாக இன்று இருக்கும் Williams, Henry போன்ற ஆங்கிலப் பெயர்கள், அவர்களின் முதலாளிகளாக இருந்தவர்களின் குடும்பப்பெயர்கள் தாம். நாம் நன்கு அறிந்த அமெரிக்க கறுப்பினத்தவர்களான வில் ஸ்மித், டென்செல் வாஷிங்டன், லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங், ஏன் கறுப்பினத்தவர்களுக்காக அமைதி வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங் என அனைவரின் கடைசி பெயருமே ஒருகாலத்தில் அவர்களுக்கு முதலாளியாக இருந்த அமெரிக்கர்களின் குடும்பப் பெயர்கள்தான். கறுப்பர்களின் அடிமை வரலாற்றை இன்னும் அந்த பெயர்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இதை முறித்து ஒரு மாபெரும் புரட்சியை  கறுப்பினத்தவர்களின் மனதில் எழுப்பியவர் புரட்சியாளர் மால்கம்X! 

மால்கம்Xன் இயற்பெயர் மால்கம் லிட்டில் (Malcolm Little). வெள்ளையர்களின் ஆதிக்கத்தையும், ஆளுமையையும் கண்டு தாங்கள் வெள்ளையினத்தில் பிறந்திருக்க கூடாதா என பல கறுப்பின இளைஞர்கள் தங்கள் உடையலங்காரம் முதல், முடியின் நிறம் வரை வெள்ளையர்களைப் போல் மாற்றிக்கொண்டு தாழ்வுமனப்பான்மையுடன் அலைவதை பழக்கமாக வைத்திருந்தார்கள். ஒரு மனநோய் போல பரவிய இந்த அடிமைக் கலாச்சாரம், மால்கம் லிட்டிலையும் விடவில்லை. தன் சுருட்டை முடியை வெள்ளையர்களைப் போல முடிந்தவரை நீட்டிவிட்டுக்கொள்வதும், முடியின் நிறத்தை சிகப்பாக மாற்றிக்கொள்வதும் அவருக்கு வழக்கமாய் இருந்தது. பின்னர் ஒரு கைகடிகாரத்தை திருடிய குற்றத்திற்காக முதல்முறையாக சிறையில் அடைக்கப்பட்ட மால்கம், அங்குதான் அவர் வாழ்வையே மாற்றி அமைத்த ஜான் பேம்ப்ரியை (John Bambry) சந்தித்தார்.

மால்கமின் அடிமைத்தனமான தோற்றத்தைக் கண்டு, "நீ ஏன் உன்னைப் போல் இல்லாமல், அவனைப் போல் இருக்க வேண்டும்?" என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் மால்கமிடம் ஆங்கில அகராதியைக் காட்டிய ஜான், அதில் 'Black' என்பதற்கு "அழுக்கு, சுத்தமின்மை, தீயது" என அர்த்தம் கூறப்பட்டிருந்ததையும், 'White' என்ற வார்த்தைக்கு 'பரிசுத்தம், தூயது' என்றும் அர்த்தம் சொல்லப்பட்டிருந்ததையும் காட்டினார். ஆங்கிலேயர்கள் கறுப்பர்களை அடிமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், எப்படி கறுப்பினத்தையே அவமானகரமானதாக மாற்றி வருகிறார்கள் என்பதையும் எடுத்துச் சொன்னார். இதுதான் மால்கமின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட சம்பவம். அதுவரை மால்கம் லிட்டில் ஆக இருந்தவர், தன் இனத்தின் அடிமை வாழ்க்கையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் 'லிட்டில்' என்ற பெயரை தூக்கி எறிந்தார். மேலும் அமெரிக்க மண் தனக்கு இழைத்த அநீதியால் தன் இனம் அடையாளத்தை இழந்து தவிப்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம்  தன் பெயருக்குப் பின் குடும்பப்பெயர் இருக்கும் இடத்தில் 'X' என்ற குறியை இணைத்துக்கொண்டார்!

