தமிழறிஞர்களுக்கு படைப்பாளிகள் வேண்டுகோள் 

ஜூன் 1ம் தேதி முதல் நான்காம் நாள் முடிய இலங்கையின் தலைநகர் கொழும்பில் பாரதியார் விழாவும் உலகத் தமிழ் இலக்கிய மாநாடும் நடத்துவதாக கொழும்பு தமிழ்ச் சங்கமும் சென்னை பாரதியார் சங்கமும் அறிவித்துள்ளன. இந்தியத் தூதரக உயர் அதிகாரி ஒருவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வது, இந்த விழா குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

ராஜபட்சே அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையையும், தமிழர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் பெரும்பாலான உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. இலங்கையைக் காப்பாற்ற இந்தியா தொடர்ந்து முயன்றாலும், உலக அரங்கில் இலங்கையின் கொலைவெறிக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. இந்த நிலையில், "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம்" என்கிற முழக்கத்துடன் கொலைகார ராஜபட்சேக்களின் தலைநகரில் இந்திய அதிகாரிகளை வைத்துக்கொண்டு விழா எடுப்பது, பாரதி என்கிற போராளிக் கவிஞனின் புகழுக்கும் பெருமைக்கும் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும். இனவெறி இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உலக அரங்கில் ஏற்படுத்துவதைத் தவிர, இந்த விழா வேறெந்த விளைவையும் ஏற்படுத்தாது.  பாரதி அன்பர்கள் இதை உணரவேண்டும். 

முள்ளிவாய்க்காலில் துடிக்கத் துடிக்கக் கொன்று குவிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் மரண ஓலத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தேமதுரத் தமிழோசையைப் பரப்பப் புறப்படுவது பொருத்தமற்றது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

பாரதி வெறும் கவிஞனில்லை. வீர சுதந்திரம் வேண்டி நின்ற விடுதலைப் போராளி. அச்சம் தவிர், ஆண்மை தவறேல் - என்று தமிழினத்துக்குத் துணிச்சலைப் போதித்தவன். கொடுங்கோலரசுக்கு ஒருபோதும் அடிபணியாதவன். ஒன்றரை லட்சம் தமிழரைக் கொன்று குவித்ததைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கொழும்பைக் காப்பாற்ற, அந்த மகாகவியின் பெயர் பயன்படுத்தப் படுவதை எந்தப் படைப்பாளியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

கொழும்பில் போய் விழா நடத்தி, அங்கே நடந்த இனப்படுகொலை குறித்து அச்சம் தவிர்த்து ஆண்மையோடு ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும் சூழலும்  இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, இந்த விழாவைக் கைவிட பாரதி அன்பர்கள் முன்வரவேண்டும். எப்படியாவது இந்த விழாவை நடத்த இலங்கை அரசு முயன்றால், விழாவை அடியோடு புறக்கணிக்கவேண்டும். அதன்மூலம், கொல்லப்பட்ட எம் சொந்தங்களுக்கு தாய்த்தமிழகம் ஒருபோதும் துரோகம் செய்யாது என்பதை பாரதி அன்பர்கள் நிரூபிக்கவேண்டும்.கொல்லப் பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்கு மனச்சாட்சியுள்ள எழுத்தாளர்களாகிய நாங்கள் ஒரு போதும் துரோகமிழையோம் என உறுதி பூணுகிறோம்.      

கூட்டறிக்கையில் கையொப்பமிட்ட படைப்பாளிகள்: 

தி.க.சிவசங்கரன், ம.லெ.தங்கப்பா, தமிழவன், புலவர் புலமைப்பித்தன், இயக்குநர் ஆர்.சி.சக்தி, காசி ஆனந்தன், தமிழருவி மணியன், இன்குலாப், புவியரசு, அறிவுமதி, அழகிய பெரியவன், தாமரை, பா.செயப்பிரகாசம், ஞானி, ஓவியர் வீரசந்தானம், டிராட்ஸ்கி மருது, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், கல்பனா சேக்கிழார்,  கவிஞர் மணிகண்டன், கண.குறிஞ்சி, மாலதிமைத்ரி, இரா.தெ.முத்து, யாழினி முனுசாமி, பிரேம் (புதுடெல்லி), சுப்ரபாரதிமணியன், குரு.ராதா கிருட்டிணன், யோ.திருவள்ளுவன், சண்முகவேல், டாக்டர் தமிழ்நகை, ஆல்பர்ட் (அமெரிக்கா), விஸ்காசின் (அமெரிக்கா), டி.அருள் எழிலன், சந்திரா, தி.பரமேஷ்வரி, கீற்று நந்தன் உள்ளிட்ட 50 படைப்பாளிகள்/உணர்வாளர்கள்

