இந்த வாரம் இரு பெரும் அறிவியல் சாதனைகள் நடந்துள்ளன. ஒன்று, மண்ணில் பிறந்திருக்கிறது, இன்னொன்று வானில் பறந்திருக்கிறது!

சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில், கலைஞர் நூற்றாண்டு நூலகம் 2 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பில் பிறந்திருக்கிறது! சந்திராயன் 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, நிலவை ஆராய்ச்சி செய்ய வானில் பறந்திருக்கிறது!!

இரண்டும் மகிழ்ச்சி தருவன! இரண்டும் பாராட்டுக்குரியன! இரண்டும் எதிர்கால உலகை அறிவியல் மயமாக்க வல்லன! எனினும் ஓர் அறிவியல் தளத்தில் அறியாமை புகுந்திருப்பதையும் இங்கு நாம் சுட்டிக் காட்டியே தீர வேண்டியிருக்கிறது!

மதுரை நூலகமும், சந்திராயனும் அறிவின் சிறப்புகள்! ஆனால் சந்திராயன் பறப்பதற்கு முன்னால், திருப்பதிக்குச் சென்று பூஜை செய்திருப்பது அறியாமையின் அரங்கேற்றம்!madhurai kalaingar libraryதிருப்பதி வேங்கடாசலபதியின் அருளால்தான் விண்கலம் பறக்கிறது என்று சொன்னால், பிறகு இஸ்ரோ எதற்காக? இவ்வளவு விஞ்ஞானிகள் எதற்காக? நேரடியாகத் திருப்பதியில் பூஜை மட்டும் செய்துவிட்டு, விண்கலம் வானில் பறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கக் கூடாதா! 615 கோடி ரூபாய் நாட்டுக்கு மிச்சமாகி இருக்குமே!

இவையெல்லாம் மத நம்பிக்கைகள், இவற்றில் நாம் குறுக்கிடக் கூடாது என்று சிலர் சொல்கின்றனர். மத நம்பிக்கையா, மூடநம்பிக்கையா? மத நம்பிக்கை என்றே வைத்துக் கொண்டாலும், அது எந்த மதத்தின் நம்பிக்கை? இந்து மத நம்பிக்கை என்றால், இந்தியா இந்து நாடா, மதச்சார்பற்ற நாடா?

யார் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கையிலும் நாம் குறுக்கிடவில்லை. ஆனால் செலவு செய்யப்பட்டு இருக்கிற 615 கோடி ரூபாய் என்பது, மக்களின் வரிப்பணம். வேறு வேறு நம்பிக்கைகளை உடைய, எந்த மத நம்பிக்கையும் இல்லாத அனைத்து மக்களின் வரிப்பணம் அது! எனவே அனைவரிடமும் வரி வாங்கி, அரசு ஒரு மதத்தின் நம்பிக்கையை மட்டும் பின்பற்றக் கூடாது என்பதே நம்வாதம்!

இதில் பணம் மட்டுமே சிக்கலில்லை. அறிவு, பின்தள்ளப்படுகிறது என்பதே சிக்கல். அறிவியல் அறிவால், விஞ்ஞானிகளின் உழைப்பால், அரசாங்கம் கொடுத்த ஊக்கத்தால், சந்திராயன் பறக்கிறது என்பதை விட, திருப்பதி வெங்கடாசலபதியின் அருளால்தான் அது பறக்கிறது என்று சொன்னால், அது விஞ்ஞானத்தைக் கேலி செய்வதாகாதா?

போகட்டும், மதுரை நூலகம் திறக்கப்பட்டு இருப்பது தமிழ்நாட்டின் பெருமையை மேலும் உயர்த்தி இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், தலைவர் கலைஞர், அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சென்னையில் திறந்தார். இப்போது கல்வி வள்ளல் காமராசரின் பிறந்த நாளில், நம் தளபதி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து இருக்கிறார். இது தற்செயல் நிகழ்வன்று, கல்விக் கண் திறந்த காமராசரின் பிறந்த நாளில்தான் இந்த நூலகம் திறக்கப்படுகிறது என்று முதலமைச்சரே கூறியிருக்கிறார்!

காமராசரைக் காங்கிரஸ் கட்சிக்காரராகப் பார்க்காமல், கல்வி வள்ளலாகப் பார்த்த தமிழ்நாடு அரசின் திறந்த மனத்தை இது காட்டுகிறது!

இனிமேலாவது அறிவாலயங்கள் திறக்கப்படட்டும், அறியாமைகள் மூடப்படட்டும்!

- சுப.வீரபாண்டியன்