ஜான் பேம்ப்ரி மால்கமிற்கு காட்டிய அகராதி இன்னமும் நம் மனதிலும், புழக்கத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. கெட்ட செயல்களை செய்தவனுக்கு கருப்பு மனம் என்றும், நல்லவர்களுக்கு வெள்ளை மனம் என்றும் நாம் பேசுவதும், எழுதுவதும் அதனால் தான்! இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மால்கம்X, மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களின் புரட்சிகரமான வாழ்க்கைக்குப் பின் கறுப்பினம் தன் அடையாளத்தை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது. ஆங்கிலேயர்களைப் போல தங்களை உருமாற்றிக்கொள்ளும் அவலம் அவர்களால் அங்கு முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் வெளிநாடுகளில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன் பூர்வீகத்தின் அடையாளமாக விளங்கும் 'குடும்பப் பெயர்' என்னும் அடையாளத்தை மட்டும் அவர்களால் இன்னும் மீட்டெடுக்க முடியவில்லை. தொலைந்த பூர்வீக தொடர்பு தொலைந்ததாகவே இருக்கிறது!

அப்படியே 1960களின் மத்திய கால அமெரிக்காவில் இருந்து ஒரு 'யூ டர்ன்' எடுத்து தற்போதைய தமிழகத்துக்குள் எட்டிப்பாருங்கள். நம்மைச் சுற்றி சிகப்பழகு பூச்சு விளம்பரங்களும், சிதேஷ், விதேஷ், வர்ஷா, ஸ்ருதி, பூஜா போன்ற பெயர்களும் வியாபித்திருக்கின்றன!

தமிழகத்தைப் பொறுத்தவரை பிற்கால ராஜராஜ சோழர்கள், இடைக்கால பல்லவர்கள் காலத்தில் இருந்தே ஆட்சியாளர்களின் பலத்த ஆதரவுடன் தமிழர்களுடைய அடையாள இழப்பு மெல்ல துவங்கிவிட்டது. ஆங்கிலேயர்கள் போல எந்த விதமான பகிரங்க அடிமைத்தனமும் இங்கு தமிழர்கள் மேல் திணிக்கப்படவில்லை. மாறாக தமிழர்களே விரும்பி ஏற்றுக்கொண்ட அடையாள அழிப்பு தான் இங்கு இன்றும் நிலவுகிறது. சமஸ்கிருதக் கடவுள்களை தமிழ்க்கடவுள்களாக, சமஸ்கிருத மதமான இந்து மதத்தை தமிழர்களின் மதமாக ஆக்கியதில் தொடங்கி சமஸ்கிருத பெயர்களே நவீனப்பெயர்கள் என்ற மறைமுகப் பரப்புரையை தொடர்ந்து செய்ததன் மூலம் தமிழரின் அடையாளங்கள் தமிழர்களாலேயே புறந்தள்ளப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு கிறித்தவ, இஸ்லாமிய மதங்களின் நுழைவுக்குப் பின் அம்மதத்தைச் சேர்ந்த மக்களும் தங்கள் மத அடையாளத்தை நிலைநிறுத்தும் வண்ணம் மதப்பெயர்கள் வைப்பதையே காலம் காலமாக பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, சிவப்பாய் இருத்தலே அழகு, சிவப்பாய் இருந்தால்தான் திருமணம் நடக்கும், சிவப்பாய் இருந்தால்தான் வேலை கிடைக்கும், சிவப்பாய் இருந்தால்தான் ஏழாம் இடத்தில் குரு உட்காரும் என்றெல்லாம் வரும் விளம்பரங்கள், திரைப்படங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு சிவப்பாய் ஆவதற்கு அலைந்துகொண்டும், மறுபுறம் ராஹுல், சுமேஷ் என சமஸ்கிருத பெயர்களை சுமந்துகொண்டும் அலைகிறார்கள் தமிழர்கள்! அடிமைப்பட்டிருந்த, புத்தி தெளியாத மால்கம் லிட்டிலைப் போல!

தற்கால தமிழர்களை, குறிப்பாக தமிழ்ப்பெண்களைப் பொருத்தவரை சிதேஷ், விதேஷ் என்ற பெயர்கள் எல்லாம் புதுமையான பெயர்கள், தமிழ்ச்செல்வன், வேந்தன் என்பதெல்லாம் பழமையான பெயர்கள்! சமஸ்கிருதமும், தமிழும் கிட்டத்தட்ட ஒரே காலச்சூழ்நிலையில் தோன்றிய மொழிகள் எனும்போது ஒருமொழிப் பெயர் புதியதாக, நவீனமானதாகவும் மற்றொரு மொழிப்பெயர் பழமையானதாகவும் எப்படி இருக்கமுடியும்? உலகிலெயே மிகவும் நவீனமான மொழி ஆங்கிலம். அதுமட்டுமல்லாது மிக அழகாக காலம்காலமாக தன் நவீனத்தையும் அது தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