****

கொழும்பு விழாவில் கலந்து கொள்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்:

இந்தியத் தூதரக முதன்மைச் செயலாளர் ஜஸ்டிஸ் மோகன், வழக்கறிஞர் இரா.காந்தி, எம்.ஜி.ஆர். பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மேஜர் டி.ராஜா, ஸ்டெல்லா மேரி கல்லூரி தமிழ்த் துறைத் தலைவி உலகநாயகி பழநி, விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் வ.வே.சுப்பிரமணியன், புதுவைப் பல்கலைப் பேராசிரியர்கள் அறிவுநம்பி, சிவ.சந்திரகுமார், தருமராசன் மற்றும் சிலர்.

Comments

4 comments

4
musdeen
எல்லா நிகழ்வுகளும் அரசியல் தன்மை வாய்ந்தவையல்ல, தமிழக நண்பர்கள் அதில் கொஞ்சம் கரிசனை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன், ஒரு நியாயமான தளத்தில் நின்று பார்க்கும் போதுதான் அதை விளங்கிக் கொள்ள முடியும். ஏற்பாடாளர்கள் படும் கஸ்டத்தை கொஞ்சம் நேரில் பார்த்வன் எனற வகையில் இதைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன், மே17 யுத்தம் நிறைவுக்கு வந்த நாள், அந்த நாளில் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்களுக்காக மனதாரப்பிரார்த்திக்கப்பட்டது. அந்நாளில் மௌனப் போரும் புன்னகை ஆயுதமும் கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது, அந்த விழாவைத தடுக்க எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் தமிழ்ச் சங்கம் பொருட்படுத்தவில்லை, அதிதிகள் இருவர் வரவில்லை ஆனால் விழா நடந்தது, அதன் பின்னர் கோஷம் போட்டவர்களைக் காணவில்லை, எனவே அன்பர்களே தமிழ் நாட்டு உறவுகளே, அரசியல் தன்மைவாய்ந்த நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள் வரவேற்கிறோம், அதே நேரம் கையொப்பமுமிடத் தயாராக இருக்கிறோம்,

இந்த விழா வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பதற்காக தமிழ்ச் சங்கத்துக் காரங்க இரவு பகலா படும்பாடு வெளியில் யாருக்கும் அவ்வளவு எளிதில் புலப்படாதது, பொல்லப்பு என்டாச் சொல்லுங்கோ நாங்க பேனை மட்டுமல்ல பொல்லோடும் வாரோம்,
வெறுமனே எதிர்த்தல் பகிஸ்கரித்தல் கோஷம் போடுதல், தடுத்தல் என்றால் அது சரியில்லை ஐயா, மனசாட்சி வழி நின்று ஒரு குட்டிப் பார்வை பாருங்கோவென் தோழர்களே
அன்புடன்
முஸ்டீன்
Vee.Na.So
Panam- Payanam- enraal odi varum koottam eppothum erunthu varuhirathu.Evarkalaiyum ethirththu naam poraada vendum.
சரவண ராஜா
விவாதத்திற்கு பயன்படும் பொருட்டு, கீழே திரு.முருக பூபதியின் ஊடக அறிக்கையை கீழே தந்துள்ளேன்.
----------------------------------------------------------------------------------------
இலங்கையில் தமிழ் இலக்கியம் சார்ந்த மாநாடுகளை தமிழகம் ஏன் புறக்கணிக்கிறது?
போருக்குப்பின்னர் ஈழத்தமிழ் இலக்கியம் உயிர்ப்புப்பெறவேண்டாமா?
இலக்கிய உறவுக்கு நீட்டும் கரத்தை துண்டிக்கவேண்டாம் !

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர் முருகபூபதி அறிக்கையூடாக வேண்டுகோள்.

