கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு, எங்களின் பிள்ளைகளை, பேரப் பிள்ளைகளைப் பார்ப்பதற்காகவும், அவர்களோடு தங்கி மகிழ்வதற்காகவும்தான் நானும், என் துணைவியாரும் இங்கு வந்தோம்!

periyar 414இங்கு வந்த பிறகுதான், உலகெங்கும் நம் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தோம்! அத்தனை அன்பு, பாசம், மகிழ்ச்சியோடு ஒவ்வொரு இடத்திலும் நம் உணர்வாளர்கள் எங்களை வரவேற்றனர்!

நான் உரையாற்றுவதற்காகச் சென்ற எந்த ஊரிலும், விடுதிகளில் தங்காமல், நம் தோழர்களின் வீடுகளில்தான் தங்கினோம். அவர்கள் தோழர்களாக மட்டுமில்லாமல், எங்கள் பிள்ளைகளாகவும் இருந்து எங்களைப் பார்த்துக் கொண்டனர்!

இத்தகைய தனிப்பட்ட உறவு பலருக்கும் கிடைக்கலாம்! ஆனால், பெரியாரின் மீதும், திராவிடக் கருத்தியலின் மீதும் பேரன்பு கொண்டிருக்கும் அந்தத் தோழர்களின் கொள்கை உறவு எல்லோருக்கும் கிடைத்து விடாது!

சில ஊர்களில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், இரவு 12 மணியையும் தாண்டித் தொடர்ந்தது ! பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என்று எல்லோரும் சுற்றி அமர்ந்து பெரியாரின் சிந்தனைகளைப் பெரு மகிழ்வோடு பெற்றுக் கொண்டனர்!

ஓர் ஊரில், பெரியாரே ஒரு மண் என்று அற்பர்கள் சிலர் பேசுகின்றனரே என்று கேட்டுக் கோபப்பட்டார்கள். "ஆம், பெரியார் ஒரு மண்தான்! நாட்டிற்குத் தேவையான நல்ல நல்ல மூலிகைகளை விளைத்துத் தந்த மண் ! ஏச்சுகளையும், பேச்சுகளையும் தனக்கு உரமாக்கிக் கொண்டு நல்ல மரங்களை நாட்டிற்குத் தந்த மண்" என்று குறிப்பிட்டேன்.

"நான் கையொப்பம் இட்டுக் கொடுத்தால், வெளிநாடுகளில் விசா தருகிறார்கள், குடியுரிமை கூடத் தருகிறார்கள் என்று சில தற்குறிகள் பேசுவதைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி தாங்கிக் கொள்கின்றனர்" என்று கேட்டு ஒரு கூட்டத்தில் தோழர்கள் சிரித்தனர் ! விசா வாங்குவது, குடியுரிமை வாங்குவது எல்லாம் நடைமுறையில் எவ்வளவு கடினமானவை என்பதை அவர்கள்தானே அறிவார்கள்!

அமெரிக்காவின் ஒரு மாநிலத்தில், அந்த அற்பர்களின் ஆதரவாளர்கள் சிலர், போராட்டக் களத்தில் நின்ற ஓர் அம்மையாரை அழைத்து வந்து கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். பெரியாரை எதிர்த்து அவர் பேசுவார் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவரோ, இத்தனை ஆண்டுகள் களத்தில் நின்று போராடும் துணிவை எனக்குத் தந்தவர் பெரியார்தான் என்று பேசியிருக்கிறார். அழைத்து வந்தவர்களின் முகங்களில் கருப்புக் கொடியின் சாயம் படர்ந்திருக்கிறது!

திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர், அய்யா வீரமணி அவர்கள் சொல்வது போல், பெரியார் உலகமயமாகி இருக்கிறார்! உலகம் பெரியார் மயமாகிக் கொண்டிருக்கிறது!

இன்னும் சில நாள்களில், மகிழ்ச்சியோடு தாயகம் திரும்புகிறோம்!

- சுப. வீரபாண்டியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.