200 வருடங்களுக்கு ஒருமுறை பாம்பு தோலை உரிப்பதைப் போல, தன் பழமையை உரித்துப் போட்டுவிட்டு புதுமைக்குள் புகுந்து கொள்ளும் பெருமையுடையது ஆங்கிலம்! தமிழோ மாறவே இல்லை. சங்க இலக்கியத்தைக் கூட இன்றைய தமிழறிவு அவ்வளவாக இல்லாத தமிழனால் புரிந்துகொள்ள முடியும்! சரி தமிழ் பழைய மொழி, சமஸ்கிருதம்? அது புழக்கத்திலேயே இல்லாத செத்த மொழி அல்லவா? புதுமையேதான் வேண்டுமென்றால் ஆலன் டொனால்டு, அர்னால்டு ஸ்வார்ச்சனேக்கர் என்று பெயர் வைத்தாவது ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் செத்த மொழியில் எதை எதையோ அல்லவா வைக்கிறார்கள்!! உயிரோடில்லாத மொழியில் பெயர் வைக்கும் தமிழர்களுக்கு, பழமையான மொழியில் பெயர் வைப்பது கசப்பது தான் வியப்பு!

தமிழ்ச்சமூகத்தின் இந்த மனநிலைக்கு படைப்பாளிகள் ஒரு மிகமுக்கிய காரணம். எழுத்தாளர்கள், திரைத்துறையினர் படைக்கும் கதைமாந்தர்களின் பெயர்கள், ஒரு சமகாலச் சமூகம் (contemporary society) தங்கள் குழந்தைகளுக்கு என்ன பெயர் இடுகிறது என்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. கடைசியாக ஒரு தமிழ்ப்படத்தில், தமிழ்ப்பெயர் கொண்ட கதாநாயகனையோ, கதாநாயகியையோ எப்போது பார்த்தோம் என்பது மறந்தே விட்டது! ஸ்ருதி, கார்த்திக், பூஜா, ஷிவா இதைத்தாண்டி இயக்குனர்களால் சிந்திக்கவே முடியவில்லை! இந்த விஷயத்தில் பிரபுதேவாவை பாராட்டலாம், 'எங்கேயும் காதல்' கதாநாயகிக்கு 'கயல்விழி' என பெயரிட்டிருந்தார். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு என் அத்தை ஒருவர், தன் பெண்ணுக்கு இந்த பெயர் வைத்தபோது, "அய்யயே.. பழைய பெயரா வச்சிருக்கீங்க!" என பல தமிழர்களால் 'புகழப்பட்ட' பெயர் இது!  மனிதர்கள் தானே பழையதாவார்கள், பெயர்கள் எப்படி பழையதாகும் என்பது எனக்கு பலகாலமாக புரியவேயில்லை. இந்த பழசு, புதுசு என பெயர்களை நம் மக்கள் தரம் பிரிப்பது அவர்கள் காலகட்ட கதைமாந்தர்களின் பெயர்களை வைத்துதான் என்பதை பலப்பல வருடங்களுக்குப் பின் புரிந்துகொண்டேன். அதாகப்பட்டது, இதன்படி 'கேசவ்' என்றால் 'மயிர்' என்று அர்த்தம், ஆனால் தமிழர்களைப் பொருத்தவரை இது நவீனப்பெயர். தேன்மொழி என்றால் 'தேன்போன்ற மொழியினை பேசுபவள்' என்று அர்த்தம், ஆனால் இது பழைய பெயர்!