இலங்கையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் சார்ந்த எந்தவொரு விழாவோ ஆய்வரங்கோ அல்லது மாநாடோ நடைபெற்று அவற்றுக்கு தமிழக எழுத்தாளர்களை தமிழ் அறிஞர்களை அழைத்தால் முதலில் தமிழ்நாட்டிலிருந்தே எதிர்ப்புக்குரல் வந்துவிடுகிறது.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் போர் முடிவடைந்ததைத்தொடர்ந்து போர்க்குற்றம் நிகழ்ந்த இலங்கையில்; தமிழ்மொழி சார்ந்த ஒன்றுகூடல்களை தமிழ்நாட்டில் சந்தேகக்கண்கொண்டு பார்ப்பது வழக்கமாகிவிட்டது.இலங்கையில் கொழும்பில் நடக்கும் எந்தவொரு பொது நிகழ்ச்சியும் இலங்கை அரசின் ஆதரவுடனும் ஆசியுடனும்தான் நடப்பதாக கற்பனைசெய்துகொண்டு அறிக்கை விடுவதும் வழக்கமாகிவிட்டது.

2011 ஆம் ஆண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்தவிருந்தவேளையிலும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்தது.எனினும் குறிப்பிட்ட மாநாட்டில் சில எழுத்தாளர்கள் உட்பட சில சிற்றிதழ் ஆசிரியர்களுமாக சுமார் ஐம்பதுபேரளவில் தமிழ்நாட்டிலருந்து வந்து கலந்து சிறப்பித்தனர்.

குறிப்பிட்ட மாநாடு தொடர்பான முதலாவது ஆலோசனைக்கூட்டம் கொழும்பு தமிழச்சங்கத்தில் 2010 ஜனவரி முதல் வாரம் நடந்தது. தமிழக சிற்றிதழ்கள் சிலவற்றிலும் நடைபெறவிருக்கும் மாநாடு பற்றிய செய்திகள் வந்தபின்பு, சுமார் ஆறுமாதங்கள் கடந்த நிலையில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

இதேவிதமாகவே தற்போதும் நாளை ஜூன் 1 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் ஆரம்பமாகவுள்ள பாரதி விழா, மற்றும் இலக்கிய மாநாட்டிற்கும் தமிழகத்திலிருந்து எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.

பல மாதகாலமாக கொழும்பு தமிழ்ச்சங்கம் ஆலோசித்து நடைபெறுவதே நாளை ஆரம்பமாகும் நிகழ்ச்சி.

தமிழ்ச்சங்கத்திற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அதன் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டே பாரதிவிழாவும் இலக்கிய மாநாடும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது என்று இதுவரையில் வெளியான அனைத்து செய்திகளும் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் வை.கோபாலசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையும் புலவர் புலமைப்பித்தன் உட்பட சுமார் 50 படைப்பாளிகள், கலைஞர்கள். வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தமிழ்ச்சங்க மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பு இருப்பதாகச்சொல்கின்றன.

இதில் எந்த உண்மையும் இல்லை. ஏற்கனவே 2011 இல் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு தெரிவித்த எதிர்ப்பு அலைதான் மீண்டும் எழுந்திருக்கிறது.

கொழும்பு தமிழ்ச்சங்கம் கடந்த 70 வருட காலத்துள் எத்தனையோ தமிழ் விழாக்களை, மாநாடுகளை, இலக்கிய சந்திப்புகளை, நூல் வெளியீடுகளை நடத்தியிருக்கிறது. அவற்றில் தமிழக அறிஞர்கள், படைப்பாளிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்ச்சங்கத்தில் நீண்டகாலமாக இயங்கும் பெறுமதி மிக்க நூல் நிலையத்திற்கு திராவிட பாரம்பரியத்தில் வந்த தமிழக அரசும் பெருமளவு நூல்களை ஏற்கனவே வழங்கியிருக்கிறது.

தற்போது படைப்பாளிகள் சார்பில் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழக எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் தமிழ்ச்சங்க நிகழ்வில் 2010 ஆம் ஆண்டு கலந்துகொண்டவர்தான். இலங்கையில் 1958, 1977, 1981, 1983 ஆகிய காலப்பகுதிகளில் இனவாத வன்செயல்கள் நடந்தன. அப்பொழுது தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள வெள்ளவத்தை உட்பட அதன் சுற்றுப்பிரதேசங்களிலெல்லாம் வன்செயல்கள் நடந்தன. தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பாதிக்கப்பட்டார்கள். அகதிகளாகி இடம்பெயர்ந்தார்கள்.

எனினும் கொழும்பு தமிழ்ச்சங்கம் இந்த வன்முறைகளினால் அழிந்துவிடவில்லை. அதன் பணிகள் தடைப்படவில்லை. தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் மட்டுமின்றி சிங்கள எழுத்தாளர்களும் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி ஒரு தாய்மக்கள் போன்று உறவாடி கருத்துப்பரிமாற்றம் செய்கிறார்கள்.

