இந்திய ஒன்றியத்தை மதச் சார்பற்ற நாடாகப் பறை சாற்றியது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை. அதைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது அண்மையில் நடைபெற்ற அயோத்தி இராமர் ஆலயத்தின் திறப்பு விழா. முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து அவசர அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளது. நாடு முழுமைக்கும் பொதுவானவராக இருக்க வேண்டிய பிரதமர் அதை முன்னின்று நடத்தி இருக்கிறார். பகுத்தறிவு இயக்கங்கள் மட்டுமின்றி இந்து மதத்தின்பால் நம்பிக்கை கொண்டிருக்கும் கட்சிகள் கூட இந்த விழாவைப் புறக்கணித்திருக்கின்றன.

1526 ஆம் ஆண்டு இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முகலாய மன்னர் பாபர் முதலாம் பானிபட் போரில் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து வட இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தார். இந்த வெற்றியைப் போற்றும் வகையிலும், பாபரின் புகழை நிலைநாட்டும் வகையிலும் அவரது தளபதி மிர் பாகி 1528 இல் ஒரு மசூதியைக் கட்டுவதற்கு முடிவெடுத்தார். 1529 ஆம் ஆண்டு பாபர் மசூதி கட்டி முடிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்கு பிறகு 1949 முதல் இந்து அமைப்பினர் அந்த இடத்தில் தான் இராமர் பிறந்தார். அங்கே அவருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுப்பத் தொடங்கினர். 1984 ஆம் ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராம் ஜென்மபூமி இயக்கம் தொடங்கப்பட்டு அதன் பிரச்சாரத் தலைவராக பாஜக தலைவர் எல்.கே.அத்வானி நியமிக்கப்பட்டார். 25.09.1990 அன்று குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து அயோத்தி நோக்கி ரத யாத்திரையை எல்.கே.அத்வானி தொடங்கினார். ரத யாத்திரை பீகாரில் தடுத்து நிறுத்தப்பட்டு எல்.கே.அத்வானி கைது செய்யப்பட்டார். இருப்பினும் 06.12.1992 அன்று கரசேவகர்களின் வன்முறை மூலம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அ.இ.அ.தி.மு.கவின் அன்றைய பொதுச் செயலாளர் அம்மையார் ஜெயலலிதா கரசேவைக்கு ஆதரவு தெரிவித்ததுடன் அவரது ஆதரவாளர்களையும் அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ram mandhir 4712019 இல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இராமர் கோவில் கட்ட ஒப்புதல் வழங்கி த்தீர்ப்பளித்தது. பதவிக் காலத்திற்குப் பின் அந்த ஐவரில் ஒருவர் மாநிலங்களைவை உறுப்பினராகவும், ஒருவர் ஆளுநராகவும், ஒருவர் தேசிய நிறுவனங்களின் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்தஷேத்ரா அறக்கட்டளை தொடங்கப்பட்டு 05.08.2020 இல் பிரதமர் மோடி அயோத்தி இராமர் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பா.ஜ.க தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே இந்தப் பிரச்சனையை மையப்படுத்தித்தான் அரசியல் செய்தது. 1984 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க இராம் ஜென்மபூமி இயக்கம் உருவான பிறகு மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி தங்கள் கட்சியை வளர்த்தது. அயோத்தி இராமர் என்ற அதே அரசியல் ஆயுதத்தைக் கையில் ஏந்தி மூன்றாவது முறையாகத் தொடர்ந்து வெற்றிபெறும் நோக்கில் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க களமிறங்க இருக்கிறது. அதனால் தான் ஆலயத் திறப்பு விழாவையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. மதநல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ்நாட்டில் இதை வைத்துக் கலவரத்தைத் தூண்ட திட்டமிட்ட பா.ஜ.க கூடாரத்திற்குத் தோல்வியே கிடைத்தது.

பிரதமர் மோடி முன்னின்று ஆலயம் திறப்பது இந்து மத ஆகமங்களுக்கும் எதிரானது என்று கூறி இந்தியாவின் தொன்மையான சங்கராச்சாரியார்களான துவாரகா, பூரி, சிருங்கேரி, ஜோதிர் மத் சங்கராச்சாரியார்கள் விழாவை புறக்கணித்தனர். அதேபோல் உத்தரப் பிரதேசத்தின் ஆளுநரான ஆனந்தி பென் படேல் விழாவிற்கு அழைக்கப்பட்ட நிலையில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விழாவிற்கு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். சனாதனக் கொடுமை இந்து மதத்தில் இன்றும் நிலவி வருவதை இந்தச் சம்பவங்கள் உறுதி செய்கின்றன.

இதற்கெல்லாம் மேலாக ராஜஸ்தான் மாநிலம் ஜாலவர் மாவட்டம் கான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முண்ட்லா கிராமத்தில் உள்ள தலித் மக்களிடமிருந்து அயோத்தி ராமர் கோவிலுக்காகப் பெறப்பட்ட நன்கொடை “கோவில் சடங்குகளுக்கு தலித்துகளின் பணம் ஏற்கப்படாது. அவர்கள் நன்கொடையில் அளிக்கப்படும் பிரசாதம் தூய்மையற்றதாகக் கருதப்படும்” என்று கூறி தலித் மக்களின் பணம் அவர்களின் வீடுகளுக்குச் சென்று திருப்பிக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பா.ஜ.கவின் இந்து மக்கள் மீதான பாசம் உண்மையல்ல, அது பகல் வேஷம் என்பது தெளிவாக த்தெரிகிறது. இந்து மக்களின் பாதுகாவலர் என்று கூறிக்கொண்டு அந்த மதத்தின் பெரும்பான்மையான மக்களை இன்னலுக்கு ஆளாக்கும் பா.ஜ.கவின் உண்மை முகத்தை அப்பாவி இந்து மக்களிடம் தோலுரித்துக் காட்டுவது அவசியமாகிறது.

இராமர் என்ற அரசியல் ஆயுதத்தை வீழ்த்தி 1971 சட்டமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்றது தி.மு.க. அந்த வெற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுக்க எதிரொலிக்கட்டும். வெறுப்பு அரசியலை விதைப்பதன் மூலம் நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைக்கும் பா.ஜ.க கூட்டத்திற்கு நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டி “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற இந்தியத் துணைக் கண்டத்தின் பண்பாட்டை மீட்டெடுக்க ஒவ்வொரு இந்தியரும் உறுதியேற்போம்.

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It