என் வீட்டருகே இஸ்த்ரி வண்டி வைத்திருக்கும் ஆறுமுகத்தின் மகன் பெயர் ராகுல். 'லோடுமேன்' முனிச்சாமி தன் மகளுக்கு பூஜா என பெயரிட்டிருந்ததாக சொல்லி என்னிடம் இனிப்பு கொடுத்தார். இந்த வடமொழிப் பெயர் மயக்கம், சமூகத்தின் அனைத்து தரப்பையும், வகுப்பையும், கலைஞர் அரசின் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைப் போல செவ்வனே சென்றடைந்திருக்கிறது. வடமொழியில் பேசிக்கொண்டு, வடமொழி பெயர்களோடு வலம் வரும் சிகப்பான வட இந்தியர்கள் மத்தியில், தமிழ் பேசிக்கொண்டு, வடமொழி பெயர்களோடு, சூர்யா கூவிக் கூவி விற்கும் சிகப்பழகு க்ரீம்களை தடவியபடி நம் தமிழ் இளைஞர்கள் பரிதாபமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், தாங்கள் மறைமுக, 'தன்னார்வ' அடிமைகள் என்பது தெரியாமலேயே! எனக்கு தெரிந்து, அன்புச்செல்வன் என பெயர் வைத்திருக்கும் வட இந்தியனை நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோ இல்லவே இல்லை! ஆனால் முனியாண்டியின் மகன் ராகுல் என்றும், அறிவழகனின் மகன் ஸ்வராஜ் என்ற பெயருடனும் வாழ்ந்து வருகிறார்கள்! இது என்ன மாதிரியான ஒரு சூழ்நிலை!!!

மால்கம்Xயிற்கு ஒரு ஜான் பேம்ப்ரி இருந்தார். பெயரட்டையில் வடமொழிப் பெயருடன், சிகப்பழகு க்ரீமை பூசிக்கொண்டு நிறத்தின் மேல் வெறுப்புடனும், இயற்கையின் மேல் கடுப்புடனும், மால்கம் லிட்டில் போல மனம் நிறைய தாழ்வுமனப்பான்மையோடும் அலைந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு யார் இருக்கிறார்கள்? மால்கம் லிட்டில் தன் தனித்தன்மையை உணர்ந்த போது, அவர் இனம் முற்றிலும் தன் அடையாளத்தை இழந்திருந்தது. அதனால் 'X'ஐ சேர்த்துக்கொண்டார். நம் இனத்திற்கு இன்னும் கொஞ்சம் அடையாளம் எச்சமிருக்கிறது. அது 'X' ஆக மாறுவதற்கு முன், நம் அடுத்த தலைமுறையையேனும் தமிழ்ச்செல்வனாகவோ, யாழினியாகவோ, இனியனாகவோ, முகிலனாகவோ ஆக்கிக்கொள்வோம்!

Comments

11 comments

11
பாலா
இது தவறு.... தமிழ் சமஸ்கிருதத்தை விட மிகப் பழமையானது.
பாலா
ஏன் மாற வேண்டும். தமிழ் தன்னை update செய்து கொண்டே இருக்கும் போது ஏன் மாற வேண்டும்.

While the first part of the article is true the later part of the article is a manifestation of mediocre understanding....
Thamizhnadan
வணக்கம்,
ஆகச்சிறந்தவொருப் பதிவு, தமிழர் மனங்களில் இது பதியவேண்டும். எனது தங்கை மகனுக்கு முகிலன் என்று பெயரிட்டேன், மைத்துனரின் மகளுக்கு தமினிழி எனப்பெயரிட்டேன், ஆனால் அதுவே அவள் பெயராக இருந்தும் ஏனோ 'தியா" என்று அழைக்கின்றனர். எனது மகளுக்கு எழிலினி என்று பெயரிட்டுள்ளேன். பெயரில் என்ன இருக்கிறது என்போருக்கு பெயரில்தான் எல்லாம் இருக்கிறது என்று உணர்த்தியுள்ளீர்கள். இன்றைக்கு கணவன்மார்கள் தமிழ்ப்பெயரை சூட்ட விரும்பினாலும், பெரும்பாலான மனைவிமார்கள் உடன்படுவதில்லை. இது எனது அனுபவத்தில் கண்டது. மேலும் இவர்களை சோதிடப்புரட்டும் ஆட்கொண்டுவிடுகிறது. தமிழில் எழுதி படிக்கப்படும் சோதிடத்தில் ஜா என்று தொடங்கும் பெயர் எப்படி வருகின்றது என்றே புரியவில்லை. ல வில் தொடங்காத இலக்கணம் இவர்களுக்கு இல்லை. தமிழர்களின் விழிப்பே தமிழின விடுதலையைப் பெற்றுத்தரும்.
டான் அசோக்
ஏன் மாற வேண்டும். தமிழ் தன்னை update செய்து கொண்டே இருக்கும் போது ஏன் மாற வேண்டும். While the first part of the article is true the later part of the article is a manifestation of mediocre understanding.... ////

விரிவாக, புரியும்படி உங்கள் கருத்தை வைக்க வேண்டுகிறேன்.
Parthasarathy
Excellent article, name is not only identity for the human being it is all, it represents the race, religion, nationality etc, hence to represent our identity it is essential to have the name which represents us truly.