அரசாங்கங்கள் வரலாம் போகலாம். ஆட்சித்தலைவர்கள் மாறலாம். இனவாத வன்செயல்களும் கடந்துசெல்லும் மேகங்கள் போன்று வந்துபோகலாம். ஆனால் இலங்கையில் தமிழும் தமிழர்களும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்கள்.அதனால்தான் 80 ஆண்டுகளைக்கடந்தும் வீரகேசரி கொழும்பிலிருந்து இன்னமும் தங்கு தடையின்றி வெளியாகிக்கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ்ப்பாடசாலைகள் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இயங்குகின்றன.

இந்த யதார்த்த உண்மைகளை குறிப்பிட்ட ஐம்பது பேர் கருத்துச்சொல்லும் தமிழக படைப்பாளிகள் இயக்கமும் மறுமலர்ச்சி தி.முக. தலைவரும் ஏன் ஏற்றுக்கொள்ளத்தயங்குகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின்னர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியிருந்த இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்து வந்து திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். தமது உறவுகளையும் சந்தித்து திருமணம் உட்பட பல குடும்ப நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்கள்.

யாழ்;ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த உற்சவத்திலும் விரதம் இருந்து வந்து கலந்து பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே யுத்தம் நிகழ்ந்த முல்லைத்தீவுப்பிரதேசத்தில் வற்றாப்பளை அம்மன் கோயில் பொங்கலுக்கும் நயினை நாகபூஷணி அம்பாள் திருவிழாவுக்கும் வருகைதருகிறார்கள்.

கொழும்பில் ஆடிவேல் விழாவையும் தரிசிக்கிறார்கள். இந்நிகழ்வுகளுக்கு தமிழக நாதஸ்வர வித்துவான்களும் கொழும்பு கம்பன் விழாவுக்கு தமிழக அறிஞர்களும் வந்து சிறப்பிக்கிறார்கள். அத்துடன் தமிழகத்திலிருந்து தினமும் பலர் வந்து திரும்பிக்கொண்டுதானிருக்கிறார்கள். இவர்களில் சாதாரண மக்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், சோதிடர்கள், சாமியார்கள், துறவிகள், வியாபாரிகள் உட்பட பலர் அடங்குவர். ஆனால் அதற்கெல்லாம் எத்தகைய எதிர்ப்பும் தெரிவிக்காதவர்கள் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் புறப்பட்டால் மாத்திரம் எதிர்ப்புத்தெரிவிப்பது ஏன்?

ஈழத்து எழுத்தாளர்களுக்கும் தமிழக படைப்பாளிகளுக்கும் இடையில் நட்பும் உறவும் ஆரோக்கியமாக வளர்ந்துவிடக்கூடாது என நினைக்கிறார்களா? அல்லது இலங்கையில் தமிழ் இலக்கியம் போருக்குப்பின்னர் புத்துயிர் பெற்றுவிடக்கூடாது என்று ஆதங்கப்படுகிறார்களா?

நீண்ட காலமாக நீடித்த இந்த கலை, இலக்கிய உறவுப்பாலத்;தை தகர்த்ன்றிவதில்; அவர்களுக்கு அப்படியென்ன வக்கிரமான திருப்தி.

தமிழக படைப்பாளிகள் இயக்கத்தின் அறிக்கையையும் வைகோவின் அறிக்கையையும் பார்த்த பின்பு உடனடியாகவே கொழும்பில் பாரதி விழாவும் இலக்கிய மாநாடும் நடத்தும் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. மு. கதிர்காமநாதனுடனும் இந்நிகழ்வுகளின் இலக்கிய இணைப்புச்செயலாளர் ஞானம் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனுடனும் தொடர்புகொண்டேன்.

ஏற்கனவே 2011 இல் நடந்த சர்வதேச மாநாட்டின் இலங்கை இணைப்பாளராகவும் மாநாட்டு அமைப்புக்குழுவின் தலைவராகவும் பணியாற்றிய ஞானசேகரன் மிகவும் நிதானமாக, “சரியான உண்மையை புரிந்துகொள்ளாமல் பொறுப்பற்று கருத்துச்சொல்கிறார்கள். எமது சர்வதேச மாநாட்டிற்கும் இப்படித்தானே அவதூறு கற்பித்தார்கள். எனினும் அவர்களது பொய்ப்பிரசாரத்தை முறியடித்து திட்டமிட்டவாறு குறிப்பிட்ட மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறோம். அதுபோன்று தமிழ்ச்சங்கம் தற்போது நடத்தவுள்ள மாநாடும் திட்டமிட்டவாறு நடைபெறும்” என்றார்.