Thanks for the good article,

Na.Parthasarathy
விக்ரமன்
இதை படிக்கும் போது என் பத்தாம் வகுப்பு ஆசிரியர் கூறியது நினைவுக்கு வருகிறது. அவர் பெயர் 'ஜெயராமன்'. அவர் பெயரை 'செயராமன்' என்று மாற்றிக்கொள்ளலாமே என்று கேட்டதற்கு, அவர் என்னிடம், "செயராமன் என்று சொல்வதை விட ஜெயராமன் என்று சொன்னால் ஒரு சக்தி வருவதாக வெளியில் சொல்கிறார்கள்" , என்று தயங்கி தயங்கி சொன்னார். பாவம் அவரால் தன் தமிழையும் விடமுடியவில்லை, ஊரையும் விட முடியவில்லை. ஊர் வழக்கத்திற்காக, தமிழை விட்டுக்கொடுத்துவிட்டார். தமிழின் அடையாளம் பெயரிலிருக்கிறது தான், ஆனால் அதற்கும் விளம்பரம் தேவைப்படுகிறது. சினிமா நட்சத்திரங்களின் பெயர்கள், என்று தமிழில் வருகிறதோ, அன்று தான் தமிழ் பெயர்கள் தமிழ்நாட்டிலும் உலவ ஆரம்பிக்கும். இது வெட்கக்கேடு தான் ஆனாலும் இதை விட்டால் வேறு வழியில்லை.தமிழ் நடிகர்களில் யாராவது ஒருவரின் பெயர் தமிழிலிருக்கிறதா? எனக்குத்தெரிந்து இல்லை (ஒருவரைத் தவிர சிலம்பரசன்; அவரும் தன் பெயரை அவமானம் காரணமாக ,சிம்பு, எஸ்.டி.ஆர் என்று மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது!) மிதைச்சொன்னால் சாவினிஸ்ட் என்பார்கள். விஜய், அஜித், ரஜினி, கமல், ஆர்யா,சூர்யா, கார்த்தி,பரத், தனுஷ்,விஷால் ... அடேங்கப்பா! இப்பவே கண்ணகட்டுதே!
raja
இது தவறு.... தமிழ் சமஸ்கிருதத்தை விட மிகப் பழமையானது.-Bala

Tamilians will never get Knowledge. They never know about the perpetual knowledge of their language.

Karupu Papanuga erukum varai tamil neesa bhasai than.
They keep their name as Stars.Even Galileu WILL NOT KNOW ABOUT THIS MUCH STARS NAME.

Meendum oru mozhi puratchi thevai
ஆயிஷா பாரூக்
தோழரே, இந்த கட்டுரையை எழுதும் நீங்கள் டான் அசோக் என்கிற (தமிழ் பெயரை ???) தமிழர் அடையாளத்தை பறைசாற்றும் பெயரை கொண்டு கொண்டு இப்படி பட்ட படைப்பை எழுத முன்வந்தது ஆச்சிரியம் தான்! வியப்பு தான்!...
மே.இளஞ்செழியன்
ஆயிஷா பரூக் சரியாக சொல்லியுள்ளார்... அதே நேரத்தில் இங்கு கருத்தை பதிவு செய்பவர்களில் சிலர் தமிழில் எழுத யோசிக்காததும் வருத்தமே ... இது போல் சிறு காரணங்கள்தான் தமிழை வளர்பதற்கு தடையாக அமைகிறது.

முயற்சிப்போம் தமிழை வளர்க்க .... நமது ஒவ்வொருவர் பங்கும் முக்கியமானது.