சங்கத்தலைவர் கதிர்காமநாதனும் மிக நிதானமாகவே பதில் சொன்னார். வைகோ, சங்கத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாகவும். சங்கம் அரசியல் கலப்பில்லாதது. அரசாங்கங்களின் ஆதரவுடன் சங்கம் என்றைக்கும் இயங்கியதும் இல்லை என்றும் இதுதொடர்பாக மாநாட்டு அமைப்புக்குழு கூடிப்பேசும் என்றும் தெரிவித்தார்.

“வைகோவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சங்கத்தின் வரலாற்றை சுருக்கமாகவும் பாரதிவிழாவினதும் இலக்கிய மாநாட்டினதும் நோக்கத்தை தெளிவுபடுத்துமாறும் அவருக்குச்சொன்னேன்.

பின்னர் தமிழகத்தில் சிற்றிதழ் சங்கத்தலைவர் வதிலை பிரபாவுடன் தொடர்புகொண்டு வைகோவின் தொலைபேசி இலக்கம்பெற்றேன். அவரது இல்;லத்திலிருந்து, “அவர் திருச்சிக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்வதாக” தகவல் கிடைத்தது. வைகோவின் கட்சி அலுவலகத்தில் தொடர்புகொண்டேன். பின்னர் அவரது பொதுமக்கள் தொடர்பு ஊழியரை தொடர்புகொண்டேன் எனினும் இந்த ஆக்கம் எழுதும் வரையில் வைகோவுடன் பேச முடியவில்லை. தொடர்ந்து முயற்சிப்பேன்.

ஏற்கனவே நாம் 2011 இல் மாநாடு நடத்தியபோது தமிழகத்திலிருந்து எதிர்வினைகள் தொடங்கியதும் கோவை ஞானி, பொன்னீலன், தி.க.சிவசங்கரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ஜெயமோகன், ராமகிருஷ்ணன் உட்பட பல முன்னணி படைப்பாளிகளுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எம்மவரின் நிலைப்பாட்டை விளக்கநேர்ந்தது. அத்துடன் தமிழக இதழ்கள் சிலவற்றிலும் நேர்காணல்கள், மற்றும் கட்டுரைகள் வாயிலாக விளக்கநேர்ந்தது.

செயப்பிரகாசம் உட்பட பல தமிழக படைப்பாளிகளுக்கு நாம் ஏற்கனவே அளித்துள்ள விளக்கமும் 2011 இல் இலங்கை அரசினதோ அரசியல்வாதிகளினதோ ஆதரவு எதுவுமின்றி படைப்பாளிகள், கலைஞர்கள், தமிழ் அபிமானிகளின் நிதிப்பங்களிப்புடந்தான் மாநாடு வெற்றிகரமாக தரமாக நடந்து முடிந்தது என்பதும் அது நிரூபிக்கப்பட்ட உண்மை என்பதும் நன்கு தெரியும்.

அதனால் மீண்டும் மீண்டும் இப்படியே நாம் விளக்கிக்கொண்டிருந்தாலும்கூட, இலங்கையில் இலங்கையர்களினால் நடத்தப்படும் எந்தவொரு தமிழ் மாநாட்டிற்கும் அவர்கள் சிங்கள அரசியல் சாயம் பூசிக்கொண்டுதானிருப்பார்கள். தமிழகத்திலிருந்து வரவிரும்புபவர்களை செல்ல விடாமல் தடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

அதனால் இலங்கை தமிழ் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் கலைஞர்களும் மற்றும் தமிழ் மாநாடுகளை ஒழுங்குசெய்யும் தமிழ்ச்சங்கம் போன்ற அமைப்புகளும், தமிழகத்தின் எதிர்ப்புக்குரலை அலட்சியம் செய்துவிட்டு பணிகளை தொடரவேண்டியதுதான் அவர்களுக்கு வழங்கும் அமைதியான பதிலாக இருக்கமுடியும்.