முயற்சி வெற்றியைத் தரும்...
aruLperoLi
தூயத்தனித்தமிழில் பெயர் வைக்கும் சீரிய நோக்கமும் உணர்வும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தான் தமிழரிடையே எழுச்சியுற்றது எனலாம்.திராவிட இயக்கங்களால் மேலும் தீவிரம் அடைந்து பலர் தங்கள் பெயர்களைத் தமிழில் மாற்றிக்கொண்டனர். தம் குழந்தைகளுக்கும் அவ்விதமே சூட்டினர். ஆண் பெயர்கள் செல்வன், செழியன், மாறன், அழகன் என்றும் பெண் பெயர்கள் செல்வி, விழி, மொழி என்றும் முடிவதாகவே பெரும்பாலான பெயர்கள் அப்போது அமைந்தன. எடுத்துக்காட்டாக அன்பழகன், அறிவழகன், மதியழகன் இளஞ்செழியன், நெடுமாறன், நன்மாறன், தமிழ்ச்செல்வன், தமிழ்செல்வி, கலைச்செல்வி, கயல்விழி, மான்விழி, கனிமொழி, தேன்மொழி எனும் அருமையான பெயர்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் பழமையனவாக ஆகிவிட்டனவோ என்று எண்ணிடத் தோன்றகிறது. மக்கள் ஏனோ இப்படிப்பட்டப் பெயர்களை வைப்பதில் முன்பு இருந்த முனைப்பைக் காட்டுவதில்லை என்பதும் திராவிட இயக்கப் பாரம்பரியமிக்க குடும்பங்களில் கூட இன்று புதுமை என்கிற பெயரால் மீண்டும் வடமொழிச்சொற்கள் வர ஆரம்பித்து இருப்பதும், மிகவும் வேதனைக்கு உரியதாகும். தமிழருடைய மொழி இன உணர்வுகள் மீண்டும் மங்கத் துவங்கிவிட்டதோ என எண்ணிடத் தோன்றுகிறது.

பெயரின் பொருள் தெரிந்துதான் வைக்கிறார்களா என்பதே அய்யத்திற்கு உரியது. சிலப் பெயர்களின் பொருளைப பார்த்தாலே இது உறுதியாகும்.

எடுத்துக்காட்டு

கோபிகா................. பால்காரி Milk Maid

கோபாலன் ............ மாடு மேய்ப்பவன்

சமிதா ................. கோதுமைமாவு

தாமோதரன் ........... கயிற்றால் கட்டப்பட்டவன், Bound by rope

பிந்து .................. a drop விந்து

தாய்மொழியை தவிர்த்து வேற்று மொழில் பெயர் வைத்துக் கொள்வதில் ஆர்வமும் நாட்டமும் கொண்டவர்கள் தமிழர்களைத்தவிர வேறு யாராவது இருப்பார்களா என்பது ஐயமே, பலருக்குத் தம் பெயர் வேற்று மொழிச்சொல் அதுவும் வடமொழிச் சொல் என்றே தெரிவதில்லை. அதிலும் வேடிக்கை தங்கள் பெயரின் பொருள் தெரியாதவர்கள் பலர் இங்கே உள்ளனர் என்பது. சிரஞ்ஜீவி என்றால் Long Live. தமிழில் சிரஞ்சீவி என எழுதுகிறார்கள். இதன் பொருள் தலையைச் சீவுகிறவன்/வெட்டுகிறவன் என்று ஆகிவிடுகிறது. ஆகவே வேற்று மொழிகளை விட்டு தாய்மொழியிலேயே பெயர்களை வைத்தால் இப்படிப்பட்டப் பிழைகளைத் தவிர்க்கலாம்.

பெயரிலே என்ன இருக்கிறது அது ஒரு தனி மனித அடையாளம்தானே என்பவரும் உள்ளனர். பெயர் தனிமனித அடையாளம் மட்டும் அல்ல. இவர் இன்னார் என்று வேறுபடுத்திக் காட்டவும் செய்யும் என்பதே உண்மை. மதம் மற்றும் சாதியைப் பிரதிபலிக்கும் விதமாகவே பெரும்பாலான பெயர்கள் இருக்கின்றன என்பதை யாவரும் மறுக்கமுடியாது. இது மறை முகமாக வேற்றுமையை வளர்க்கவே செய்கிறது.

மதம் மற்றும் சாதியை நினைவுறுத்தும் வகையில் அல்லாமல் பெயர்கள் பொதுவானதாக அமைவது மக்களை ஒற்றுமைப் படுத்தவும் வேறுபாடுகளைக் களைந்து சமுதாயம் முன்னேறவும் வழி வகுக்கும் என்று அறிஞர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் கருதுகின்றனர். அந்த வகையில் நம்முடைய தமிழ்ச் சமுதாயம் முன்னேற வேண்டுமெனில், நாம் யாவரும் இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வுடன் ஒன்றபடல் கட்டாயம் ஆகிறது. அதற்கு தமிழிலே பெயர் சூட்டுதலும் சூட்டிக்கொளலும் பெரிதும் பயன் அளிக்கும் என்பது மறுக்க இயலாது.
ஆதலால் சமுதாய அக்கறை கொண்ட எந்த ஒரு அமைப்பானாலும் கட்சியானாலும் இயக்கமானாலும் ஏன் தனி மனிதர்களேயானாலும் இக்கருத்திலே உள்ள உண்மையைப் புரிந்து கொண்டு மற்றவர்களையும் புரியவைத்து செயல்பட வேண்டிய காலகட்டாயத்தில் இருக்கிறோம் என்றால் அது மிகையல்ல.
aruLperoLi
தமிழால் ஒன்று படுவோம்

இந்து, முகமதியர், கிறித்துவர் அனைவருமே தமிழர் என்று ஏற்றிட வேண்டும். கிறித்துவர்களிலும் முகமதியர்களிலும் தமிழ் வளர்த்த சான்றோர்கள் பலர் உண்டு. அவர்களின் மூதாதையர்களும் இந்நாட்டவரே. அவர்தம் தாய்மொழியும் தமிழே என்பதில் அய்யம் இல்லை. ஆகவே, எல்லோரும் தமிழர் என்னும் உணர்வுடன் ஒன்றுபடுவோமாயின், நம்நாடு சிறக்கும். நலம் கொழிக்கும். அவ்வுணர்வை ஊட்ட வல்லது தமிழ். ஒற்றமையை கூட்ட வல்லது தமிழ்ப்பெயர். செம்மொழி என்னும் சிறப்பினைப் பெற்றத் தமிழில், இனிமேலாவது நாம் பெயர்சூட்டும் வழக்கத்தை மேற்கொள்வோம். அதுவே நமக்குப் பெருமிதம்-பெருமை- பேறு. அதுவே நம்மை ஒற்றுமைப்படுத்தி உயர்த்தும், வாழ்விக்கும் என்பதை உணர்வோம்- செயல்படுவோம்.
இசுலாமிய, கிறுத்துவ நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எமது பணிவான வேண்டுகோள். மதத்தைச் சுட்டும் பெயர்கள் தவிர்த்து இனியேனும் துய தமிழ் சொல்லில் பெயரமைத்துக் கொள்ளுங்கள். உம் பிள்ளைகளுக்குச் சூட்டுங்கள் நீவிர் யாவரும் வேற்றுநாட்டவர் அல்லர். கடவுட் கொள்கையில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்து இருக்கிறீர்கள் அவ்வளவே. தமிழ் நாட்டில் உள்ள இசுலாமியரும் கிறுத்துவரும் தமிழராகவே மதிக்கப் பெறுவர். தூய தமிழர்களே ஆயினும் தமிழ் நாட்டு இசுலாமியர் சமூகத்தில் தமிழ்பேசும் இசுலாமியர் உருது பேசும் இசுலாமியர் என்றும் இரண்டு பிளவுகள் இருக்கின்றன. உருது பேசுபவர்கள் உயர்ந்தவர்கள் என்றும் தமிழ் பேசுபவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் கருதும் நம்பிக்கையும் நிலவுகின்றது. இது மிகவும் தீங்கானது என்பதும் சகோதரத்துவத்தை முன்னிறுத்திய நபிகள் நாயகத்தின் கூற்றுக்கும் புறம்பானது என்பதையும் எண்ணிடல் வேண்டும். சமயமா, இனமா என்கிற கேள்வி வரும்போது இனத்திற்கும் அது போற்றும் மொழிக்கும் முதலிடம் தருவதே ஒற்றுமை விளைக்கும். கிறுத்துவ சமுதாயத்திலும் இந்தியச் சூழலுக்கு ஏற்றபடி சாதீய பிரிவுகள் இருப்பதை மறுக்க முடியாது. வரலாறு நமக்கு உணர்த்துவது யாதெனில் மொழி வழி இனத்தின் ஒற்றுமையிமையும் சாதி சமய பிரிவினை ஒம்புதலும் ஒப்புதலுமே சமுதாய பின்னடைவுக்கு முதல் காரணியாக இருக்கிறது என்பதாகும். ஆகவே நீவிர் இனியேனும் தமிழர் என்கிற ஒரே உணர்வால் ஒன்றுபட்டு முதல்படியாக தூய தமிழில் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்க உறுதி கொள்ளுங்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.