ராஜபக்ஷாவின் அரசாங்கம் பதவியிலிருக்கும் வரையில் இலங்கைத்தமிழன் தமிழின் பெயரால் விழாவோ, மாநாடோ ஒழுங்கு செய்யாமல் வரண்டுபோய்விடவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்போ தெரியவில்லை.

இதற்கு காலம் பதில் சொல்லுமா? அல்லது வழக்கம்போன்று காலம் இதனையெல்லாம் மறந்துவிடுமா?

முருகபூபதி
அமைப்பாளர்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
அவுஸ்திரேலியா.
musdeen
'கொழும்பு தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதி சங்கமும் இணைந்து, ஜூன் முதலாம் திகதியன்று, கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்திருக்கும், பாரதி விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ள தமிழக அறிஞர்கள் தொடர்பில் வைகோ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். வைகோ அவர்களது இந்த நிலைப்பாடு துரதிஷ்டவசமானது. உண்மையில், வைகோவிற்கு, இந்த விழா தொடர்பில் தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன என நாம் நம்புகின்றோம். இந்த விழா தொடர்பிலான உண்மை விபரங்களை வைகோவிற்கு எமது தலைவர் மனோ கணேசன் இன்று தெரியப்படுத்துவார்' என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலாளரும், கொழும்பு மாநகரசபையின் உறுப்பினருமான பாஸ்கரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜமமு ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் பாஸ்கரா மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொழும்பு தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதி சங்கமும் இணைந்து, ஜூன் முதலாம் திகதியன்று, கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், பாரதி விழாவிற்கும், சிங்கள பேரினவாதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் கிடையாது. தவிரவும், இந்த விழா இலங்கை அரசு நடத்தும் விழா அல்ல. இது ஒரு கலை, இலக்கிய விழா. இதற்கு இலங்கை அரசின் எந்த ஒரு அரசியல் தலைவர்களும் அழைக்கப்பட்டு இருக்கவில்லை என கொழும்பு தமிழ் சங்கத்தின் தலைவர் கதிர்காமநாதன் எமது தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தமிழ்ச் சங்கம் 70 ஆண்டுகால வரலாறு கொண்டது. தமிழ் அறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் நடத்தப்படும் நிறுவனம், தமிழ் சங்கம் ஆகும். இது கலை, இலக்கிய, சமூக அமைப்பாகும். இது ஒரு அரசியல் நிறுவனம் அல்ல. இது ஒரு அரசு நிறுவனமும் அல்ல. இந்த சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு நிதி உதவி செய்வதில்லை.

இலங்கையில் இன்னமும் தீராத இனப்பிரச்சினை கொழுந்து விட்டு எரிகிறது. அதை நோக்கிய எமது அரசியல் போராட்டம் ஜனநாயகரீதியாக தொடர்கிறது. இதில் இரண்டு கருத்திற்கு இடம் இல்லை.
ஆனால் இதற்கு இடையில், இலங்கையில் தமிழ் மக்களால் நடத்தப்படும், கலை, இலக்கிய நிகழ்வுகளுக்கு தமிழக, மலேசிய தமிழ் அறிஞர்கள்

வந்து செல்கிறார்கள். தமிழின் மொழி, கலை, இலக்கிய வளர்ச்சிகளுக்கு இது இன்றி அமையாதது. அத்துடன் இலங்கை- இந்திய தமிழ் மக்கள் மட்ட தொடர்புகளும் துண்டிக்கப்பட கூடாதவை என நாம் எண்ணுகிறோம். அதுதான் எங்களது கடலாலும் பிரிக்க முடியாத தமிழின உறவு ஆகும்.
கொழும்பில் தமிழக அறிஞர்களை அழைத்து வந்து போலித்தனமான 'தமிழ் விழாக்களை' தனது அரசியல் நோக்கங்களுக்காக இலங்கை அரசு நடத்துமானால், தமிழக அறிஞர்கள இங்கே இத்தகைய விழாக்களில் கலந்துகொள்ள கூடாது என்ற முதல் எதிர்ப்பு குரல் எமது கட்சியிடம் இருந்துதான் எழும். தலைநகர தமிழ் மக்களின் தலைமை அரசியல் கட்சி என்ற முறையில் நாம் இதில் மிகவும் தெளிவாக இருக்கின்றோம். இது கொழும்புவாழ் தலைநகர தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும்
(இது பாஷ்கரா விடுத்த செய்தி இதன் முழு வடிவயும் பார்க்க இந்த இனைப்பை சொடுக்க: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/41960-2012-05-30-09-58-12.html

musdeen

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.